குழந்தை பாக்கியம் இல்லாத பெண் ராசியில்லாதவரா?
குழந்தை ஆணா பெண்ணா எனப் பார்த்து, ஆண் என்றால் மிகுந்த சந்தோஷம் கொள்ளும் மனநிலை தற்போது சற்று மாறியுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால், குழந்தை பாக்கியம் இல்லையென்றால் அந்த தம்பதிகள் இன்றைய சமூகசூழலில்கூட மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தப் பழமையான மனநிலையின் உளவியல் குறித்தும், குழந்தைப்பேறு இல்லாதவர்களை அணுக வேண்டிய விதம் குறித்தும் சத்குரு பேசுகிறார்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை ராசியில்லாதவர்கள் என்று பலர் கருதுகிறார்களே?
சத்குரு:
ஒருகாலத்தில் இந்த முழு சமுதாயமே இந்த வேளாண்மை சார்ந்துதான் இருந்திருக்கின்றது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்திய சமூகம் விளைவித்து உண்டிருக்கிறதே தவிர வேட்டையாடி உண்டதில்லை. ஒரு சிறு பழங்குடியினர் பிரிவுதான் வேட்டையில் ஈடுபட்டிருக்க முடியும். வேளாண்மை என்பது எப்போதுமே மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுகிற ஒரு துறை. இன்று நாம் கூலிக்கு வேலையாட்கள் அமர்த்தி பணிகளைச் செய்து கொள்கிறோம். அது வேறு. ஆனால் பழைய காலங்களில் அவர்கள் தங்கள் நிலங்களில் உழுது பாடுபட்டு உணவுப் பொருட்களை விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.
எனவே உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் அதுவே மிகப்பெரிய சொத்தாக இருந்தது. அதுவும் ஆண் குழந்தைகள் இருந்தால் அது ஒரு பெரியவரம். அதனால்தான் பெண் குழந்தைகளை மட்டும் பெறுகிற பெண்கள், ராசியானவர்கள் என்று கருதப்படவில்லை. ஆண் குழந்தைகளைப் பெற்றால்தான் அவள் ராசிமிக்கவள். இதை அரசர்கள் நிர்ணயித்தார்கள். ஏனென்றால் ஆண் குழந்தை இல்லையென்றால் பிறகு ஆட்சிக்கு யார் வருவது? தன்னுடைய இரத்தம், தன்னுடைய நீட்டிப்புதான் இதன் இடத்திற்கு வர வேண்டும் என்று அரசர் கருதத் தொடங்கினார். அதன் மூலம் மரணத்திற்குப் பின்னும் தானே இந்த மண்ணை ஆண்டு கொண்டிருப்பதாக அவர்களுடைய உள்மனம் கருதியிருக்க வேண்டும். வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அதை விரும்பவில்லை. இதுதான் அவர்களின் மனநிலையாக இருந்திருக்கிறது.
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இந்த சமூகத்தில் நீண்டகாலமாக ஒரு பெண்ணிற்கு குழந்தையில்லை என்றால் அவள் கேலிப் பொருளாக மாறிவிட்டாள். இந்த சமூகத்தில் எல்லா வகையான இயலாமையும் கேலிக்குரியவையாகிவிட்டன. காது கேட்காவிட்டால் கேலி செய்வது. நீண்டகால வளர்ச்சிக்குப் பிறகுதான், பண்பாடு வளர்ந்த பிறகுதான், ஒருவரால் நடக்க முடியவில்லை என்றால் அதைப் பார்த்து சிரிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை மனிதர்கள் புரிந்துகொண்டார்கள். அவருக்கு அன்பும், பரிவும், உதவியும் தேவை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதேபோல் ஒரு பெண்ணுக்குக் குழந்தை இல்லையென்றால், அவருக்கு அன்பும், பரிவும், அமைதியும் தேவை. இதை மனிதர்கள் புரிந்துகொள்வதற்கு நீண்டகாலம் பிடிக்கும். ஓரளவு இதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
Subscribe