கோவில் மணி ஓசை - முக்கியத்துவம் என்ன?
கோவில் மணி ஓசையைக் கேட்டு பூஜை ஆரம்பித்துவிட்டது என கோவிலுக்கு வேகமாகச் சென்ற அனுபவம் பலருக்கு இருக்கலாம். ஆனால் உண்மையில் கோவிலில் மணி அடிப்பது எதற்காக? அதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன? சத்குரு விளக்குகிறார்.

கேள்வி:
நமஸ்காரம் சத்குரு, எல்லா கோவில்களிலும் ஒரு பெரிய மணியை தொங்கவிடுகிறார்கள். பூஜை நேரங்களில் மட்டும் அடிக்கிறார்கள். வீட்டில் பூஜையின் போது கூட இதை செய்கிறார்கள். இது எதற்காக?
சத்குரு:தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்துக்கொள்ள அடிக்கிறார்கள். கோவில் மணி சரியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அதிர்வு இருக்கும். மிகவும் சக்திவாய்ந்த அதிர்வு அதில் இருக்கிறது. ஒரு மனிதனுடைய பேச்சிற்கு நடுவில் சிரிப்பு எப்படி வருகிறதோ, அதுபோல இசைக்கு நடுவில் ஒரு மணியை அடித்தால் அது சிரிப்பைப் போல தெரியும். நாம் எவ்வளவு பேச்சு பேசினாலும் சிரிக்கும் போதுதானே நன்றாக இருக்கிறது. மணி என்பதும் இப்படித்தான்.
Subscribe
கோவில் மணியின் தொழில்நுட்பம்
மணியை தயாரிப்பதே ஒரு பெரிய தொழில்நுட்பமாக மேற்கொண்டனர் நம் முன்னோர்கள். ஏனென்றால், அதில் ஒரு சரியான நாதத்தை எழுப்ப வேண்டுமென்றால் அதற்கு மிகுந்த திறமை வேண்டும். அதில் எந்த மாதிரியான உலோகத்தை பயன்படுத்துகிறோம், அதன் வடிவம், அது எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் சரியாக செய்தால்தான் சரியான நாதம் வரும். இங்கு ஆயிரம் மணிகளை கொண்டுவந்தால், அதில் ஒன்று அல்லது இரண்டு கூட தூய்மையான நாதம் வருவது போல இருக்காது. ஏனெனில், இப்போது அச்சை பயன்படுத்தி அனைவரும் மணியை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியிருந்தாலும், சில பழைய கோவில்களுக்கு சென்றால் ஒரு நல்ல மணி ஓசை அல்லது அந்த நாதத்தை கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கோவில்களின் விஞ்ஞானம்
முதலில் நாம் கோவில் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அங்கு சென்று ஏதோ ஒரு விண்ணப்பத்தை வைப்பதோ, ஐந்து அல்லது பத்து ரூபாய் கொடுத்துவிட்டு பத்து லட்சம் கொடு என்று விண்ணப்பம் போடும் இடமோ அல்ல. தமிழ்நாடாக இருந்தாலும் சரி, பொதுவாக தென்னிந்தியாவாக இருந்தாலும் சரி, இப்போதும் இந்த நடைமுறை இருக்கிறது. அதாவது, நீங்கள் ஒரு கோவிலுக்கு சென்றால் அங்கே நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும், விண்ணப்பம் போட வேண்டும் என்று யாரும் உங்களுக்கு சொல்லவில்லை. அங்கே சென்றால் சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். உட்காருவதை எல்லாம் விட்டுவிட்டீர்கள். சும்மா அப்படி குதித்துவிட்டு அப்படியே சென்றுவிடுகிறீர்கள். எங்கும் உட்கார முடிவதில்லையே. அதற்குள் மொபைல் அடிக்கிறதே. கோவிலுக்கு சென்றும் மொபைலில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு கடவுளின் மொபைல் நம்பர் கிடைத்துவிட்டதா?
கோவில் என்று எதை சொல்கிறீர்களோ, அந்த சூழலில் மனிதர்களின் உள்நிலை வளர்ச்சிக்கு தேவையான அதிர்வை உருவாக்குவதற்காகத்தான் இந்த முயற்சி. இது நீங்கள் மேலே பார்த்தோ, கீழே பார்த்தோ பிரார்த்தனை செய்வதற்காக அல்ல. அதற்கு ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. அதன் வடிவம், அளவு, சிலையினுடைய அளவு, கையில் வைத்திருக்கும் முத்திரை, நெஞ்சில் இருக்கும் யந்திரம் என பலவிதமான தன்மைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் மந்திரங்கள், நாதங்கள் என அனைத்தும் சேர்ந்து ஒரு பலமான அதிர்வை அங்கே உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது. முறைப்படி உருவாக்கியிருந்தால் இப்படித்தான் இருக்கும். உங்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் தேவையில்லை. நீங்கள் கடவுளை நம்பி சென்றால் ஏதேதோ கற்பனை செய்துகொள்வீர்கள். அங்கே சும்மா போய் உட்கார வேண்டும். நம்பிக்கையும் இருக்கக்கூடாது, நம்பிக்கை இல்லை என்றும் இருக்கக்கூடாது. சும்மா போய் உட்கார்ந்தால், அது சரியான முறையில் உருவாக்கப்பட்டிருந்தால் அந்த அதிர்வு பலருக்கு என்னவென்றே தெரியாமல் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
இந்த அதிர்வுடன் நாம் தொடர்பில் இருக்க வேண்டும். நாமும் ஒரு அதிர்வுதான். எதை நாம் எல்லாவற்றுக்கும் உயர்ந்தது என்று சொல்கிறோமோ, அதுவும் ஒரு அதிர்வுதான். நம்முடைய அதிர்வை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கம். இதற்காகத்தான் பலவிதமான கோவில்களை உருவாக்கினோம். ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருந்தால் அதற்கு ஏற்ப ஒரு கோவில். உதாரணமாக, தியானலிங்கத்தை உருவாக்கினோம். இங்கு மணி கிடையாது, மந்திரம் கிடையாது, எதுவுமே கிடையாது. ஏனெனில், இது தியானத்திற்காக உருவாக்கப்பட்ட கோயில். இதேபோல பலவிதமான நோக்கங்களுக்காக கோவில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பழைய காலத்தில் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து உருவாக்கினார்கள். இப்போது எல்லாம் வணிக வளாகம் போல கான்கிரீட் மற்றும் சிமெண்ட் கலந்து உருவாக்குகிறார்கள். இதுபோன்ற ஆற்றல் மற்றும் அதிர்வை ஏற்படுத்தும் முயற்சியில், மணி சரியாக உருவாக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. நீங்கள் அதை கவனிக்க முடியும். அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து ஒரே ஒருமுறை 'டங்' என்று அடித்தால், அது சரியாக இருந்தால் அந்த அதிர்வு உடல் முழுவதும் பரவும்.
மணி அடிக்கும் முறை
குழந்தைகள் மணியைப் பார்த்தால் அதை அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வேகமாக அடிக்கவும் செய்வார்கள். ஆனால் அது அல்ல மணி அடிக்கும் முறை. ஒருமுறை சரியாக அடித்தாலே அதன் அதிர்வு அந்த சூழல் முழுவதும் அப்படியே பரவும். அங்கு ஒரு நோக்கத்துடன் நாம் அமைதியாக உட்கார்ந்திருந்தால், அதனுடைய தாக்கம் நம் மேல் பெருமளவில் இருக்கும். இப்போது சத்தம் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே எல்லோரும் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. எப்படி உபயோகப்படுத்த வேண்டும், எந்த நேரத்தில் உபயோகப்படுத்த வேண்டும், ஒரு மந்திரம் சொன்னால் எத்தனை முறைக்கு ஒருமுறை மணி அடிக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு பெரிய விஞ்ஞானம் இருக்கிறது. எதையெல்லாம் ஒரு காலத்தில் விஞ்ஞானப்பூர்வமாக செய்தோமோ, இப்போது அதை பொழுதுபோக்கிற்காக செய்கிறோம். அதனால்தான் "இது தேவையா?" என்ற கேள்வி வருகிறது. அந்த அனுபவம் நமக்குள் ஏற்படாததால் இந்த கேள்வி வருகிறது. அதை நம் அனுபவத்தில் கொண்டுவர வேண்டுமென்றால் சரியான சூழ்நிலையையும் நோக்கத்தையும் உருவாக்க வேண்டும்.
இது ஏதோ ஒரு நம்பிக்கையினால் நடக்கும் விஷயம் அல்ல. ஏதோ ஒன்றை உணர வேண்டும் என்றால், அதை உணர்வதற்கு நமக்குள் அனுமதி இருக்க வேண்டும். ஒரு உணவை உண்டாலும் அதன் சுவையை ரசித்துப் பார்ப்பதற்கு அனுமதி இருக்க வேண்டும். அதன் மீது எதிர்ப்பு இருந்தால் எப்படி உணர முடியும்? நாம் மிகுந்த எதிர்ப்போடு எதை வாயில் வைத்தாலும் அது நமக்கு நன்றாக இருக்குமா? இருக்காது. மிகுந்த எதிர்ப்போடு ஒரு மனிதரைப் பார்த்தால், அவர் நமக்கு நல்லவராக தெரிவாரா? அவர் எப்படியிருந்தாலும் நமக்கு தொந்தரவுதான். இதேபோல தான் சத்தமும் நாதமும்.
உணர்ந்து பார்க்க வேண்டும் எனும் உன்னத உணர்வு
நவீன அறிவியலில் எல்லாமே ஒரு அதிர்வுதான் என்று சொல்லிவிட்டார்கள். முழு பிரபஞ்சமுமே பலவிதமான அதிர்வுகள்தான். அப்படியென்றால், மனிதனும் ஒரு அதிர்வுதான். அந்த அதிர்வுக்கு நம் மனதிற்குள் எதிர்ப்பு வைத்து பார்த்தால், அது நமக்கு நன்றாக இருக்குமா? அதேபோல நாதம் என்பதும் ஒரு அதிர்வுதான். அதனிடம் எதிர்ப்பு காட்டினால் அது வேலை செய்யாது. ஒரு திறந்த தன்மையோடு உட்கார்ந்தால்தான் இது நடக்கும். அதற்காக நாம் ஏதேதோ கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை. நம்பிக்கை என்று சொன்னால் ஏதோ கற்பனை செய்துகொள்கிறீர்கள். நம்பிக்கை இல்லை என்றால் எதிர்மறையாக கற்பனை செய்துகொள்கிறீர்கள். நம்பிக்கையும் தேவையில்லை, அவநம்பிக்கையும் தேவையில்லை. "உணர்ந்து பார்க்கலாம்" என்ற ஒரு திறந்த மனம் மனிதனுக்கு தேவைப்படுகிறது.
நீங்கள் ஒரு சாத்தியமாக மாறுவதற்கு திறந்த மனதுடன் இருந்தால், எங்கே ஒரு நல்ல அதிர்வு இருந்தாலும் அதை உங்களால் நிச்சயமாக உணர முடியும். இப்போது மனதிற்குள் எனக்கு பிடிக்கும், பிடிக்காது என்று நிர்ணயித்து வைத்திருப்பதால், எதையும் அதன் இயல்பில் உணர முடிவதில்லை. இது வெறும் மனதின் முடிவுகளை சார்ந்ததாக ஆகிவிடுகிறது. உயிர்நிலையில் ஏதேனும் நிகழ வேண்டும் என்றால், நாம் ஒரு திறந்த வாசலை போல இருக்க வேண்டும். "இது உண்மை" என்று நம்பினாலும் அந்த உணர்வு வராது, "இது உண்மை இல்லை" என்று நம்பினாலும் வராது. "நான் உணர்ந்து பார்க்க வேண்டும்" என்ற ஆர்வம் இருந்தால் மட்டுமே அதற்கான வாய்ப்பு இருக்கிறது.


