மஹாபாரதம் பிற பகுதி

இதுவரை: தான் இறந்துவிட்டதாக தனது தந்தை துரோணரிடம் நாடகமாடி, அவரை நிராயுதபாணியாக்கி பாண்டவர்கள் கொன்றார்கள் என்பதை அறியும் அஸ்வத்தாமன் பாண்டவர்களை பழிவாங்க துடிக்கிறான். கீர்த்திவர்மன், கிருபாச்சாரியார் துணையுடன் இரவு நேரத்தில் பாண்டவர்களின் கூடாரத்திற்குள் புகும் அஸ்வத்தாமன், உறங்கிக் கொண்டிருந்த ஐவரையும் கழுத்தை அறுத்து கொல்கிறான். ஆனால் அது பாண்டவர்கள் அல்ல, இறந்த ஐவரும் பாண்டவர்களின் புதல்வர்கள் என்பதை பின்னரே அறிகிறான். 

பிரம்மாஸ்திரம் - அணு ஆயுதமா?

சத்குரு: பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் அஸ்வத்தாமன் கொன்றதால், அவர்கள் அஸ்வத்தாமனை தேடி அலைந்தார்கள். ஒரு வழியாக அஸ்வத்தாமனை கண்டுபிடித்ததும் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனும் இடையே மோதல் துவங்கியது. ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற ஆத்திரத்தில் கிட்டத்தட்ட பித்துபிடித்த மனநிலையில் இருந்த அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தான். அது எப்படிப்பட்ட ஆயுதம் என்பது நமக்கு துல்லியமாக தெரியவில்லை என்றாலும், வியாசரின் வர்ணனையின்படி பார்த்தால் அது இன்றைய நவீன அணு ஆயுதத்தின் தன்மைக்கு நெருக்கமாக இருக்கிறது. பிரம்மாஸ்திரத்தை ஒருவர் எய்து, அதன் முழு சக்தியும் வெளிப்படுமானால், இந்த உலகமே அழிந்துவிடும் என்கிறார் வியாசர். அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை எய்ய, பதிலுக்கு அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை எய்கிறான். அப்போது வியாசரும் கிருஷ்ணரும் குறுக்கிட்டு, "உனக்கு என்ன கோபம் இருந்தாலும், வெறுப்பு இருந்தாலும், காரணம் இருந்தாலும் நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த முடியாது, ஏனென்றால் இதனால் அனைவருமே அழிய நேரிடும்; இந்த பூமியே அழிந்துவிடும் என்பதால் நீ அதை திரும்பப் பெறவேண்டும்" என்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிருஷ்ணர் அந்த அறையில் இருந்து மெதுவாக வெளியேறினார். அவரது கால்களில் தடுமாற்றம் இருந்தது; முகம் வெளிறி, கிட்டத்தட்ட பாதி உயிராக இருந்தார். இதுவரை யாருமே கிருஷ்ணரை இப்படி பார்த்ததில்லை. 

அர்ஜுனன் தான் எய்த பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான். ஆனால் அஸ்வத்தாமனுக்கு தனது பிரம்மாஸ்திரத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பது தெரியவில்லை. எனவே பிரம்மாஸ்திரத்தை செயலிழக்கச் செய்ய உத்தரவிடுகிறார்கள். ஆனால் அஸ்வத்தாமனோ, "என்னால் செயலிழக்க வைக்கவும் இயலாது, வேண்டுமானால் திசை திருப்ப முடியும்" என்றபடியே அவனது அற்பத்தனமான இதயத்தை வெளிப்படுத்தும் விதமாக "இனி பிறக்கப் போகும் பாண்டவர்களின் குழந்தைகள் அனைவரை நோக்கியும் எனது பிரம்மாஸ்திரத்தை திசை திருப்புகிறேன்; இதனால் பாண்டவர் வம்சமே அடியோடு இல்லாமல் போகட்டும்" என்கிறான். இப்போது பாண்டவர்களுக்கு வாரிசு என எஞ்சியிருக்கும் ஒரே குழந்தை, அபிமன்யுவின் மனைவி உத்தராவின் கருவில் இருக்கும் சிசு தான். அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை திசை திருப்பியதால், உத்தராவின் கருவில் இருக்கும் அந்த குழந்தையை பாதிப்பது மட்டுமின்றி, இனி பாண்டவர் வம்சத்தில் எந்த குழந்தையுமே பிறக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இது கிட்டத்தட்ட அணுகுண்டு வெடிப்பை தடுத்து நிறுத்தியும், வெடிப்பால் ஏற்படக்கூடிய கதிரியக்கத்தை தடுக்க முடியாத நிலையைப் போலானது.

பாண்டவர் வம்சத்தைக் காப்பாற்றும் கிருஷ்ணர்

அஸ்வத்தாமன் இந்த சாபத்தை உச்சரிக்கவே, கிருஷ்ணர், "இந்த கலியுகம் முடியும் வரை நீ சிதைந்த மனதோடு அலைவாயாக; நீ இறவாமல் இருப்பாய். மரணம் எனும் விடுதலை எங்கள் அனைவருக்கும் வரும், ஆனால் உனக்கு வராது. சிதைந்த மனநிலையுடன் இந்த பூமியில் நீ அலைவாயாக" என அவனுக்கு சாபமிடுகிறார். ஏனென்றால், இன்னும் ஜனிக்காத சிசுக்களையும் அவன் கொல்கிறான். உத்தராவின் கருவில் இருந்த சிசு உயிரற்ற பிண்டமாக பிறக்கிறது. ஆற்றாமை பொறுக்க முடியாமல் எங்கும் ஓலக்குரல்கள் ஒலித்தது. குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் ஒரே குழந்தை என்பதால் கிருஷ்ணரை அழைத்தார்கள். இனிமேல் குரு வம்சத்தில் எந்த ஒரு பெண்ணும் கருவுற முடியாதவாறு சாபமிட்டிருந்தான் அஸ்வத்தாமன். அசைவற்ற பிண்டமாக கிடந்த அந்த குழந்தையை தன் கையில் எடுத்து அதன் உடல் முழுவதும் தன் கைகளால் வருடினார் கிருஷ்ணர். சற்று நேரம் குழந்தையோடே இருந்து தனது உயிர் சக்தியை அந்த குழந்தையின் உடலுக்கு வழங்கினார். சில நிமிடங்களுக்குள் குழந்தை உயிர் பெற்று வீறிட்டு அழுதது. எங்கும் ஆனந்த கூச்சல் பரவியது.

கிருஷ்ணர் அந்த அறையில் இருந்து மெதுவாக வெளியேறினார். அவரது கால்களில் தடுமாற்றம் இருந்தது; முகம் வெளிறி, கிட்டத்தட்ட பாதி உயிராக இருந்தார். இதுவரை யாருமே கிருஷ்ணரை இப்படி பார்த்ததில்லை.

கிருஷ்ணரின் உறவினனும், குழந்தைப் பருவத்திலிருந்தே உடனிருப்பவனுமான சத்யாகி இதுவரை கிருஷ்ணரை இப்படி பார்த்ததேயில்லை - வெளிறிய முகமும், தடுமாறும் கால்களும், தளர்ந்த உடலுடன், உற்சாகமற்றிருந்த கிருஷ்ணரை பார்ப்பது அவனுக்கு புதிராக இருந்தது. மெதுவாக அங்கிருந்த கல் ஆசனம் ஒன்றில் அமர்ந்த கிருஷ்ணரை சற்று நேரம் பொறுத்து அணுகிய சத்யாகி, "என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? இது குழந்தை தானே. நீ போர்க்களத்தையே சாதாரணமாக கடந்து வந்தவனல்லவா!" என்றான். கிருஷ்ணர், "உயிர் கொடுப்பது என்பது போர் செய்வதை விட கடினமானது. லட்சக்கணக்கான மக்களைக் கொல்வதை விடவும் மிக கடினமானது. இதற்கு, நான் எனது உயிரையே எடுத்து ஊற்ற வேண்டியிருக்கிறது" என்றார். தளர்ந்து, உயிரோட்டமின்றி, உற்சாகமற்ற நிலையில் இதுவரை யாருமே கிருஷ்ணரை பார்த்ததில்லை. அப்படியே கண்களை மூடி தியானத்தில், சமாதி நிலையில் குறிப்பிட்ட நேரம் அமர்ந்தார் கிருஷ்ணர். மீண்டும் கண் திறக்கும்போது அவரிடம் புத்துணர்ச்சி வந்திருந்தது, ஆனால் இந்த நிகழ்வுக்கு பிறகு, பொதுவாக அமைதியான மனிதனாகவே வாழ்ந்தார். இதுவரையிலும் துள்ளலும் குறும்புத்தனமும் நிரம்பியவராக மக்கள் பார்த்த கிருஷ்ணரை இதன் பிறகு யாரும் பார்க்கவில்லை. 

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.