More Mahabharat Stories

மஹாபாரதத்தின் மிகச் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணனைப் பற்றி
இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம். கர்ணனின் தோல்விக்கும், அவனது
மறைவுக்கும் காரணமான சூழ்நிலைகளைப் பற்றி இதில் விளக்குகிறார் சத்குரு.

இதுவரை: குருஷேத்திரப் போர் துவங்கிய பிறகு, அர்ஜூனனுக்குள் யுத்தம் செய்ய
ஒரு பெரும் தயக்கம் எழுகிறது. போரில் கௌரவர்களின் கை ஓங்கியிருப்பது
போன்ற ஒரு சூழல் ஏற்பட, தயங்கி நிற்பது எவ்வாறு அனைத்திலும் மிகப்பெரிய
பாவமாகிறது என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விளக்குகிறார்.

கிருஷ்ணரின் எச்சரிக்கை

சத்குரு: யுத்தத்தின் ஒன்பதாவது நாளில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அவ்வளவுதான் - இனியும் நீ போரிட தயங்கிக் கொண்டிருந்தால் நானே களம் இறங்குவேன் என எச்சரிக்கிறார். போர் துவங்குவதற்கு முன்பே, தாம் போரில் ஈடுபடப்போவதில்லை என்று கௌரவர்களிடம் கிருஷ்ணர் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே இப்போது அவர் போரில் ஈடுபட்டால், கொடுத்த வாக்கை காப்பாற்றாத மனிதர் என்றே கிருஷ்ணர் எப்போதும் பார்க்கப்படுவார். இருந்தபோதிலும், "மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பொருட்டில்லை. எப்படி இருந்தாலும் அவர்கள் என்னை கோழை, திருடன், புறமுதுகிட்டு ஓடியவன் என்று எல்லா விதமாகவும் பேசுகிறார்கள். எனவே இன்னும் ஒன்றை அவர்கள் நினைத்து விட்டு போகட்டும்" என்றபடியே தனது சுதர்சன சக்கரத்தை ஏந்தியவாறு, "இன்றே யுத்தத்தை முடிக்கிறேன்" என்கிறார். இதனை கண்ட அர்ஜுனன், "தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும். நானே போரிடுகிறேன்" என்கிறான்.

போர் தொடர்ந்து நடக்கிறது, 11 அல்லது 12வது நாளில் இரு படையினரும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஏனெனில் கௌரவர்களின் பக்கம் பெருமளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. 16-வது நாளில், பாண்டவர்களின் படை பலம் கௌரவர்களின் படை பலத்தை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் அப்போது குறிப்பிட்ட சில மக்கள் முழு வீச்சில் இறங்கி போர் செய்ய, இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்படுகிறது. துரியோதனனுக்குள் தவிப்பு ஏற்படுகிறது. கர்ணன் கௌரவர் படைக்குத் தலைமை ஏற்கிறான். தாங்கள் எப்படியும் போரில் தோற்பது உறுதி என்பதை அறிந்தே இருக்கிறான் கர்ணன். தன் படை போரில் தோற்றாலும், வேறு விதத்தில் புகழை அடைய விரும்புகிறான் கர்ணன். அனைவரிலும் மிகச்சிறந்த வீரன், மாபெரும் ஷத்திரியன் என்று அறியப்படும் அர்ஜுனனின் வாழ்க்கையை முடித்தவன் என்ற புகழை அடையவேண்டும் என்பதே கர்ணனைப் பொறுத்தவரையில் இலக்காக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புகழுக்காகவே அனைத்தும்

புகழுக்காக வாழ்ந்த கர்ணன், புகழுக்காக இறக்கவும் தயாராக இருக்கிறான். போரில் தோல்வி ஏற்பட்டாலும் அது கர்ணனுக்கு ஒரு பொருட்டில்லை; அவனுக்கு தேவையானதெல்லாம் அர்ஜூனனை கொல்வது மட்டுமே. கௌரவர் படை வெற்றியை அடைய கிருஷ்ணர் விடமாட்டார் என்பதை கர்ணன் அறிந்தே இருந்தான். இதற்கு மேலும் தாங்காது என்ற நிலை ஏற்பட்டால், கிருஷ்ணரே நேரடியாக போரில் இறங்குவார் என்பதையும், இறுதியில் பாண்டவர்கள் வசமே வெற்றி வந்து சேருமாறு கிருஷ்ணர் பார்த்துக்கொள்வார் என்பதையும் அவன் அறிந்திருந்தான். பாண்டவர்கள் தனது சொந்த சகோதரர்கள் என்ற உண்மையும் இப்போது கர்ணனுக்கு தெரிய வருகிறது. இருந்தபோதிலும், அவன் புகழடைய விரும்புகிறான். எனவே பாண்டவ சகோதரர்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குகிறான் கர்ணன். யுதிஷ்டிரனை தோற்கடித்து, நிராயுதபாணியாக்கிய பிறகு யுதிஷ்டிரனை நெருங்குகிறான் கர்ணன்.

கையில் எந்த ஆயுதமும் இன்றி, அச்சம் மேலிட்ட போதும், உயிரை துறக்கத் தயாராக நிற்கிறான் யுதிஷ்டிரன். தனது வில்லின் நுனியால் யுதிஷ்டிரனின் நெஞ்சில் குத்தும் கர்ணன், "நான் இங்கே இருக்கையில் உன்னைப் போன்ற ஆடவர்கள் போர்க்களத்திற்கு யுத்தம் செய்ய வரக்கூடாது என நினைக்கிறேன். நீ உனது மனைவிடம் திரும்புவது நல்லது. ஆனால் உன்னால் உன் மனைவியிடமும் செல்ல முடியாதோ என்னவோ; இப்போது வேறு ஒரு சகோதரனின் முறையோ என்னவோ," என பேசி யுதிஷ்டிரனை அவமதிக்கிறான் கர்ணன். அடுத்து பீமனை தோற்கடிக்கும் கர்ணன், அவனையும் அவமானப்படுத்துகிறான். "இவ்வளவு சதையை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? வெறுமே ஒரு மாடு போல நன்றாக வளர்ந்து இருக்கிறாய். நான் நினைத்தால் உனது தலையை எடுக்க முடியும். ஆனால் ஒரு குழந்தையின் தலையை கொய்து என்ன பயன்? பிழைத்து போ" என்கிறான். நகுலன், சகாதேவன் - இருவரிடமும் இதே விதமாக நடந்துகொள்கிறான் கர்ணன். ஏனென்றால், இவர்களை கொல்லமாட்டேன் என்று கர்ணன் வாக்குறுதி அளித்திருக்கிறான். கர்ணன் தனது வாக்கை காப்பாற்றுகிறான், ஆனால் அதே நேரத்தில் இவர்களை தோற்கடித்த புகழையும் அடைய விரும்புகிறான்.

கர்ணனுக்கும் இந்திரனுக்கும் இடையேயான பண்டமாற்று

கர்ணனின் கவச குண்டலங்களை இந்திரன் வந்து தானமாக கேட்க - அவ்வாறு செய்யக்கூடாது என்ற சூரிய தேவரின் எச்சரிக்கையையும் மீறி - கர்ணன் தனது கவச குண்டலங்களை தானமாக வழங்குகிறான். கர்ணனின் தானம் வழங்கும் கொடை தன்மையைக் கண்டு இந்திரன் வெகுவாக மனமகிழ்கிறான். தனது கவசங்களை கொடுத்துவிட்டால் தனக்கு மரணம் நிச்சயம் என்பதை அறிந்திருந்த போதும், தான் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக அவற்றை தானமாக வழங்கும் கர்ணன் இந்திரனிடம், "உங்களது சக்தி அஸ்திரத்தை எனக்கு கொடுங்கள். இதனால் "கர்ணனிடம் தான் பெற்றதற்கு மாற்றாக தனது ஆயுதத்தை இந்திரன் கொடுத்தான்" என்று மக்கள் பேசட்டும். அந்த சக்தி ஆயுதம் என்னை காக்கப் போவதில்லை - இது எப்படியும் முடியத்தான் போகிறது. ஆனால் ஏனோ ஒரு இனம்புரியாத பாசம் உங்கள்மீது ஏற்படுகிறது, உங்களது புகழை நான் காப்பாற்ற வேண்டும் என்றும் நினைக்கிறேன்" என்கிறான் கர்ணன்.

தொடரும் கர்ணன், "நான் போரிடச் செல்கிறேன் என்பதை நன்றாக அறிந்திருந்தும், நீங்கள் எனது கவசத்தை கேட்கிறீர்கள். ஒருவர் இழைக்கக்கூடிய கொடூரமான செயல் இதுவே. தேவர்களின் அரசராக இருந்தபோதிலும், நீங்கள் உங்கள் நற்பெயரை இழக்கப் போகிறீர்கள். குறைந்தது உங்களின் சக்தி அஸ்திரத்தையாவது எனக்கு கொடுங்கள். இந்திரன் கர்ணனிடம் ஏதோ ஒன்றை கொடுத்து வேறொன்றைப் பெற்றுக்கொண்டான் என்றாவது மக்கள் கருதுவார்கள். அது உங்கள் நற்பெயரை காக்கும்" என இந்திரனிடம் பேசுகிறான் கர்ணன். தன்னைப்பற்றி புகழ்ந்து பேசப்பட வேண்டும் என்ற விருப்பம் மனிதனுக்குள் எப்போதும் இருக்கிறது. அதற்கு பதிலளித்த இந்திரன், கர்ணனிடம் "போரில் வெற்றி - தோல்வி என்பது மிகச்சிறிய விஷயம். இப்போது நீ உனது கவச குண்டலங்களை தானம் அளித்ததன் மூலம் அழியாப்புகழை வென்று விட்டாய். உனது தசையிலிருந்து உனது கவசத்தை அறுத்தெடுத்து எனக்கு தானமளித்ததால் 'வைகர்த்தனா' என உனக்கு பெயர் சூட்டுகிறேன். தானம் கொடுப்பதில் மிகச்சிறந்தவன் இந்திரன் அல்ல; கர்ணன் என்றே இனி மக்கள் உன்னை அழைப்பார்கள். இந்த உலகம் உள்ளவரை, கர்ணா, உனது புகழ் வாழும்." இதுதான் கர்ணன் விரும்பியதும். இருவருமே அவரவர் விரும்பியதை அடைகிறார்கள்.

கடோத்கஜனின் தாந்திரீக ஆற்றல்

போர்க்களத்தில் இரு படையினரும் தொடர்ந்து மோதுகிறார்கள். கர்ணனிடம் கவசம் இல்லை, ஆனால் சக்தி அஸ்திரம் கைவசம் இருக்கிறது. இந்த ஒரு அஸ்திரத்தை வைத்து கர்ணனால் அர்ஜுனனைக் கொல்ல முடியும்; அர்ஜூனனுக்கென்றே அதை பிரயோகிக்காமல் சேமித்து வைத்திருக்கிறான் கர்ணன். அர்ஜூனனைக் கொல்வதற்கு சக்தி அஸ்திரத்தை பயன்படுத்திய பிறகு கர்ணன் பலமற்றவனாகிவிடுவான்; அதன் பிறகு யார் கையில் வேண்டுமானாலும் இறக்கத் தயாராக இருந்தான் கர்ணன். இந்த தருணத்தில், பீமனின் புதல்வனான கடோத்கஜன் முழுவீச்சில் போர் செய்ய களமிறக்கப்படுகிறான். இரவு நேரத்தில் போர் செய்வதில்லை என்ற விதிமுறை உடைக்கப்பட்டு, இரவிலும் போர் நடக்கிறது. பகல் பொழுதுகளில் போர் நடந்தபோது கடோத்கஜன் சாதாரணமாக, இன்னும் ஒரு வீரனாக இருக்கிறான். ஆனால் இரவுகளில் அவனது தாந்திரீக ஆற்றல்கள் முழுமையாக மலர, பேரழிவை ஏற்படுத்துகிறான். இரவு நேரப்போரில் கடோத்கஜனின் தாந்திரீக ஆற்றல் எப்படி இருந்தது என்றால், கௌரவ படையினருக்கு எந்த பக்கம் திரும்பி போரிடுவது, எந்த திசையை பார்த்து நிற்பது என்பதுகூட தெரியவில்லை. ஏனென்றால் எல்லா திசைகளிலும், திரும்பிய திசையெல்லாம் மாய வீரர்கள் இருந்தார்கள். வானத்திலும் கூட படைகள் குவிந்திருப்பது போல ஒரு மாய தோற்றம் கடோத்கஜனால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பாண்டவர்களை எதிர்த்து நிற்க ஆளே இல்லை என்பது போலாகிறது போர்க்கள நிலைமை; கசாப்பு கடையில் வரிசையாக நிறுத்தி வெட்டுப்படுவது போல கௌரவ படைவீரர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை காணும் துரியோதனன், "இன்று இரவுக்குள், கௌரவர் படை அழிந்துவிடும்" என்கிறான். கர்ணனிடம், "சக்தி அஸ்திரத்தைப் பயன்படுத்து; இந்த அரக்கனை கொல்" என கட்டளையிடுகிறான். அர்ஜுனனுக்காகவே வைத்திருக்கும் சக்தி அஸ்திரத்தைப் பயன்படுத்த தயங்குகிறான் கர்ணன். இப்போது சக்தி அஸ்திரத்தைப் பயன்படுத்திவிட்டால், அர்ஜூனனை கொல்ல வேண்டும் என்ற தனது கனவு கனவாகவே போய்விடுமே என்பதால் கர்ணன் தயங்குகிறான். கர்ணன் தயங்குவதைக் கண்டு, "ஏன் தயங்குகிறாய்?" என சந்தேகத்துடன் கேட்கிறான் துரியோதனன். யாராவது தன்னை ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயத்திலேயே எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன் துரியோதனன்.

கடோத்கஜனை அழிக்கும் கர்ணன்

கர்ணனின் விசுவாசத்தையே கேள்வி கேட்கிறான் துரியோதனன். அதற்கு பதிலளிக்கும் கர்ணன், "போரில் வெற்றி பெறுவதற்காக நான் இங்கே வரவில்லை; ஆட்சி செலுத்தலாம் என்பதற்காகவும் நான் இங்கே வரவில்லை; ஒரு ராஜ்ஜியம் கிடைக்கும் என்பதற்காக நான் இங்கே வரவில்லை; நான் இங்கே வந்தது உனக்காக இறப்பதற்காகவே. நான் என்ன செய்ய வேண்டுமோ, அதற்கு ஒரு மாற்று குறைவாககூட நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீ உத்தரவிட்டால் நான் சக்தி அஸ்திரத்தைப் பயன்படுத்துவேன்" என்று உறுதியளித்து விட்டு சக்தி அஸ்திரத்தைப் பயன்படுத்தி கடோத்கஜனை கொல்கிறான். சட்டென்று மாய சக்திகள் அனைத்தும் அகன்றுவிட, போர்க்களம் மீண்டும் இயல்பான யுத்தத்திற்கு திரும்புகிறது.

கர்ணன் தனது சக்தி அஸ்திரத்தைப் பயன்படுத்திவிட்டான் என்பதை அறிந்த கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "நாளை காலை நீ கர்ணனை முடிக்க வேண்டும். அவ்வளவுதான், இதோடு கர்ணன் கதை முடிகிறது" என்கிறார். எனவே அடுத்த நாள் காலை, வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் வழிமுறையில் இல்லாமல் வேறு வழியில் கர்ணனைக் கொல்கிறார்கள். ஆனால் இப்போது எதை ஏற்கமுடியும் - ஏற்கமுடியாது என்ற கட்டமெல்லாம் கடந்துவிட்டது. அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செய்து கொண்டிருந்தார்கள். தன் வாழ்க்கையில் பெற்ற சாபங்களை கர்ணன் சுமந்து கொண்டு இருந்தான். கர்ணன் பரசுராமரிடம் இருந்து, "உனக்கு எப்போது உண்மையிலேயே தேவையோ, அப்போது மந்திரங்களை மறந்து விடுவாய்" என்ற சாபத்தையும்; பசுவைக் கொன்றதற்காக அந்தணனிடம் இருந்து, "நீ போர்க்களத்தில் போரிடும் போது, வாழ்வா மரணமா என்ற நிலை ஏற்படும்போது, உனது தேர் சக்கரங்கள் மண்ணில் புதைந்துவிடும். எனது பசு எப்படி பாதுகாப்பின்றி, உதவியின்றி இருந்த நிலையில் உன்னால் கொல்லப்பட்டதோ, அதேவிதமாக நீ மரணத்தை சந்திப்பாய்" என்ற சாபத்தையும் கர்ணன் பெற்றிருந்தான்.

அர்ஜுனன் கர்ணனைத் தோற்கடித்தான்

இப்போது கர்ணன் அர்ஜூனனை எதிர்த்து யுத்தம் செய்கிறான்; பல்வேறு விதமான நாடகங்கள் அரங்கேறுகிறது. கர்ணனின் தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது. தேரிலிருந்து கீழே இறங்கி சக்கரத்தை வெளியே கொண்டுவர முயற்சிக்கிறான் கர்ணன். யுத்தகளத்தின் விதிமுறைகளின்படி, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்தரப்பினர் அவனை தாக்கமாட்டார்கள். அவன் மீண்டும் தேரின் மீது ஏறும் வரை காத்திருப்பார்கள். கர்ணன், "எனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கையில், நீ ஒரு ஷத்ரியனாக இருப்பதால் என் மீது அம்பெய்ய மாட்டாய் என நம்புகிறேன்" என்கிறான். அர்ஜூனனும் அதேவிதமாக, தன் வீரத்திற்கு இது அழகல்ல என கருதி கர்ணன் மீளும் வரை காத்திருக்கிறான். இதை பார்த்து கிருஷ்ணர், "எதற்காக காத்துக் கொண்டிருக்கிறாய்?" என்கிறார். "கர்ணன் அவனது தேர் சக்கரங்களை விடுவிக்கட்டும்" என்கிறான் அர்ஜூனன். கிருஷ்ணரின் பொறுமை கரைகிறது, "அவனைக் கொல்" என்கிறார். "அவன் நிராயுதபாணியாக இருக்கிறான்" என எதிர்ப்பு தெரிவிக்கிறான் அர்ஜூனன். "அது பொருட்டில்லை - அவனைக் கொல்" என்கிறார் கிருஷ்ணர். கர்ணன் தனது தேர் சக்கரங்களை வெளிக்கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறான். கிருஷ்ணர், "தேரை உடை" என்கிறார். எனவே அர்ஜூனன் அம்பெய்து தேரை நிர்மூலமாக்குகிறான்.

தான் தேரின் மீது இல்லை என்றாலும் தன்னை அவர்கள் தாக்கப்போகிறார்கள் என்பதை உணரும் கர்ணன் தனது வில்லை எடுக்கிறான். கிருஷ்ணர், "அவனது வில்லை உடை" என்கிறார். அர்ஜூனன் உடைக்கிறான். கிருஷ்ணர், "அவன் இப்போது ஆயுதங்களின்றி இருக்கிறான், அவனது தலையை எடு" என்கிறார். அர்ஜூனன் கர்ணனின் தலையை கொய்கிறான். கர்ணன் வீழ்கிறான். ஒரு மாபெரும் மனிதனாக, ஒரு மாபெரும் சோகமாக, ஒரு மாபெரும் தவறாக கர்ணனின் வாழ்க்கை முழுதும் கழிந்திருக்கிறது. கர்ணன் தீயவன் இல்லை, ஆனால் பெரும் தவறுகளாகவே நடந்த வாழ்க்கை அவனுடையது. மலைபோல் நம்பி இருந்த கர்ணனையும் இழந்த பிறகு மனம் உடைகிறான் துரியோதனன். கர்ணன் எப்போதுமே துரியோதனின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவன்.

இறுதி யுத்தம்

துரியோதனன் ஷால்யனை தளபதியாக நியமிக்கிறான். தீரமாக போரிடுகிறான் ஷால்யன், ஆனால் அன்றே யுதிஷ்டிரனால் கொல்லப்படுகிறான். இதை அறிந்த பாண்டவர் படையினர் துவம்சம் செய்ய துவங்குகிறார்கள், கௌரவர்கள் முழுவதுமாக அழிக்கப்படுகிறார்கள். பாண்டவர் சேனையிலும் பலரும் இறக்கிறார்கள். பாண்டவர் சேனையின் பெரும்பகுதியை அஸ்வத்தாமன் அழிக்கிறான். பதினெட்டு நாள் போர் முடிவுக்கு வருகிறது. பாண்டவ சகோதரர்கள் ஐவர் உயிருடன் இருக்கிறார்கள், திருஷ்டதியும்னன் உயிருடன் இருக்கிறான், பாண்டவர்களின் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்கள். மற்றபடி, குறிப்பிடத்தக்க அனைவரும் போரில் இறந்திருக்கிறார்கள்.

அங்கே கௌரவர் பக்கம், துரியோதனனைத் தவிர மற்ற கௌரவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அஸ்வத்தாமனும் கிருபாச்சாரியாரும் உயிருடன் இருக்கிறார்கள்; காலாட்படை வீரர்களில் பெரும்பாலானோர் இறக்கிறார்கள் அல்லது போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார்கள். இந்த தொடர் கொலையை, கொன்று குவிக்கப்படும் மனிதர்களையும், பாரபட்சமின்றி தாங்களே தொடர்ந்து கொன்று கொண்டிருப்பதையும் சகிக்க முடியாமல் பலருக்கும் இதயம் நொறுங்குகிறது அல்லது மனம் பேதலிக்கிறது - என்ன காரணமாக இருந்தாலும், எஞ்சியவர்கள் போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள்.

தொடரும்...

மஹாபாரதம் தொடரின் மற்ற பகுதிகள்