கேள்வி:

மனிதர்களை ஒழுங்குபடுத்த தண்டனைகள் தேவையா? தண்டனையால் ஒருவரை மாற்ற முடியுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தவறு என்பது ஒவ்வொருவரின் புரிதலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. நாம் செய்யும் ஒரு செயலால் பத்து பேருக்கு துன்பம் நேரும்போது, அது தவறு என்ற பொதுவான கருத்து இருக்கிறது. நாம் செய்யும் செயலின் மூலம் மற்றொரு உயிருக்கு பாதிப்போ துன்பமோ விளைந்தால், அல்லது பத்து பேருக்கு தீமை உண்டானால், அதை தவறு என்று எண்ணுகிறோம். இதற்கு தண்டனை தர வேண்டுமா, வேண்டாமா? இதை பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. தண்டனை ஏன் கொடுக்கிறோம் என்றால், அவர்களை மாற்றும் அளவுக்கு திறமை நம்மிடம் இல்லை. ஒருவரை மாற்றி நல்வழியில் கொண்டு செல்ல தேவையான அடிப்படை வசதிகள் நம் சமூகத்தில் இல்லாத காரணத்தினால் தான் தண்டிக்கிறோம்.

ஒருவரை மாற்றி நல்வழியில் கொண்டு செல்ல தேவையான அடிப்படை வசதிகள் நம் சமூகத்தில் இல்லாத காரணத்தினால் தான் தண்டிக்கிறோம்.

சிறந்த ஆசிரியர் என்பவர் யார்?

முன்பெல்லாம் பள்ளியில் எந்த ஆசிரியர் நன்றாக அடிக்கிறாரோ அவரே சிறந்த ஆசிரியர் என்ற நிலை இருந்தது. சிறிது காலத்திற்கு முன்பு வரை அப்படி இருந்ததா இல்லையா? இப்போது நிலைமை அப்படி இல்லை. இன்று ஒரு ஆசிரியர் மாணவனை அடித்தால் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஏனென்றால், அன்று ஒரு குழந்தையை மாற்றுவதற்கு தேவையான சூழல் இல்லாமல் இருந்தது. ஒரு சிறிய வகுப்பறை, ஏதோ ஒரு கல்வியை கற்றுத் தருவது என்ற நிலை மட்டுமே இருந்தது. ஆனால் இன்று அதற்காக பலவிதமான கருவிகளை நாம் உருவாக்கியுள்ளோம். எனவே, ஒரு குழந்தைக்கு தண்டனை வழங்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கும் ஒருவரே சிறந்த ஆசிரியர் என்ற எண்ணம் நமக்கு வந்துள்ளது.

நம் சமூகமும் அதுபோன்ற ஒன்றுதான். சமூகத்தில் சில குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள், சிலர் இன்னும் வளரும் பருவத்தில் இருக்கிறார்கள். நீங்களும் வளர்ந்த குழந்தைகள் தான். நீங்கள் வானத்திலிருந்து கீழே விழவில்லை. உங்களால் இன்னும் வளர முடியும் - உடல் அளவில் அல்ல. உங்கள் உள்ளத்தில் நிச்சயம் வளர முடியும். அவர் ஒரு நிலையில் இருக்கிறார், நீங்கள் மற்றொரு நிலைக்கு உயர்ந்துவிட்டீர்கள். நாம் ஒரு தவறு செய்தால், அந்த தவறிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான கருவிகளை சமூகத்தில் உருவாக்க வேண்டும். அதை நம்மால் இன்னும் உருவாக்க முடியவில்லை. அதனால் தண்டனை வழங்குவதும் பாடம் புகட்டுவதும் மட்டுமே இப்போது நமக்கு தெரிந்த வழியாக இருக்கிறது.

தண்டனை எதற்காக?

நாம் சிறை என்று அழைக்கும் ஒன்றை மேலை நாடுகளில் 'சீர்திருத்த  மையங்கள்' என்று அழைக்கிறார்கள். அதாவது மனிதர்களை சரிப்படுத்தும் மையங்கள். இப்போது சிறை என்ற பெயரை பல இடங்களில் நீக்கிவிட்டார்கள். அவை அனைத்தும் சீர்திருத்த மையங்களாக மாறிவிட்டன. ஒரு மனிதன் தவறு செய்தால் அவனை சரிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதற்கு தேவையான நேரமும், வசதிகளும் அங்கு உள்ளன. அத்தகைய வசதிகளை நாமும் இங்கு உருவாக்கும் வரை தண்டனை நமக்கு தேவைப்படுகிறது. ஆனால் தண்டனை கொடுப்பதால் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வருமா என்றால் நிச்சயம் இல்லை. அதற்காக தண்டனை கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படியும் இருக்க முடியாது.

தவறுகளை சீர்படுத்தும் கருவிகள்

எந்த செயலை செய்தாலும், இப்போது இருக்கும் சூழலில் நம்மால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு தான் செய்ய முடியும். ஆனால் சூழலை மாற்ற முடியுமா? நிச்சயமாக மாற்ற முடியும். ஒரே நாளில் மாற்ற முடியாவிட்டாலும், நம் தலைமுறை முடிவதற்குள் மாற்ற முடியும். நீங்கள் இப்போதெல்லாம் குழந்தைகளை அடிப்பதில்லை, அடிக்காமல் வளர்க்கும் சூழ்நிலை இப்போது வந்துள்ளது. ஈஷா பள்ளிகளில் குழந்தைகளை திட்டுவதோ அடிப்பதோ கிடையாது. வந்து பாருங்கள், அங்கே குழந்தைகள் அவ்வளவு பிரமாதமாக இருக்கிறார்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்களின் குழந்தைகள்தான். அங்கே யாரும் சத்தமாக பேசமாட்டார்கள், திட்டமாட்டார்கள், அடிக்கமாட்டார்கள். அப்படி இருந்தும் அவர்கள் மிகச் சிறப்பாக வளர்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்றால், ஆசிரியர்கள் அப்படி ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். அங்கு ஐந்து அல்லது ஆறு குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். ஆனால் நூறு குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்கும் அரசுப் பள்ளிகளில் அந்த ஆசிரியர் என்ன செய்ய முடியும்? அவர் அடித்து தான் மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஏனென்றால் அங்கு தேவையான வசதிகள் இல்லை. அந்த வசதிகளை நாம் சமூகத்தில் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை இப்படித்தான் தொடரும்.