‘விடுதலை’ எனும் வார்த்தையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்கிறார்கள். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் தங்கள் விடுதலையை தேடுகின்றனர். விடுதலை குறித்த சத்குருவின் பார்வை என்ன? முழுமையான விடுதலை உணர்வைப் பெற என்ன வழி? இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது!

Question: விடுதலை என்ற சொல்லுக்குத் தங்களுடைய விளக்கம் என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

விடுதலை என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்துவதால் இது இன்னொருவிதமான நம்பிக்கையை நோக்கி இட்டுச்செல்கிறதா? உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்தால் அதில் பலவிதமான கட்டுப்பாடுகளை பார்க்க முடிகிறதா? உங்களுக்கு எந்த நம்பிக்கையும் தேவையில்லை. ஆனால், நீங்கள் உடல்ரீதியான, மனரீதியான, உணர்ச்சிரீதியான பல்வேறு கட்டுப்பாடுகளில் இருக்கிறீர்கள் என்பதை உங்களால் தெளிவாக பார்க்க முடியும். எனவே, தற்போது நாம் விடுதலை என்ற வார்த்தையை சொல்லும்போது இந்தக் கட்டுப்பாடுகளைக் கடந்து செல்வதைப் பற்றியே பேசுகிறோம்.

கட்டுப்பாடுகளைக் கடந்து செல்லும்போது நாம் அதனை விடுதலை என்கிறோம்

இந்தக் கட்டுப்பாடுகளைக் கடந்து செல்லும்போது, அங்கே இதைவிட பெரிய கட்டுப்பாடு இருக்கக்கூடும். ஆனால், அப்படி ஒரு கட்டுப்பாடு இருக்குமேயானால் அந்தக் கட்டுப்பாட்டையும் கடந்து செல்லக்கூடிய வழி நிச்சயமாக இருந்தாக வேண்டும், இல்லையா? எனவே இந்தக் கட்டுப்பாடுகளைக் கடந்து செல்லும்போது நாம் அதனை விடுதலை என்கிறோம். கட்டுப்பாடு என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கும்போது விடுதலை என்ற ஒன்றையும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் இது இன்னமும் ஒரு கருத்துதான். அது இன்னமும் நமது வாழ்வின் நிதர்சன உண்மையாகவில்லை. மக்களின் மனதில் இது ஒரு கருத்துதான். ஆனால், கட்டுப்பாடு என்பது ஒரு நிதர்சன உண்மையாக இருக்கிறது, இல்லையா? கட்டுப்பாடுகள் என்பது நிதர்சனமாக இருக்கும்போது விடுதலை என்பதையும் ஒரு நிதர்சனமாக நாம் யூகம் செய்துகொள்வது நல்லதுதான்.

உதாரணமாக, நீங்கள் ஐந்தடிக்கு ஐந்தடி அளவுள்ள ஒரு சிறிய இடத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வாழ்க்கை முழுவதும் அந்த இடத்திலேயே உங்களை வைத்து நாம் பூட்டிவிடுகிறோம். இந்தச் சூழ்நிலையில் உங்களைப் பொருத்த வரையில் விடுதலை என்றால் என்ன? இந்த ஐந்தடிக்கு ஐந்தடி அளவுள்ள இடத்தை விட்டு வெளியே வருவதுதான். அங்கிருந்து வெளியே வந்து பத்தடிக்கு பத்தடி அளவுள்ள ஒரு இடத்தில் உங்களை வைத்து விட்டால் மூன்று நாட்கள் உங்களுக்கு உண்மையிலேயே நன்றாக இருக்கும். ஏனென்றால் இது பத்தடிக்குப் பத்தடி இருக்கிறது. அது உங்களுக்கு உண்மையிலேயே விடுதலையைத் தந்த உணர்வு ஏற்படுகிறது. ஆனால் சற்று நேரத்திற்குப் பின் மீண்டும் அது சிறைப்படுத்தியதைப் போல இருக்கிறது. எனவே நீங்கள் அதை உடைத்துக் கொண்டு நூறு அடிக்கு நூறு அடி உள்ள இடத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்கள். அது மிகப்பெரும் விடுதலை அளித்ததைப்போல உங்களுக்குத் தோன்றுகிறது.

ஒருவாரம், பத்து நாட்களில் அந்த இடமும் உங்களைக் கட்டுப்படுத்துவதை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அதையும் உடைத்துவிடுகிறீர்கள். உங்களை ஆயிரம் அடிக்கு ஆயிரம் அடி அளவுள்ள இடத்தில் அடைத்துவிட்டால் மிகப்பெரும் விடுதலையாக நீங்கள் உணர்கிறீர்கள். அங்கும் அப்படி இல்லை. உங்களுக்குள் ஏதோ ஒன்று தொடர்ந்து தற்போது இருப்பதைவிட இன்னும் கொஞ்சம் அதிகமாக விரிவடைய ஏங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்கே இருந்தாலும் அதள பாதாளத்தில் இருந்தாலும் சரி, உச்சியில் இருந்தாலும் சரி இன்னமும் உங்களுக்கு தற்போது இருப்பதை விட அதிகமாக விரிவடைய வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அதாவது நீங்கள் விடுதலை தேடுகிறீர்கள் என்பது அதன் பொருள்.

ஏற்கனவே நீங்கள் விடுதலையைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாட்டை உடைத்து அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினாலும் அது மீண்டும் அடுத்த கட்டத்தைத் தேடுகிறது. இது எங்கே நிற்கும்? இது தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறது. அப்படியானால் நீங்கள் தொடர்ந்து விடுதலையை தேடிக்கொண்டே இருக்கிறீர்கள், இல்லையா? எனவே, விடுதலை என்பதை ஒருவிதமான நம்பிக்கையாகக் குறிப்பிடவில்லை. விடுதலை என்பது உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரப்படும் ஒரு கருத்து கிடையாது. விடுதலையைத்தான் நீங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே, விழிப்புணர்வு இல்லாமல் விடுதலையை எப்போதும் தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாத ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தேடிக்கொண்டே இருந்தால் செல்ல வேண்டிய இலக்கை நீங்கள் அடையாமல் போகவும் சாத்தியங்கள் உண்டு. அதே விஷயத்தை விழிப்புணர்வோடு தேடினால் இலக்கை அடைவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் நெருங்கிவிடும். அதைத்தான் நான் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.