வெறும் காலில் நடப்பது நல்லதா? (Barefoot Walking Benefits in Tamil)
புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப். ஹுசைனின் நீண்ட ஆயுள் ரகசியம் முதல் ஆன்மீக சாதனா வரை இந்த கட்டுரை விளக்குகிறது. பூமியோடு நாம் கொள்ளும் நேரடி தொடர்பு நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக சிவராத்திரி, அமாவாசை போன்ற நாட்களில் வெறும் காலில் நடப்பதன் மூலம் கிடைக்கும் ஆன்மீகப் பலன்களை பற்றி சத்குரு விளக்குகிறார்.

கேள்வி:
நமஸ்காரம் சத்குரு. வெறும் காலில் நடப்பதன் முக்கியத்துவம் என்ன? அமாவாசை மற்றும் சிவராத்திரி நாட்களில் வெறும் காலில் நடப்பதால், உடல் மற்றும் மன அளவில் கூடுதல் பலன்கள் கிடைக்குமா?
சத்குரு:Subscribe
சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்போ, பத்து நாட்களுக்கு முன்னதாகவோ ஒரு ஊடகத்தில் இப்படி சொல்லியிருந்தார்கள். உங்களுக்கு எம்.எஃப். ஹுசைன் என்ற ஓவியர் பற்றி தெரியுமா? சமீபத்தில் காலமானார். மிக சமீபத்தில் ஒரு பிரபலமான பத்திரிகையாளருக்கு அவர் ஒரு பேட்டி அளித்திருந்தார்.
வெறும் காலில் நடப்பது பற்றி எம்.எஃப். ஹுசைன்
ஹுசைன், 92 வயதில் லண்டனில் காலமானார். அதுவரை, கடைசி நாள் வரை அவர் மிகவும் உற்சாகமாக வேலை செய்துகொண்டே இருந்தார். அவர் இறப்பதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னதாக அந்த பேட்டியைக் கொடுத்திருந்தார் என்று நினைக்கிறேன். அவரிடம் அவருடைய நீண்ட ஆயுள், சக்தி, ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டார்கள். அவர் இரண்டு விஷயங்களை கூறினார். அளவாக சாப்பிட வேண்டும், வெறும் காலில் நடக்க வேண்டும் என்றார். உங்களுக்குத் தெரியுமா? வெறும் காலில் நடப்பதால் அவர் சில பிரபலமான கிளப்களில் அனுமதிக்கப்படவில்லை. அவர் எப்பொழுதும் வெறும் காலில் நடப்பதை கடைபிடித்தார். எனவே நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவர் சொன்ன உபாயம் - குறைவாக சாப்பிடுவது, வெறும் காலில் நடப்பது. அவர் இப்படி சொன்னதை கேள்விப்பட்ட போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
நவீன உலகில் ‘பேர் ஃபுட்’ காலணிகள்
இப்பொழுது அமெரிக்காவில் புதுவிதமான காலணிகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதற்குப் பெயர் ‘பேர் ஃபுட்’. அதாவது வெறும் கால் என்று பொருள். அந்த காலணிகளை பாதம் போன்றே வடிவமைத்திருக்கிறார்கள். அதன் அடிப்பகுதி மிக மெல்லியதாக குறிப்பிட்ட ஒரு செயற்கை இழையினால் செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய வெறும் காலில் நடப்பது போன்ற ஓர் உணர்வை தருகிறது. அடியில் ஏதோ தடிமனான ஒரு தோல் இருப்பது போல் இல்லாமல், வெறும் காலில் நடப்பது போன்ற உணர்வை தருகிறது. ஓடுவதற்கு, மலையேற்றத்திற்கு, நடப்பதற்கு என பல வகையான செயல்பாட்டிற்கு தயாரிக்கப்படுகிறது. எல்லாவற்றையுமே ‘பேர் ஃபுட்’ என்றுதான் சொல்கிறார்கள்.
பூமியுடன் நேரடி தொடர்பு கொள்வதன் அவசியம்
இப்பொழுது இந்த கேள்வியை நீங்கள் கேட்டது மிகவும் நல்லது. சரி, வெறும் காலில் நடப்பதன் முக்கியத்துவம் என்ன? உங்கள் உடல் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்று நினைப்பவர்களும், தொடர்ந்து உடல் உபாதைகள் இருப்பவர்களும் வெறும் காலில் தான் நடக்க வேண்டும். உங்களால் தவழ முடிந்தால் மிகவும் நல்லது. அது பூமியுடன் அதிக தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இதற்காகத்தான் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கும் கலாச்சாரம் நம்மிடம் இருக்கிறது. கோவில் குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதன் நோக்கம் உங்கள் உடலில் உள்ள எல்லா பாகங்களும் பூமியுடன் தொடர்பில் வருகின்றன. சாஷ்டாங்கம் என்றால். உடலின் முக்கியமான பாகங்கள் அனைத்தும் பூமியுடன் தொடர்பில் இருக்கிறது.
சிவராத்திரி மற்றும் அமாவாசை நாட்களின் சிறப்பு
ஆன்மீக சாதனாவில் இருப்பவர்கள், குறிப்பாக சிவராத்திரி, அமாவாசை மற்றும் அதற்கு அடுத்த நாள் ஆகிய மூன்று நாட்களில் பூமியில் கிடைக்கின்ற விஷயங்கள் மிகவும் பிரம்மாண்டமானதாக இருக்கின்றன. உங்கள் சாதனாவை தீவிரப்படுத்துவதற்கு அது ஒரு நினைவூட்டலாக இருக்கிறது. எனவே, இந்த நாட்களில் கிடைக்கின்ற வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது. அதனால் இந்த நாட்களில் வெறும் காலில் நடக்கலாம். எல்லா நாட்களிலுமே பலன் இருக்கிறது. ஆனால், இந்த குறிப்பிட்ட நாட்களில் நிறைய பலன்கள் இருக்கின்றன. அவை உடல் நலத்திற்கு மட்டும் அல்ல; ஆன்மீக நலனுக்கும் தான். அதுமட்டுமல்லாமல், இந்த உடலமைப்பில் சக்தி மேல்நோக்கி நகர்வதற்கு தேவையான உந்துதலையும் அது உருவாக்குகிறது. உங்கள் கால்களை நாம் வெட்டிக்கொள்ள முடியாதே! எனவே உங்கள் காலணிகளை மட்டும் அந்த மூன்று நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம். அப்படி செய்வது மிகவும் நல்லது.


