கேள்வியாளர்: சூரிய கிரியா பயிற்சியில், அனஹதாவில் கட்டைவிரல்களின் முட்டியைக் கொண்டு அழுத்துவதன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு: சூரிய கிரியா, சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய சக்தி என எந்த பயிற்சியாக இருந்தாலும், நீங்கள் சூரியனை நோக்கி ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை உருவாக்க வேண்டும். ஏனெனில், உங்கள் உணர்ச்சி எதன் மீது குவிந்திருக்கிறதோ, அதன் மீது உங்கள் மனதையும் எளிதாக வைக்க முடியும். இப்படித்தான் பக்தி செயல்படுகிறது. உணர்வுநிலையில் நீங்கள் ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருந்தால், உங்கள் மனதையும் கவனத்தையும் அதன் மீது வைப்பது சுலபம். இயல்பாகவே உங்கள் சக்தியும் அதனை நோக்கி நகரும்.

சூரியன் இல்லையெனில் பிராணன் இல்லை. சூரியன் இல்லையெனில் கதகதப்பு இல்லை. கதகதப்பு இல்லையெனில் உயிரும் இல்லை.

சூரியன் உங்களோடு எப்போதுமே தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. சூரியனால்தான் இந்த சூரிய குடும்பம் மொத்தமும் உயிரூட்டப்படுகிறது. இந்த பூமி பந்தில் உயிர் உருவாகி இருப்பதும் அதனால்தான். நமது உடலின் அடிப்படை கட்டமைப்பே இதில் இருந்து உருவானதுதான். ஹடயோகா என்பது சூரியனையும் சந்திரனையும் குறித்தது. இவை இரண்டும் மிக முக்கியமான அம்சங்கள். இவ்விரண்டின் கூட்டமைப்பின் தாக்கமே நம் கிரகத்தில் மனித உடலை உருவாக்கி இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உயிர் சக்திக்கு மூலமெல்லாம் சூரியனே. உங்களின் பிராணன் என்பது சக்தியின் ஸ்தூலநிலை (பொருள் வடிவம்). படைப்பின் செயல்முறையில் மனித உடலமைப்பில், சக்தி தன்னை முதன்முதலாக ‌ஸ்தூல வடிவத்தில் வெளிப்படுத்திக் கொள்வதே பிராணன் என்று குறிப்பிடப்படுகிறது. மனித அமைப்பில் உருவமற்ற, பிராணனற்ற மற்றொரு பரிமாணமும் உண்டு. பிராணன் உடல் சார்ந்ததே. இந்த சூரிய குடும்பத்தில் எல்லா பிராண சக்தியும், அடிப்படையில் உற்பத்தியானதே சூரியனில் இருந்துதான். சூரியன் இல்லையெனில் பிராணன் இல்லை. சூரியன் இல்லையெனில் கதகதப்பு இல்லை. கதகதப்பு இல்லையெனில் உயிரும் இல்லை. நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா இல்லையா என்பதை நாம் அறிந்துகொள்வதே உங்கள் உடலில் கதகதப்பு இருக்கிறதா அல்லது குளிர்ந்துவிட்டதா என்பதை வைத்துதான்.

சமத் பிராணனை அதிகரித்தல்

உங்களுக்குள் இருக்கும் சூரிய ஆற்றலை நாம் செயல்படுத்த விரும்புகிறோம். ஏதோ ஒன்று சூரிய ஒளியின் நேரடி தாக்கத்திற்கு உட்படுத்தப்படும்போது, அது பற்றி எரியக்கூடும். ஒரு வகையில் அந்த பொருள் சூரியக் கதிரை உள்வாங்கி. அதன் பிறகு சக்தியை உற்பத்தி செய்யும் திறனை பெறுகிறது. சூரிய சக்தியை உள்வாங்காத எந்த பொருளாலும் எரிய முடியாது; கதகதப்பையோ ஒளியையோ நல்க முடியாது. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் கதகதப்பை அதிகரித்து உஷ்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த வகையில் மனித அமைப்பில் ஆரோக்கியத்தை உருவாக்குவதில் சமத் பிராணன் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

உங்கள் சமத் பிராணன் அதிகமாக இருந்தால், ஒரு நாளில் இறக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடலாம்.

வாழ்தல் என்னும் செயல்முறை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனின் உடலில், உயிரணுக்களின் சராசரி ஆயுள் ஏழு முதல் பத்து வருடங்கள் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பழைய உயிரணுக்கள் இறந்து புதிய உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உங்கள் சமத் பிராணன் அதிகமாக இருந்தால், ஒரு நாளில் இறக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடலாம். அதேபோல, உங்கள் சமத் பிராணன் அதிகமாக இருந்தால், ஒரு நாளில் உற்பத்தியாகக்கூடிய உயிரணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கலாம். உங்களுக்குள் இருக்கும் சமத் பிராணனின் அளவு அடிப்படையாக உங்களுக்குள் இருக்கும் சூரிய சக்தியின் அளவைப் பொறுத்து இருக்கிறது. ஒன்று அதை உங்களுக்குள் நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். மற்றொரு வழி, வெளியே இருக்கும் சூரியனை உபயோகப்படுத்தி அதற்கான செயல்முறையை உங்களுக்குள் செயல்படுத்துவது.

உள்ளிருக்கும் சூரியனை தூண்டுதல்

சூரிய கிரியா என்பது உள்ளிருக்கும் சூரியனை செயல்பட தூண்டுவது. ஆனால் அதை நீங்கள் வெளியில் இருக்கும் சூரியனை பயன்படுத்தி தூண்டுவீர்கள். வெளியே உள்ள சூரியனோடு அல்லது ஏதோ ஒன்றோடு நீங்கள் தொடர்புகொள்ள வேண்டுமெனில், அதற்கு கவனம், உணர்ச்சி மற்றும் உங்கள் சக்தி அந்த திசையில் நகரத் தேவையிருக்கிறது. இல்லாவிடில் உங்களால் எதனோடும் தொடர்புகொள்ள முடியாது - அது ஒரு மனிதனாக இருந்தாலும், ஒரு செடியாக இருந்தாலும், ஒரு விலங்காக இருந்தாலும் அல்லது ஒரு பொருளாக இருந்தாலும் பொருந்தும். உங்களுடைய கவனம், உணர்ச்சி மற்றும் சக்தி உங்களைச் சுற்றியுள்ள எதனோடும் தொடர்பில்லாமல் இருந்தால், நீங்கள் உங்கள் அளவில் ஒரு தனி இருப்பைப் போல் இருப்பீர்கள். இப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.

சூரிய கிரியா என்பது உள்ளிருக்கும் சூரியனை செயல்பட தூண்டுவது. ஆனால் அதை நீங்கள் வெளியில் இருக்கும் சூரியனை பயன்படுத்தி தூண்டுவீர்கள்.

நாம் அனாஹதா பகுதியில் அழுத்தம் ஏற்படுத்துவதன் ஒரு அம்சம், இது மனித உடலமைப்பில் மிக முக்கியமான பகுதி. இங்கேதான் கீழிருக்கும் மூன்று சக்கரங்களும், மேலிருக்கும் மூன்று சக்கரங்களும் சந்திக்கின்றன. இதற்கான குறியீடாக இரண்டு சம கோண முக்கோணங்கள் வழங்கப்படுகிறது. மேல்நோக்கிய நிலையில் உள்ள முக்கோணம் ஒன்றும், கீழ்நோக்கிய நிலையில் உள்ள முக்கோணம் ஒன்றும் சேர்ந்து உருவாக்கும், ஒரு தேர்ந்த அறுகோண முக்கோண வடிவமைப்பு. ஒரு நிலையில், படைத்தல் அங்கிருந்தே உருவாகிறது - உடல் சார்ந்த பரிமாணம் அல்ல, ஆனால் உங்களை மனிதன் என வேறுபடுத்தும் உங்களின் மற்றொரு பரிமாணம்.

இதனாலேயே இது "அனஹதா" என்று அழைக்கப்பட்டது - அதற்கு அர்த்தம் "எழுப்பப்படாத" - எழுப்பப்படாத ஒரு சப்தம். பொதுவாக சப்தம் உருவாக்க இரண்டு பொருள்கள் மோதிக்கொள்ள தேவையிருக்கிறது. ஆனால் அனாஹதத்தில் இருப்பது, ஒரு எழுப்பப்படாத சப்தம். அதனை தூண்ட நீங்கள் உங்கள் கை கட்டை விரல்களை மடித்து துருத்தி கொண்டிருக்கும் அதன் முட்டிகளைக் கொண்டு அனஹதத்தை அழுத்த வேண்டும். அவ்வகையில் சூரியனோடு ஒரு வகை உணர்ச்சியை உருவாக்குகிறீர்கள்.

அதேபோல, நீங்கள் இனிமையான உணர்வை உணர்ந்தால் இயல்பாகவே உங்கள் கைகளை உங்கள் அனாஹதத்தில் வைப்பீர்கள். ஏனெனில் அங்கிருந்துதான் அது உருவாகிறது. உங்கள் உணர்ச்சி நிலையை நீங்கள் செயற்படுத்த விரும்புகிறீர்கள். ஏனெனில் உங்கள் உணர்ச்சியை ஒன்றின் மீது செலுத்தாமல் உங்கள் மனம் எதனோடும் ஒட்டாது. உங்கள் உணர்வை எங்கு செலுத்துகிறீர்களோ அங்குதான் உங்கள் மனமும் இருக்கும். இல்லையெனில், உங்கள் மனதை ஒன்றின் மீது நிலையாக வைப்பது மிகக் கடினம்.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா ஹட யோகா பயிற்சிகள் பாரம்பரிய ஹட யோகாவை அதன் முழுமையில் பரிசோதித்து பார்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன. இன்றைய உலகில் பெருமளவு மறைந்துவிட்ட தொன்மையான விஞ்ஞானத்தின் பல்வேறு பரிமாணங்களுக்கு இந்தப் பயிற்சி புத்துயிர் ஊட்டுகிறது. ஆற்றல்மிக்க மற்ற யோகப் பயிற்சிகளுடன், உபயோகா, அங்கமர்தனா, சூரிய கிரியா, சூரிய சக்தி, யோகாசனங்கள் மற்றும் பூதசுத்தி போன்ற முறைகளை முழுமையாக ஆராய்ந்து பார்த்திடும் இணையில்லா வாய்ப்பை இந்த பயிற்சிகள் நல்குகின்றன.