ஜனகர் - அரசன் ஆனால் துறவி!
ஒரு நாடாளும் அரசன் தனக்கென எந்தத் தேவைகளும் இல்லாமல் நாட்டிற்கு என்ன தேவையோ அதனைச் செய்பவனாக, அதற்கும் மேல் உண்மை உணர்ந்த ஞானியாக இருந்தால் அது அந்த நாட்டிற்கு எந்த அளவு நன்மை தருவதாக அமையும்?! இந்தப் பெருமைக்கு உரித்தானவர்தான் ஜனகர். ஜனகரின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை விளக்குகிறது இந்தப் பதிவு.

உடலுக்கு ஆபரணம், சிரசிற்கு பொன் மகுடம்
ஊருக்கு சிம்மாசனம், உள்ளத்தில் குருவாசகம்
பிறருக்கு புரிவதில்லை, உள்நிலையின் உயர்நிலை
உயிருக்கு ஒன்றுமில்லை! உள்நிலையே துறவுநிலை!
ஞானோதயம் அடைந்த ஜனகர்
உலகில் மிக உயர்ந்தது எதுவோ, எது கிடைத்தால் வேறு எதுவும் தேவையில்லையோ அதை அடைந்த பின் வேறு என்ன வேண்டும்?
குதிரையில் நின்ற நிலையில் ஞானோதயம் அடைந்த ஜனகர் குதிரையிலிருந்து இறங்கி வந்து குருவின் பாதங்களைப் பற்றிக் கொண்டார்.
“மனைவி குழந்தை அரண்மனை இவையெல்லாம் எதற்காக? இந்த அரச மகுடத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? இவையெல்லாம் முக்கியமில்லை என புரிந்த பின் எனக்கு ராஜ்ஜியம் எதற்கு? எனக்கு எதுவும் தேவையில்லை. உங்கள் பாதங்களே எனக்கு போதும். இந்த காட்டில் ஆசிரமத்தில் உங்கள் பாதங்களில் இருப்பதையே நான் விரும்புகிறேன்,” என்று கூறி குழந்தை போல கதறினார்.
ஒரு நாடாளும் அரசன் நாட்டை விட்டுவிட்டு காட்டிற்கு வருகிறேன் என்று ஞானியின் பாதங்களில் விழுந்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத அஷ்டவக்கிரர், “ஞானோதயம் அடைந்துவிட்டீர்! இனி தங்களுக்கென்று விருப்போ வெறுப்போ இல்லை. உங்களுக்கு தேவை என்பது எதுவுமில்லை. அதனால் உங்கள் தேவைகளுக்காக இனி வாழ்வை நடத்தவும் அவசியமில்லை. உங்கள் நாட்டு மக்களுக்கு ஞானோதயமடைந்த அரசர் கிடைக்கட்டும். நீங்கள் தொடர்ந்து அரசராகவே இருக்க வேண்டும்,” என்றார்.
Subscribe
உள்நிலை சார்ந்ததே ஆன்மீகம் என உணர்த்திய யோகி
குருவின் வார்த்தைகள் தன்னைக் கட்டிப் போட, வேறு வழியின்றி அரண்மனை வாசத்தை தொடர்ந்தார் ஜனகர். உள்நிலையில் முழுமையாக ஞானோதயம் அடைந்த மனிதராக வெளியுலகிற்கு திறமையாக நிர்வாகம் செய்யும் அரசராக ஜனகரின் வாழ்வு அந்நாட்டு மக்களுக்கு பெரும் வரமாய் அமைந்தது.
இதுபோன்ற நிகழ்வுகள் இந்தத் தேசத்தில் மட்டுமே நிகழ்ந்தன. நாடாளும் அரசன் அனைத்தையும் துறந்துவிட்டு அரைக் கோவணத்துடன் பிச்சைக்காரர்களாக திரிந்த வரலாறு இங்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது.
இளவரசர் சித்தார்த்தர் கௌதம புத்தராகி திருவோடு ஏந்தியதும், மஹாவீரரும் பாஹுபலியும் அரச வாழ்வை துறந்து ஆண்டிக் கோலம் பூண்டதும் இந்தப் பூமியில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.
ஆனால் ஞானோதயமடைந்த அரசர்! இது மிக மிக அபூர்வமானதொரு நிகழ்வு. ஆன்மீகம் என்பது முற்றிலும் உள்நிலை சார்ந்ததே என்பதை உணர்த்திய அபூர்வமான யோகி ஜனகரே! அரசாங்க கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆசிரமத்தில் தன் குருவைக் காண கிளம்பிவிடுவார் ஜனகர்.
குருவை சந்தேகித்த சீடர்கள்
ஒரு ஞானியின் உள்நிலை அதே நிலையில் இருப்பவருக்கு மட்டுமே புரியும். அதனைப் புரிந்துள்ள முடியாதவர்கள் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை விட்டுவிட்டு ஞானியைப் பற்றி பல கட்டுக் கதைகள் பேசத் துவங்கிவிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் நடந்தே வந்திருக்கிறது. இதற்கு அஷ்டவக்கிரர் மட்டும் என்ன விதிவிலக்கா?
அஷ்டவக்கிரரின் ஆசிரமத்தில் பல சீடர்கள் இருந்தார்கள். இவர்கள் உலக வாழ்க்கையை துறந்து சந்நியாசம் மேற்கொண்டவர்கள். உடுத்திக்கொள்ள கசங்கிய ஒரு கோவணத்தைத் தவிர தனக்கென்று வேறொன்றும் வைத்துக் கொள்ளாதவர்கள். அனைத்தையும் விட்டுவிட்டு குருவையே நாடி வந்த இந்தத் துறவிகளை விட ஜனகருக்கு தான் அஷ்டவக்கிரர் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறார். ஜனகர் வந்தால் அஷ்டவக்கிரர் தன் சீடர்களை விட்டுவிட்டு ஜனகருடனே நேரத்தை செலவிடுகிறார்.
இருவருக்குமுள்ள நெருக்கமான தொடர்பு இவர்கள் இருவர் முகத்திலும் பிரகாசத்தை ஏற்படுத்தியது. ஜனகரை கண்டவுடன் அஷ்டவக்கிரர் ஒளிர்ந்தார். தன் சீடர்களுடன் அவர் எப்போதும் இப்படி இருந்ததில்லை.
ஜனகருக்கும் அஷ்டவக்கிரருக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. துறவிகளைவிட அரசர்தான் அவருக்கு முக்கியமாகத் தெரிகிறார்! இந்த குரு ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? இப்படியாக ஆசிரமத்தில் பெரும் கதை உருவானது. பலரும் இப்படி முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆசிரமத்திலும் ஊழலோ! பொன்னும் பொருளும் அரண்மனையும் அரச மகுடமும் குருவின் பார்வையை பழுதாக்கியதோ? நம் குரு இப்படி ஒரு மனிதரிடம் விலை போய்விட்டாரே? இவரோ அரசர். ராஜபோக வாழ்வு! அரண்மனையின் ஆடம்பரம், சுற்றிலும் மனைவியர், வாரிசுகள் என இவரிடம் எல்லாம் இருக்கிறது. இவர் நடந்து வரும் விதத்தை பாருங்கள். அவர் அணிந்திருக்கும் ஆபரணங்களை கவனியுங்கள். இதில் ஆன்மீகம் எங்கே இருக்கிறது? நம் குரு இவரை ஏன் ஏறெடுத்தும் பார்க்க வேண்டும்?
“நாம் இங்கே இந்த ஆன்மீக சாதனைகளுக்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துவிட்டோம். துறவிகளாக இங்கே நாம் வந்துவிட்டோம். ஆனால் நம் குருவோ நம்மை விட்டுவிட்டு இந்த அரசர் மீதே கவனம் செலுத்துகிறாரே?” துறவிகளிடையே இப்படி ஒரு சலசலப்பு பரவிக் கொண்டிருப்பதை உணர்ந்தார் அஷ்டவக்கிரர்.
சத்சங்கத்தில் போலி நாடகத்தை அரங்கேற்றிய அஷ்டவக்கிரர்
அன்று சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது துறவிகளிடம் அஷ்டவக்கிரர் பேசிக்கொண்டிருந்தார். ஜனகரும் அங்கே இருந்தார். திடீரென ஒரு அரண்மனை வீரன் உள்ளே நுழைந்தான். ஜனகரை வணங்கி, “அரசே அரண்மனையில் தீ பற்றிக் கொண்டது. எல்லாம் எரிகிறது. நம் நாடே அங்கு அலங்கோலப்பட்டுக் கொண்டிருக்கிறது,” என்றான்.
ஜனகர் எழுந்தார். வீரனை கடுமையாக சாடினார். “இங்கிருந்து வெளியே போ! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி சத்சங்கத்தை தொந்தரவு செய்வாய். என் குருவுக்கு வணக்கம் செலுத்தாமல் எனக்கு எப்படி நீ வணக்கம் செலுத்தலாம்! முதலில் இங்கிருந்து வெளியே போ!” என்று ஜனகர் கர்ஜித்ததில் அந்த வீரன் அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.
ஜனகர் ஒன்றும் நடக்காதது போல மீண்டும் சத்சங்கத்தில் அமர்ந்தார். இந்தப் போலி நாடகத்தை அரங்கேற்றிய அஷ்டவக்கிரர் ஒன்றும் தெரியாததைப் போல சத்சங்கத்தைத் தொடர்ந்தார்.
சில நாட்கள் கழித்து இப்படியே ஒரு சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. இன்று முற்றிலும் ஒரு வித்தியாசமான நாடகத்தை அரங்கேற்ற அஷ்டவக்கிரர் முடிவு செய்திருந்தார். அனைத்து துறவிகளும் சத்சங்கத்தில் உட்கார்ந்திருந்தனர். அஷ்டவக்கிரர் பேசிக்கொண்டிருந்தார். திடீரென பதற்றத்துடன் ஒரு வேலையாள் உள்ளே நுழைந்தார். “குரங்குகள் துணிகள் உலர வைக்கும் இடத்திற்குள் நுழைந்துவிட்டன. அவைகள் துறவிகளின் உடைகளை கையில் எடுத்து கிழித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன,” என்றார்.
துறவிகள் உடனே எழுந்து தங்கள் உடைகளை குரங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடினர். குரங்குகள் தங்கள் உடைகளை கிழிப்பதற்கு முன் அதனை காப்பாற்ற வேண்டும். அனைத்தையும் விட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டாயிற்று, இருப்பதே வெறும் கோவணம் தான். இதுவும் போய்விட்டால் என்ன செய்வது? பதறி அடித்துக்கொண்டு சென்றார்கள் துறவிகள்.
துணிகளை உலர வைக்கும் இடத்திற்கு சென்றவர்கள் அங்கே அவர்கள் உலர வைத்த துணிகள் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அங்கு குரங்கு எதுவும் தென்படவில்லை. அப்போது அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. ஒரு குரு வார்த்தைகளால் மட்டுமே அனைத்தையும் புரிய வைப்பதில்லை. குருவின் இந்த நாடகத்தின் பொருளை உணர்ந்தவர்கள் தலையை கீழே தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினர்.
உண்மையை உணர்த்திய குரு
இன்னொரு நாள் சத்சங்கத்தின் நடுவே அஷ்டவக்கிரர், “இவரைப் பாருங்கள், இவர் ஒரு அரசர் சில நாட்களுக்கு முன்னர் இவரது அரண்மனையில் தீ பற்றிக்கொண்டது. நாடே அலறிக் கொண்டிருந்தது. இவரது செல்வம் நெருப்பில் சாம்பலாகிக் கொண்டிருந்தது. ஆனால் அவரோ அந்த வீரன் சத்சங்கத்தை தொந்தரவு செய்ததை பொறுக்க இயலாமல் வெடித்தார்.
நீங்களெல்லாம் துறவிகள், உங்களுக்கு அரண்மனையோ மனைவியோ குழந்தைகளோ இல்லை. உங்களிடம் ஒன்றுமில்லை. உங்கள் ஆடைகளை ஒருவரும் தரையை துடைப்பதற்கு கூட பயன்படுத்த மாட்டார்கள். அனைத்தையும் துறந்த நீங்கள் குரங்குகளின் பின்னால் வெறும் இந்த கோவணத் துணிக்காக, நான் என்ன சொல்கிறேன் என்றுகூட காது கொடுத்து கேளாமல் சத்சங்கத்தின் நடுவே ஓடினீர்கள். எங்கே இருக்கிறது உங்கள் துறவறம்?
இவர் ஒரு அரசர், ஆனால் இவரே உண்மையான துறவி. நீங்களெல்லாம் துறவிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பிறர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பொருட்களை நீங்கள் உபயோகப்படுத்துகிறீர்கள். ஆனால் உங்களிடம் துறவு இல்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என உணர வேண்டும். அப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் உணர்வீர்கள்,” என்றார். உங்களது உள்வளர்ச்சி எப்போதும் வெளியே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை சார்ந்து இருப்பதில்லை. ஒருவர் தனக்குள்ளே என்ன செய்கிறார் என்பதே மிகவும் முக்கியமானது.
இந்தச் சமூக சூழ்நிலைக்கு ஏற்றார்போல் நீங்கள் வெளியே செயல்கள் செய்துகொள்ளலாம். இதற்கு சமூகத்தில் வேண்டுமானால் முக்கியத்துவம் இருக்கலாம். உங்கள் உயிருக்கு அது முக்கியமில்லை. உங்கள் ஆன்மீகத்திற்கு அது முக்கியமில்லை. நீங்கள் உங்களுக்கு உள்ளே எப்படி இருக்கிறீர்கள் என்பதே மிகவும் முக்கியமானது.
குறிப்பு:
இந்தக் கட்டுரை சத்குருவின் "யோகாவும் யோகிகளும்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்!