சத்குரு: ஒரு நபருடைய நம்பிக்கை முறைகளின் கட்டமைப்புக்கு அப்பால் பார்ப்பதற்கும், அவரது வாழ்வின் மிக அடிப்படையான அம்சங்களைப் பற்றிக்கூட அவருக்கு எதுவும் தெரியவில்லை என்று ஏற்றுக்கொள்வதற்கும் அந்த நபருக்கு அபாரமான துணிச்சல் தேவைப்படுகிறது. உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா அல்லது உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கைகளைப் பார்ப்பதற்கு உங்கள் கண்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும்கூட, உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரிகிறது. நீங்கள் அனுபவபூர்வமாக அதில் தெளிவாக இருக்கிறீர்கள். ஆனால் கடவுள் என்று வரும்போது, நம்பிக்கைக் கொள்ளுமாறு உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது; இறைத்தன்மையைத் தேடிக்காணுமாறு ஒருவரும் உங்களுக்குக் கூறவில்லை.

...கடவுள் என்று வரும்போது, நம்பிக்கைக் கொள்ளுமாறு உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது; இறைத்தன்மையைத் தேடிக்காணுமாறு ஒருவரும் உங்களுக்குக் கூறவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏதோ ஒன்றை நம்புவது உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அதையே நீங்கள் உணர்ந்தால், அது முழுவதுமாக உங்களை மாற்றமடையச் செய்யும். ஒரு அனுபவத்தால் தொடப்படாமல், நீங்கள் நம்புவது என்னவாக இருந்தாலும், அதற்கு எந்த அர்த்தமுமில்லை. உதாரணமாக, நீங்கள் பிறந்த நாள் முதலாக, என் சுண்டுவிரல்தான் கடவுள் என்று நான் உங்களிடம் சொல்லியவாறு இருந்தால், என் சுண்டுவிரலை நான் உங்களிடம் காண்பித்தால், உங்களுக்குள் தெய்வீக உணர்ச்சிகள் வரும். நீங்கள் பிறந்த அன்றிலிருந்து, என் சுண்டுவிரலை பிசாசு என்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தால், என் சுண்டுவிரலை உங்களுக்குக் காண்பித்தால், உங்களுக்குள் பீதி எழும். இதுதான் உங்கள் மனதின் இயல்பு.

மனதிலிருந்து நீங்கள் உருவாக்கும் எதற்கும் உண்மையான எந்த முக்கியத்துவமும் இல்லை. மனம் ஒரு கருவி என்ற வகையில், ஆம், அது முக்கியத்துவம் உடையது, ஆனால் உச்சபட்ச உணர்தலில் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால், அது இன்றைக்கு ஒரு வடிவம் எடுக்கலாம் மற்றும் நாளைக்கு வேறொரு வடிவம் எடுக்கலாம்; மனம் திரவத்தன்மை கொண்டது, அதிலிருந்து நீங்கள் எதை வேண்டுமென்றாலும் உருவாக்க முடியும். அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பது அது எப்படிப்பட்ட தாக்கத்துக்கு உள்ளாகிறது என்பதையே சார்ந்திருக்கிறது. நீங்கள் ஆழமாகப் பார்த்தால், “உங்கள் மனம்” என்று எதை அழைக்கிறீர்களோ, அதை நீங்கள், உங்களைச் சுற்றிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளீர்கள். இந்த மனதை நீங்கள் சிறுகச் சிறுக சேகரித்துள்ளீர்கள். நீங்கள் எந்த விதமான குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், உங்களது கல்வி மற்றும் மதம், நீங்கள் சார்ந்துள்ள தேசம் அல்லது சமூகம், நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம், இவற்றையெல்லாம் சார்ந்து – உங்கள் மனம், உங்களது பின்புலமாகத்தான் இருக்கிறது.

“நான்” என்று நீங்கள் அழைத்துக்கொள்ளும், அந்த நபரோ அல்லது அந்த ஆளுமைத்தன்மையோ, அது வாழ்வைக் குறித்து நீங்கள் உருவாக்கியுள்ள தீர்மானங்களின் தொகுப்புதான்.

காரண அறிவு என்பது, உங்கள் வாழ்வின் ஒரு வரம்புக்குட்பட்ட அம்சமாக இருக்கும் பிழைப்புக்கான ஒரு கருவியாகத்தான் இருக்கிறது. பிழைப்பு அவசியமானது, ஆனால் நிறைவு தருவது அல்ல. வாழ்வின் ஆழமான பரிமாணங்களுக்குள் நீங்கள் செல்லவேண்டும் என்றால், முதலில் உங்களுக்கு அதற்குத் தேவையான கருவிகள் அவசியம். தற்போது புலன் உறுப்புகளுடன் மட்டும் – பார்ப்பதால், கேட்பதால், தொடுவதால், சுவைப்பதால் மற்றும் முகர்வதால் – நீங்கள் வாழ்வை உணர்கிறீர்கள். இவைகளைக்கொண்டு, உடலியல் கடந்த எதையும் உங்களால் அறிய முடிவதில்லை. கடலின் ஆழத்தை, ஒரு அடிக்கோலுடன் உங்களால் அளக்க முடியாது. அதுதான் தற்போது மக்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் தேவையான கருவிகள் இல்லாமல், வாழ்வின் ஆழமான பரிமாணங்களை அணுகுகின்றனர். ஆகவே அவர்கள் தவறான முடிவுகளுக்குத் தள்ளப்படுகின்றனர்.

மக்கள் தீர்மானங்களுக்குள் குதிப்பதற்கு ஆவலுடன் இருக்கின்றனர், ஏனென்றால் ஒரு தீர்மானம் இல்லாத நிலையில், அவர்களுக்கே உரிய விஷயம் என்று எதுவும் அவர்களிடம் இல்லை. "நான்" என்று நீங்கள் அழைத்துக்கொள்ளும், அந்த நபரோ அல்லது அந்த ஆளுமைத்தன்மையோ, எதுவாக இருந்தாலும் அது வாழ்வைக் குறித்து நீங்கள் உருவாக்கியுள்ள தீர்மானங்களின் தொகுப்புதான். ஆனால் நீங்கள் உருவாக்கியுள்ளது எந்த முடிவாக இருந்தாலும், நீங்கள் கட்டாயம் தவறு செய்தவராகிறீர்கள். ஏனென்றால், நீங்கள் உருவாக்கும் எந்த முடிவுகளுக்குள்ளும் வாழ்க்கை பொருந்துவதில்லை.

இதனை மிக எளிமையாகப் பார்க்கவேண்டுமென்றால், ஒரு மனிதரையே எடுத்துக்கொள்ளுங்கள். இருபது வருடங்களுக்கு முன்னால் நீங்கள் யாரோ ஒருவரைச் சந்தித்தபோது, அவர் செய்துகொண்டிருந்ததை நீங்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல என்று நீங்கள் தீர்மானித்துவிட்டீர்கள். இப்போது இருபது வருடங்கள் கழித்து, நீங்கள் இந்த நபரை இன்றைக்குச் சந்திக்க நேர்ந்தால், இந்த இடைப்பட்ட காலங்களில் இவர் அற்புதமான மனிதராக மாறியிருக்கலாம், ஆனால் தற்போது இந்த நபர் எப்படி இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்வதற்கு உங்கள் மனம் அனுமதிக்காது. நீங்கள் ஒரு முடிவெடுக்கும் கணமே, உங்களது வளர்ச்சியை நீங்கள் தடுத்தவராகிறீர்கள்; வாழ்வின் சாத்தியங்களை நீங்கள் தடுத்து, அழித்துவிடுகிறீர்கள்

ஒரு ஆன்மீக செயல்முறை என்பது, மற்றொரு விதமான முடிவுகளுக்குள் குதிப்பதாக அர்த்தமில்லை. எப்போதும் எந்தத் தீர்மானங்களும் இல்லாமல் பார்க்கும் விருப்பத்துடன், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு துகளாக மட்டும் இங்கே இருப்பதற்கு நீங்கள் துணிவுகொள்ளும்போது, அதன் பிறகே படைப்பின் எல்லையற்ற தன்மையை நீங்கள் அறிவீர்கள்.