மக்கள் தொகையை குறைக்கத்தான் வேண்டுமா?

ஒருபுறம் வேகமாய் வளர்ந்து வரும் தொழில்துறை, மறுபுறம் தொழில்துறையுடன் போட்டி போட்டுக் கொண்டு அழிந்து வரும் இயற்கை வளம். இது வரமா, சாபமா? இதற்குத் தீர்வு மக்கள் தொகையைக் குறைப்பது மட்டும் தானா? ஆராய்கிறது இந்தக் கட்டுரை...
 

ஒருபுறம் வேகமாய் வளர்ந்து வரும் தொழில்துறை, மறுபுறம் தொழில்துறையுடன் போட்டி போட்டுக் கொண்டு அழிந்து வரும் இயற்கை வளம். இது வரமா, சாபமா? இதற்குத் தீர்வு மக்கள் தொகையைக் குறைப்பது மட்டும் தானா? ஆராய்கிறது இந்தக் கட்டுரை...

சத்குரு:

உலகளவில் பல மாநாடுகளில் நான் கலந்து கொள்கிறேன். தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் என்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்து மக்கள் பேசுகிறார்கள். ஆனால், மிகவும் அடிப்படையான விஷயமான மக்கள் தொகை குறித்து எவருமே பேசுவதில்லை, அரசும் இதில் கவனம் செலுத்துவதில்லை. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகின் மக்கள் தொகை 140 கோடியாக இருந்தது. நூறு வருடம் கழித்து மக்கள் தொகை 700 கோடியாக மாறிவிட்டது. 2050-ல் 960 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மனிதகுலம் பொறுப்பில்லாமல் இனப்பெருக்கம் செய்துள்ளதன் விளைவாகவே எனக்குத் தெரிகிறது. இந்தியாவில் 1947-ல் 33 கோடியாக இருந்த மக்கள் தொகை இன்று 120 கோடியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு மரம் நட்டாலும் சரி, எவ்வளவுதான் திட்டங்கள் வகுத்தாலும் சரி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தாலும் சரி, ஜனத்தொகைப் பெருக்கத்தைக் குறைக்காவிடில் எதுவும் பயனளிக்கப் போவதில்லை.

சர்வதேசக் கணிப்பின்படி, ஒருவர் ஒரு வருடத்திற்கு சுவாசிக்கத் தேவையான மூச்சுக்காற்றுக்கு, சராசரியாக 1.4 ஹெக்டேர் காடு தேவைப்படுகிறது. ஆனால் அதில் ஐந்தில் ஒரு பாகம் காடுதான் நம்மிடம் உள்ளது

ஜனத்தொகையை நாமே விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் இயற்கை அதைக் கொடூரமான முறையில் நிறைவேற்றும், வேறு வழியே இல்லை. ‘ஒன்றும் பிரச்சினையில்லை, மக்கள் தொகை 2000 கோடி ஆனாலும் எப்படியாவது வாழ்ந்துவிடுவோம்' என்று கனவு காணாதீர்கள். அப்படி நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தியாவில் இப்போது 120 கோடி மக்களுக்காக 52 சதவீத நிலத்தை உழுகிறோம். நமது விவசாயிகள் சாதாரண வசதிகளையும் தொழில்நுட்பத்தையும் வைத்தே 100 கோடிக்கும் மேலான மக்களுக்கு உணவளிக்கிறார்கள். எவ்வளவு நிலம் இருக்கிறது, இதை வைத்து எத்தனை பேர் சாப்பிட முடியும் என்ற திட்டம் நம்மிடம் இல்லை. மக்கள் தொகை எவ்வளவு பெருகினாலும் இதே நிலத்தை வைத்து நாம் உணவு பெறமுடியும் என்று நினைப்பது மிகவும் தவறு.

இந்த பூமி மனிதனுக்காகவே படைக்கப்பட்டது போல நடந்துகொள்வது அபத்தமான அணுகுமுறை. கடவுளின் வடிவத்தில் தாங்கள் படைக்கப்பட்டிருப்பதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். ஒரு புழுகூட கடவுள் ஒரு பெரிய புழுவாக இருப்பார் என்றே நினைக்கும். ஒவ்வொரு உயிருக்கும் அதற்கே உரிய முறையில் வாழ்க்கை முழுமையாகத்தான் நடக்கிறது. அவர்களுக்கும் கணவன், மனைவி, குழந்தைகள் என்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சமூகம் என்று இருக்கிறது. யாரோ உங்களைவிட சிறியவராக இருக்கிறார்கள் என்பதற்காகவோ, உங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதற்காகவோ அவர்களுக்கு முழுமையான வாழ்க்கை வாழ உரிமை இல்லை, தனக்கு மட்டுமே அந்த உரிமை என்றெண்ணி வாழ்வது முட்டாள்தனமான வாழ்க்கை!

ஒரு காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு அரசு பிரசாரம் செய்துவந்தது. ஆனால் ஏதோ தீர்வு கண்டுவிட்டது போல அத்தகைய பிரசாரங்கள் இப்போது கைவிடப்பட்டுள்ளன. 1970-களிலும், 1980-களிலும் நீங்கள் எங்கு சென்றாலும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கான பிரசார வாசகங்களைப் பார்க்க முடிந்தது. இப்போது அந்தப் பிரசாரங்கள் எங்கே போனது? பிரச்சனை தீர்ந்துவிட்டதா? உண்மையில் பிரச்சனை அபாயகரமான அளவுக்குப் பெருகிக் கொண்டுதானே போகிறது?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல் சுற்றுச்சூழல், நிலப் பராமரிப்பு, நீர்ப் பராமரிப்பு என்று பேசிக் கொண்டிருப்பது எந்தவொரு தீர்வையும் தரப் போவதில்லை.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் பற்பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. தற்போதுள்ள விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், ஒவ்வொருவரும் பல இலட்சியங்களை அடைவதற்கான வாய்ப்பைத் தருகிறது. ஆனால் இவ்வளவு ஜனத்தொகையை வைத்துக்கொண்டு அத்தனை ஆசைகளும் பூர்த்தியானால் அழிவு மட்டுமே நிச்சயம். அல்லது விழிப்புணர்வுடன் நமது ஆசைகளையும் லட்சியங்களையும் நாம் திட்டமிட வேண்டும். ஆனால் அது தற்போது நடக்கக்கூடிய விஷயமில்லை.

இந்த ஜனத்தொகையுடன் நம்நாடு அனைவருக்கும் போதுமானதாக இருக்க வேண்டும் என்றால் ஒரு பகுதி மக்களை எப்போதும் ஏழைகளாக, பட்டினி கிடப்பவர்களாகவே வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையென்றால் இந்த நாடு அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

ஈஷாவைப் பொறுத்தவரை, நமது நடவடிக்கைகள் எப்போதும் முற்போக்கானவை. அடுத்து நாம் கிராம மக்களிடம் 'ஒரு வருடம் குழந்தை பெறுவதை நிறுத்துங்கள்' என்று கேட்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வுடன், தாங்களாகவே அந்த முடிவை கிராம மக்கள் எடுக்க வேண்டும். 50 சதவீத மக்கள் உறுதி எடுத்துக்கொண்டால் கூட, அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இப்போது நாம் சாவையும் நமது கைகளில் எடுத்துக் கொண்டுவிட்டோம். 1947-ல் ஒரு சராசரி இந்தியனின் வாழ்நாள் 28 வருடமாக இருந்தது. இப்போது அது 60-க்கு மேல் ஆகிவிட்டது. இது மிகவும் அற்புதமான ஒரு விஷயம்தான். ஆனால் மக்கள் ஏன் இவ்வளவு காலம் உயிர் வாழ்கிறார்கள் என்று நாம் கிட்டத்தட்ட வருந்தக் கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. ஒவ்வொரு முறை நான் பொருளாதார மாநாடுகளில் கலந்து கொள்ளும் போதும், ‘‘இந்தியா இளமையான நாடு, அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு’’ என்ற வாக்கியத்தைக் கேட்கிறேன்.

ஆம், அதிகமான இளைஞர்கள் எண்ணிக்கை நமக்கு சாதகமான விஷயம்தான். ஆனால் சரியாக வழிநடத்தப்படும் போதுதான் அது வரமாக அமையும். கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கொடுத்து, ஒரு நோக்கத்தில் அவர்களைத் திருப்பினால் அவர்கள் அற்புதமான சக்தியாக இருப்பார்கள். ஆனால் கல்வியும் தொழிற்பயிற்சியும் அளிக்கப்படாத நிலையில் அதே இளைஞர் சமுதாயம் சாபக்கேடாக மாறிவிடும், எப்போதும் பிரச்சனைகளில் சிக்கி சீரழியும். நாம் இப்போது அதைத்தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.

நம்மிடம் 120 கோடி மக்களுக்குப் போதுமான நிலம் கிடையாது, போதுமான கழிப்பறை வசதி கிடையாது, போதுமான கோயில்கள் கிடையாது, அவர்களுக்குப் போதுமான ஆகாயம் கூட கிடையாது! சர்வதேசக் கணிப்பின்படி, ஒருவர் ஒரு வருடத்திற்கு சுவாசிக்கத் தேவையான மூச்சுக்காற்றுக்கு, சராசரியாக 1.4 ஹெக்டேர் காடு தேவைப்படுகிறது. ஆனால் அதில் ஐந்தில் ஒரு பாகம் காடுதான் நம்மிடம் உள்ளது. அப்படியானால் நாம் இந்தியாவின் சமவெளிகள் முழுவதிலும் மரங்கள் நடப் போகிறோமா? நிச்சயமாக அது நடக்கப் போவதில்லை, நடைமுறையில் சாத்தியமும் இல்லை.

அதனால் நம்மிடம் உள்ள வளங்களுக்கு ஏற்றவாறு நம் மக்கள் தொகையை சீர்படுத்துவது தான் ஒரே தீர்வு. இதுதான் நாம் செய்யவேண்டியதும், எளிதாக செய்யக்கூடியதும் கூட! தேவையான கல்வியையும் விழிப்புணர்வையும் ஒருவர் வாழ்க்கையில் கொண்டுவந்துவிட்டால் இதை சாதிக்கமுடியும். இப்படிச்செய்தால், நாம் நிலப்பகுதிகளை மரங்களால் நிரப்பத் தேவையிருக்காது. அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு கட்டிடத்திற்குள் யாரும் நுழையாமல் இருந்தால், கான்கிரீட்டை உடைத்துக் கொண்டு மரங்கள் வளரும். யாரும் அதைத் தடுக்க முடியாது. தாவரங்கள் ஒருபோதும் அபாயத்தில் இல்லை. மனிதர்களின் வாழ்க்கைதான் அபாயத்தில் இருக்கிறது. மனிதர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக சுற்றுச்சூழல் பராமரிப்பும் பசுமைத் தொழில்நுட்பங்களும் தேவைதான். ஆனால் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது தலையாய தேவையாக இருக்கிறது. சரியான அளவைவிட நமது ஜனத்தொகை 4 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் அதுகுறித்து நாம் எதுவும் செய்யாமலே இருக்கிறோம். இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

முற்காலத்தில் நமது கவிஞர்கள் நமது நிலம், ஆறுகள் குறித்து அருமையான கவிதைகள் இயற்றினார்கள். ஆனால் 120 கோடி மக்களுக்கான நிலமோ, ஆறுகளோ இப்போது கிடையாது. 120 கோடி மக்களுக்கான மலைகள் கிடையாது. 120 கோடி மக்களுக்குப் போதுமானதாக நம்மிடம் எதுவுமே கிடையாது. ஐரோப்பிய நாடுகள் தமது குடிமக்களுக்குத் தந்துகொண்டிருக்கும் நிலம் மற்றும் நீர் வசதிகளை நம் மக்கள் அனைவருக்கும் செய்து தருவதாக இருந்தால், நம்மிடமுள்ள நிலமும் நீரும் 10 - 15 வருடங்களுக்குக் கூட போதுமானதாக இருக்காது. இப்படி நடக்கவேண்டும் என்பது என் ஆசையில்லை. அல்லது இந்த ஜனத்தொகையுடன் நம்நாடு அனைவருக்கும் போதுமானதாக இருக்க வேண்டும் என்றால் ஒரு பகுதி மக்களை எப்போதும் ஏழைகளாக, பட்டினி கிடப்பவர்களாகவே வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையென்றால் இந்த நாடு அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

எனவே, மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது நாம் எடுக்கவேண்டிய உடனடி நடவடிக்கையாக இருக்கிறது. ஆனால் அரசின் பங்களிப்பு இல்லாமல் இது நடப்பது சாத்தியமில்லை. அரசு சாரா நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இதற்காக ஏதாவது செய்யவேண்டும். இப்பணியில் அவசரகால அடிப்படையில் அரசாங்கம் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.