நேரம் கடந்துகொண்டிருக்கிறது

நான் இதைக் கூறுவதை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும், நீங்கள் மரணத்திற்கு இன்னும் சிறிது நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு எமது ஆசிகள்! ஆனால் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. காலமும், சக்தியும் நமது வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பரிமாணங்களாக இருக்கின்றன.  

 

உங்கள் சக்தி நிலைகளை நீங்கள் சரியானபடி நிர்வகித்தால், சக்திநிலை மேம்பாடு அடையும் காரணத்தால், உங்களுடைய உணர்வில், காலமும் மேம்பாடு அடையும். உங்கள் வாழ்க்கை அனுபவம் இனிமையாக இருந்தால், அது எந்த அளவுக்கு இனிமையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு காலமும் வேகமாக உருள்வதாகத் தோன்றுகிறது. காலையில் எழுந்ததிலிருந்து, நீங்கள் உணர்வதற்குள், மிக வேகமாக அந்த நாள் முடிந்துவிட்டது என்றால் – நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பது பொருள். மாறாக, நேரம் உங்கள் மீது சுமையாக உட்கார்ந்திருந்தால், அது நகரவில்லை என்றால், நீங்கள் மிக மோசமாக வாழ்கிறீர்கள் என்று பொருள். உங்களுடைய உடலுக்குள் காலம் எப்படி இயங்குகிறது அல்லது ஒரு மனிதனென்ற நிலையில், இந்த நேரத்தில், இந்த கிரகத்தில் நீங்கள் காலத்தை எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்வது அவசியம்.

மனிதன்-பூமி ஒரு ஒத்திசைவு

நீங்கள் ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 15 - முறை சுவாசித்தால், பூமியின் சுழற்சியுடன் மிகத் துல்லியமாக நீங்கள் ஒத்திசைவில் இருப்பீர்கள். உங்களது இதயத்துடிப்பு 70-72 என்ற அளவில் இருந்தால், அப்போது உங்கள் இதயமும் சுவாசத்துடன் ஒத்திசைவில் இருப்பதுடன், சுவாசமும் பூமியின் சுழற்சியுடன் ஒன்றுபடுகிறது.

உங்களது உடலின் பல்வேறு பரிமாணங்கள், இந்த பூமி மீதான கால உருவாக்கத்தின் அடிப்படையான அம்சங்களுடன் ஒத்திசைவில் இருக்கின்றன. பூமியானது சூரியனைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது – அதற்கான ஒரு வருடம் என்பது காலம் குறித்த மிகவும் அடிப்படையான உணர்தலாகும். சந்திரன் பூமியைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது – அது ஒரு மாதம். ஆனால், நம்முடைய மிகவும் அடிப்படையான காலம் குறித்த உணர்வானது, பூமியின் சுழற்சியிலிருந்து வருகிறது. அது தன்னைத்தானே ஒரு முறை சுழன்றால், நாம் அதை ஒரு நாள் என்கிறோம்.

பூமத்தியரேகையின்(Equator) நீளம் என்பது 21,600 (nautical) கடல் மைல்கள் ஆகும் ( ஒரு கடல் மைல் என்பது 6080 அடி கொண்டது). இந்த 21,600 நாட்டிகல் மைல்கள் என்பது, நீங்கள் ஒரு நாளில் சுவாசிக்கும் எண்ணிக்கைக்குச் சமம். இந்த எண்ணை நீங்கள் 1440-ஆல் (ஒரு நாளில் உள்ள மொத்த நிமிடங்களின் எண்ணிக்கை) வகுத்தால், உங்களுக்குக் கிடைக்கும் எண் - 15. அப்படியென்றால், நீங்கள் ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 15 - முறை சுவாசித்தால், பூமியின் சுழற்சியுடன் மிகத் துல்லியமாக நீங்கள் ஒத்திசைவில் இருப்பீர்கள். உங்களது இதயத்துடிப்பு 70-72 என்ற அளவில் இருந்தால், அப்போது உங்கள் இதயமும் சுவாசத்துடன் ஒத்திசைவில் இருப்பதுடன், சுவாசமும் பூமியின் சுழற்சியுடன் ஒன்றுபடுகிறது. இது உடலமைப்பில் ஒரு முழுமையான இணக்கத்தைக் கொண்டுவருவதற்கான எளிமையான ஒரு வழி.

நிர்ப்பந்தமான நிலையா அல்லது விழிப்பு நிலையா? இது நீங்கள் தேர்வு செய்வது.

பெரும்பாலான மக்கள், அவர்களது உடலின் நிர்ப்பந்தங்களுக்கு, அதாவது என்ன சாப்பிடுவது, எங்கு தூங்குவது? யாருடன் தூங்குவது போன்றவைகளை, ஏற்பாடு செய்வதிலேயே தங்களது வாழ்க்கை முழுவதையும் செலவிடுகிறார்கள். உடலின் கட்டுப்பாடுகளின் மீது கவனம் செலுத்துவது மட்டும்தான் இதில் அடங்கியுள்ளது. உடலுக்கென்று நிர்ப்பந்தமான இயல்பு இருக்கிறது; அதை நீங்கள் மறுக்கமுடியாது. ஆனால், உங்களுடைய வாழ்வின் இந்தப் பரிமாணத்திற்கு எவ்வளவு காலத்தையும், சக்தியையும் நீங்கள் அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்? இதனை நீங்கள் திறந்த மனப்பான்மையுடன் பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் வாழ்வின் எந்த அம்சத்தையும் கொச்சைப்படுத்துவதிலோ அல்லது அர்த்தமற்றதாக்குவதிலோ எனக்கு ஆர்வமில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும், உங்கள் மரணத்தை நீங்கள் நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு வரையறுக்கப்பட்ட கால அளவு கொண்டது. இந்தக் காரணத்தினால், உங்களது உடல் மற்றும் உளவியல் ரீதியான நிர்ப்பந்தங்களைப் பூர்த்தி செய்வதற்காக, உங்கள் வாழ்வின் எவ்வளவு காலத்தையும், சக்தியையும் அர்ப்பணிப்பது என்ற இந்தக் கேள்வியை ஆராய்வது முக்கியமாகிறது, இயற்கையின் அடிப்படையான சக்திகளுடன் ஒத்திசைவுடன் இல்லாத நிலையில், உங்கள் உடல் மற்றும் மனதின் நிர்ப்பந்தங்களைக் குறைப்பதற்கு நீங்கள் முயன்றால், அப்போது நீங்கள் தியாகம் செய்வதைப்போல அல்லது துறப்பதைப்போலத் தோன்றுகிறது. இது சந்நியாசம் ஆகாது.

உயிர்த்திருப்பதற்காக வாழ்வது, உடல் மற்றும் மனதுக்காக அல்ல

நீங்கள் ஒரு உயிராக இருக்கும் நிலையில், முற்றிலும் அதற்காகவே நீங்கள் இருக்கிறீர்கள் – நீங்கள் சேகரித்துள்ள உடலுக்காகவோ அல்லது நீங்கள் சேகரித்துள்ள மனதுக்காகவோ அல்ல.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சந்நியாசம் என்றால், உடலின் நிர்ப்பந்தங்களின் பொருட்டு நீங்கள் செலவிடும் காலத்தைக் குறைந்தபட்சமாக வைத்திருப்பதற்கு விழிப்புடன் தேர்வு செய்வது. இது அறிவின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. இது துறவு, தியாகம் அல்லது வாழ்வை விட்டு விலகுவது என்பது அல்ல – இது முற்றிலும் வாழ்வுக்கானது. ஏனென்றால், நீங்கள் ஒரு உயிராக இருக்கும் நிலையில், முற்றிலும் அதற்காகவே நீங்கள் இருக்கிறீர்கள் – நீங்கள் சேகரித்துள்ள உடலுக்காகவோ அல்லது நீங்கள் சேகரித்துள்ள மனதுக்காகவோ அல்ல. நாளைக்கே நீங்கள் ஒரு சந்நியாசியாகப் போவதில்லை. அதோடு, எனக்கு நீங்கள் சந்நியாசியாகவும் வேண்டாம். ஆனால், உங்கள் வாழ்க்கையை சிறிது மேம்பாடு அடையச் செய்வதும், உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் இயற்கை சுழற்சிகளுடன் உங்கள் வாழ்வை ஒத்திசைவில் இருக்கச் செய்வதும், இந்த உயிரை இந்த விதமாக உருவாக்கியிருக்கும் இந்த கிரகத்துடன், உங்கள் வாழ்வை ஒத்திசைவில் இருக்கச் செய்வதும் மிகவும் முக்கியமாக இருக்கிறது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு சம நிலையை எட்டுவதற்கும், உள்தன்மையில் ஒரு விதமான இணக்கத்தில் வாழ்வதற்கும், நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாக உங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் நீர், காற்று, உணவு, நெருப்பு, சூடு மற்றும் உயிர்சக்தி போன்றவைகளுடன் நீங்கள் முழுமையான ஒத்திசைவில் இருப்பதற்கும், யோகப் பயிற்சிகளை நாம் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆனால், தற்காலத்தில் “கல்வி” என்று அழைக்கப்படுகின்ற ஒரு விஷயத்தினால், ”எனக்கு என்ன கிடைக்கும்?”, என்ற பைத்தியக்காரத்தனத்துக்குள் மக்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை என்றால், உபயோகமான ஏதோ ஒன்றை அடைவது என்று மக்கள் நினைக்கின்றனர்.

போட்டியும் தகுதியும்

போட்டி என்றால், உங்களுக்குள் எல்லா ஒருமை உணர்வையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள் என்று அர்த்தம், ஏனென்றால் உங்களைப் பற்றிய எந்தவித உணர்வும் அங்கே இல்லை – அது எப்போதும், உங்களுடன் ஒப்பிடுகையில் யாரோ ஒருவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதைக் குறித்ததாகவே இருக்கிறது.

நீங்கள் வாழ்க்கையை வெறும் பரிவர்த்தனையாக்கி விடும்போது, ஒத்திசைவில் இருப்பது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. ஏனென்றால் குழந்தைப் பருவம் முதற்கொண்டு, மழலைப் பள்ளியிலிருந்தே, போட்டியாளராக இருக்கவேண்டும் என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இன்னொருவருடன் போட்டியில் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கே உரிய திறமை குறித்த உணர்வு உங்களுக்கு இல்லை என்று அர்த்தம். உங்களால் பறக்கவே முடியலாம் என்ற நிலையில், வேறொருவரைவிட ஒரு அடி முன்னால் நடப்பதில் நீங்கள் மகிழ்ந்துபோகிறீர்கள் என்றால் என்ன ஒரு சோகம் இது! போட்டி என்றால், உங்களுக்குள் எல்லா ஒருமை உணர்வையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள் என்று அர்த்தம், ஏனென்றால் உங்களைப் பற்றிய எந்தவித உணர்வும் அங்கே இல்லை – அது எப்போதும், உங்களுடன் ஒப்பிடுகையில் யாரோ ஒருவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதைக் குறித்ததாகவே இருக்கிறது.

மற்றவர்களுடைய தோல்விகளைக் கொண்டாடுவது என்பது ஒரு நோய். ஆனால், மழலையர் பள்ளியிலிருந்து, நீங்கள் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்பதை நம்புவதற்கு உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பதிலேயே மிகச் சிறிய ஒரு எண்ணின்(1) இடத்தில் இருப்பதற்கு ஏன் அனைவரும் ஆவல் கொள்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. குறைந்தபட்சம் உங்களை நீங்கள் பூஜ்ஜியத்துக்கு உயர்த்திக்கொள்ளலாமே! வாழ்வில் நீங்கள் எப்போதும் பரிவர்த்தனை செய்யும் நிலையிலேயே இருந்தால், எந்த நேரமும், ”எனக்கு என்ன கிடைக்கும்” என்று மட்டுமே இருந்தால், உங்களை உருவாக்கியிருக்கும் இயற்கை மூலக்கூறுகளுடன் நீங்கள் ஒத்திசைவில் இருப்பதற்கு இது அனுமதிக்காது.

பேராசையும் தளர்வு நிலையும்

“எனக்கு என்ன கிடைக்கும்?” இந்த ஒரு எண்ணத்தை மட்டும் நீங்கள் நீக்கிவிட்டால், அதன் பிறகு, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும் நீங்கள் இயல்பாகவே இணக்கம் கொள்வதை உங்களால் பார்க்க முடியும்.

நீங்கள் ஒத்திசைவில் இல்லாவிட்டால், உங்கள் திறமை, மேதைமை, உங்கள் புத்திசாலித்தனம் ஒருபோதும் முழு வெளிப்பாட்டைக் காணாது. அது முழுமையாக வெளிப்பட முடியாது, ஏனென்றால், நீங்கள் ஒருபோதும் தளர்வு நிலைக்கு வருவதே இல்லை. நீங்கள் தளர்வுநிலை அடையவில்லையென்றால், எதிலும் நீங்கள் முழு வெளிப்பாடு காணமாட்டீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும் நீங்கள் இணக்கமுடன் இருப்பதற்கு, உளவியல்ரீதியாக, நீங்கள் செய்யவேண்டியது ஒரே விஷயம்தான்: உங்கள் மனதிலிருந்து ஒரே ஒரு எண்ணத்தை நீங்கள் நீக்கவேண்டும், அங்கு எஞ்சியிருக்கும் முட்டாள்தனங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரே ஒரு எண்ணத்தை மட்டும்தான் – “எனக்கு என்ன கிடைக்கும்?” இந்த ஒரு எண்ணத்தை மட்டும் நீங்கள் நீக்கிவிட்டால், அதன் பிறகு, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும் நீங்கள் இயல்பாகவே இணக்கம் கொள்வதை உங்களால் பார்க்க முடியும்.

சில நேரங்களில் இதை நீங்கள் செய்வதுண்டு. உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய எண்ணம் இல்லாத அந்தத் தருணங்களில், நீங்கள் எல்லாவற்றுடனும் முழுமையான ஒத்திசைவுடன் இருந்தீர்கள். “எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற எண்ணம் எழும் கணமே, கொடுக்கல்-வாங்கல் தொடங்கிவிடுகிறது. இது நிகழ்ந்துவிட்டாலே, வேறொருவரைவிட நாம் மேலானவர்களாக இருப்பதற்குதான் முயற்சிக்கிறோம். நாம் நாமாக இருப்பதற்கு முயற்சிப்பதே இல்லை. உங்களைவிட மேலானவனாக இருப்பதற்கு நான் விரும்பும் கணமே, என் இயல்பான தன்மையில் என்னால் இருக்கமுடியாது. போட்டியில் இருக்கும் காரணத்தால், உங்களைவிட சற்று அதிகமான முட்டாள்தனமான விஷயங்களை நான் செய்வேன். இன்றைய உலகில் இதை நான் பார்க்கிறேன். இதற்குக் காரணம், நீங்கள் சாப்பிடும் உணவு அந்த விதமானது, நீங்கள் சுவாசிக்கும் காற்றும் மற்றும் நீங்கள் அருந்தும் நீரும் அந்தவிதமாகவே இருக்கிறது.

வாழ்வை முடக்கும் விஷம்

இப்போதெல்லாம், நாம் உண்ணும் உணவில் விஷம் தூவுகிறோம், நாம் அருந்தும் நீரில் விஷத்தைக் கொட்டுகிறோம், மேலும் நாம் ஏதோ மாபெரும் அறிவியலைக் கண்டுவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். இது அறிவியல் அல்ல, இது அற்பமான ஒரு முட்டாள்தனம். துரதிருஷ்டவசமாக, அறிவின்மையிலிருந்து நாம் ஒரு அறிவியலை உண்டாக்கியுள்ளோம். இந்த கிரகத்தில், எல்லா உயிர்களுக்கும் – ஒரு செல் உயிரியிலிருந்து அதி சிக்கலான “நீங்கள்” என்னும் இந்த வடிவம் வரை, - அடிப்படையில், ஆதாரமான கட்டுமானம் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஏதோ ஒரு விஷம் ஒரு பாக்டீரியாவை விஷமாக்கினால், அது உங்களையும் விஷமாக்கும். ஒருவேளை, அந்த அளவானது உங்களைக் கொல்வதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் – இருப்பினும், அது விஷம்தானே. இந்த விஷங்கள் உங்களை முடக்கி வைத்துள்ளன. நான் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை – இந்த உயிர் அதன் முழு சாத்தியத்திற்கும் உங்களுக்குள் மலரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

இந்த உயிருக்கு அனைத்திலிருந்தும் விடுதலை வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் விஷமாக்கப் பட்டிருக்கும்போது அது எப்படி சாத்தியமாகும்? நீங்கள் அதி தூய்மையான இயற்கை சூழ்நிலைகளில் வாழ்ந்திருந்தால், நீங்கள் செய்யவேண்டிய பயிற்சிகளின் அளவும், விழிப்புடன் மேற்கொள்ள வேண்டிய முயற்சியின் அளவும் மிகவும் குறைவாக இருந்திருக்கும். ஆனால், இப்போது நாம் இந்த மாதிரியான சூழல்களில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தக் காரணத்தினால், விழிப்புடன் இருப்பதும், உங்களைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொன்றுடனும் இசைவுடன் இருப்பதற்குத் தேவையான விஷயங்களைச் செய்வதும் எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக இருக்கிறது.

சுவாசம் மற்றும் இதயத் துடிப்பை ஒன்றுபடுத்துவது

உங்களது சுவாசம், ஒரு நிமிடத்திற்குப் பதினைந்தாக இருப்பதற்கு பதில், பதினொன்று, பன்னிரண்டு என்றிருந்தால், இந்த உலகத்தில் உள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் எல்லா உயிரினங்களின் மொழியையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்களது சுவாசம் மேலும் குறைந்து ஒன்பது என்றால், இந்த பூமித்தாயின் மொழியையே உங்களால் புரிந்துகொள்ள முடியும்!

எப்படி ஒத்திசைவில் இருப்பது? நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான விஷயம் இதோ: உங்களால் இதை எல்லா நேரமும் செய்யமுடியவில்லை என்றால், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, அல்லது குறைந்தபட்சம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, நீங்கள் எவ்வளவு வேலைகளில் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் இதற்கென ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளலாம். ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து, உங்கள் சுவாசம் ஒத்திசைவில் - ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய பதினைந்து சுவாசங்கள் - இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். எப்போதும் அந்த விதமாக சுவாசத்தை வைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது இதயத் துடிப்புகூட, மற்ற எல்லாவற்றுடனும் ஒன்றுபடுவதை நீங்கள் படிப்படியாகக் காண்பீர்கள். நீங்கள் ஒரு இயல்பான மனிதராக வாழ்வதற்கு இது மிக முக்கியமானது.

நீங்கள் ஒரு யோகியாக இருப்பதற்கு விரும்பினால், சுவாசங்களின் எண்ணிக்கையை நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நீங்கள் வலுக்கட்டாயமாகச் செய்யமுடியாது. அது இயற்கையாக நிகழும் அளவுக்கு உங்கள் உடலை ஒரு தளர்வான நிலைக்குக் கொண்டுவருவதன் மூலம், உங்கள் நுரையீரலின் கொள்திறனை நீங்கள் அதிகரிக்க வேண்டும். யோக மரபில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் கூறப்பட்டிருக்கிறது. அதை உள்ளபடியே எடுத்துக்கொள்வதற்கில்லை என்றாலும், பொதுவான ஒரு விதத்தில் அது உண்மையானது: உங்களது சுவாசம், ஒரு நிமிடத்திற்குப் பதினைந்தாக இருப்பதற்கு பதில், பதினொன்று, பன்னிரண்டு என்றிருந்தால், இந்த உலகத்தில் உள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் எல்லா உயிரினங்களின் மொழியையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்களது சுவாசம் மேலும் குறைந்து ஒன்பது என்றால், இந்த பூமித்தாயின் மொழியையே உங்களால் புரிந்துகொள்ள முடியும்!

உணர்வுபூர்வமாக மாறுவது என்றால் அறிவுபூர்வமாக மாறுவது

உங்களது சுவாசம், ஒரு நிமிடத்தில் ஆறிலிருந்து ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்தால், அறிந்துகொள்ளத் தகுந்த அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால், ஒரு நிமிடத்திற்கான சுவாசத்தின் எண்ணிக்கை குறையும்போது, உங்களுடைய உடல் மற்றும் மனதில் நீங்கள் உருவாக்குகின்ற எல்லாவிதமான தேவையற்ற இரைச்சல், குழப்பங்களும் மறைந்துபோகின்றன.

உதாரணத்திற்கு, வானிலை ஆய்வுத் துறையானது, பூமித்தாய் கூறுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. அந்த வகையில், அதைக்காட்டிலும் மேலும் ஆழமான முறையில், உங்களது சுவாசம் இயற்கையாகவே, ஒரு நிமிடத்திற்கு எட்டிலிருந்து ஒன்பதாக இருந்தால், இந்த பூமித்தாய் கூறுவது என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்களது சுவாசம், ஒரு நிமிடத்தில் ஆறிலிருந்து ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்தால், அறிந்துகொள்ளத் தகுந்த அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால், ஒரு நிமிடத்திற்கான சுவாசத்தின் எண்ணிக்கை குறையும்போது, உங்களுடைய உடல் மற்றும் மனதில் நீங்கள் உருவாக்குகின்ற எல்லாவிதமான தேவையற்ற இரைச்சல், குழப்பங்களும் மறைந்துபோகின்றன. ஒவ்வொன்றும் உள்ளபடியே உங்களுக்கு முற்றிலும் தெளிவாக இருக்கிறது. ஏனென்றால், நரம்பியலின்படி, இந்த உலகத்திலேயே நீங்கள்தான் அதிகபட்ச பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமாக இருக்கிறீர்கள்.

ஒரு மனிதராக, உங்களுக்குத்தான் அதிகபட்ச நரம்பு மண்டல வளர்ச்சி இருக்கிறது. அதன் பொருள், இந்தக் கிரகத்தின் அதிகபட்ச உணர்ச்சிபூர்வமான உயிராக மனித உயிர் உள்ளது. உணர்ச்சிபூர்வமானவர் என்றால், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் உணரக்கூடிய திறனுடையவராக நீங்கள் இருக்கிறீர்கள். உணர்ச்சியுள்ளவர் என்றால், எல்லாவற்றுக்கும் நீங்கள் புண்பட்டுவிடுவீர்கள் என்பது பொருளல்ல. உணர்ச்சியுடையவர் என்றால், உணரப்பட வேண்டிய எல்லாவற்றையும் உணரும் திறனுடையவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் உணர்ச்சியுடையவராக இருந்தால், இயற்கையாகவே நீங்கள் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் நீங்கள் உணரக்கூடியவராக இருந்தால், இயல்பாகவே நீங்கள் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு யாரும் எந்த ஒரு ஒழுக்க நெறியோ, பண்பாடோ, அறிவுரையோ, ஆன்மீகமோ, அல்லது வேதமோ போதிக்க வேண்டியதில்லை.

யோகக் கிரியைகள் எப்படி உதவுகின்றன?

குறைந்தபட்சம் இந்த அளவாவது செய்யுங்கள்; இந்த உலகத்தின் இயல்பான இயக்கத்துடன் உங்கள் சுவாசத்தை ஒத்திசைவாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். இதைச் செய்தாலே, நீங்கள் மிகுந்த உணர்வுமிக்கவராகவும், அறிவுமிகுந்த மனிதராகவும் மாற்றமடைவீர்கள்.

பூமியின் மொழியோ அல்லது அதன் உயிரினங்களின் மொழியோ உங்களுக்குப் புரியவில்லையென்றாலும்கூட, குறைந்தபட்சம் அறிவுள்ள ஒருஉயிரினமாக மாறுங்கள். சக்தி சலனக்ரியா மற்றும் சூரிய க்ரியா (ஈஷா யோகா வகுப்புகளில் வழங்கப்படும் பயிற்சிகள்) போன்ற பயிற்சிகளை தினசரி அளவில் நீங்கள் செய்துவந்தாலே, அது இயல்பாகவே நிகழும். மிகக் குறைந்தபட்சம் இந்த அளவாவது செய்யுங்கள்; இந்த உலகத்தின் இயல்பான இயக்கத்துடன் உங்கள் சுவாசத்தை ஒத்திசைவாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். இதைச் செய்தாலே, நீங்கள் மிகுந்த உணர்வுமிக்கவராகவும், அறிவுமிகுந்த மனிதராகவும் மாற்றமடைவீர்கள். அதிக எண்ணிக்கையிலான அறிவுடைய மனிதர்கள் பூமியில் இப்போது அதிகம் வரவேற்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அதிமுக்கியமாகத் தேவைப்படுகிறார்கள்.

SGTAMAPPNL