கைலாஷ் யாத்திரை அனுபவத்தை விவரிக்கத் துவங்கும் இந்த முதல் வாரப்பகுதியில், பஞ்ச பாண்டவர்கள் தங்களது பாவத்தைப் போக்க சிவனைத் தேடியலைந்த அந்த புராணமும், அதனால் உண்டான புனிதத் தலங்கள் பற்றியும் கூறியிருப்பது மிக சுவாரஸ்யம். படியுங்கள்...

கைலாஷ் யாத்ரா - பகுதி 1

டாக்டர்.ராதா மாதவி:

பரவசமான நாள் அது!

மண்ணை மீட்டும் மழை போல, மனதை மீட்டும் இசைபோல, இயற்கை விரிந்து கிடக்கிறது இமயமலையாக!

சூரியச் சுடரொளியில் பனிப் பிரதேசமே பளபளக்க, பிரணவ மந்திரப் பேரொலி நிறைந்திருக்கிற வெளி. பிறப்பின் சூட்சுமமும் பிரபஞ்சத்தின் ரகசியமும் அறிய விரும்புகிற, உணர விழைகிற சாதுக்களும் சந்நியாசிகளும் உலவுகிற பூமிக்குள் நுழையப் போகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாவப்பட்ட பாண்டவர்கள்...!

எங்கெங்கிருந்தோ வந்து குவிந்த வெவ்வேறான மனிதர்கள் ஒரு குழுவாக, குடும்பமாக உணர்ந்த நிலையில் தொடங்குகிறது பயணம்.

மனித உடலியக்கத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களுக்கும் இந்தத் திருத்தலங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.

ஆன்மிக தாகத்தில் இரண்டு மிடறு தண்ணீர் கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு நடுவில் இயற்கையைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் அருவி மாதிரி கொட்டிக்கொண்டு இருந்தார் சத்குரு.

பசுபதிநாத் திருத்தலத்தைப் பற்றி கருத்து விருந்து வைத்தார் அவர். ‘‘நம்ப முடியாத அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலம், பசுபதிநாத். கோடானுகோடி சிவத்தலங்களில் தலைசிறந்தது இது. ‘பசு’ என்றால் உயிர். ‘பதி’ என்றால் கடவுள்.

நான்கு திசைகளிலும் நான்கு திருமுகங்களை உடைய இந்தத் திருத்தலத்தின் லிங்கம் மிகச் சிறப்புடையதாகும். கிழக்குத் திசை நோக்கிய முகத்துக்கு ‘தத்புருஷா’ என்று பெயர். மேற்கு நோக்கிய திருமுகம் ‘சத்யோஜதா’, தெற்கு நோக்கிய முகம் ‘அகோரா’, வடக்கு நோக்கிய முகம் ‘வாமதேவா’. இந்த நான்கு திசைத் திருமுகங்களும் நான்குவிதமான பரிமாணங்களுடையது. நான்கு வேதங்களின் அடிப்படையே, பசுபதிநாத் லிங்கத்தின் நான்கு முகங்களும்.

இந்தத் திருத்தலத்தின் வரலாறு சொல்லும் புராணங்களில் முக்கியமானது, பாண்டவர்கள் தங்கள் பாவங்களைப் போக்க சிவனைத் தேடிய புராணம். சொந்தச் சகோதரர்களின் ரத்த வெள்ளத்தில்தான் பாண்டவர்களின் வெற்றி மிதந்து வந்தது. ஊரை, உறவை, மக்களை, பெரியோர்களை, நல்லோர்களைக் கொன்று குவித்த பாவக் கறையை உண்டாக்கிக் கொண்டனர் பாண்டவர்கள். சொந்தச் சகோதரர்களுக்குள் நிகழும் இத்தகைய போரை ‘கோத்ராவதா’ என்று குறிப்பிடுவர். அந்தப் பாவக் கறையைக் கழுவ, தங்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட விரும்பிய பாண்டவர்கள், சிவனருளை வேண்டி நின்றனர். சொந்த சகோதரர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் பரிகாரம் தர விரும்பாத சிவன் தன்னை ஒரு காளையாக உருமாற்றிக்கொண்டு அவர்களுக்குத் தரிசனம் தராமல் மறைந்தார். காளையுருவேற்ற சிவன் தன்னைப் பூமியின் அடியில் புதைத்துக்கொண்டதோடு, பூமியின் பல்வேறு இடங்களில் தன்னை தனித்தனி உறுப்புகளாக வெளிப்படுத்தினார். காளை உருவமேற்ற சிவனின் முதுகுப்பகுதி வெளிப்பட்ட இடம்தான் புகழ்பெற்ற ‘கேதார்நாத்’ திருத்தலம்.

கேதார் போகிற வழியில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற ‘துங்கநாத்’ திருத்தலத்தில் முன்னங்கால்கள் வெளிப்பட்டன. இமாலயத்தில் மிக சக்தி வாய்ந்த மணிப்பூர்க லிங்கம் இருக்கிற ‘மத்திய மஹேஷ்வர்’ திருத்தலத்தில் கொப்பூழ் பகுதி வெளிப்பட்டது. உடலின் பல்வேறு பாகங்களின் கலவையாக சிவன் வெளிப்பட்ட இடம் ‘கல்பநாத்’. இதுபோன்று சிவனின் நெற்றி வெளிப்பட்ட இடமே ‘பசுபதிநாத்’ திருத்தலம்.

மனித உடலியக்கத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களுக்கும் இந்தத் திருத்தலங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இத்திருத்தலங்கள் உயிரோட்டமுள்ள உடலாகவே அமைக்கப்பட்டுள்ளன. அந்த உயிரோட்டத்தை உணர்வதே அற்புதமான அனுபவம்.

ஏழு சக்கரங்களுடன் ஒரு முழு உயிராய் உள்ள தியானலிங்கத்தைப் போன்றே இத்திருத்தலங்களின் மையங்களும் அமைந்துள்ளன. உயிரோட்டத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களையும் முறையான வரிசைப்படி, ஒரு மையத்திலிருந்து இன்னொரு மையத்துக்கு மாற்றிப் பயணிப்பது மகா அற்புதமான வாழ்வியல் அனுபவம்.

பாவப்பட்ட பாண்டவர்கள்.....!

பசுபதிநாத், துங்கநாத், கேதார்நாத் ஆகிய மையங்கள் இன்றும் உயிரோட்டமுடன் உள்ளன. இந்த மையங்களை உயிரோட்டத்துடன் தக்கவைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் மிகவும் பிரயத்தனம் தேவை.

இந்தப் புராணங்களின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. திறந்த மனதுடன் இந்தத் திருத்தலத்தில் இருந்தாலே போதுமானது. இங்கே எப்படி அமர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களுக்கு வழிகாட்டப்படும். பரவசமான அனுபவத்தைப் பெறுவதற்கு மட்டும்தான் நீங்கள் தயாராக வேண்டும்.’’

வழிகாட்ட சத்குரு எழுந்து நின்ற அந்த வினாடிகளில், வீணையை மீட்டியது போல எங்கும் வழிந்தது பரவசம்!

காளை உருவமேற்ற சிவனின் முதுகுப் பகுதி வெளிப்பட்ட
இடம்தான் புகழ்பெற்ற 'கேதார்நாத்' திருத்தலம்!

திபெத்

புல்லாங்குழலில் புறப்படும் சோக ஸ்வரங்கள்
மலை முகடுகளில் எதிரொலிக்கின்றன.
மனிதன், விலங்கு போல் உயிர்ப்புள்ளவை எனினும்
இதயங்களின் அழுகுரலுக்கு அசையாதிருக்கின்றன.
அதிர்வுகளின் உச்சாடனங்கள், அபஸ்வரங்களை
அசையாப் பாறைகள் எதிரொலிப்பதில்லை.
இரக்கமில்லாத இச்சைகளின் இரைச்சலில் ஒலிப்பதோ
என்ஜின்களின் பேரோசையும் எந்திரங்களின் சப்தமும்
விறைத்த சீருடைகள் முறைத்த விழிகள்
பேசத் தயாராய் பீரங்கிகள் துப்பாக்கிகள்
மென்மை நிரம்பிய மனிதர்கள்
உலுக்கப்படுவது இங்கேதான்!

பயணம் தொடரும்...