சத்குரு: குந்தி போஜனின் வளர்ப்பு மகளான குந்தியையும், மாதரா இளவரசி மாத்ரியையும் பாண்டு திருமணம் செய்துகொள்கிறான். ஒருநாள் வேட்டையாட சென்ற பாண்டு, மான் ஜோடி ஒன்று கூடியிருப்பதை பார்க்கிறான். கவனமற்ற இந்நிலையில் இருக்கும் மான்கள் வேட்டையாடுவதற்கு எளிதானது என்று அம்பெய்கிறான். சிறந்த வில்வித்தை வீரனான பாண்டு நினைத்து எய்ததைப் போலவே ஒரே அம்பு இரு மான்களையும் துளைத்து வீழ்த்துகிறது. படுகாயமடைந்து விழுந்த மான் வடிவில் உண்மையில் இருந்தது ஒரு முனிவர். மான் வடிவை எடுத்திருந்த முனிவர் இறக்கும் தருவாயில், "கர்ப்பமாக இருக்கும் ஒரு மிருகத்தையோ அல்லது கூடலில் இருக்கும் மிருகத்தையோ கொல்லக்கூடாது என்பது வேட்டைக்காரர்களின் தர்மம். அடுத்த தலைமுறை உருவாவதை தடுத்து நிறுத்தும்படியான இச்செயலை வேடுவ தர்மத்தை மீறி நீ செய்தது குற்றம். இதனால் நீ எப்போது எந்தவிதமான ஆசையுடன் உன் மனைவியை தொட்டாலும் அப்போதே உனக்கு கொடுமையான மரணம் நிகழும்" என்று சாபமிட்டார். பாண்டுவிற்கு இரு மனைவியர் இருந்தபோதும் இன்னும் வாரிசு ஏற்பட்டிருக்கவில்லை. சாபத்தால் அவர்களை நெருங்க முடியாத நிலையில் பாண்டு இருந்தான்.

கர்ப்பமாக இருக்கும் ஒரு மிருகத்தையோ அல்லது கூடலில் இருக்கும் மிருகத்தையோ கொல்லக்கூடாது என்பது வேட்டைக்காரர்களின் தர்மம்

ஒரு தேசத்தின் எதிர்காலத்திற்கும் சரி, அரசனுக்கும் சரி, குழந்தை இல்லை என்பது ஒரு பெரும் பிரச்சினை. அடுத்து அரசாள்வது யார்? அடுத்ததாக அரியணையில் அமர வலுவான இளவரசன் இல்லை என்பதை பார்த்த கணமே, யாருக்குள் வேண்டுமானாலும் ஆசை முளைத்துவிடும். இது அரசியல் ரீதியாகவும் பிரச்சனை.

முந்தைய தலைமுறையில் ஏற்பட்டது போலவே இப்போதும் குரு வம்சம் வாரிசு இல்லாமல் நின்றது. மிகவும் மனம் நொந்த பாண்டு, தனது ஆட்சி அதிகாரம் எல்லாவற்றையும் துறந்து, தனது மனைவியருடன் கானகம் சென்று வாழ துவங்கினான். அங்கிருந்த முனிவர்களுடன் அளவளாவி, தான் ஒரு அரசன் என்பதையே மறந்துவிட முயற்சி செய்துகொண்டு இருந்தாலும், உள்ளுக்குள் ஆழமாக பதிந்திருந்த ஏமாற்ற உணர்வு வளர்ந்துகொண்டே இருந்தது. ஒருநாள் வேதனை தாளாமல் குந்தியிடம், "நான் என்ன செய்வது? என்னை நானே கொன்றுவிட நினைக்கிறேன். உங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காமல் போனால் குரு வம்சம் அழிந்துவிடும். திருதராஷ்டிரனுக்கும் குழந்தைகள் இல்லை. பெயரளவில் தான் அவன் அரசனாக இருக்கிறான். பார்வை இல்லாததால் எப்படியும் அவனது குழந்தைகள் அரசனாகவும் கூடாது," என தன் வேதனையை கொட்டினான்.

பாண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு செல்லவே குந்தி தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். "ஒரு வாய்ப்பு இருக்கிறது" என்கிறாள் குந்தி. "என்ன அது?" "நான் சிறுமியாக இருந்தபோது, துர்வாச முனிவர் ஒருமுறை என் தந்தையை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு தேவையான பணிவிடைகளை நான் கவனித்துக்கொண்டேன். அப்போது என் பணிவிடையை பாராட்டி அவர் ஒரு மந்திரத்தை எனக்கு பரிசளித்தார். இந்த மந்திரத்தை நான் எந்த கடவுளை நோக்கி பயன்படுத்துகிறேனோ அவரது குழந்தைக்கு நான் தாயாக முடியும் என்றார். நீங்கள் விரும்பினால், உங்களுக்காக நான் இந்த மந்திரத்தை பயன்படுத்துகிறேன்" என்றாள். தான் ஏற்கனவே ஒருமுறை இந்த மந்திரத்தை பயன்படுத்தியதைப் பற்றி அப்போது வெளிப்படுத்திக் கொள்ளவில்லை குந்தி. பாண்டு ஆர்வமானான். "தயவுசெய்து மந்திரத்தை நீ பயன்படுத்து. யாரை அழைக்கலாம்?" என்றான் இருவரும் சற்று யோசித்தார்கள். பிறகு பாண்டு, "நாம் தர்மரை அழைப்போம். தர்மரின் பிள்ளையை நாம் குரு வம்சத்தின் அரசனாக்க வேண்டும்," என்றான். தர்மனின்‌ இன்னொரு பெயர் யமன். இறப்பிற்கும், நீதிக்கும் அதிபதி இவர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யுதிஷ்டிரன், பீமனின் பிறப்பு

கானகம் சென்று குந்தி தர்மராஜனை நோக்கி மந்திரத்தை பயன்படுத்தியதும் தர்மராஜன் வருகிறார். குந்தி ஈன்ற ஆண் மகன் யுதிஷ்டிரன் என்ற பெயருடன் பாண்டுவின் முதல் பிள்ளையாகிறான். ஒரு வருடம் கழிகிறது, பாண்டு மீண்டும் ஆசையுடன் குந்தியிடம்‌, "நமக்கு இன்னொரு குழந்தை வேண்டும்" என்கிறான்‌. குந்தி, "முடியாது, நமக்கு ஒரு பிள்ளை இருக்கிறான், குரு வம்சத்திற்கு வாரிசு ஏற்பட்டுவிட்டது, இது போதும்" என்றாள். பாண்டு கெஞ்ச துவங்கினான், "ஒரே ஒரு பிள்ளை இருந்தால் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள், தயவுசெய்து இன்னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்" "அப்படியானால் யார் தந்தையாக இருக்கலாம்?" பாண்டு, "நம்மிடம் ஏற்கனவே தர்மன் இருக்கிறான், ஆனால் நமக்கு வலிமையும் வேண்டும். எனவே காற்றின் அதிபதியான வாயுவை அழைப்போம்" காட்டிற்குள் சென்று குந்தி வாயுவை அழைத்தாள். வாயுவும் வந்தார். மிகவும் தீவிரமாக வாயுவின் இருப்பு இருந்ததால் அவர்களால் அதே இடத்தில் இருக்க முடியவில்லை. அங்கிருந்து குந்தியை தூக்கிக்கொண்டு சென்றது காற்று.

போர்வீரன் என்பதை குறிக்கும் வகையில் அர்ஜுனனை மஹாபாரதத்தில் ஷத்ரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதி மஹாபாரதத்தில் அழகாக, விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மலைகளை கடந்து, பிறகு சமுத்திரங்களை கடந்து ஷீரசாகரத்தை அவர்கள் அடைந்தார்கள். ஷீர சாகரம் என்றால் "பால் கடல்" - மில்கி வே என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பால் வெளி மண்டலம். அங்கிருந்து இந்த பூமி உருண்டையாக கோள வடிவில் இருப்பதை காட்டுகிறார் வாயு. பாரத தேசத்தில் பகல் பொழுதாக இருக்கும்போது, பூமியின் இன்னொரு பகுதியில் இரவாக இருப்பதையும், அங்கே பகல் புலரும்போது இங்கே பாரதத்தில் இரவு கவிவதையும் விளக்குகிறார். மேலும், பூமிப்பந்தின் மறுபக்கத்தில் வாழ்ந்த அந்த மக்களின் வாழ்க்கை, பெரும் நாகரீகம், அவர்களின் திறன் மற்றும் வல்லமை பற்றியும் கூறுகிறார் வாயு. பெரும் முனிவர்களும், ஞானிகளும், வீரர்களும் அந்த மண்ணில் வாழ்வதையும் விளக்குகிறார்‌. குந்தி இன்னொரு குழந்தையை ஈன்றாள். வாயுவின் பிள்ளையான பீமன் வளரும்போதே உலகின் பலசாலியான மனிதன் என மக்கள் அழைக்க துவங்கினர்.

அர்ஜுனனின் பிறப்பு

சில நாட்களுக்கு பிறகு, பாண்டு, "நான் பேராசைப்படுகிறேன் என்பது தெரிகிறது, ஆனால் இப்படிப்பட்ட இரு பிள்ளைகளை பார்த்த பிறகும் என்னால் எப்படி ஆசையை தவிர்க்க முடியும்? எனக்கு இன்னொரு மகன் வேண்டும் -இன்னும் ஒரேயொரு பிள்ளை" என்றான். குந்தி முடியாது என மறுத்தாள். நாட்கள் கடந்தது. ஆனால் பாண்டு விடுவதாக இல்லை. ஒருவழியாக குந்தி, "சரி, யார்?" என்றாள். "தேவர்களின் அதிபதியான இந்திரனை நாம் வரவழைப்போம் -அதைவிடக் குறைவானவர் யாரும் வேண்டாம்" என்றான் பாண்டு. இந்திரனை வேண்டிய குந்திக்கு மாபெரும் வில்லாளியும், மாவீரனுமான அர்ஜுனன் பிறந்தான். போர்வீரன் என்பதை குறிக்கும் வகையில் அர்ஜுனனை மஹாபாரதத்தில் ஷத்ரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனனுக்கு முன்பும் இப்படிப்பட்ட வீரன் பிறக்கவில்லை, இனிமேலும் அப்படி யாரும் வரப்போவதில்லை.

மாத்ரியின் பொறாமை

தெய்வீக அம்சம் நிறைந்த மூன்று குழந்தைகளும் அற்புதமான திறனும், செயல் வல்லமையும், புத்திசாலித்தனமும் மிளிர வளர துவங்கினார்கள். எல்லோருடைய கவனமும் குழந்தைகள் மூவர் மீதும், அவர்களின் தாயார் குந்தி மீதுமே இயல்பாக சென்றது. பாண்டுவின் இன்னொரு இளைய மனைவியான மாத்ரியினுள், தனக்கென ஒருவனை கணவன் என்றோ, பிள்ளை என்றோ அழைக்க முடியவில்லையே என உருவான ஏக்கம் பொறாமையாக மாறத் துவங்கியது. தான் திருமணம் செய்தபோது இருந்த இனிமையானவளாக மாத்ரி இப்போது இல்லை என்பதை ஒருநாள் பாண்டு கவனிக்கிறான் - மாத்ரியின் முகமே விஷத்தை உமிழ்வது போல் மாறியிருந்தது. "என்ன ஆனது? நீ மகிழ்ச்சியாக இல்லையா?" என்று கேட்டான் பாண்டு. "இங்கே நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். இங்கே எல்லாமே உங்களை, உங்கள் மூன்று பிள்ளைகளை, உங்களின் இன்னொரு மனைவி குந்தியை சுற்றி மட்டும்தானே நடக்கிறது. எனக்கென்று என்ன இருக்கிறது?" என்றாள் மாத்ரி. சற்று நேரம் நீடித்த வாதம் விவாதமான நேரத்தில் மாத்ரி, "எனக்கு குந்தியிடம் அந்த மந்திரத்தை கற்றுக்கொடுக்க பேசுங்கள். எனக்கும் பிள்ளைகள் பிறப்பார்கள். என் மீதும் உங்கள் கவனம் இருக்கும். இல்லையென்றால் நானும் உங்களோடு ஒட்டிக்கொண்டு இருந்தேன் என்பதாகவே என் வாழ்க்கை முடிந்துவிடும்" என்றாள்.

தனக்கென ஒருவனை கணவன் என்றோ, பிள்ளை என்றோ அழைக்க முடியவில்லையே என உருவான ஏக்கம் பொறாமையாக மாறத் துவங்கியது.

மாத்ரியின் நிலையை உணர்ந்த பாண்டு குந்தியிடம் சென்று, "மாத்ரி குழந்தை வேண்டும் என்கிறாள்" என்றான். "ஏன்? என் பிள்ளைகள் அவளுக்கும் பிள்ளைகள்தானே" என்றாள் குந்தி. "இல்லை, தானும் தாயாக விரும்புகிறாள். நீ மந்திரத்தை அவளுக்குக் கற்றுத்தர முடியுமா?" என்றான் பாண்டு. "என்னால் மந்திரத்தை கற்றுத்தர முடியாது. தேவையானால் மந்திரத்தை நான் உச்சரிக்கிறேன், மாத்ரி எந்த கடவுளையும் வேண்டி கொள்ளட்டும்" என்றாள் மாத்ரியை கானகத்தின் உள்ளே ஒரு குகைக்கு அழைத்துச்சென்ற குந்தி, "நான் மந்திரத்தை உச்சரிக்கிறேன், நீ எந்த கடவுளை வேண்டுமானாலும் வேண்டிக்கொள்" என்றாள். "நான் யாரை‌ வேண்டுவது? யாரை அழைப்பது?" என்று குழம்பினாள் இளம்பெண்ணான மாத்ரி. அஸ்வினி சகோதரர்கள் இருவரை நினைத்தாள். இவர்கள் கடவுள் இல்லை. உபதேவதை என அழைக்கப்படும் சிறு தெய்வங்கள். அஸ்வ என்றால் குதிரை- இவர்கள் இருவரும் குதிரை சம்பந்தமான நுணுக்கங்களில் வல்லவர்களாக, அரச குலத்தினரால் வணங்கப்படுபவர்களாக இருந்தார்கள். இந்த அஸ்வினி சகோதரர்கள் மூலமாக நகுல - சகாதேவ இரட்டையர்களுக்கு தாயானாள் மாத்ரி.

பஞ்ச பாண்டவர்கள்

எனவே, குந்திக்கு மூன்று பிள்ளைகள் - யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரண்டு பிள்ளைகள் - நகுலன், சகாதேவன் என பாண்டுவின் பிள்ளைகள் ஐவர் ஆனார்கள். ஆனால் பாண்டு இன்னும் நிறைய குழந்தைகள் வேண்டும் என விரும்பினான். ஒரு அரசனுக்கு பிள்ளைகளே பலம். எப்போது வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்ற நிலையால், எப்போது வேண்டுமானாலும் எண்ணிக்கை குறையலாம். எனவே, போரில் வெற்றி பெற வேண்டியிருந்தாலும், இருக்கும் ராஜ்ஜியத்தை ஆள்வதாக இருந்தாலும், எவ்வளவு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது முக்கியமாகிறது‌. ஆனால், குந்தி மறுத்தாள். "போதும், இதற்குமேல் எனக்கு குழந்தைகள் வேண்டாம்" என்றாள் குந்தி. பாண்டு கெஞ்சினான். பிறகு, "சரி, உனக்கு விருப்பம் இல்லை என்றால், மந்திரத்தை மாத்ரி பயன்படுத்தி கொள்ளட்டுமே" என்றான். "இந்த பேச்சே இனி வேண்டாம்" என்றாள் குந்தி. ஏனென்றால், அரசனின் மனைவிகளில் யாருக்கு அதிகமான ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களோ அவரே அரசியாக மதிக்கப்படுவாள். குந்திக்கு மூன்று பிள்ளைகள், மாத்ரிக்கு இரண்டு பிள்ளைகள். தன்னிடம் இருக்கும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை குந்தி. எனவே, "இவர்களே போதும். நாம் இனிமேல் மந்திரத்தை பயன்படுத்தப்போவதில்லை" என்று முடித்தாள்.

பாண்டுவின் பிள்ளைகளை பாண்டவர்கள் என குறிப்பிட துவங்கினர். சகோதரர்கள் ஐவர் என்பதை குறிக்கும் வகையில் பஞ்ச பாண்டவர்கள் என பெயர் பெற்று வளர்ந்தனர்.

பாண்டுவின் பிள்ளைகளை பாண்டவர்கள் என குறிப்பிட துவங்கினர். சகோதரர்கள் ஐவர் என்பதை குறிக்கும் வகையில் பஞ்ச பாண்டவர்கள் என பெயர் பெற்று வளர்ந்தனர். அரசனின் குழந்தைகளாக, அரச வம்சத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காட்டிலேயே பிறந்து சுமார் 15 வருடங்கள் காட்டிலேயே வளர்ந்தனர்.

தொடரும்...