சத்குரு 108 என்ற எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை கவனித்து, ருத்ராட்ச மாலைகளில் உள்ள மணிகளின் எண்ணிக்கை முதல் பல இடங்களில் 108 என்ற எண்ணிக்கை ஏன் வருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். 108 மனிதனுக்கு மட்டுமல்லாமல் பூமி மற்றும் சூரிய மண்டலத்தைப் பொறுத்தவரையிலும் கூட எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விளக்குகிறார்.

சத்குரு:

படைப்புக்கு முந்தைய நிலையின் எல்லையில்லாத் தன்மையிலிருந்து படைப்பின் மூன்று சாத்தியங்கள் தோன்றின. எல்லையற்ற வெளியின் வழியாக, காலம், சக்தி மற்றும் ஈர்ப்புவிசை வடிவில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அது முடிவு செய்தது. இந்த மூன்று அடிப்படைகளும் இந்த எல்லையற்ற, கால வரையறையற்ற வெளியை ஒரு கால வரையறைகளுக்கு உட்பட்ட, எல்லையுள்ள படைப்பிற்குள் அடக்கியது. இந்த மூன்றில் காலம் - அந்த ஓய்வில்லாமல் ஓடும் காலம் - உற்சாகமூட்டவும் அடித்து நொறுக்கவும், ஊட்டி வளர்க்கவும் நசுக்கி சிதைக்கவும், உச்சத்திற்கு உயர்த்தவும் பாதாளத்தில் தள்ளவும் செய்கிறது.

சூரியனின் விட்டத்தை 108 ஆல் பெருக்கினால் அது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்துக்கு சமம். நிலவின் விட்டத்தை 108 ஆல் பெருக்கினால் அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்துக்கு சமம். சூரியனின் விட்டம், பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

காலம் யாருக்கும் விலக்கு அளிப்பதில்லை. புழுவோ பறவையோ, வேட்டையாடப்பட்டதோ அல்லது வேட்டையாடுவதோ, ஆளப்படுபவரோ ஆள்பவரோ, அடிமையோ பேரரசரோ, அழகான உடல்களும் அற்புதமான அரண்மனைகளும், புகழின் உச்சமும் அவமானத்தின் வேதனையும் - அனைத்துமே ஒருநாள் மண்ணோடு மண்ணாகி ஒன்றுமில்லாது போகிறது. 

காலம் என்பது மனிதன் உருவாக்கிய கருத்தல்ல

காலம், அதாவது நேரம் ஓய்வின்றி ஓடும் தன்மை. இந்த காலத்தின் மீது நீங்கள் சவாரி செய்து வாழ்க்கையை அழகாக வாழலாம், அல்லது இடைவிடாது ஓடும் காலச்சக்கரத்தில் நீங்கள் சிக்கி நசுங்கலாம். காலத்தின் செயல்பாட்டினால் நீங்கள் அழிக்கப்படலாம் அல்லது அதன் செயல்பாட்டினால் நீங்கள் உருவாக்கப்படலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒன்று காலத்தின் செயல்பாடுகள் உங்களை சிறைப்படுத்தலாம், அல்லது காலத்தைப் பயன்படுத்தி நீங்கள் கடந்து செல்லவும், விடுவித்துக்கொள்ளவும் செய்யலாம். பெரும்பாலானவர்கள் நம்புவது போல காலம் என்பது வெறும் மனிதன் உருவாக்கிய கருத்தல்ல, படைப்பின் மிக முக்கியமான பரிமாணம். காலம் இல்லையென்றால், தொடக்கமும், முடிவும் கிடையாது. தொடக்கமும் முடிவும் இல்லையென்றால், படைப்பே இருக்காது.

காலத்தின் மடியில் தான் நாம் இருக்கிறோம். காலத்தில்தான் நாம் பிறந்தோம். காலத்தில்தான் நாம் இறப்போம். ஒருவர் காலத்தின் முக்கியத்துவத்தையும் காலத்தின் விதிகளையும் காலத்தின் தர்மத்தையும் புரிந்துகொண்டு, காலத்தின் தர்மத்துடன் இணக்கமாக இருந்தால், அவர் ஜயன் அல்ல - விஜயன்.

இங்கு வெற்றி பெறுவார், எங்கும் வெற்றி பெறுவார். மாறாக, கால தர்மத்துடன் இணக்கமாக இல்லாதவர்கள் வாழ்க்கையின் போக்கால் நசுக்கப்பட்டு சிதைந்து போவார்கள். வாழ்க்கை என்பது காலத்தின் விளையாட்டே. இதைப் புரிந்துகொண்ட, இந்நிலப்பரப்பின் பண்டைய ரிஷிகளும், ஞானிகளும், யோகிகளும் காலத்தை அதீத கவனத்துடன் நோக்கினர். காலத்தைப் பற்றிய நமது கருத்து, அடிப்படையில் பூமி மற்றும் சூரிய மண்டலம் ஆகிய நம்மைச் சுற்றி தற்போது இருக்கும் படைப்புகளுடனான நமது தொடர்பைப் பொருத்ததே.

108 என்ற எண்ணின் முக்கியத்துவம்

சூரிய சித்தாந்தம் என்ற பண்டைய இந்திய வானியல் நூலின்படி, சூரிய ஒளி 0.5 நிமிடத்திற்கு 2,202 யோஜனை வேகத்தில் பயணிக்கிறது. ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல்கள். 2,202 யோஜனைகள் என்பது 19,818 மைல்களுக்கு சமம். ஒரு நிமிஷா என்பது ஒரு வினாடியின் 16/75 பங்காகும். அரை நிமிஷா என்பது ஒரு வினாடியின் 8/75 பங்கு, அதாவது 0.106666 வினாடிகள். 0.10666 வினாடியில் 19,818 மைல்கள் வேகம் என்பது ஒரு வினாடிக்கு 185,793 மைல்களுக்கு சமம்.

ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 186,282 மைல்கள் என்ற நவீன கணக்கீடுகளுக்கு இது ஏறத்தாழ ஒத்துப்போவதாக உள்ளது. நவீன அறிவியல் இந்த எண்ணை மிகவும் கஷ்டப்பட்டு, பல்வேறு கருவிகளைப் பயன்படுத்திக் கண்டறிந்துள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, மனித உடலமைப்பும் சூரிய மண்டலமும் எவ்வாறு ஒன்றிணைந்து இயங்குகின்றன என்பதை எளிமையாக கவனித்தே இந்த எண்ணைக் கண்டறிந்துள்ளனர்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம், நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம், பூமி சுழலும் விதம், அது ஏற்படுத்தும் தாக்கம் என இவை அனைத்தும் மிகுந்த கவனத்துடன் உற்றுநோக்கப்பட்டுள்ளன. சூரியனின் விட்டத்தை 108 ஆல் பெருக்கினால் அது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்துக்கு சமம். நிலவின் விட்டத்தை 108 ஆல் பெருக்கினால் அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்துக்கு சமம். சூரியனின் விட்டம், பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு. அதனால்தான் மாலையில் 108 மணிகள் உள்ளன.

நான் இன்னும் பல ஆச்சரியமான உதாரணங்களைச் சொல்ல முடியும், ஆனால் மிகவும் முக்கியமானது காலத்தின் உருவாக்கத்திற்கும் மனித உடலின் உருவாக்கத்திற்கும் இடையேயான ஆழமான தொடர்பு. உங்களுக்குத் தெரியுமா, நம் பூமி ஏறக்குறைய வட்ட வடிவில் உள்ளது, சற்று சாய்வான சுற்றுப்பாதையை கொண்டுள்ளது.

இது பயணிக்கும்போது, சுழலும்போது, ஒரு வட்டத்தை உருவாக்குகிறது. இந்த சுழற்சியை முடிக்க 25,920 ஆண்டுகள் ஆகும் என்பது இன்று நமக்குத் தெரியும். இந்த சாய்வு முக்கியமாக பூமியின் மீதான நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படுகிறது. அத்தனை ஆண்டுகள் ஒரு யுக சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு சுழற்சியும் எட்டு யுகங்களைக் கொண்டுள்ளது.

பூமியும் மனிதனும்

அச்சுப் பிறழ்சியின் ஒரு சுழற்சிக்கு திரும்புவோம் - 25,920 ஐ 60ஆல் வகுத்தால் (இது நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கான இதயத்துடிப்பின் எண்ணிக்கையும் கூட) - 432 கிடைக்கிறது. 432 என்ற எண் பல்வேறு கலாச்சாரங்களில் காணமுடிகிறது - நோர்ஸ் கலாச்சாரம், பழங்கால யூத கலாச்சாரம், எகிப்திய கலாச்சாரம், மெசபொட்டோமிய கலாச்சாரம், மற்றும் இந்திய கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானது. ஏன் 432?

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல நிலையிலும் இருந்தால், உங்கள் இதயம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 60 முறை துடிக்கிறது, இது ஒரு மணி நேரத்திற்கு 3600 துடிப்புகள், மற்றும் 3600 × 24 என்ற முறையில் ஒரு நாளைக்கு 86,400 இதயத்துடிப்புகள். 864ஐ 2ஆல் வகுத்தால், மீண்டும் உங்களுக்கு 432 கிடைக்கிறது.

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், ஒரு நிமிடத்திற்கு சுமார் 15 மூச்சுகள் எடுப்பீர்கள். நீங்கள் நிறைய சாதனா செய்திருந்தால், அது வெறும் 12 ஆக இருக்கலாம். ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் என்பது ஒரு மணி நேரத்திற்கு 900 மூச்சுகள் மற்றும் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுகள். 216ஐ 2ஆல் பெருக்கினால் மீண்டும் 432 கிடைக்கிறது. பூமியின் சுற்றளவை எடுத்துக்கொண்டால் - கடல்சார் மைல்(நாட்டிகல் மைல்) என்று ஒன்று உள்ளது, இதுவே உண்மையான மைல், ஏனெனில் இது பூமியின் தன்மையுடன் தொடர்புடையது. மற்ற அளவீடுகள் கணக்கீட்டின் எளிமைக்காக உருவாக்கப்பட்டவை.

வட்டத்தில் 360° இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அதேபோல, பூமியிலும் 360° இருக்கிறது, ஒவ்வொரு டிகிரியும் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிமிடங்களில் ஒன்று ஒரு கடல் மைலுக்கு சமம். அதாவது பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு 21,600 கடல் மைல்கள் - இது நீங்கள் ஒரு நாளில் எடுக்கும் மூச்சுகளின் எண்ணிக்கையும் கூட. அதாவது பூமி நேரத்திற்கு சுழல்கிறது, அதனால் நீங்களும் நன்றாக இருக்கிறீர்கள். பூமி நேரத்திற்கு சுழலவில்லை என்றால், அது நமக்கு நல்லதாக இருக்காது. நீங்கள் அதனுடன் இணக்கமாக இல்லை என்றால், அதுவும் உங்களுக்கு நல்லதல்ல.

நேரம் என்பது நாம் கண்டுபிடித்த ஒரு கருத்து அல்ல - நேரம் நம் உடலமைப்பில், நாம் உருவாக்கப்பட்ட விதத்திலேயே ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மஹாபாரதத்தில், யுகங்கள் பற்றியும் அவை எப்படி செயல்படுகின்றன என்பது பற்றியும் நிறைய பேசப்பட்டிருக்கிறது. மனித வாழ்வில் காலத்தின் தாக்கத்தை வேறொரு கண்ணோட்டத்தில் இருந்து நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது யாரோ சிந்தித்த ஒன்று அல்ல - இது ஒரு அற்புதமான, ஆழமான விஞ்ஞானம்.

யோகா எப்போதும் இதில் ஆழமான ஈடுபாடு கொண்டுள்ளது. இதைப் பற்றிய கோட்பாடுகளை முன்வைப்பதில் நம்பிக்கை கொள்வதில்லை, அவ்வளவு தான். பயிற்சியின் மூலம், உடலை படைப்பின் காலம் மற்றும் வெளியுடன் இணக்கமாக்க முயற்சிக்கிறோம், ஏனெனில் அவற்றுடன் இணக்கமாக இல்லாமல், உங்களால் வெகுதூரம் செல்ல முடியாது. நீங்கள் காலத்தின் மீது சவாரி செய்யவில்லை என்றால், ஒரு சராசரி வாழ்க்கையையே - பெரும்பாலும் துன்பமான வாழ்க்கையையே வாழ்வீர்கள். காலத்தின் மீது நீங்கள் சவாரி செய்தால் மட்டுமே ஓர் அசாதாரண வாழ்க்கையை நீங்கள் வாழமுடியும். மனித உடலமைப்பும், மனித மூளையும் இந்த நோக்கத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எண்கள் சுருக்கமாக:

0.5 நிமிஷாவில் 2202 யோஜனைகள் உள்ளன.

1 யோஜனை = 9 மைல்கள்

1 நிமிஷா = வினாடிகள் (ஒரு வினாடியின் 16/75 பங்கு)

0.5 நிமிஷாவில் 2202 யோஜனைகள் =0.5x (16/75) வினாடிகளில் 2202 x 9 மைல்கள்

= 0.10666 வினாடிகளில் 19,818 மைல்கள்

= 185,793 மைல்கள்/வினாடி

4 யுகங்கள் உள்ளன: கலி, துவாபர, திரேதா மற்றும் கிருத யுகம். 25,920 ஆண்டு சுழற்சியில் இவை ஒவ்வொன்றும் இருமுறை நிகழ்கிறது.