“நான் எதற்குமே பயனில்லாதவனா?” இப்படி யோசிப்பவரா நீங்கள்?
எப்போதாவது ‘நான் எதற்கும் பயனில்லாதவன்’ என்று உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது உங்களால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று நினைத்திருக்கிறீர்களா? உயிரின் மதிப்பு அதன் பயன்பாட்டில் இல்லை, மாறாக அதன் அழகு, உயிரோட்டம் மற்றும் தீவிரத்தில் தான் உள்ளது என்று சத்குரு விளக்குகிறார்.

கேள்வி:
நமஸ்காரம் சத்குரு. என்னால் எந்த ஒரு விஷயத்தையும் சரியாக செய்ய முடிவதில்லை என்றும், நான் மற்றவர்களுக்கு ஒரு பாரமாக இருக்கிறேன் என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதற்கு நான் என்ன செய்வது?
சத்குரு:நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதில் உங்கள் கவனத்தை ஒரு கணம்கூட சிதறவிடாமல் முழுமையாக செலுத்த வேண்டும். முதலில் ஒரு மணிநேரத்திற்கு உங்கள் கவனத்தை ஒரு விஷயத்தில் முழு ஈடுபாட்டோடு வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், பிறகு ஒரு நாள் முழுவதும். உங்கள் கவனத்தை ஏதோ ஒன்றில் தொடர்ந்து நிலைநிறுத்தி, அதில் போதுமான தீவிரம் கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா கதவுகளும் உங்களுக்காக திறக்கும். எப்போது அதை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய 'முதல் முன்னுரிமையாக' வைக்கிறீர்களோ அப்போது அந்த உச்சபட்ச சாத்தியம் உங்களுக்கு உண்மையாக கைகூடும்.
Subscribe
இப்போது பிரச்சனை என்னவென்றால், நீங்கள் பல விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள். இதற்காக உங்கள் வாழ்க்கையைத் துறக்க வேண்டும் என்றோ அல்லது குறிப்பிட்ட ஒரு செயலைத்தான் செய்ய வேண்டும் என்றோ அவசியமில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஆனால், உங்களின் முன்னுரிமை ஏதோ ஒன்றின் மீது மட்டும்தான் இருக்க வேண்டும். நீங்கள் அப்படி இருந்தால், ஏன் மற்றவர்களுக்கு ஒரு பாரமாக இருக்கப் போகிறீர்கள்?
தமிழ்நாட்டில் புங்கை என்ற மதிப்புமிக்க மரம் இருக்கிறது. இதில் நாம் சாப்பிடக்கூடிய பழங்கள் எதுவும் காய்ப்பதில்லை. வேப்பமரக் குச்சியைப் பயன்படுத்துவது போல, புங்கை மரக் குச்சியை வைத்துப் பல் தேய்க்கவும் முடியாது. ஆனாலும், அது மிகவும் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அது அமைதியாகத் தனது வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. தென்னிந்தியாவில் பாடும் பறவைகளுக்கு மிகவும் பிடித்த மரம் இதுதான் என்று சொல்வார்கள்.
மற்ற மரங்களைவிட குறிப்பிட்ட சில மரங்கள் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன என்றும், அதனால்தான் அந்த மரங்களை நோக்கி அதிக உயிர்கள் ஈர்க்கப்படுகின்றன என்றும் அறிவியல் பூர்வமான கூற்றுகள் உள்ளன. நான் அந்தப் பக்கம் போக விரும்பவில்லை. ஆனால், நீங்கள் ஒரு புங்கை மரத்தடியில் உட்கார்ந்தால், அதன் நிழலில் அம்மரம் வெளிவிடும் அந்த குளிர்ச்சி மற்ற எந்த மரத்திலிருந்தும் கிடைப்பதை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும். இதற்கான காரணங்களை நாம் ஆராயலாம், ஆனால் அப்படி செய்யும்போது அதன் பொருள்தன்மையை மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியுமே தவிர, அதன் உண்மையான சாரத்தை உங்களால் உணர முடியாது.
உயிரின் மதிப்பு அதன் பயனில் இல்லை!
நாம் ஓர் உயிரை அதன் அழகு, உயிரோட்டம் மற்றும் தீவிரத்தைக் கொண்டுதான் மதிக்கிறோமே தவிர, அதன் பயனை வைத்து அல்ல. அதனால், எப்போதும் மற்றவர்கள் வாங்க விரும்பும் சொத்தாகவோ அல்லது வேறு எதுவாகவோ மாற முயற்சிக்காதீர்கள். உங்களை எப்போதும் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள். பசியாக இருப்பவர்கள் மரத்தில் பழங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆனந்தமாக இருப்பவர்கள் மரத்தில் பூக்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். நாம் இந்த ஆசிரமத்தை தொடங்கியபோது, இந்த ஒட்டுமொத்த நிலத்திலும் வெறும் மூன்று மரங்கள்தான் இருந்தன. இங்கே தன்னார்வலர்களும் ஆசிரமவாசிகளும் இணைந்து மரம் நடலாம் என்று முடிவெடுத்தபோது, அவர்களில் சில பேர் பழங்களைத் தரும் மரங்களையும் காய்கறிச் செடிகளையும்தான் நடவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், நான் பூப்பூக்கும் மரங்களைத்தான் நடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
பூக்கள் பயனற்றவை, மிகவும் மென்மையானவை. ஆனால், குறிப்பாக பெரிய நகரங்களில் வாழ்ந்துகொண்டு, தினமும் குப்பைகளின் நாற்றத்தையே சுவாசிக்கிறவர்கள் ஆசிரமத்திற்கு வந்து, இந்த இடத்தின் நறுமணத்தை ரசிக்க வேண்டும். எந்த பயனும் இல்லாத இந்த பூக்களால் தான் இது சாத்தியமாகிறது. அதனால், நீங்கள் ஒரு மதிப்பான சொத்தாக மாற முயற்சிக்காதீர்கள். எல்லா விதத்திலும் ஒரு முழுமையான உயிராக இருங்கள். முழுஉயிர்ப்போடு இருக்கும் மனிதர்களிடம் இருக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள். நீங்கள் ஒரு தேங்கிப்போன உயிராக இருந்தால், மெதுவாக அந்த நாற்றம் உங்கள் தலைக்கு ஏறிவிடும். தூய்மை என்பது ஒரு குணம் அல்ல - அது அழுக்கற்ற நிலை. நீங்கள் ஒரு அற்புதமான மனிதராக மாறவேண்டும் என்றால், நீங்கள் புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள தேவையில்லை. கழித்தல்கள் தான் தேவைப்படுகிறது. நீங்கள் தேவையற்ற சில விஷயங்களை விட்டுவிட்டால் போதும், நீங்கள் அற்புதமான மனிதராக இருப்பீர்கள்.
முழுமையான உயிர்
உங்களுக்கு கூடுதலாக எதுவும் தேவைப்படாது. ஏனென்றால், இந்த உயிர் ஏற்கனவே முழுமை அடைந்து தான் இருக்கிறது. அது தானாகவே அழகாகத்தான் இருக்கிறது. உங்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் - உங்கள் உடல் அமைப்பு இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் விதத்தில் செயல்படுவதற்கு, நீங்கள் ஒரு முழுமையான உயிராகத்தான் இருக்க வேண்டும். இப்போது நீங்கள் ஒரு முழுமையை உணரவில்லை என்றால், அதற்கு காரணம் உங்கள் மூளையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று அர்த்தம். ஒன்று, உங்கள் மூளையை உங்களுடைய நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கொஞ்ச நேரம் அதை தள்ளிவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களையோ மற்றவர்களையோ ஒரு சொத்தாகவோ அல்லது சுமையாகவோ பார்க்காதீர்கள். நான் ஒரு உயிரின் மதிப்பை அதன் பயனை வைத்து மதிப்பிடுவதில்லை, அதன் தன்மையையும் உற்சாகத்தையும் வைத்துத்தான் மதிப்பிடுகிறேன்.
வண்டி இழுக்கும் ஒரு வீரியம் இழக்க வைக்கப்பட்ட காளை மாடு, காட்டுக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிகிற ஒரு காட்டு யானையைப் பார்த்து, "என்ன ஒரு பயனற்ற உயிர்!" என்று நினைக்குமாம். உங்கள் இயல்பை நீங்கள் தொலைத்துவிட்டு, வாழ்க்கையின் பயனைப் பற்றி மட்டுமே யோசித்தால் இதுதான் நடக்கும்.
நீங்கள் பிறந்து, ஒரு நாள் இறக்கப்போவதில் என்ன பயன் இருக்கிறது? இந்த மனிதகுலத்தால் என்ன பயன் இருக்கிறது? இந்த வாழ்க்கையால் என்ன பயன் இருக்கிறது? வாழ்க்கையில் எந்த பயனும் இல்லை. ஆனால் நீங்கள் வாழ்க்கையுடன் சரியாக பொருந்திப் போய்விட்டால், அவ்வளவுதான், வாழ்க்கை அது அற்புதமானதாக ஆகிவிடும்.


