சத்குரு: மனித குலத்தின் பெரும்பாலானவர்களுக்கு, மரணம் என்பது வாழ்வின் மிக ஆழமான, மர்மமான ஓர் அம்சமாக இருக்கிறது. ஏனென்றால், மக்கள் எந்தவிதமான கதைகளைக் கேள்விப்பட்டிருந்தாலும், மரணம் என்றால் என்ன என்பதை அவர்களால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை. மரணம் என்றால் என்ன என்பதை விஞ்ஞானமோ, தத்துவ விளக்கங்களோ தெளிவுபடுத்தியதும் இல்லை. 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல்தான் பிறப்பு - இறப்பு பற்றியது. ஆன்மீக செயல்முறை உங்களைப் பற்றியது, அது வாழ்வுமல்ல, மரணமுமல்ல.

ஆன்மீக செயல்முறை என்பது மரணத்தைப் பற்றியது அல்ல – ஆன்மீக செயல்முறையில் நீங்கள் மரணத்தைவிட ஆழமான ஒன்றைத் தேடுகிறீர்கள். மரணம் என்பது ஒரு சாதாரணமான விஷயம், அதைப்பற்றி ஆழமான அல்லது மர்மமான விஷயம் என்று எதுவும் இல்லை. இது மீண்டும் மீண்டும் மக்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். மரணம் மிகவும் மர்மமானதாகவும் ஆழமானதாகவும் தோன்றுவதற்கு, உங்களுக்குள் இருக்கின்ற "குறுகியகால ஞாபகமறதி" காரணமாக உள்ளது. அதாவது, ஒவ்வொரு நாள் காலையில் நீங்கள் எழும்போதும், முந்தைய நாள் என்ற ஒன்று இருந்தது என்பது உங்களுக்கு நினைவில் இல்லை என்பதுடன், நீங்கள் உண்மையில் தூங்கச் சென்றதும் உங்களுக்கு நினைவில் இல்லை, உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இன்று நீங்கள் விழித்துவிட்டீர்கள் என்ற அளவில் உங்களுக்கு ஞாபகம் இருந்தால், ஒவ்வொருநாளும், ஒரு அதிசய உலகத்தில் இருப்பதைப்போலவே நீங்கள் உணர்வதுடன், அது மிகவும் மர்மம் நிறைந்ததாகவும் இருக்கும். சில மணிநேர உறக்கம் உங்கள் வாழ்வின் மிக மர்மமான, ஆழமான அம்சமாக இருந்திருக்கும். ஏனென்றால், நீங்கள் உண்மையில் உறங்கச் சென்றுவிட்டு, பிறகு கண் விழித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இல்லை. மரணத்தின் மர்மமும், ஆழமும் அதைப் போன்றதுதான்.

“சிவன் அழிப்பவராக இருக்கிறார்,” என்று நாம் சொல்லும்போது, மரணத்துக்குக் காரணமாக அவர் இருக்கிறார் என்று நாம் கூறுவதில்லை. அவர் மரணத்தில் ஆர்வமற்றவர். அவரைப் பொறுத்தவரை, பிறப்பதும், இறப்பதும் மிகச் சாதாரணமான ஒரு விஷயமாக, வாழ்வின் மேலோட்டமான ஒரு அம்சமாக இருக்கிறது. அவர் மரணத்தை லட்சியம் செய்யவில்லை என்று காட்டுவதற்குத்தான் சுடுகாட்டுச் சாம்பலைத் தன் உடலில் அணிந்துகொள்வதற்கான காரணமாக உள்ளது. அவர் மரணம் என்பதை ஆழமான அல்லது மர்மமான அம்சமாக பாவிப்பதில்லை. ஆன்மீக சாதனா மரணத்தைப் பற்றியதல்ல. மரணத்திற்கு வேராக இருக்கும் பிறப்பிலிருந்து விடுபடுவதைப் பற்றியது. பிறப்பிலிருந்து விடுதலை அடைவது என்பது இயல்பாகவே மரணத்திலிருந்து விடுதலை அடைவதாக இருக்கிறது.

இந்த பிறப்பும், இறப்பும் வெறும் மண்பாண்ட வித்தை – ஒரு பிடி மண்ணை எடுத்து, அதற்கு மனித வடிவம் கொடுத்து, அதை நடக்கவும், பேசவும் வைக்கும் வேலை. இந்த மண்பாண்ட வித்தை பின்பு ஒரு பொம்மலாட்டமாக மாறுவது என்பது எளிமையான ஒரு யுக்தியே. பார்வையாளர் கோணத்திலிருந்து நாடகத்தை அறிந்துகொள்வது என்பது ஒரு விஷயம். மேடைக்குப் பின்னால் இருந்து நாடகத்தை அறிந்துகொள்வது என்பது முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் மேடைக்குப் பின்புறமாக இருந்து நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே, சிறிதுநேரத்தில் அதில் உங்களுக்கு ஆர்வம் குறைந்துவிடுகிறது. நீங்கள் அது இயங்கும் நுட்பத்தை ரசிக்கலாம், ஆனால் அதனுடைய கதை, நடிப்பு ஆகியவற்றால் உற்சாகம் கொள்ளமாட்டீர்கள், ஏனென்றால் இவையெல்லாம் எவ்வாறு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரிந்துவிடுகிறது. குறுகியகால ஞாபகம் கொண்டவர்கள் மட்டுமே ஒவ்வொருநாளும் ஒரே நாடகத்திற்கு வந்து உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் முந்தைய நாளின் நினைவை மறந்துவிட்டிருக்கிறார்கள். – அவர்களுக்கு இது மிகவும் குதூகலமான, சவாலான விஷயமாக இருக்கின்றது.

எனவே, ஆன்மீக செயல்முறை என்பது பிறப்பையோ அல்லது இறப்பையோ பற்றியது அல்ல. உடல்தான் பிறப்பு - இறப்பு பற்றியது. ஆன்மீக செயல்முறை உங்களைப் பற்றியது, அது வாழ்வுமல்ல, மரணமுமல்ல.