இதுவரை: பாண்டவர்கள் தங்களது பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தைத் துவங்குகிறார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, காட்டிலேயே அவர்களை வேட்டையாடி தீர்த்துக்கட்ட திட்டமிடும் துரியோதனனும் கர்ணனும் திருதராஷ்டிரனிடம் அனுமதி கேட்கிறார்கள். அவர்களது திட்டத்தைப் பற்றி விதுரருக்கு தெரிய வருகிறது.

சத்குரு: திருதராஷ்டிரனின் குழந்தைப் பருவத்திலிருந்தே விதுரர் அவனது பக்கபலமாக இருந்து வந்திருக்கிறார். எனவே திருதராஷ்டிரனின் சகோதரனாகவும் அவனது ஞானமாகவும் வாழ்க்கை முழுவதும் திகழ்பவராகையால், மற்றவர்கள் பேச தயங்குவதையும் பேசக்கூடியவராக விதுரர் இருந்தார். விதுரர் திருதராஷ்டிரனை சந்தித்து, "இது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இந்த வீடு முழுக்க பாவம் நிறைந்திருப்பதால், என்னால் இங்கே உண்ணக்கூட முடியவில்லை. இப்போது இந்தப் பிள்ளைகள் நினைப்பதுபோல் காட்டுக்குள் சென்றுவிட்ட பாண்டவர்களை விடாமல் விரட்டிச்சென்று வேட்டையாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதை அனுமதிக்கலாகாது. நான் சொல்கிறேன், உன் பிள்ளைகளால் சும்மா இருக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள்."

"ஒன்று செய்: பாண்டவர்களை திரும்ப அழைத்து அவர்களிடம் அவர்களது ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிடு. அவர்களை எல்லாவற்றையும் மறந்துவிட்டு போகச்சொல். ஏனென்றால், பாண்டவர்கள் ஐவரும் ஐந்து தேவர்களின் புதல்வர்கள். அவர்கள் அபார ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பதோடு, பெரும்பாலான அரசர்களுக்கு அவர்கள் மீது அனுதாபமும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கிருஷ்ணர் அவர்களோடு இருக்கிறார். அவர்களோடு போரிட நேர்ந்தால் நம் அனைவருக்கும் மரணம் நிச்சயம். இதைப் பற்றிய மாயையில் நீ சிக்கத் தேவையில்லை. என்னை நம்பு, இப்போது உனக்கு என்ன வேண்டுமானாலும் தோன்றலாம், ஆனால் போர் என்று நிஜமாக வந்துவிட்டால், அர்ஜுனன் ஒரு கடவுள் போல நின்று அனைவரையும் தோற்கடிப்பான். பாண்டவர்களை நீ நாளையே அழைத்து அவர்களது ராஜ்ஜியத்தை திரும்பக் கொடுத்துவிடு" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட திருதராஷ்டிரன், "உனக்கு பாண்டவர்களைப் புகழ்வதில் சோர்வே ஏற்படாதா? என் பிள்ளைகளைவிட பாண்டுவின் பிள்ளைகள் மீது நீ தனி கரிசனம் காட்டுவதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது. என் மகன் ஜெயித்ததை நான் எப்படி திரும்பக் கொடுத்துவிடச் சொல்ல முடியும்? அவன் தர்மப்படியே வெற்றி பெற்றிருக்கிறான். அவன் தாயம் விளையாடி இதை ஜெயித்திருக்கிறான்," என்றான்.

மறுமொழியாக விதுரர், "அந்த தாயக்கட்டைகள் மாந்திரீக சக்தியூட்டப்பட்டவை என்பது உனக்கு நன்றாகவே தெரியும். சகுனி ஒரு மோசடி பேர்வழி என்பதும், யுதிஷ்டிரனுக்கு தாயம் விளையாடுவது பற்றி எள்ளளவும் தெரியாது என்பதும் உனக்கு தெரியும். இது எல்லாமும் தெரிந்திருந்தும் நீ விளையாட்டை அனுமதித்தாய், இப்போது தர்மம் பற்றி பேசுகிறாய். அந்த வார்த்தையை நீ உச்சரிக்காதே.

எப்போது நீ அரக்கு மாளிகை கட்டவும், அதை தீயிட்டு கொளுத்தவும் அனுமதித்தாயோ, அப்போதே உன் நம்பகத்தன்மையை நீ முற்றிலுமாக இழந்துவிட்டாய். உனக்காக, உன் பிள்ளைகளுக்காக, உன் குரு வம்சத்திற்காக எதையாவது சரிசெய்துகொள்ள நினைத்தால், பாண்டவர்களை திரும்ப வரச்சொல். அவர்களுக்குரிய பங்கை அவர்களிடமே வழங்கு, உன் பிள்ளைகள் உனது பங்கை வைத்துக்கொள்ளட்டும், அனைவரும் அமைதியாக வாழட்டும். நாம் பாண்டவர்களிடம் பேசி அவர்கள் எப்போதும் நமக்கெதிராக போர் செய்ய மாட்டார்கள் என்ற உறுதிமொழியை எப்படியாவது வாங்கிவிடுவோம். அது நமக்கு பாதுகாப்பைத் தரும் - உன் பிள்ளைகள் தங்களது முழு வாழ்க்கையை வாழ்வார்கள். இல்லையென்றால், பாண்டவர்கள் திரும்பி வந்தக் கணமே உன் பிள்ளைகள் இறந்துவிடுவார்கள்.

திருதராஷ்டிரன் இதனால் மிகுந்த வேதனையடைந்தான் - வேதனையடைய அவனுக்கு புதிதாக எதுவும் தேவையில்லை; எப்போதுமே ஏதோ ஒன்றிற்காக வேதனையில் இருந்த திருதராஷ்டிரன், "இதுவரை நீ கொடுத்த அறிவுரைகள் போதும். எனது பிள்ளைகளைவிட பாண்டுவின் புதல்வர்கள் உனக்கு அவ்வளவு உயர்வானவர்களாக தெரிந்தால், அவர்களிடமே நீ போய்விடலாம்! உன்னால் எனக்கு எந்தப் பயனும் இல்லை" என்றான்.

விதுரர், "நீ எனக்கு செய்யக்கூடிய மிக நல்ல காரியம் இதுதான்" என்றபடியே திருதராஷ்டிரனை வணங்கிவிட்டு அங்கிருந்து அகன்றார். அவரது மனைவிக்கும், அவர்களோடு தங்கியிருந்த குந்திக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டு ஆனந்தமாக கிளம்பி காட்டிற்குள் சென்று பாண்டவர்களைச் சந்தித்தார். பாண்டவர்களைப் பார்த்ததும் ஆரத்தழுவிக் கொண்டார், அனைவரும் அழுதார்கள். உணர்ச்சிகளின் வேகம் சற்று ஓய்ந்ததும், அவர் ஏன் இங்கு வந்தார் என கேட்டார்கள் பாண்டவர்கள். விதுரர், "நான் உங்களோடு தங்கியிருக்க வந்துவிட்டேன். ஹஸ்தினாபுரத்தில் எனக்கான வேலை முடிந்துவிட்டது. எனது சகோதரனை விட்டு நானாகவே பிரிந்து வருவது என்பது என்னால் முடியாதது, ஆனால் இப்போது அவனே என்னை வெளியேறச் சொல்லிவிட்டான். எனவே இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன். அங்கே நடக்கும் பாவகரமான செயல்களின் பிடியிலிருந்து நான் ஒருவழியாக விடுபட்டுவிட்டேன் என்று ஆனந்தமடைகிறேன்," என்றார். பாண்டவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவர்கள் எப்போதுமே விதுரரை மதித்து வந்திருந்தார்கள். அரசவையில் எல்லாமே தப்பும்தவறுமாக சென்று கொண்டிருந்த அந்த நாளில், விதுரர் ஒருவர் மட்டுமே எழுந்து நின்று எது சரி என்பதைப் பற்றி பேசியிருந்தார்.

ஆனால் திருதராஷ்டிரனால் விதுரரைப் பிரிந்து வாழ முடியவில்லை, ஏனென்றால் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே விதுரர்தான் அவனுக்கு துணைவனாக, ஞானமாக, கண்களாக, காதுகளாக - எல்லாமுமாக இருந்தார். திடீரென்று அனைத்தையும் பறிகொடுத்துவிட்டதாக உணர்ந்தான் திருதராஷ்டிரன். எனவே இரண்டே நாட்களில் விதுரரை சந்திக்க தூதுவர்களை அனுப்பி, "நீ பிரிந்து சென்றுவிட்டால் நான் இறந்துவிடுவேன். உணவு உண்பதை நிறுத்திக்கொண்டு என்னை நானே கொல்வேன்" என கெஞ்சி மிரட்டினான். திருதராஷ்டிரன் தொடர்ந்து பலவாறாக கெஞ்சவே விதுரர் மீண்டும் அரண்மனைக்குத் திரும்பினார்.

அவர் திரும்பிச் சென்றதுமே, துரியோதனன் வேட்டைக்கு செல்வதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். திருதராஷ்டிரன் துரியோதனனை அழைத்து, "இந்த முறை நீங்கள் வேட்டையாட செல்லப் போவதில்லை" என்றான். துரியோதனனும் கர்ணனும் தாங்கள் வேடிக்கைக்காக மட்டுமே செல்வதாகவும், வேறு எதற்காகவும் இல்லை என்றும் வெகுவாக கெஞ்சினார்கள். ஆனால் திருதராஷ்டிரன் உறுதியாக, "நீங்கள் வேட்டைக்கு போக முடியாது. அப்படியே அவசியம் வேட்டையாடியே ஆகவேண்டும் என்றால், நீங்கள் எதிர் திசையில் சென்று வேட்டையாடுங்கள்" என்றான். ஆனால் அவர்களுக்கு அங்கே சென்று வேட்டையில் ஈடுபட விருப்பமில்லை - அவர்களுக்கு இங்கே வேட்டையாடுவதில்தான் விருப்பமிருந்தது.

தொடரும்...