அருள்வாக்கு சொல்லலாமா?
அருள்வந்து சாமியாடி அருள்வாக்கு சொல்வது, நம் ஊர்களில் சகஜமான ஒன்றுதான். ஆனால், அவ்வாறு அருளைப் பயன்படுத்தி அடுத்தவரின் எதிர்காலத்தை சொல்வது ஏன் கூடாது என்பதை சத்குரு இந்த பதிவில் விளக்குகிறார். ஈஷாவில் தியான அன்பர்கள் ஏன் அருள்வாக்கு சொல்வதில்லை என்ற காரணத்தையும் அறியுங்கள்.

கேள்வி:
நமஸ்காரம் சத்குரு. என்னுடைய அம்மாவுக்கு கோவில் போன்ற சக்தியான இடம், இல்லை சாமி பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது எப்போதுமே சாமி வரும், அதாவது அருள் வரும். அந்த நேரத்தில் முன்னால் வருபவர்களுக்கு என் அம்மா, அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்வார், அதை நான் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு பார்த்தீர்களென்றால், எனக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று சொன்ன ஒருவருக்கு, எட்டு வருடம் கழித்து குழந்தை பிறக்கும் என்று என் அம்மா சொன்னார், அது நடந்தது. இதுபோல அவர் நிறைய சொல்வது, அதுபோல சொல்வது அவருக்குள் இருந்து வருகிறதா? இல்லை வெளியில் இருந்து வருகிறதா? இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அதைப்பற்றி கொஞ்சம் எனக்கு சொல்லுங்கள் ஸ்வாமி... என் சின்ன வயதில் இருந்து இந்த கேள்வி எனக்கு இருக்கிறது.
சத்குரு:Subscribe
அருள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
அருள் நம்மை நோக்கி வந்தால் சும்மா வாயை மூடி உட்கார்ந்துகொள்ள வேண்டும். ஆமாம், உங்கள் அம்மாவுக்கு சொல்லவேண்டும் நீங்கள். அருள் வந்தால் சும்மா வாய் மூடி உட்கார்ந்து உணரவேண்டும். இது வளர்வதற்கு ஒரு வாய்ப்பு.
இது எப்படியென்றால், நமக்கு தாகமாக இருக்கிறது, யாரோ தண்ணீர் கொடுத்தார். உஃப் என்று அவர்மேல் துப்பிவிட்டோம், என்ன பிரயோஜனம்? குடித்துக்கொள்ள வேண்டும்தானே? நமக்கு தாகமாக இருக்கிறது, யாரோ தண்ணீர் கொடுத்தால் என்ன செய்யவேண்டும்? குடித்துக்கொள்ள வேண்டும். நம் முன் வந்தவர்கள் மேல் எல்லாம் துப்பிவிட்டால் எப்படி? அப்படி துப்ப வேண்டாம். யாராவது தண்ணீர் கொடுத்தார்கள் என்றால் குடித்துக்கொள்ள வேண்டும். குடித்தால் உயிர் வளர்கிறது. துப்பிவிட்டால் என்ன வரும்?
சும்மா ஒன்று இப்படி வந்தால், அதை வைத்து ஏதோ செய்துவிட வேண்டும். சும்மா ஒரு சின்னது ஒரு சக்தி வந்தால், அதற்கு ஒரு கடை வைத்துவிட வேண்டும் நாம். வேண்டாம் அப்படி. அவருக்கு எட்டு வருடத்திற்குப் பிறகு குழந்தை வரும் என்று சொல்லி, என்ன வந்துவிட்டது அவருக்கு? எப்படியும் வருவது வரும். நீங்கள் சொல்வதால் என்ன வந்துவிட்டது என்று கேட்கிறேன். எட்டு வருடத்தில் வருவது, நான்கு வருடத்தில் வருவது போல செய்துவிட்டரா? ஒன்றும் இல்லை. எப்படியும் எட்டு வருடத்தில் வரும். நீங்கள் என்ன சொல்வது என்று கேட்கிறேன். சும்மா இருப்பதுதானே? சும்மா இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஈஷாவில் ஏன் அருள்வாக்கு சொல்வதில்லை?
இப்போது தியானம் எல்லாம் செய்து, நாம் எவ்வளவோ சோதனை செய்து இதுபோல எல்லாம் உங்களுக்கு வரக்கூடாது என்பதற்கான அருளை இங்கே ஈஷாவில் தயார்செய்கிறோம். இல்லையென்றால், எல்லோரும் ஒரு கடை வைத்துவிடுவார்கள். வேறு ஒன்றும் பண்ணமாட்டார்கள். இவரெல்லாமே மரத்திற்கு கீழே கிளி வைத்து உட்கார்ந்து... உலகத்தில் பாதிபேர் அதே வேலையை செய்துவிடுவார்கள். நாம் உலகத்தில் இருப்பவர்களுக்கு எல்லாமே ஒரு சொட்டு ஆன்மீகம் பண்ணவேண்டும் என்று ஆர்வம். ஒரு சொட்டு கிடைத்தாலே கடை வைத்துவிடுவார்கள். அதனால் அருள் வந்தாலும் ஒன்றும் கிடைத்ததுபோல இருக்கக்கூடாது. இப்போது அப்படி செய்து, அருள் கொடுப்பது. சும்மா இப்படி கை தட்டினால் கத்திக்கொள்கிறார்கள், என்ன செய்வது என்று தெரியவில்லை. எட்டு வருடம், பத்து வருடம் என்று ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. சும்மா பே... என்று கத்திக்கொள்கிறார்கள். கொஞ்சம் அவருக்கு வேறுமாதிரி, இந்த அருளில் வேறுமாதிரி பண்ணி கொடுத்தால் எல்லாம் கடை வைத்து உட்கார்ந்துவிடுவார்கள்.
அருள் பிழைப்பிற்காக அல்ல, வளர்வதற்கு!
மரத்தில் இருக்கிற கிளி பிடித்து உட்கார்ந்தால் பிழைப்பு நடந்துவிடும், வேறு ஒன்றும் நடக்காது. பிழைப்பு மட்டும்தான் நடக்கும். பிழைப்பு நடத்துவதற்கு கை, கால் இருக்கிறது, இல்லையா? ஏதோவொன்று செய்யலாம்தானே? பிழைப்புக்கு கை, கால் உபயோகப்படுத்திக் கொள்ளலாம், அருள் உபயோகப்படுத்த வேண்டாம். அருள் உங்கள் வளர்ச்சிக்காக. இந்த உயிர் மலர்வதற்காக அருள், பிழைப்பிற்காக இல்லை. பிழைப்பிற்கு கை, கால் கொடுத்திருக்கிறார்களா, இல்லையா? உபயோகப்படுத்திக் கொள்வதுதானே?