இதுவரை: சூதாட்டத்தில் தோற்ற பிறகு, பாண்டவர்களும் திரௌபதியும் வனவாசம் செல்கிறார்கள். அதில் திருப்தியடையாத துரியோதனனும் கர்ணனும் அவர்களை நசுக்கும் முயற்சியாக முதலில், காட்டுக்குள் சென்று வேட்டையாட திட்டமிடுகிறார்கள். அதை திருதராஷ்டிரனிடம் பேசி விதுரர் தடுக்கிறார். அடுத்து, துர்வாச முனிவர் மூலம் சாபம் வரச் செய்யும் முயற்சியை கிருஷ்ணர் புகுந்து சரி செய்கிறார். பாண்டவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் தன் பரிவாரங்களோடு செல்லும் துரியோதனன் கந்தர்வர்களிடம் சிறைபடுகிறான். பாண்டவர்கள் வந்து அவனையும் மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டியதாகிறது, பெருத்த அவமானமடைந்ததாக உணர்கிறான் துரியோதனன். பாண்டவர்களின் கானக வாழ்க்கை தொடர்கிறது. தான் பெற்ற அட்சய பாத்திரம் மூலம், தங்களைத் தேடி வருவோர்க்கெல்லாம் திரௌபதியால் உணவு வழங்க முடிகிறது.

யுதிஷ்டிரனை தூண்டும் திரௌபதி

சத்குரு: கானக வாழ்க்கையில், தங்களோடு விருந்தினர்களாக பலரும் வந்து சேர்ந்து விட்டதை பார்க்கிறார்கள் பாண்டவர்கள். அந்த பகுதியில் பாண்டவர்கள் இருப்பதையும், அங்கு உணவு குறைவற கிடைக்கிறது என்பதையும் அறிந்த மக்கள், பெரும் எண்ணிக்கையில் அவர்களைப் பார்க்க தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார்கள். இப்போது அந்த பகுதி பார்ப்பதற்கு வனம் போலவே தெரியவில்லை - வசதி குறைவான அரண்மனையைப் போல தெரிந்தது. எனவே இன்னும் சற்று அடர்ந்த காட்டு பகுதிக்குச் செல்ல முடிவு செய்தார்கள் பாண்டவர்கள்.

எனவே அங்கிருந்து த்வைத வனம் எனும் மற்றொரு வனப் பகுதிக்கு நகர்கிறார்கள். யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளுக்கு இடைப்பட்ட அழகு ததும்பும் அற்புதமான இடம் அது. மனித நாகரிகத்தின் வாசனை இன்னும் எட்டியிருக்காத வனப்பகுதியாக இருந்தது. இவ்வளவு அடர்த்தியான வனப்பகுதிக்குள் நகர்ந்ததும், அவர்களுக்கு இருந்த சிறிதளவு சௌகரியங்களும் - தினமும் வந்து கொண்டிருந்த மக்களின் ஆதரவும், கொண்டு வந்து கொண்டிருந்த பரிசுப் பொருட்களும் தடைபட்டுப் போனது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டாள் திரௌபதி. அவள் மன அழுத்தத்தில் இருக்கும்போது நீங்கள் அருகில் இல்லாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் தன்னைவிட ஆழமான பள்ளத்திற்குள் நீங்கள் இருக்குமாறு அவள் பார்த்துக் கொள்வாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யுதிஷ்டிரனுக்கு நரக வாழ்வை கொடுத்தாள் திரௌபதி. அவனைப் பலவாறு ஏசி; பழி மொழி பேசி; தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் சித்திரவதை செய்தாள். திரௌபதி என்ன செய்தாலும், அதை எதிரொலிப்பதுடன், அதில் தன் பங்கையும் சற்று சேர்ப்பான் பீமன். பல வழிகளிலும் பீமனை தன் சுண்டுவிரலில் முடிந்து வைத்திருந்தாள் திரௌபதி. அர்ஜுனனுடன் ஒப்பிடும் போது, பீமன் வேறுவிதமாக இருந்தான். மிகப் பெரிய உருவத்துடன், ஆண்மை மிக்க தோற்றத்துடன் இருந்தாலும், கதாநாயகனாக பொருந்தவில்லை பீமன். கதாநாயகனுடன் எப்போதும் உடனிருக்கும் கூட்டாளியாகவே அவன் இருந்தான். சில நேரங்களில், 'இது இப்படி நடக்கவேண்டும்' என்று திரௌபதி நினைப்பாள், ஆனால் அதை யுதிஷ்டிரன் செய்ய மாட்டான் என்பது அவளுக்கு தெரியும், மற்ற சகோதரர்களும் அவனது அனுமதி பெறாமல் அதை செய்யமாட்டார்கள் என்பதும் தெரியும். யுதிஷ்டிரனின் கண்ணசைவாவது இல்லாமல், அவனை மீறி பாண்டவர்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டார்கள் - அது அவர்களது வாக்குறுதியாகவும் இருந்தது. ஆனால் திரௌபதி மீது இருந்த ஈர்ப்பினால் அறிவுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் அவளுக்காக எதையாவது செய்து கொண்டிருப்பான் பீமன். பல நேரங்களில் இது கிட்டத்தட்ட ஐவருக்கு மட்டுமின்றி அறுவருக்குமே பேரபாயங்களை கொண்டு வந்திருக்கிறது. ஆனால் எப்போது தேவை ஏற்பட்டாலும், திரௌபதி அதை நடத்துவாள், இறுதியில் எல்லாமே நல்விதமாகவே முடிந்திருக்கிறது.

எனவே திரௌபதியும் பீமனும் யுதிஷ்டிரனின் மனதை மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள். அவனை எப்படியாவது கோபமூட்டி, ஒரு படையைத் திரட்டிக்கொண்டு ஹஸ்தினாபுரம் செல்ல வைத்து விடலாம் என்று நினைத்தார்கள். இதைப் பார்த்த யுதிஷ்டிரன் முடிவாக, "நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, நீங்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் சரி, நான் என் வார்த்தை தவற மாட்டேன் - 12 வருடங்கள் வனவாசம் செல்வேன் என்று ஒப்புக்கொண்டேன், நான் அதைத்தான் செய்வேன்" என்று உறுதியாகக் கூறினான். ஒருவழியாக இது ஒரு முடிவைக் கொண்டு வந்தது. வேறு வழியில்லாமல் போகவே, அதை ஏற்றுக்கொண்ட திரௌபதி தன் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தாள்.

அர்ஜுனன் பெற்ற அஸ்திரங்கள்

தன் சகோதரர்களோடும் திரௌபதியோடும் சுமார் ஆறு ஆண்டுகள் வனவாச வாழ்க்கை கழிந்திருந்த நிலையில், எதிர் வரப்போகும் போருக்காக தன்னை தயார் செய்து கொள்ள நினைத்தான் அர்ஜுனன். இன்னமும் கௌரவர்கள்‌ மீது நம்பிக்கை கொண்டிருந்த யுதிஷ்டிரனை தவிர மற்ற பாண்டவ சகோதரர்களுக்கு போர் வருமா வராதா என்று எந்த குழப்பமும் இல்லை‌ - எப்படியும் போர் நிகழும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். வனவாச வாழ்க்கை முடிந்ததும் துரியோதனன் தன் வாக்கை காப்பாற்ற மாட்டான் என்பதும், தங்களுக்கு உரிமையான பாகத்தை திரும்பத் தரமாட்டான் என்பதையும் அவர்கள் அறிந்தே இருந்தார்கள். எனவே அர்ஜுனன், "அஸ்திரங்களை பெறுவதற்காக நான் சாதனா மேற்கொள்ள விரும்புகிறேன்" என்றான். அஸ்திரங்கள் என்றால் மந்திர சக்தியூட்டப்பட்ட ஆயுதங்கள். முதலில் வருணனை வேண்டி, வருணாஸ்திரத்தை வரமாக பெற்றான் அர்ஜுனன். இப்படியே ஒவ்வொரு தேவர்களாக, முனிவர்களாக வணங்கி, வழிபட்டு, அவர்களது ஆசிர்வாதங்களையும் அஸ்திரங்களையும் சேகரித்தான். ஆனால் அவனது இலக்கு சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெறுவதாக இருந்தது.

இமாலய பர்வதம் சென்று தியானம் செய்து சிவனின் அருளைப் பெற விரும்பினான் அர்ஜுனன். பல நாட்களுக்கு பிறகு, ஒரு சமயம் அர்ஜுனன் மிக பசியோடு இருந்தபோது, ஒரு கரடி உறுமும் ஒலி அவன் காதில் விழுந்தது. கண்களைத் திறந்தான், ஒரு கரடி இருந்தது. அமர்ந்தபடியே தன் வில்லை எடுத்து அம்பை தொடுத்து சிரமமே இல்லாமல் கரடியை வீழ்த்தினான். பிறகு எழுந்து கரடியின் அருகே சென்றான். அவனே ஆச்சரியப்படும் விதமாக அங்கே இரண்டு அம்புகள் தைத்திருந்தது. இன்னொரு அம்பை எய்தது யார்? அப்போது அங்கே ஒரு காட்டுவாசி மனிதன் தன் மனைவியோடு வந்தான், "யார் நீ, ஒரு முனிவரைப் போல் அமர்ந்து கொண்டிருக்கிறாய் ஆனால் வில்லையும் அம்பையும் துணைக்கு வைத்திருக்கிறாய். இது சரியானதாக தெரியவில்லையே. நீ எப்படி இருந்தால் எனக்கென்ன. இந்த கரடியின் மீது நான் தான் முதலில் அம்பெய்தேன். இங்கே பார் என்னுடைய அன்புதான் கரடியின் இதயத்தை துளைத்திருக்கிறது. இந்த கரடி என்னுடையது" என்றான். "என்ன தைரியம் உனக்கு" என சீறினான் அர்ஜுனன். உயர்குடியில் பிறந்திருந்தான், ஷத்ரியனாகவும் இருந்தான், தானே மிகச்சிறந்த வில்வித்தை வீரன் என்றும் நம்பினான், எனவே அர்ஜுனனிடம் இந்த கௌரவப் பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மற்ற யாரை விடவும், தானே மிகச்சிறந்த வில்வித்தை வீரன் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுனன். அவன் திறமைசாலிதான், ஆனால் அவனை விட வேறு யாரும் சிறந்து விளங்க முடியாது என்ற எண்ணத்தோடு இருந்தான். அப்படி யாராவது தென்பட்டால், எப்படியாவது தானே அவர்களை மிஞ்சி இருக்க வேண்டும் என்பதையும் பார்த்துக் கொண்டான். அதற்காக அந்த மனிதனின் கட்டை விரலையே அகற்றுவதாக இருந்தாலும் சரி - ஏகலைவனுக்கு நிகழ்ந்ததைப் போல. அதுதான் அவனது வாழ்வின் மோசமான தருணம். மற்றபடி இந்த மனிதனை பற்றிய அனைத்தும் அவனது வாழ்வில் நன்றாகவே இருந்தது. இப்போதும் கௌரவப் பிரச்சனையால் இந்த பழங்குடியின மனிதனோடு ஒருவித மோதல் வந்துவிட்டது. இருவரும் மோதிப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். இருவரும் அம்புகளை எய்ய துவங்க, எந்த முடிவையும் எட்டாமல் அம்புகள் தீர்ந்தது. எனவே மல்யுத்தம் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த பழங்குடியின மனிதன் அர்ஜுனனை விட மிகப் பலசாலியாக இருந்தான், எளிதாக அர்ஜுனனை கீழே வீழ்த்தினான். என்ன செய்வது எனத் தெரியாமல் அர்ஜுனன் கையில் அகப்பட்டதை எல்லாம் வீச துவங்கி, அப்படியே அருகில் இருந்த ஒரு பூச்செடியை பிடுங்கி வீசினான். அது அந்த மனிதன் மீது விழ, அவன் சற்றே பின் வாங்கினான்.

அவன் மீண்டும் தாக்கத் துவங்கினால், தற்காத்துக் கொள்ளவோ, எதுவும் செய்யவோ தன்னால் முடியாது என்பதை உணர்ந்தான் அர்ஜுனன். தான் சாதனா செய்து வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை நோக்கித் திரும்பி வணங்கி, "நீ வருவாய் என்று தானே நான் இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எங்கிருந்தோ ஒரு காட்டுவாசி மனிதன் வந்து என்னை அவமானத்தில் தள்ளுகிறானே, யார் இவன்? எனக்கு சக்தி கொடு மகாதேவா" என்றபடி ஒரு மலரை லிங்கத்தின் மீது அர்ப்பணித்தான். திரும்பிப் பார்த்தால், அதே மலர் அந்தப் பழங்குடியின மனிதனின் தலை மீது இருந்தது. அர்ஜுனனுக்கு அவன் யார் என்பது விளங்கியது, காலில் விழுந்தான். சிவன் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். அர்ஜுனனின்‌ தவத்திற்கு மனமிறங்கி பசுபதாஸ்திரத்தை வழங்கினார். அன்றைய காலகட்டங்களில் பசுபதாஸ்திரமே மிக சக்திவாய்ந்தாக இருந்தது. தான் வேண்டிய பசுபதாஸ்திரம் இப்போது தன்வசமாகவே, தன்னால் போரை வென்று விட முடியும் என்பதை உணர்ந்தான் அர்ஜுனன்.

தந்தை இந்திரனுடன் தங்கும் அர்ஜுனன்

அதன் பிறகு, அர்ஜுனனின் தந்தையான இந்திரன் ஒரு வானூர்தியில் வந்து தன்னுடைய நகரமான அமராவதிக்கு அர்ஜுனனை அழைத்துச் சென்றார். தன் வாழ்வில் முதன்முறையாக தன் தந்தையுடன் இருக்க கிடைத்த வாய்ப்பில் அர்ஜுனன் மகிழ்ந்தான். அவனது தந்தைக்கும் தன் மகன் தற்போது யாராக வளர்ந்திருக்கிறான் என்பதில் மிகப் பெருமை இருந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிட்டார்கள், இருவரும் இணைந்து போரிட்டார்கள், பிறகு, இந்திரன் அர்ஜுனனை இசையும் நாட்டியமும் கற்றுக்கொள்ளுமாறு‌ கேட்டுக்கொண்டான். முதலில் அர்ஜுனனுக்குள், "நான் ஒரு போர் வீரன் - நான் எதற்கு ஆடலையும் பாடலையும் கற்றுக்கொள்ளவேண்டும்" என்ற கேள்வி எழுந்தது. இந்திரன், "ஒருநாள் இது உனக்கு பயன்படும். இசையும், நாட்டியமும் கற்றுக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. உன் இதயத்தில் ஒரு பாடலும், உன் காலில் சிறு நடனமும் இருந்தால் போர்க்களத்தில் நீ இன்னும் சிறந்த வீரனாக திகழ்வாய்" என்றான். இந்திரனோடு இருந்த கந்தர்வர்கள் இசை, நாட்டியக் கலைகளில் சிறந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் சித்திரசேனன் அர்ஜுனனின் ஆசிரியராக அமர்ந்தார். ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்தவனான் அர்ஜுனன்.

இந்திரனின்‌ ராஜ்ஜியத்தில், ஊர்வசி என்ற பெயருடன் விண்ணுலகைச் சேர்ந்த ஒரு அப்சரஸ் இருந்தாள். இந்த படைப்பிலேயே மிக அழகான பெண்மையின் வடிவமாக அவளது அழகு வர்ணிக்கப்படுகிறது. அர்ஜுனனின் மூதாதையரில் ஒருவரான அரசர் புருவராவின் மனைவி ஊர்வசி. அர்ஜுனனை பார்த்தாள், விரும்பினாள். பெண் வடிவில் அர்ஜுனனை தேடி வந்தாள். அர்ஜுனன் அவளை வணங்கி, "நீங்கள் மிக அழகாகவே இருக்கிறீர்கள், உங்களை என் தாயாகவே நான் பார்க்கிறேன், ஏனென்றால் நீங்கள் புருவராவின் மனைவி. உங்களை நான் பெண்ணாக பார்க்க முடியாது" என்றான். ஊர்வசி, "இந்த நீதி கதைகள் எல்லாம் மனிதர்களுக்கு பொருந்தும். நான் மனிதன் அல்ல. எனவே அது ஒரு பொருட்டில்லை" என்றாள். ஆனால் அர்ஜுனன், "நான் ஒரு மனிதன் தான், எனவே எனக்கு அது பொருட்டுதான். நான் உங்களை என் தாயாகவே வணங்குகிறேன்" என்றான்.

தான் அவமானபடுத்தப்பட்டதாக உணர்ந்த ஊர்வசி, "நீ நபும்சகன் ஆவாய்! நான் உன்னிடம் ஒரு பெண்ணாக வந்தேன். ஒரு ஆணாக நீ என்னை மறுத்து விட்டாய், எனவே நீ உன் ஆண்மையை‌ இழந்து நபும்சகன் ஆவாய்." என்று அர்ஜுனனுக்கு சாபமிட்டாள். ஆண்மையின் கம்பீரம் நிறைந்தவனாக இருந்த அர்ஜுனன், ஆண் தன்மையை இழக்கும்படியான சாபமடைந்தான். மிகுந்த மனவருத்தத்தோடு அர்ஜுனன் இந்திரனிடம் சென்றான். ஊர்வசியிடம் இந்திரன் வேண்டி கேட்டுக்கொள்ள, தான் கொடுத்த சாபத்தை அர்ஜுனன் ஒரு வருடம் மட்டும் அனுபவித்தால் போதும் என்று மாற்றியமைத்தாள் ஊர்வசி.

தொடரும்...