யசோதா

சத்குரு: கிருஷ்ணர் ஆரம்பத்திலிருந்தே அனைத்தையும் தனக்குள் இணைத்து கொள்பவராக இருந்தார். ஒரு குழந்தையாக அவரது தாயிடம் – தான் மண்ணைச் சாப்பிடவில்லை, அல்லது மண்ணைச் சாப்பிடுகிறேன் – எதுவாக இருப்பினும் அதைக் காட்டுவதற்காக, தன் வாயைத் திறந்து காண்பித்தபோது., அப்போது கூட அவர் அனைத்தையும் இணைத்துக்கொண்டவராகத்தான் இருந்தார். அவர் கோபியருடன் நடனம் ஆடும்போது கூட, அனைத்தையும் தன்னுள்ளே இணைத்துக்கொண்டவராகத்தான் இருந்தார். அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு அவர் ஒருபோதும் எண்ணியதில்லை.

அன்பு என்பது உடல் ரீதியான ஒரு உறவைப் பற்றியல்ல. அன்பு என்பது உணர்ச்சியின் வாயிலாக, உங்கள் எல்லைகளைத் தகர்த்து உடல்தன்மையைக் கடந்து செல்வதற்கான ஒரு முயற்சி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“ராஸ்…….இதற்கு மிகச் சரியான ஆங்கிலப்பதம் இல்லாமலிருக்கலாம். இது ‘வாழ்வின் சாரம்’ போன்றது. அதனால், கோவிந்தன் என்பவன் வாழ்வின் சாரத்துடன் விளையாடிய ஒருவன் என்று நாம் கூறுகிறோம். அதனால் அப்போதைய சமூகங்களில், குறைந்தபட்சம் மாதத்தின் சில குறிப்பிட்ட காலங்களில் அல்லது தினசரிக் கடமைகள் முடிந்தபிறகு மாலை நேரங்களில், வாழ்வின் சாரத்துடன் விளையாடுதல் என்ற பொருளில், அவர்கள் ஆடிய, காலவரையறை கடந்து நீடித்த நடனப் பொழுதுகள், ராஸலீலா என்று குறிப்பிடப்பட்டது. இந்த ராஸலீலா நடனம், மெல்லமெல்ல அதன்போக்கில், கோபமும், ஆசையும் அற்றுப்போன வெறும் உயிர்த்தன்மையின் ஒரு பரந்த வெளியாக அடையாளம் பெற்றது. அங்கே வாழ்வின் சாரம் பெருக்கெடுத்தது, ஏனெனில் கோபமும், ஆசையும் இல்லாத ஒரு உலகமாக அது இருந்தது.”

கிருஷ்ணரின் வாழ்வில் பல பெண்கள் இருந்ததுடன் அவர்கள் அனைவரும் அவருடன் கொண்டிருந்த அன்பில், தலைகால் புரியாமல் இருந்தனர். அவர்கள் அனைவரைப்பற்றியும் நம்மால் பேச முடியாது, ஆகவே, அவரது பக்தைகளாக இருந்தாலும், தங்களை அவ்வாறு அழைத்துக்கொள்ளாத ஒரு சில அற்புதமான பெண்களைப்பற்றி மட்டும் பார்ப்போம். கிருஷ்ணரின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்த வளர்ப்புத்தாய் யசோதா முதற்கொண்டு அனைத்துப் பெண்களும் அவரை ஒரே விதமாக நேசித்தனர். அவர் குழந்தையாக இருந்தபோது கூட, அவளது அழகான குழந்தைதான் எல்லாமாக இருந்தது. ஆனால் அவர் மிக விரைவாக வளர்ந்தார். அவரின் வளர்ச்சி அதிசயிக்கத்தக்கதாக இருந்தது. அந்த விதமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கக்கூடிய தாய்மைத்தனம் எந்தத் தாய்க்கும் இல்லை. அதனால் அவர் வயது ஐந்து அல்லது ஆறு வயதை அடைவதற்குள், யசோதையால் உண்மையில் அவருக்குத் தாயாக இருக்க முடியவில்லை. கிருஷ்ணர் மீது நேசம் கொண்டவராக மட்டும் இருந்தார். அன்பு என்பது உடல்ரீதியான ஒரு உறவைப் பற்றியல்ல. அன்பு என்பது உணர்ச்சியின் வாயிலாக, உங்கள் எல்லைகளைத் தகர்த்து, உடல் தன்மையைக் கடந்து செல்வதற்கான ஒரு முயற்சி. நீங்கள் ஏதோவொன்றால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், நீங்கள் ஏதோ ஒன்றுடன் ஆழமான நேசத்தில் வீழ்ந்திருந்தால், அது குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து பக்தியாக மாறுகிறது. கிருஷ்ணர் அன்பே உருவானவர். அனைவரும் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பசுமாடுகள் கூட அவரை மிகவும் நேசித்தனர், ஏனெனில் அப்படி மட்டும்தான் அவர்களால் இருக்க முடிந்தது. அதனால் அவர்கள் அனைவரும் அவரின் பக்தர்கள் ஆனார்கள்.

யசோதாவும் கூட கோபியரில் ஒருத்தியாக மாறும் அளவுக்கு கிருஷ்ணனுடனான அந்தத் தாயின் உறவு வளர்ச்சியடைந்தது. அவளும் ராஸலீலையின் ஒரு பாகமாக ஐக்கியமானாள். ராதையை அவள் விரும்பவில்லை ஏனெனில் அவள் மிகவும் முற்போக்காக இருப்பதாக யசோதாநினைத்தாள். ஒரு கிராமத்துப் பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் வழக்கமான நடவடிக்கை ராதையிடம் இல்லை. அவள் அனைவரிடமும் சற்று கூடுதலான சகஜபாவத்துடன் இருந்தாள். இந்தப்பெண் தனது அற்புதமான மகனைக் கடத்திவிட்டதாக யசோதா உணர்ந்தாள். ஆனால் கிருஷ்ணர் பிருந்தாவனத்திலிருந்து சென்ற பிறகு, ராதையால் நடத்தப்பட்ட ராஸலீலையில் இணைந்துகொள்வதை யசோதாவால் தவிர்க்க முடியவில்லை.

கிருஷ்ணர் அவரது தாயைப்பார்க்கக்கூட. திரும்பிச்செல்லவில்லை. பல தருணங்களில், அவர் மதுராவில், நதியின் மறுகரையில் இருந்தார், ஆனால் அவர் பிருந்தாவனத்துக்குத் திரும்பிச்செல்லவில்லை, அவர்கள் அவரை முற்றிலும் சுதந்திரமான மாடு மேய்க்கும் ஒரு சிறுவனாகவே பார்த்திருந்ததால் அவர்களின் கனவை அழிப்பதற்கு அவர் விரும்பவில்லை. மக்களுக்கு வழிகாட்டுபவராக அவர் மாறிவிட்ட நிலையில், அங்கு செல்ல அவர் விரும்பவில்லை. இந்த உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றதால், அவர் செய்யவேண்டியிருந்த பல விஷயங்களையும், அப்படிப்பட்ட கிருஷ்ணரையும் அவர்கள் பார்த்திருந்தால் அவர்களது இதயம் உடைந்து போயிருக்கும். அவர்கள் இருந்த நிலையிலேயே சந்தோஷமாக இருந்தனர். ஆகவே அதற்குப் பிறகு, கிருஷ்ணர் யசோதையின் மகனாக இருக்கவில்லை, அதனால் யசோதாவும் ராதையுடன் இணைந்து ஒரு கோபிகையாக மாறினாள், அந்த நீலவண்ணம், தன் மாயாஜாலத்தை யசோதாவுடனும் கூட செயல்படுத்தியது.

பூதனை

கிருஷ்ணர் பிறந்த போது, அந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்டவள்தான் பூதனை, அவளும் எவ்வித இரக்கமும் இல்லாமல், பச்சிளங்குழந்தைகளைக் கொன்று குவித்தாள். அவள் கிருஷ்ணரின் இருப்பிடம் அறிந்து கொண்டவுடன் தன்னிடம் உள்ள மாயாசக்தி மூலம் தன்னை ஓர் மிக அழகான பெண்மணியாக உருமாற்றம் செய்து கொண்டாள். அவள் அரசகுலத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியைப்போல அந்த வீட்டினுள் நுழைந்தவுடன் அங்கிருந்தவர் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அவர்களிடம், குழந்தையைத் தனது கரங்களில் ஏந்திக்கொள்ள விரும்புவதாகக் கூறினாள். குழந்தையைக் கரங்களில் ஏந்திக்கொண்டு, நடந்துவந்து, வெளியில் அமர்ந்துகொண்டாள். அவள் தன்மார்பகங்களில் கொடியவிஷத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தாள், குழந்தையை நெஞ்சோடு அணைத்து, பாலூட்ட விரும்புவதைப்போல பாவனைசெய்யும் எண்ணத்தில் இருந்தாள். நம்நாட்டில்அந்தக்காலங்களில், குழந்தையைப் பெற்றதாய் தான்பாலூட்ட வேண்டும் என்பது கிடையாது குழந்தைக்குப் பாலூட்டத் தகுதியான வேறு எந்த ஒரு தாயும் அதைச்செய்ய முடியும். அது குழந்தைக்கு செய்யும் மிகப்பெரிய அர்ப்பணிப்பாகக் கருதப்பட்டது. அப்போது கருத்தடை நடைமுறை இல்லாததால், பல இளம் பெண்கள் பாலூட்டத் தகுதியான நிலையில் இருப்பது வழக்கமான ஒன்று. தன் குழந்தையோடு, மற்றவர் குழந்தைக்கும் பாலூட்டுவது தடுக்கக்கூடியதாகக் கருதப்படவில்லை.

ஆகவே, கிருஷ்ணரைக் கொல்வதற்காக, பூதனை விஷமேற்றிய மார்புடன் வந்திருந்தாள். ஆனால் அவள் கிருஷ்ணரைப் பார்த்தபோது, அந்த நீல வண்ணமாயை அவளை ஆட்கொண்டது. அவள் ஆழமாகக் குழந்தையிடம் ஈர்க்கப்பட்டதில், சட்டென்று அவளது தாய்மை உணர்வுகள் அவளுக்குள் மேலோங்கி எழுந்தன. இனியும் குழந்தைக்கு விஷம் கொடுப்பதை அவள் விரும்பவில்லை, உண்மையில் அவள் தன்னையே குழந்தைக்குக் கொடுத்துவிட விரும்பினாள். அவள் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள், "உன்னைக்கொல்வதற்கான கம்சனின் ஆணையை நிறைவேற்ற வந்துள்ளேன். என் மார்பகம் விஷமேற்றப்பட்டது, ஆனால் உனக்கு என்னுடைய பாலை மட்டும் அல்ல, என் உயிரையும் தருவதற்கு என் இதயம் ஏங்குகிறது. நான் உனக்குப் பாலூட்ட முடிந்தது என்பாக்கியம்தான்."

மேலே: பூதனை இறந்து விழுகிறாள்  கீழே: பிருந்தாவனத்து மக்கள் பூதனையின் உடலை எரிக்கின்றனர்

அதனால், அதீத அன்புடன் ஆனாலும் விஷம் தோய்ந்த மார்புடனேயே குழந்தைக்குப் பாலூட்டினாள். கிருஷ்ணர் உயிரையே அவளிடமிருந்து உறிஞ்சிவிட்டார். அந்த இடத்திலேயே, அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் இறந்து விழுந்தாள். அவளது மனதில் எழுந்த கடைசி எண்ணம் "இறைவனாலேயே என் உயிர் உறிஞ்சப்படுகிறது. இதைவிட எனக்கு வேறென்னவேண்டும்?"