மஹாபாரதம் பகுதி 73: பரீட்சித் பகையும் பழிதீர்த்த நாகர்களும்
கிருஷ்ணரும் பாண்டவர்களும் மறைந்த பின் அர்ஜுனனின் பேரப்பிள்ளையை தங்கள் அரசராகக் கொண்டு புதிய தலைமுறை ஷத்ரியர்கள் அஸ்தினாபுரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் அர்ஜுனனுக்கும் நாகர்களுக்கும் இடையேயான கடந்த கால பகையின் நிழல் அவனது சந்ததிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலமாக இப்போதும் வெளிப்படுகிறது. காலத்திற்கும் தொடரப் போகிறதா இந்த வன்முறை? பழிவாங்கும் இந்த கொடிய சுழற்சியை யார் நிறுத்தப் போகிறார்கள்? எப்போதாவது அமைதி என்ற ஒன்று நிலவுமா?

சாபம் பலிக்கிறது
சத்குரு:சத்குரு:பாண்டவர்கள் மற்றும் அவர்கள் தலைமுறையினரின் காலம் முடிந்தது. பரீட்சித் அரசனாக முடிசூட்டப்பட்டான். பரீட்சித் என்ற வார்த்தைக்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பிறப்பதற்கு முன்பே பரீட்சையை சந்தித்தவன் என்று பொருள். இறந்தே பிறந்த குழந்தை அவன். கிருஷ்ணர் தனது உயிர் ஆற்றலை அவனுக்குள் புகுத்தி உயிர் கொடுத்தார். அவன் வளர்ந்து நாடாளும் அரசனாகியிருந்தான்.
Subscribe
ஒரு நாள் வேட்டைக்கு சென்றிருந்த பரீட்சித்திற்கு கடும் தாகம் ஏற்பட்டது. காட்டிற்குள் சற்றே சீராக இருந்த ஒரு இடத்தை அடைந்தான். அங்கிருந்த ஒரு குடிசையில் ஒரு யோகி அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். பரீட்சித் அந்த யோகியிடம், "எனக்கு தாகமாக இருக்கிறது - தண்ணீர் கொடுங்கள்" என்று கேட்டான். யோகியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் வேறு ஒரு நிலையில் இருந்தார். அரசன் எரிச்சல் அடைந்தான். அரசிடம் இருந்தே வேண்டுகோள் வரும்போது நீங்கள் பதிலளிக்கத்தான் வேண்டும். சுற்றும்முற்றும் பார்த்த பரீட்சித் ஒரு இறந்த நாகத்தை கண்டான். ஒரு அம்பின் நுனியால் அதை எடுத்து யோகியின் கழுத்தை சுற்றி போட்டுவிட்டான்.
யோகியின் சீடர் ஒருவர் அப்போது அங்கே வந்தார், இந்த அவமதிப்பைக் கண்டு கடும் கோபம் கொண்டு, "இன்று என் குருவுக்கு நீ செய்த இந்த செயலுக்காக அடுத்த ஏழு நாட்களுக்குள் நாகத்தால் கடிபட்டு இறந்து போவாய்" என்று அரசனுக்கு சாபமிட்டார். பரீட்சித் பயத்தில் அதிர்ந்து போனான். அஸ்தினாபுரத்திற்கு ஓடோடி வந்து, நாகத்தால் மேலே ஏறி வரமுடியாத உயரமான தூணின் மேல் தனக்கான சிறு வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டான்.
அஸ்தினாபுர மக்கள், "நம் அரசனுக்கு என்ன ஆனது? இவன் தந்தை அபிமன்யூ ஒரு பெரும் வீரன். இவனது தாத்தா அர்ஜுனன் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மாபெரும் ஷத்ரியன். நமது அரசன் ஏன் இப்படி பயந்து போய் இவ்வளவு உயரமான தூணில் ஏறி அமர்ந்து கொண்டிருக்கிறான்? என்ன மாதிரியான மனிதன் இவன்?" என்று பலவாறாக கிசுகிசுக்கத் துவங்கினார்கள். ஆனால் ஒரு நாகத்தால் கொல்லப்படுவதை நினைத்து அவன் அஞ்சியதால், அந்த தூணின் மேலேயே ஏழு நாட்களும் அமர்ந்திருந்தான். ஏழாவது நாள் அவனது நம்பிக்கைக்குரிய பாதுகாவலர்கள் ஒரு பழத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தப் பழத்தை கடித்ததும் அதற்குள் இருந்து வெளிப்பட்ட ஒரு சிறிய நாகம் வளர்ந்து பெரிதாகி அவனது கழுத்தில் கொத்தியது. பாதுகாவலர்கள் அவனை காப்பாற்ற வரும் முன்பே நாகத்தால் கடிபட்ட பரீட்சித் இறந்தான்.
தொடரும் பழிக்குபழி
பரீட்சித்தின் மகனான ஜனமேஜெயன் தன் தந்தை ஒரு நாகத்தால் கொல்லப்பட்டதை கண்டதும் கடும் கோபம் கொண்டு தனது ஆச்சாரியர்கள் அனைவரையும் அழைத்து, "நாம் ஒரு சர்ப்ப சத்ர யக்ஞம்*1 நடத்துவோம்" என்றான். இந்த யாகத்தில், மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட, சுற்றிலும் உள்ள எல்லா நாகங்களும் தாமாகவே வந்து யாக குண்டத்தில் விழுந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும். தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கும் விதத்தில் ஒரு நாக பலியை நிகழ்த்த அவன் விரும்பினான். இது யாகம் நடத்தும் ஆச்சாரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. ஏனென்றால் அவர்களுக்கும் நாகங்கள் மீது தனிப்பட்ட ஒரு மனக்குறை இருந்தது. எனவே அவர்கள் யாகத்தைத் துவங்கினார்கள். மெதுவாக அந்த இடத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு நெருங்கி வந்த நாகங்கள் அப்படியே நெருப்புக்குள் விழுந்தன. நூற்றுக்கணக்கான நாகங்கள் தங்களையே மாய்த்துக்கொண்டன.
பிறகு அஸ்திகா என்று அழைக்கப்படும் ஒரு நாகம் அங்கிருந்த ஜனமேஜெயனிடம் வந்து, "இந்த கொடூரமான யாகத்தை நிறுத்து" என்றது. "உனது தந்தை ஆணவமாகவும் விவேகமின்றியும் நடந்து கொண்டதால்தான் தண்டனை பெற்றார். ஒரு யோகியை அவ்வாறாக நடத்தியதால் அவரது சீடனிடம் சாபம் பெற்றார். உனது முப்பாட்டனார் அர்ஜுனன் கந்தவ வனத்தை*2 அழித்து தனது நகரை உருவாக்கினார். அந்த இடத்திலிருந்த எல்லா நாகங்களையும் எரித்து, தப்ப முயன்ற நாகங்களையும் அம்புகளை எய்து கொன்றார். அதிலிருந்து தக்ஷகன் மட்டுமே தப்பியது. இத்தனை ஆண்டுகளும் குரு வம்சத்தை பழிவாங்கவே தக்ஷகன் காத்துக் கொண்டிருந்தது, இப்போது அந்த வட்டத்தை பூர்த்தி செய்துவிட்டது."
இப்போது இந்த நாகங்களை நீ எரித்தால், இன்னும் பல நாகங்கள் அனாதையாகிவிடும், அவை மீண்டும் ஒரு பழிவாங்கும் சபதத்தை எடுக்கும். இது ஒரு முடிவற்ற பழிக்கு பழி வாங்கும் படலத்தை ஏற்படுத்தும். நாம் இதை ஒரு முடிவுக்கு கொண்டுவருவோம். நான் இதை உனக்கு கூற காரணம், எனது தந்தை ஒரு மாணவா*3 எனது தாயார் ஒரு நாகம். எனவே நான் ஒரு பாகம் மனிதராகவும், மற்றொரு பாகம் நாகமாகவும் இருக்கிறேன். தயவுசெய்து என்னை நம்பு, நான் தர்மத்தையே பேசுகிறேன்.
ஜனமேஜெயன், "எனது முப்பாட்டனாரைப் பற்றி இது என்ன புது கதை சொல்கிறாய்? இது எப்படி உனக்கு தெரியும்?" என்று கேட்டான். அஸ்திகா, "நாம் வேண்டுமானால் வைஷம்பாயனரை அழைப்போம். இந்த கதையை உனக்கு சொல்வதற்கு சிறந்தவர் அவர் தான்" என்றது. எனவே அவர்கள் வைஷம்பாயன முனிவரை அழைத்து வந்தார்கள். வியாச முனிவரின் சீடரான வைஷம்பாயனர் மஹாபாரத கதையை வியாசரிடமிருந்து முதன்முதலில் கேட்டவர். ஜனமேஜெயனுக்கு வைஷம்பாயன முனிவர் மஹாபாரத கதையை கூறினார். இதுதான் இன்று நாம் கேட்கும் மஹாபாரதக் கதை என்று கூறுகிறார்கள். வியாசர் எழுதிய மஹாபாரதத்தின் உண்மையான வடிவம் காணாமல் போய்விட்டது, ஏனென்றால் அது அவ்வளவு அற்புதமானதாக இருந்ததால் கடவுள்கள் அதன் மீது காதல் கொண்டு திருடி சென்றார்கள் என்று கூறுகிறார்கள்.
இறுதி பாடம்
யாகம் கைவிடப்பட்டது, "நான் யாகத்தை நிறுத்தி நாகங்களை அழிவிலிருந்து காப்பாற்றினேன்" என்று அஸ்திகா மிகவும் பெருமிதமடைந்தது. அப்போது சரமா என்று அழைக்கப்படும் ஒரு நாய் அங்கே வந்து, "இந்த யாகத்தை அஸ்திகா நிறுத்தவில்லை. இந்த யாகம் துவங்கியபோது ஜனமேஜெயனும் அவனது புதல்வர்களும் யாகத்தில் அர்ப்பணிக்க வைத்திருந்த புனிதமான பொருட்களை அசுத்தம் செய்ததாக எனது குழந்தைகளின் மீது தேவையற்ற குற்றம் சாட்டி கற்களை வீசி தாக்கினார்கள். அதனால், இந்த நாக பலி வெற்றியடையக் கூடாது என்று நான் ஜனமேஜெயனுக்கு சாபமிட்டேன். அதனால் தான் யாகம் கைவிடப்பட்டது" என்றது
உங்களுக்கான இறுதிப் பாடமும் அதுவே: உங்களைப் பற்றி நீங்களே பெரிதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். இந்த நாடகத்தில் நமக்கென்று ஒரு சிறு பங்கு உள்ளது, அது மிகச் சிறிய பங்கு தான். வாழ்க்கையில் இன்னும் பல்வேறு அம்சங்கள், நாம் இப்போது யாராக, என்னவாக இருக்கிறோம் என்பதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
**சர்ப்ப சத்ர யக்ஞம்: ஒரு குறிப்பிட்ட வகையான சடங்கு
**கந்தவ வனம்: நாகங்கள் வாழ்ந்த வனம்
**மாணவா: மனிதன்
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.