சத்குரு: அடிப்படையில் நீங்கள், ‘நான்’ என்றும் மனித அமைப்பு என்றும் எதைக் குறிப்பிடுகிறீர்களோ, அது ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் செயலே ஆகும். மென்பொருள் என்றாலே நினைவுத் திறன்தான் என்பதை நாம் இன்று அறிவோம். தனியொரு மனித உடலானாலும் சரி, இந்த பிரபஞ்ச உடலானாலும் சரி, அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனப்படும் பஞ்சபூதங்களினால் ஆனவை. இந்த ஐந்து பூதங்களுக்கும் அவற்றுகென தனிப்பட்ட ஞாபகத்தன்மை உண்டு. இதனாலேயே அவை எவ்விதமாக இயங்குகின்றனவோ அவ்விதமாக இயங்குகின்றன.

மண்ணாக இருந்த ஒன்றே உணவாக மாறியது. உணவென்று இருந்த ஒன்றே மனிதனாக மாறியது. அதே உணவு மீண்டும் மண்ணாக மாறிவிடும்.

மண்ணாக இருந்த ஒன்றே உணவாக மாறியது. உணவென்று இருந்த ஒன்றே மனிதனாக மாறியது. அதே உணவு மீண்டும் மண்ணாக மாறிவிடும். இங்கே என்ன நடக்கிறது? மண் எப்படி மலராகவோ, கனியாகவோ அல்லது வேறொன்றாகவோ மாற இயலும்? விதையில் பொதிந்துள்ள நினைவாற்றலினால்தான் இது நிகழ்கிறது. ஒருவர் எவ்வாறு தன் தாய் தந்தையைப் போல தோற்றமளிக்கிறார்? ஒரு ஒற்றைச் செல்லிலே பொதிந்துள்ள நினைவாற்றலினாலேதான். பொருள் ஒன்றுதான் – அதே பஞ்சபூதங்கள்தான். ஆனால், அது தாங்கிவந்துள்ள நினைவாற்றல்தான் மண்ணை உணவாகவும், உணவை மனிதனாகவும் மாற்றுகிறது.

மேலும், ஒரு சிந்தனை, உணர்ச்சி அல்லது உங்கள் உயிர்சக்தி மீது ஒரு குறிப்பிட்ட ஆளுமையைக் கொண்டு, இந்த ஞாபகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி அதைப் பற்றிய அடிப்படையில் கூட மாற்றத்தை கொண்டுவரக்கூடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தீர்த்தம் என்பதன் விஞ்ஞானம்:

நமது எண்ணத்தின் அல்லது உணர்ச்சியின் உதவிகொண்டு, நீரின் வேதியியல் கலவையை மாற்றாமல், அதன் மூலக்கூறுக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்ற முடியும் என்பதற்கான மிக உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இன்று உள்ளன. எந்தவிதமான வேதியியல் மாற்றங்களும் இல்லாமல், அதே H2O என்னும் நீரைக்கொண்டு, அது எந்த வகையான நினைவகத்தை கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கைக்கு விஷமாகவோ அல்லது அமுதமாகவோ செயல்படும்.

பூதசுத்தி என்பது யோகத்தின் மிக அடிப்படையான அம்சம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு யோகத்தின் அம்சமும், பூதசுத்தி பயிற்சியின் சிறு சாரமேயாகும்.

உங்கள் பாட்டி உங்களிடம் சொல்லியிருப்பார், நீங்கள் யாருடைய கைகளில் இருந்தும் தண்ணீரை வாங்கி குடிக்கவோ அல்லது உணவை வாங்கி உண்ணவோ கூடாது என்று. உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறையுள்ளவர்களிடம் இருந்து மட்டும்தான் எப்போதும் அதைப் பெற வேண்டும். இதனால்தான் இந்தியாவில் பாரம்பரிய வீடுகளில், மக்கள் பித்தளைப் பானையை பயன்படுத்தி வந்தனர். அந்தப் பானையை, அவர்கள் தினமும் கழுவி, பூஜை செய்து பின் அதில் தண்ணீர் நிரப்பி, அதன்பின் தான் அந்த தண்ணீரை அருந்துவார்கள். கோவில்களில் தரப்படும் ஒரு சொட்டு நீருக்கு கோடீஸ்வரர்கள் கூட பேராவல் கொள்கிறார்கள். ஏனென்றால், அந்த நீரை வேறு எங்கும் வாங்க முடியாது. அதை தீர்த்தம் என்று சொல்வோம். இது தெய்வீகத்தை தன் நினைவில் கொண்ட தண்ணீராகும்.

நாம் மூடநம்பிக்கை என்று எதை சொல்லிவந்தோமோ அதைப் பற்றிய அறிவியலைதான் இப்போது விஞ்ஞானிகளும் பேசி வருகிறார்கள். நீங்கள் பருகும் நீரானது அதிதீவிர அழுத்தத்தினாலும், ஈயம் அல்லது பிளாஸ்டிக் குழாய்களில் பயணிக்கும் நீரானது நிறைய வளைவுகளில் பயணிப்பதாலும், நீரின் மூலக்கூறுக் கட்டமைப்பு மாற்றப்படுவதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறான வளைவுகளினாலும், திருப்பங்களினாலும் நீருக்கு அதிக எதிர்மறைத் தன்மை ஏற்படுகிறது. நீருக்கு நினைவாற்றல் உண்டு.

மேலும், உங்கள் உடலில், உங்கள் பொருள்தன்மையில் 72% நீர்தான். நீங்களே ஒரு உயரமான குப்பி போன்றவர்தான். ஆக, ஒரு கலயத்திலுள்ள நீரை உங்களால் இனிமையாக்க முடியுமானால், உங்களுக்குள் இருக்கும் நீரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அதை இனிமைபெறச் செய்ய முடியாதா? இதுவே யோக விஞ்ஞானம் ஆகும். பூதம் என்றால் அடிப்படையான கூறு என்று அர்த்தம். பூதசுத்தி என்பது, நமது உடலில் உள்ள ஐம்பூதங்களை சுத்திகரிப்பதாகும். பூதசுத்தி என்பது யோகத்தின் மிக அடிப்படையான அம்சம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு யோகத்தின் அம்சமும், பூதசுத்தி பயிற்சியின் சிறு சாரமேயாகும்.

இந்தியாவின் நீர் நெருக்கடி

நீர் என்பது நீங்கள் உயிர் வாழ்வதற்கான அடிப்படையான கூறாகும். ஆனால், இன்று இந்தியாவின் நீர் சூழ்நிலை உண்மையில் அபாயகரமாக உள்ளது. இந்தியாவில் இப்போதுள்ள தனிமனித நீர் கொள்ளளவு, 1947ம் ஆண்டு எவ்வளவு இருந்ததோ அதில் வெறும் 18% மட்டுமே உள்ளது. இன்று, இந்தியாவின் பல நகரங்களில் மக்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குளிக்கிறார்கள். இந்திய தேசத்தின் கலாச்சாரம் என்பது, நீங்கள் சாப்பிடவில்லை என்றாலும் குளிக்க வேண்டும். இந்நாட்களில் மக்கள் குளிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது முன்னேற்றமல்ல, இது நலமான வாழ்வல்ல. நாம் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே நீர் குடிக்க வேண்டும் என்பது போன்றொரு சூழ்நிலை வந்துவிடும் போலத் தெரிகிறது. ஒரு தேசத்திற்கு தேவையான ஒழுங்கமைப்போ அல்லது கோடிக்கணக்கான லிட்டர் கொள்ளளவு நீரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று மக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்கான சாதனங்களோ நம்மிடத்தில் இல்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நீரில்லாமல் இறந்துபோவர்கள்.

நாம் விழிப்புணர்வுடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல் இயற்கையே மிகக் கொடூரமான விதத்தில் அவ்வேலையைச் செய்யும்.

நான் சில வருடங்களுக்கு முன்பு, இமாலயத்தில் மலையேற்றம் செய்து கொண்டிருந்தபோது, கங்கையிலே கட்டப்பட்ட ‘டெஹ்ரி’ அணையிலே இருந்தேன். அங்கே தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும், இன்னும் 21 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்றது என்றும் எனக்குச் சொன்னார்கள். இன்னும் 21 நாட்களில் மழை பெய்யவில்லை என்றால், இந்த வருடத்தில் முன்புபோல் கங்கை பாயாது என்றும் சொன்னார்கள். கங்கைநதி ஓடவில்லை என்றால் அது இந்திய தேசத்தின் மனநிலையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கங்கை என்பது நமக்கு வெறும் ஆறு மட்டுமல்ல. இங்கு சில ஆன்மீக அமைப்புகள் கங்கையைப் பாதுகாக்க தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் இது கையாளப்படும் விதம் குறித்து வருத்தமடைகின்றனர். உணர்ச்சிநிலையில், இந்தியர்களுக்கு, கங்கை பரிமாணத்தின் ஒரு அடையாளமாகும். நகரத்தில் வாழும் மக்கள் வேண்டுமானால் அவ்வாறு நினைக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு சராசரி இந்தியனுக்கு கங்கை என்பது வாழ்வைவிட உயர்வான ஓர் அம்சம். இது ஒரு நதி மட்டுமல்ல, அதைவிட மேலானது. இது நமக்கு உயிர்வாழ்க்கையின் உன்னத அடையாளம் போன்றது.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மழை பெய்யத் தவறினால், (எந்த ஒரு வருடத்திலும் இவ்வாறு நிகழலாம்) கங்கை நதியே ஓடாது; நாம் அத்தகைய நிலையில் உள்ளோம். ஆக உண்மை இதுதான். நாம் விழிப்புணர்வுடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல் இயற்கையே மிகக் கொடூரமான விதத்தில் அவ்வேலையைச் செய்யும். இதுவே நமக்கு இருக்கின்ற ஒரே தேர்வு. மக்கள்தொகையை இனிமேலும் நாம் பெருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கொள்கை அல்ல. விழிப்புணர்வுடன் நாம் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல் இயற்கையே கொடூரமான விதத்தில் அவ்வேலையைச் செய்துவிடும். உண்மையிலேயே நாம் மனிதத்தன்மை கொண்டவர்களானால், இதை நாம் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும், நமக்கு இதுபோன்றவைகள் ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.

Editor’s note: காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி: 80009 80009

இக்கட்டுரை ‘Speaking Tree’யில் முதலில் பிரசுரமானது.