சத்குரு:

தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன் கிருஷ்ணர் தன் வாழ்நாள் முழுவதையும் கழித்தார். பல விஷயங்கள் அவர் நினைத்தபடி நடந்தன, ஓரளவிற்கு அவர் விரும்பியதை உருவாக்கவும் செய்தார். ஆனால், பல விஷயங்கள் அவர் விரும்பியபடி நடக்கவில்லை; மக்கள், தர்மத்தை அவரவர் சொந்த கருத்துக்களுக்கு ஏற்ப விளக்கவும், தவறாகப் புரிந்துகொள்ளவும் துவங்கினர்.

"என் சுயதர்மம் என்று வரும்போது, எனக்குள் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நூறு சதவீதம் தெளிவோடு இருக்கிறேன்" என்று கிருஷ்ணர் கூறினார்.

கிருஷ்ணரின் வாழ்க்கையில் பலர் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். திரௌபதியின் திருமணத்தின் போது, அவர் ஐந்து பாண்டவ சகோதரர்களையும் திருமணம் செய்துகொள்வதை உறுதி செய்ய கிருஷ்ணர் அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். அப்போது திரௌபதி, 'உங்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியுமா?' என்று அவரிடம் கேள்வி எழுப்பினார். மற்றும் பீமனிடம் கிருஷ்ணர், 'அஸ்தினாபுரத்தை துரியோதனனிடமே விட்டுவிடு. நாம் ஒரு புதிய நகரத்தை உருவாக்குவோம்' என்று சொன்னபோது, பீமன், 'நீ ஒரு துரோகி. நான் துரியோதனனை கொல்ல விரும்புகிறேன். ஆனால் நீயோ இந்த ராஜ்ஜியத்தை அவனிடமே விட்டுவிட்டு, வேறு எங்கோ போய் ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய ராஜ்ஜியத்தை உருவாக்கச் சொல்கிறாய்? தர்மத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்டான்.

இதே போன்ற கேள்விகள் அர்ஜுனனிடமிருந்தும் இன்னும் பலரிடமிருந்தும் வந்தன. அவரை சுற்றியிருந்த மக்கள் கிருஷ்ணரிடம், 'உண்மையிலேயே உனக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியுமா?' என்று கேள்வி எழுப்பினார்கள். அவர் அளித்த தனிப்பட்ட, விரிவான பதில்களுக்குள் நாம் செல்லப் போவதில்லை; ஆனால் பொதுவாக கிருஷ்ணர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: 'தற்போதுள்ள சூழலில், செயல் என்று வரும்போது எனக்கே கூட தர்மம் எதுவென்று தெரியாது. ஏனென்றால், செயல் என்பது அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தது. வெளிசூழ்நிலையைப் பொறுத்தவரை நாம் அதை எப்படி மதிப்பிட்டாலும், அது தர்மத்தின் அளவுகோலில் இருந்து சற்றே விலகியிருக்க வாய்ப்புண்டு. ஆனால், என் சுயதர்மம் என்று வரும்போது, எனக்குள் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நூறு சதவீதம் தெளிவோடு இருக்கிறேன்'.

சுயதர்மம் மற்றும் தர்மம்

எந்தவொரு புத்திசாலியான மனிதனும் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் நூறு சதவீதம் தெளிவோடு இருப்பதில்லை; அவன் எப்போதும் அதன் நன்மை, தீமைகளை எடை போட்டுப் பார்க்கிறான். ஒரு முட்டாள் அல்லது வெறியுடன் இருக்கும் ஒருவன் மட்டுமே நூறு சதவீதம் தெளிவோடு இருக்கிறான். நாம் செய்யும் அனைத்தும் - இங்கு நாம் வாழ்வது, உண்பது, சுவாசிப்பது என நாம் செய்யும் அனைத்தும், மற்ற உயிரினங்களின் பார்வையில் பார்த்தால் அவற்றுக்கு இழைக்கப்படும் அநீதி தான். நீங்கள் சாப்பிட்டால், ஏதோ ஓர் உயிரைக் கொல்கிறீர்கள். நீங்கள் சுவாசித்தால், கிருமிகளைக் கொல்கிறீர்கள். நீங்கள் நடந்தால் கூட, உங்கள் காலடியில் உயிர்களைக் கொல்கிறீர்கள். இவை எதையும் செய்ய விரும்பாமல் உங்களை நீங்களே மாய்த்துக்கொண்டாலும், அங்கேயும் ஒரு கொலையை தான் செய்கிறீர்கள். எனவே, உலகில் எந்த ஒரு செயலும் நூறு சதவீதம் சரியானது அல்லது நூறு சதவீதம் தவறானது என்று இருக்க முடியாது. பெரும்பாலான மக்களுக்கு உங்கள் செயல்களின் மூலம் நன்மை உருவாக்க முடியும் என்றால், அதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நீங்கள் செயல்பட வேண்டும்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தர்மம் என்பது நீங்கள் உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. நீங்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் தன்மையில் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் அந்தந்த சூழலுக்கும் ஏற்ப நீங்கள் செயல்படுவீர்கள்

தர்மம் என்பது நீங்கள் உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது தான். நீங்கள் அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் தன்மையில் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் அந்த சூழ்நிலைக்கும் ஏற்ப செயல்படுவீர்கள். ஆனால், நீங்கள் அந்த இணைத்துக்கொள்ளும் தன்மையில் இல்லாமல், 'நீயா நானா' என்ற போட்டியில் இருந்தால், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் தவறானது தான். உங்களால் எதையுமே சரியாக செய்ய முடியாது; ஏனெனில், நீங்கள் உங்கள் தன்மையை 'நீயா நானா' என்று பிரித்து வைத்துள்ளதால், நீங்கள் இங்கு இருக்கும் விதமே தவறாகிப் போகிறது.

கிருஷ்ணரின் முழு வாழ்க்கையுமே இதற்கான ஒரு சான்று தான்: 'நீ மற்றும் நான்' என்பது அவர் வாழ்க்கையில் இருக்கவில்லை; 'நானும் நானும்' அல்லது 'நீயும் நீயும்' என்ற நிலையில் தான் இருந்தது. அவர் கோபிகைகளுடன் இருந்தபோதும் சரி, ஒரு ராஜ தந்திரியாக செயல்பட்டபோதும் சரி, அல்லது கீதையை உபதேசித்தபோதும் சரி - அவருடைய செய்தி எப்போதும் ஒன்று தான்: அது 'அனைத்தையும் இணைத்துக்கொண்ட நிலை.' 'நானும் நானும்' (எல்லாம் ஒன்றே) என்ற நிலை மட்டும் இருந்துவிட்டால், அப்போது செயல் என்பது சூழ்நிலை மற்றும் நாம் எடுக்கும் முடிவை சார்ந்த விஷயமாகிவிடுகிறது. 100% சரி அல்லது 100% தவறு என்று எந்த ஒரு செயலும் இருக்க முடியாது. ஆனால், கிருஷ்ணர் எப்போதும் வலியுறுத்தியது போலவும், நான் எப்போதும் 'சுயதர்மம்' குறித்து வலியுறுத்துவது போலவும் - உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் 100% தெளிவுடன் இருக்க முடியும்.

தர்மமும் அசுரனின் குழந்தையும்

ஒருமுறை கிருஷ்ணர் குழுவாக இருந்த மக்களை சந்தித்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் 'தர்மம்' எதுவென்று கருதினார்களோ அதை அவரிடம் சொன்னார்கள். கிருஷ்ணர் தான் மேற்கொண்ட நோக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏமாற்றம் அடைந்தபோது, அவரது வாழ்வின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அது அவரின் தனிப்பட்ட ஏமாற்றம் அல்ல. அவர் தன்னைப் பற்றியோ அல்லது தனக்கு சம்பந்தமான விஷயங்கள் பற்றியோ ஏமாற்றமடையக் கூடியவர் அல்ல. ஒரு லட்சியம் நிறைவேறாததைக் குறித்த ஏமாற்றம் அது. மக்கள் தார்மீகமாக நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில் அவ்வாறு நிற்கவில்லை என்பதை கண்ட அவர், "நீங்கள் அனைவரும் எந்த தர்மத்தின் பக்கம் நிற்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போது ஒரு செல்வந்தர் வந்தார். அவர் பணத்தை சேர்த்து குவிப்பதற்காக எதையும் செய்யக்கூடிய ஒரு கஞ்சன். அவர் சொன்னார், "நான் கற்றறிந்த பிராமணர்களிடம் இருந்தும் இறைவனிடம் இருந்தும் தர்மத்தை விலைக்கு வாங்குகிறேன். நான் என் குடும்பத்திற்கு உணவளிக்கிறேன், கோவிலில் வழிபடுகிறேன், இதுவே என் தர்மம்." கிருஷ்ணர் அவரிடம், "உன் தர்மம் பேராசையின் குழந்தை. எனக்கு உன்னைத் தெரியாது," என்று கூறி அவரைக் கடந்து செல்ல அனுமதித்தார்.

புனித சின்னங்களின் அடையாளங்களை அணிந்த ஒரு மனிதன் வந்து சொன்னான், "நான் பக்தியுள்ளவன். பாவத்தின் வழிகளிலிருந்து நான் விலகி வாழ்கிறேன். நான் ஒருபோதும் யாரையும் கொன்றதோ, திருடியதோ அல்லது வேறு எந்தப் பாவ செயலையும் செய்ததோ இல்லை. நான் ஒழுக்கமான வழியில் வாழ்ந்திருக்கிறேன். நான் கடவுளுக்கு பயந்தவன்." அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் பயத்தின் குழந்தை. உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

ஒரு போர்வீரன் கிருஷ்ணரை அணுகி, "எனது தர்மத்தை நான் அறிவேன். என்னை எதிர்த்தவர்கள் மற்றும் என் எதிரிகள் அனைவரையும் நான் அழித்துவிட்டேன். தேவர்களை மகிழ்விக்க நான் யாகங்களை செய்கிறேன், ஏழைகளுக்கு தானம் வழங்குகிறேன், என் வெற்றியை உலகிற்கு பறைசாற்றுகிறேன். நான் பிராமணர்களுக்கு உணவளிக்கிறேன், அவர்களால் என் புகழ் பாடப்படுகிறது" என்றான்.

அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் கர்வத்தின் குழந்தை. உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

அமைதியான மற்றும் பணிவான தோற்றம் கொண்ட ஒருவர் கிருஷ்ணரிடம் வந்து சொன்னார், "நான் மிகவும் சாந்தமானவன், எதற்கும் அடங்கிப் போகிறவன். நான் பணிவின் உருவம். எதையும் எதிர்க்காமல், எனக்கு ஏற்படும் துயரங்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். பசி, தாகம், குளிர் மற்றும் துரதிர்ஷ்டத்தையும் கூட நான் பொறுத்துக் கொள்கிறேன்." அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் அடிமைத்தனமான மனதின் குழந்தை. உனக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை நீ அறியவில்லை. உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

தந்திரமான உருவ அமைப்போடு இருந்த ஒரு மனிதன் கிருஷ்ணரிடம் வந்து சொன்னான், "நான் ஆபத்தான செயல்களில் இருந்தும், சிங்கத்தின் குகைகளில் இருந்தும் விலகியே இருக்கிறேன். நான் பாதுகாப்பான பாதையிலேயே நடக்கிறேன், இதன் மூலம் இறைவனின் கோபத்திலிருந்து தப்பிக்கிறேன்; இதனால் எனக்கு அமைதி கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்." அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் கோழைத்தனத்தின் குழந்தை. உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

தன்னம்பிக்கை அதிகம் கொண்ட, அதேசமயம் அகந்தை நிறைந்த தோற்றம் கொண்ட ஒருவர் கிருஷ்ணரிடம் வந்து சொன்னார், "வாழ்க்கையின் வலைகளிலிருந்து தப்பிக்கவும், உடல்ரீதியான ஆசைகளை அடக்கவும், என்னுள்ளும் மற்றவர்களிடமும் இருக்கும் மானிட பலவீனங்களை நான் வெறுத்து ஒதுக்குகிறேன். உறுதியான பற்றற்ற தன்மையில், எவருடனும் தொடர்புகொள்ளாமல் நான் தனியாகவே வாழ்கிறேன். நான் எனக்குள்ளேயே முழுமை அடைந்தவன். எனக்கு யாரும் தேவையில்லை, எதுவும் தேவையில்லை." அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் அகந்தையின் தர்மம். உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

ஒரு வியாபாரி வந்து சொன்னார், "நான் ஏழைகளுக்கு தானம் கொடுப்பதன் மூலம் கடவுளுக்கே கடன் கொடுக்கிறேன். எந்த கணக்கும் விடுபட்டுப் போகாமல் இருக்க கணக்கு புத்தகத்தையும் பராமரித்து வருகிறேன். என் தர்மத்தின் மூலம் நான் மேன்மையை அடைவேன்." அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் வியாபாரத்தின் குழந்தை. உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

துறவியின் தோற்றம் கொண்ட ஒருவர் கிருஷ்ணரிடம் வந்து சொன்னார், "என்னுடையது ஞானத்தின் தர்மம். நான் மகான்களின் சொற்களின் படி வாழ்கிறேன். தீமையை எதிர்க்காமல், மௌனமாக துயரங்களை சகித்துக் கொண்டால், இறைவனின் ராஜ்ஜியத்தை அடையலாம்." அதற்கு கிருஷ்ணர், "உன்னுடைய தர்மம் செயலற்ற தன்மையின் குழந்தை. உன்னை எனக்குத் தெரியாது," என்று கூறி அவனையும் கடந்து செல்ல அனுமதித்தார்.

பட்டுத் துணிகளை அணிந்து, எண்ணெயிட்டு மின்னும் தலைமுடியுடன் கூடிய ஒரு மனிதன் வந்து சொன்னான், "தர்மம் என்பது ஒரு மாயை. நான் உண்கிறேன், மது அருந்துகிறேன், சிற்றின்பத்தில் திளைக்கிறேன். என் உடல் மட்டுமே என் ஆலயம். உடல் தரும் இன்பங்களே நான் செய்யும் வழிபாட்டு சடங்குகள். இதை தாண்டி வேறு எதுவும் இல்லை." அதற்கு கிருஷ்ணர், "நீ அசுரனின் குழந்தை. நீ ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டாய்," என்று கூறி, அவனிடம் இருந்து முகத்தை திருப்பிக் கொண்டு நின்றார்.

இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால், ஒருவர் தன் உடல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே அவரை ஈடுபடுத்திக் கொண்டால், அவருக்கு வழியே இல்லை. ஒருவரிடம் பயம், பேராசை, கோபம், கவலை, கோழைத்தனம், அகந்தை மற்றும் பல பலவீனங்கள் இருக்கலாம்; ஆனால் அவர் இந்த உடல் கடந்த ஏதோ ஒன்றிற்காக ஏங்குகிறார் என்றால், அவருக்கு ஒரு வழி உண்டு.

குறிப்பு:

மஹாபாரத கதைகள் பக்கத்தில் மேலும் பல கதைகளைக் காண்க.