கே: நமது கர்மக் கட்டமைப்பைத்தான் நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன என்றால், எண்ணப்போக்கை மாற்றுவதன் மூலம் நமது கர்மக் கட்டமைப்பின் மீது தாக்கத்தினை ஏற்படுத்த முடியுமா? கர்மக் கட்டமைப்பிலிருந்து நாம் எப்படி விடுபட முடியும்?

சத்குரு: எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. உங்களுடைய மனதிற்குள் இருக்கும் விஷயங்களைப் பொறுத்து எண்ணங்கள் வெறுமனே வந்து போய்க் கொண்டிருக்கின்றன. சிந்தனை என்றால் நீங்கள் விழிப்புடன் ஒன்றைக் குறித்து சிந்தனை செய்வது. உங்கள் மனதில் இடம் பிடித்துள்ள விஷயங்களினால், நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பது ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் நீங்கள் விரும்பினால், அதைக் கடந்தும் சிந்தனை செய்வதற்கு உங்கள் காரண அறிவுக்கு சிறிது விவேகம் உள்ளது. இன்னர் எஞ்ஜினியரிங், மற்றும் ஈஷா யோகா வகுப்புகளில், இருபத்தொரு நிமிடத்திற்கான ஒரு பயிற்சியை உங்களிடம் பரிமாற்றம் செய்வதற்கு உங்களுடன் நாம் முப்பது மணி நேரங்களுக்கும் அதிகமாகச் செலவிடுகிறோம். இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்றால், உங்கள் கர்மப் பதிவுகளின் வரையறைகளைக் கடந்து விழிப்புடன் சிந்திப்பதற்கு உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் எந்த விதமான கிரியா அல்லது சாதனாவைச் செய்யும்போதும், உங்களது எண்ணம் அதற்கு வழிவகுக்காத நிலையில், சக்தியானது மேல்நோக்கி வெடித்தெழக்கூடும். ஆனால் உங்களது எண்ணம் கீழ்நோக்கிச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களது எண்ணமும், சக்தி எழுச்சியும் மோதிக்கொண்டால், அது ஒரு குறிப்பிட்ட அளவு உராய்வையும், போராட்டத்தையும் உருவாக்கும்.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பெரும்பாலான மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இதுதான். நீங்கள் வகுப்பிற்கு வந்ததும் சட்டென்று இப்படி உணர்ந்தீர்கள், “அட ஆமாம்! உண்மையில் இதையெல்லாம் நான்தான் செய்கிறேன். ஆனால் எப்போதும் யாரோ ஒருவர்தான் எனக்கு ஏதோஒன்றைச் செய்தார் என்று நான் நினைத்திருந்தேன், ஆனால் உண்மையில் அது நானேதான்!” வகுப்பு முடிந்த பிறகு, முதல் மூன்று மாதங்களுக்கு இது உங்களுக்கு உண்மையாக இருந்தது. அது ஒரு கனவு மாதிரி இருந்தது – எல்லாமே மாற்றமடைந்தது. ஆனால், நாளடைவில் மக்கள் அதே பழைய மாதிரியான வாழ்க்கைக்குள் விழுந்துவிடுகின்றனர். உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்துக்கும் நீங்கள் மறுபடியும் மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறீர்கள். அதாவது உங்கள் அறியாமையை நீங்கள் மீண்டும் ஊட்டி வளர்க்கத் தொடங்குகிறீர்கள். அதன் பிறகு உங்கள் சாதனா மலர்ச்சி அடைவதற்கு அவசியமான சூழல் அங்கே இருப்பதில்லை. சாதனாவுக்குத் தேவையான உளவியல் சூழலை உருவாக்காமல் நீங்கள் பயிற்சி செய்தால், அது ஆரோக்கியத்திற்கான பலன்களை மட்டும்தான் வழங்குமே தவிர, மாற்றத்தினை உருவாக்காது.

உளவியல் சூழலை அமைத்துக் கொள்ளாமல், ஈஷா யோகா வகுப்பின் ஒரு பகுதியான ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா செய்தால், சக்தி மேலெழும்பும். ஆனால் உங்கள் மனம் அதைக் கீழே இழுக்கும்.

இது, பயிற்சியின் வீரியம் குறைந்துவிட்டது என்பதனால் அல்ல. உங்கள் சாதனா திறனற்றுவிட்டது என்பதும் இதற்குக் காரணமல்ல. பயிற்சியின் வெற்றிக்குத் தேவையான உளவியல் சூழலை நீங்கள் அமைக்காததுதான் இதற்கான காரணம். உளவியல் சூழலை அமைத்துக் கொள்ளாமல், ஈஷா யோகா வகுப்பின் ஒரு பகுதியான ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா செய்தால், சக்தி மேலெழும்பும். ஆனால் உங்கள் மனம் அதைக் கீழே இழுக்கும். அதனால்தான், நீங்கள் தினமும் ஷாம்பவி செய்வதற்கு முன்பு, ஈஷா யோகா வகுப்பில் கூறப்பட்டவைகளின் குறிப்புகளை மூன்று நிமிடங்களுக்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய கர்மக் கட்டமைப்பிலிருந்து உங்களைத் தூர நிறுத்துவதற்குத் தேவையான உளவியல் சூழலை இந்தத் துரித நினைவூட்டல் உருவாக்கும். அந்த உளவியல் சூழலை நீங்கள் உருவாக்கவில்லையென்றால், உங்கள் மனதிற்குள் ஓடும் எண்ணங்கள் உங்களைத் தன்வசப்படுத்திவிடும். ஈஷா யோகா வகுப்பில் நாம் உங்களுக்கு வழங்குவது, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகத் துல்லியமான ஒரு வழியாக இருக்கிறது. எதனுடனும் நீங்கள் சிக்கிப்போவதற்கு அங்கு இடமிருக்காது. தினமும் இதை நீங்கள் உறுதியாகக் கடைபிடித்து, பயிற்சி செய்து வந்தால், மாற்றமானது தொடர்ந்து நிகழும். நீங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை, மாற்றம் ஆழமாக, இன்னும் ஆழமாக வேரூன்றிச் செல்லும். இதற்கு ஒரு பயிற்சி மட்டும் போதுமானது. பலவிதமானவற்றையும் நீங்கள் செய்துகொண்டிருக்க வேண்டாம். இந்த ஒரு விஷயத்துக்கு நீங்கள் உங்களையே முழுமையாக வழங்கினால், அது உங்களை முழுமையாக வழி நடத்திச் செல்லும்.

உங்களது கர்மக் கட்டமைப்பிலிருந்து விடுபடுவது என்றால் அதைப்பற்றி மறந்துவிடுவது என்பது பொருளல்ல. மறதி என்பது விடுதலை அல்ல. அதனை அறிந்திருப்பது முக்கியமானது. ஆனால் அதனுடன் தடைபட்டுப்போவது இல்லை.. அதனை அறிந்துகொண்டு, ஆனால் அதனுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக முக்கியமான விஷயம். இந்தச் சூழலை நீங்கள் அமைத்துக் கொண்டால், அது உங்களுடைய கர்மக் கட்டமைப்பைக் கடந்து உங்களை அழைத்துச் செல்லும்.

ஆசிரியர் குறிப்பு: தொன்மையானதும், சக்திவாய்ந்ததுமான ஷாம்பவி மஹாமுத்ரா கற்றுக்கொள்வதற்கான முதல் அடி எடுத்து வையுங்கள். ஈஷா யோகா ஆன்லைன் - கோவிட் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்ற அனைவருக்கும் பாதிக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.