மஹாபாரதம் பகுதி 47: யுத்தத்திற்கு பிந்தைய அவலம்
உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் பிள்ளைகளின் தலையை கொய்த அஸ்வத்தாமனை பழிதீர்க்கத் தேடுகிறான் அர்ஜூனன். யுத்தத்திற்கு பிறகு, போர்களமே பரவாயில்லை எனுமளவு சூழ்நிலை இன்னும் மோசமடைகிறது.
இதுவரை: கிருஷ்ணரின் குறிப்புப்படி, தனது பரம எதிரியான துரியோதனின் இடுப்பு பகுதியில் தாக்கி படுகாயம் ஏற்படுத்துகிறான் பீமன். மரணத் தருவாயில் இருக்கும் துரியோதனனை மெல்ல சாக விட்டுவிட்டு போர்க்களத்திலிருந்து கிளம்புகிறார்கள் பாண்டவர்கள். பாண்டவ சகோதரர்கள் மறுநாள் கண்விழிக்க முடியாதபடி, அன்று இரவே அவர்களை கொன்று பழிவாங்க திட்டமிடுகிறான் கௌரவர் அணியின் அஸ்வத்தாமன். ஐந்து தலைகளையும் கொய்து துரியோதனின் காலடியில் வைத்த பிறகு, அது பாண்டவர்கள் அல்ல, அவர்களின் பிள்ளைகள் என்பதை அறிந்து அதிர்கிறான் அஸ்வத்தாமன்.
பழிவாங்குதலுக்கு முடிவேயில்லை
Subscribe
கிருபாச்சாரியார் அஸ்வத்தாமனிடம் இப்படி கூறியிருந்தார், "ஒரு சத்திரியன் வீரத்தோடு திகழும் அதேநேரத்தில், அவன் தர்மத்தின் வழி நடப்பவனாகவும் இருக்க வேண்டும். துரியோதனன் தர்மத்தின்படி நடந்துகொண்ட ஒரு அரசன் அல்ல என்பதையும் நீ ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அவன் பேராசைக்காரனாகவும், வரைமுறை அற்றவனாகவும் இருந்தான். அவன் பாண்டவர்களை அவமானப்படுத்தி, ஏமாற்றி அவர்களது இராஜ்ஜியத்தையும், அவர்களிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டதோடு, 13 வருடங்கள் கண்ணிலேயே படக்கூடாது என்று கானகத்திற்குள் துரத்தினான். இருந்தபோதும், பாண்டவர்கள் கடைசி கணம் வரை அமைதியை வேண்டினார்கள். ஆனால் துரியோதனன் விட்டுக்கொடுப்பவனாக இல்லை. துரியோதனன் எப்படி கொல்லப்படுகிறான் என்பதை மட்டும் நாம் தனியாக பிரித்துப் பார்க்கக்கூடாது, அல்லது பாண்டுவின் புதல்வர்களுக்கு அவன் செய்தவற்றையும் நாம் மறந்துவிட முடியாது. துரியோதனனின் இடுப்பை பீமன் நொறுக்கியதைப் பொருத்தவரையில், அவன் அவ்வாறு சபதம் ஏற்றிருந்தான். நீ சொல்வது போல இருவருக்கும் இடையேயான நேரடி தண்டாயுத மோதலில் பீமன் அவ்விதமாக செய்திருக்கக் கூடாதுதான். ஆனால், இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நீ செய்ய நினைக்கும் அநியாயத்திற்கு சமாதானம் கூறமுடியாது." அஸ்வத்தாமன் மனதை மாற்ற தன்னால் இயன்றவரை முயற்சி செய்தாலும், கடைசியில் கிருபாச்சாரியார் அஸ்வத்தாமனுடன் சேர்ந்து அந்த கொடூர செயலில் பங்கேற்றார்.
அதிகாலையில், பெண்களின் கூக்குரல் சப்தத்தைப் பாண்டவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் தங்கள் கூடாரத்திற்கு ஓடோடி வந்த பாண்டவர்கள்
தங்கள் புதல்வர்கள் அனைவரும் உறக்கத்திலேயே கொல்லப்பட்டதை அறிகிறார்கள்.
இதற்கு முன் யாருமே இவ்வளவு தூரம் சென்றதில்லை. குழந்தைகளை விடுங்கள்,
உறங்கும் மனிதனை நீங்கள் கொல்வதில்லை. திரௌபதியை பொருத்தவரையில், போரை வென்றாயிற்று, எதிரிகள் அனைவரையும் கொன்றாகிவிட்டது, அவள்
நினைத்ததெல்லாம் நடந்திருந்தது. ஆனால் இப்போது அவளது ஐந்து புதல்வர்களும்
இறந்திருந்தார்கள். மீண்டும் ஒருமுறை, எனக்கு அஸ்வத்தாமனின் தலை வேண்டும்
என்று ஆவேச கூச்சலிட்டாள் திரௌபதி. இதை நிறைவேற்றும் சபதம் ஏற்றான்
அர்ஜுனன். பாண்டவ சகோதரர்கள் நால்வரும் அர்ஜுனனை பின் தொடர்ந்து
சென்றார்கள்.
அஸ்வத்தாமனின் ஆபரணத்தைப் பறித்தல்
அஸ்வத்தாமனை தேடிக்கொண்டு சென்ற அர்ஜுனன் அவனை கண்டுபிடிக்கிறான். அஸ்வத்தாமன் எப்போதுமே ஒரு மந்திர ஆபரணத்தை தன் நெற்றியில் சூடியிருப்பான். அதுவே அவனது சக்தியாக இருந்தது. அர்ஜுனனும் மற்ற பாண்டவர்களும் அஸ்வத்தாமனை கொல்ல முயன்றபோது ஒரு ரிஷி குறுக்கிட்டு, ஒரு பிராமணனைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது போர்க்களமும் இல்லை. இங்கே வந்து ஒரு பிராமணனைக் கொல்வது உங்களுக்கு நன்மையானதாக இருக்காது" என்றார். எனவே அர்ஜுனன் அஸ்வத்தாமன் நெற்றியில் சூடியிருந்த ஆபரணத்தை வெட்டி விடுவது என முடிவு செய்தான். ஏனெனில் சக்தி இல்லாமல் அஸ்வத்தாமன் ஒன்றுமில்லாதவன் ஆகிவிடுவான், அவனது மனதையும் முற்றிலுமாக இழந்துவிடுவான். வலுக்கட்டாயமாக அஸ்வத்தாமனின் நெற்றியிலிருந்த ஆபரணத்தை பறித்துக்கொண்டு திரௌபதிக்கு அர்ப்பணிக்க அஸ்தினாபுரம் திரும்பினார்கள் பாண்டவர்கள். பொதுவாக, ஒரு போருக்குப் பிறகு, பெரும்பாலான இடங்களில், போரைவிட மோசமான சூழலே ஏற்படும். இங்கேயும் அந்த சூழலே மெல்ல வெளிப்படத் துவங்கியது.
தொடரும்...
ஆசிரியர் குறிப்பு : ஆசிரியர் குறிப்பு: இந்த மஹாபாரதம் தொடர், கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியை ஒட்டி நிகழ்ந்த மஹாபாரதம் நிகழ்ச்சிக்காக சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெரும்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.