இதுவரை : குருஷேத்திரத்தில் துவங்கவிருக்கும் மகாயுத்தத்தில் பங்கேற்க தென் பகுதியிலிருந்து மாவீரனான பார்பாரிக் வருகிறான். அவனது ஆற்றலையும், இந்த போரில் அவன் கலந்து கொள்வதால் ஏற்படக்கூடிய அபாயத்தை‌ உணரும் கிருஷ்ணர், தந்திரமாக அவனது தலையை‌ அவனே கொய்து கொள்ளும்படி செய்கிறார். அதே நேரம் அவனது விருப்பப்படி, அவனது தலை உயிர்ப்போடிருந்து, போர் முழுவதையும் கண்ணுறவும் அனுமதிக்கிறார்.

அமைதிக்கு முயற்சிக்கும் அர்ஜுனன்

சத்குரு: போர்க்களத்திற்கு சென்ற பிறகு, போரை துவங்குவதற்கு முன், திடீரென அர்ஜுனனுக்கு அமைதியின் மீது ஒரு பற்றுதல் ஏற்படுகிறது. இரு படைகளுக்கும் மத்தியில் சென்று நின்றவாறு அர்ஜுனன், "எனக்கு இது வேண்டாம், என்னால் என் தாத்தாவை கொல்ல முடியாது, என் குரு, என் சகோதரர்கள், என் நண்பர்கள் என அனைவரையும் ஒரு ராஜ்ஜியத்திற்காக பலி கொடுக்க முடியாது. நான் மீண்டும் காட்டுக்கே செல்கிறேன்" என்கிறான். அப்போதுதான் பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதை உபதேசம் நடக்கிறது, கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "நீ ஒரு துறவி ஆகவேண்டும் என விரும்பியிருந்தால், அதை நீ முன்பே செய்திருக்க வேண்டும். இந்த மக்கள் அனைவரையும் எதற்காக போர்க்களத்திற்கு கொண்டு வந்தாய்? அவர்கள் உனக்காக போரிட வந்திருக்கிறார்கள். இப்போது நீ காட்டுக்கு சென்றுவிடுவேன் என்கிறாய், இவர்கள் அனைவரும் போர்க்களத்தில் சாக வேண்டுமா? நீ போர்க்களம் புகுந்துவிட்டாய். இப்போது உன்னால் துறவியாக முடியாது. செல்! ஒன்று நீ கொல்ல வேண்டும் அல்லது நீ கொல்லப்படுவாய் - இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நீ செய்தே தீரவேண்டும். இதன் உச்சமாக கிருஷ்ணர், "இது எனது விருப்பம்; இதை நீ செய்தே ஆகவேண்டும்" என்கிறார்.

போர் துவங்குகிறது. இந்தப் போர் எப்படி நடந்தது என்பதை மிக நுட்பமாக, ஒவ்வொரு அம்பும் எப்படி எய்யப்பட்டது என்பது குறித்து மஹாபாரதத்தில் விலாவாரியாக வர்ணிக்கப்பட்டுள்ளது. நாம் அந்த விபரங்களுக்குள் எல்லாம் செல்லப் போவதில்லை. கௌரவர்களின் சேனாபதியாக பீஷ்மர் இருந்தார். துருபதனின் மகனும் திரௌபதியின் சகோதரனுமான திருஷ்டதியும்னன் பாண்டவ சேனையின் சேனாபதியாக இருந்தான். ஏற்கனவே கிருஷ்ணர் வாக்களித்திருந்தபடி, கௌரவர்கள் பக்கம் யாதவ படையினர் கிருதாவர்மனின் தலைமையில் அணிவகுத்தார்கள். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய அம்சம், எவ்வளவு கசப்புணர்வு இருந்தாலும், அவர்கள் தங்கள் வாக்கை காப்பாற்றி இருக்கிறார்கள். படையை அனுப்புவேன் என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டால், படையை அனுப்புகிறீர்கள். "நீ என்னை ஏமாற்றினாய், அதனால் நான் படையை அனுப்பமாட்டேன்" என்று நீங்கள் காரணம் சொல்வதில்லை. அவர்கள் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. போர்க்களத்தில் நடந்த கோரமான சம்பவங்களுக்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை. அர்ஜுனனின் திறனைப் பார்த்து உத்வேகம் அடைந்து, பெரும் வீரனாக மாறியிருந்த உத்தரன் முதல் நாள் போரில் பலியாகிறான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதனால் ஆவேசமடையும் அவனது தந்தை விராடன், கடுமையாக போரிட்டு தன் வழியில் எதிர்ப்படும் அனைவரையும் கொல்கிறான். இதனால் கௌரவர்களுக்கு ஆள் பலத்திலும் பொருள் பலத்திலும் பெருத்த சேதம் ஏற்படுகிறது. தன் அசாதாரண பலத்தை பிரயோகித்து பீமன் அனைத்தையும் தவிடு பொடியாக்க, பாண்டவ படையினருக்கு இரண்டாவது நாளில் சற்று அனுகூலமான ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் இரு படையினருக்கும் இடையே சாதகமான சூழ்நிலை என்பது ஊசலாடுகிறது. சில நேரங்களில் ஒரு படையினர் கை ஓங்கியிருக்கிறது, சில நேரங்களில் எதிர் தரப்பினருக்கு வலு கூடியிருக்கிறது. ஆனால் சில குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட சிலர் தங்கள் முழு உத்வேகத்தையும் போர்க்களத்தில் காட்டும்போது, பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் போர்க்களத்தில் உயிர் துறக்கிறார்கள்.

ஊசலாட்ட யுத்தம் தொடர்கிறது

மூன்றாவது நாளில் நடந்த சில சம்பவங்களால் கௌரவர்களுக்கு போரில் அதிமுன்னேற்றமான நிலை கிடைக்கிறது. யுதிஷ்டிரன் சற்றே தன் நிலை தடுமாறுகிறான். உங்களுக்கு போர் வேண்டாம் என்பதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்: ஒன்று, நீங்கள் வன்முறையை விரும்பாதவராக இருக்கலாம்; இன்னொன்று, தோற்றுவிடுமோ என்ற பயம். உங்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்போது, போர் நடப்பதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்த நம்பிக்கை குறையும்போது, உங்களுக்கு போர் வேண்டாம் என்பீர்கள். நீங்கள் வெற்றியடைவது உறுதி என உங்களுக்கு தெரியும்போது நீங்கள், "முதலில் போரை முடிப்போம்" என்பீர்கள். தோற்றுவிடுவோம் என்று உங்களுக்கு தெரியும்போது, நீங்கள் பின்வாங்க நினைக்கிறீர்கள்.

போர் தொடர்ந்து நடக்கிறது. ஐந்தாம் நாளில் இருந்து ஒன்பதாம் நாளுக்குள் கௌரவ படையினர் பெரும் முன்னேற்றத்தை அடைகிறார்கள். இருந்தாலும், பீமன் தொடர்ந்து துரியோதனின் சகோதரர்களை கொல்வதோடு, ஒவ்வொரு நாளும் துரியோதனனை சென்று சந்தித்து, அவனது சகோதரர்கள் எத்தனை பேரை கொன்றிருக்கிறான் என்கிற கணக்கையும் சொல்கிறான். தன் சகோதரர்கள் எத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில் துரியோதனனின் ஆவேசமும் கோபமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. திருதராஷ்டிரனும் காந்தாரியும் போர்க்களத்தின் அருகிலேயே தங்கியிருக்கிறார்கள். திருதராஷ்டிரனுக்கு போர்க்களத்தை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் - ஏற்கனவே ஒருமுறை தாயம் விளையாட்டை அருகில் இருந்து பார்த்தது போலவே - தன் மகன்கள் போரை வென்று விடுவார்கள் என்று நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கிறான். முன்னர் நடந்த சூதாட்டத்தில், ஒவ்வொருமுறை பகடை உருட்டப்பட்ட போதும் அவன் கேட்டதெல்லாம், "யார் ஜெயித்தார்கள்?" பேரழிவை நோக்கி மக்கள் இழுத்துச் செல்லப்பட்டாலும், அது சில காலத்திற்குப் பிறகு ரத்தம் சிந்தும் அளவுக்கு போகும் என்பதை அறிந்திருந்தாலும், திருதராஷ்டிரனின் ஒரே அக்கறை, "யார் ஜெயித்தார்கள்?" என்பதிலேயே இருந்தது.

இப்போதும்கூட, போர்க்களத்திலும், திருதராஷ்டிரன் அதே அக்கறையோடுதான் உட்கார்ந்திருக்கிறான். நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் சஞ்சயன் அவனுக்கு விளக்குகிறான். கௌரவர்கள் இழப்பை சந்திக்கிறார்கள் எனும் செய்தி அவனை சேரும் போதெல்லாம் திருதராஷ்டிரன் பெரும் வேதனைக்கு உள்ளாகிறான். அவர்கள் பக்கம் சற்றே வலுவாக இருக்கிறார்கள் எனும் செய்தியில் திருதராஷ்டிரன் நம்பிக்கை அடைகிறான். ஆனால் சஞ்சயன், "கிருஷ்ணன் எதிர்ப்பக்கத்தில் இருக்கிறான். இடையில் என்ன விளையாட்டு நடந்தாலும், நிச்சயமாக இறுதியில் அவர்கள்தான் வெல்லப் போகிறார்கள்" என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறான். விதுரரும் சஞ்சயனும் தொடர்ந்து இதை ஒரு மந்திரம் போல திருதராஷ்டிரனின் செவிகளுக்கு உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

தயக்கம், மிக மோசமான குற்றம்

போர்களத்தில், எதிர்தரப்பை சேர்ந்த சில குறிப்பிட்ட மக்களை சந்திக்க நேர்கையில் - குறிப்பாக பீஷ்மரை சந்திக்கையில் - அர்ஜுனன் தன் முழு திறனை வெளிப்படுத்தி போர் புரிவதை பலமுறை தவிர்க்கிறான். இப்படி எப்படி போரிட முடியும்? நீங்கள் ஒரு போரை பார்ப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் கிரிக்கெட் போட்டியையாவது பார்த்திருக்கிறீர்கள் தானே? உங்களுக்கு பிடித்த ஒரு ஆட்டக்காரர் களமிறங்கி இருக்கிறார் என வைத்துக்கொள்வோம், நீங்கள் அவருக்கு மெதுவாக பந்து வீசுகிறீர்கள் - நீங்கள் ஒரு விளையாட்டை இப்படி விளையாட முடியாது. நீங்கள் போர்க்களத்தில் இருந்தால், எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை கொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், ஆனால் மற்றொருவரை உங்களால் கொல்ல முடியவில்லை என்றால் - நீங்கள் இப்படி போரிட முடியாது. இவ்வித அணுகுமுறையில், உங்களால் எதையும் செய்ய முடியாது. கிருஷ்ணரின் அடிப்படையான போதனை போர் அல்ல. அவர் சொல்ல வருவதெல்லாம், ஈடுபாடு இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியாது என்பதே. கீதையின் அழகான அம்சம் இதுதான்: அன்பு காட்டுவதோ, வேறு ஏதோ ஒன்றையோ மிக உயர்ந்ததாக கிருஷ்ணன் பேசவில்லை - இருப்பதிலேயே மிக மோசமான குற்றம் தயங்கிக்கொண்டு இருப்பதுதான் என்கிறான் கிருஷ்ணன்.

உங்கள் வாழ்க்கையையே சற்று திரும்பிப் பாருங்கள்: நீங்கள் ஏதோ ஒன்றை செய்ய நினைக்கிறீர்கள், ஆனால் பிறகு தயங்குகிறீர்கள். இந்த தயக்கத்தில் நீங்கள் வாழ்க்கையை தவிர்க்கிறீர்கள். இந்த அடிப்படையில்தான் கிருஷ்ணர் பேசுவது: நீங்கள் தயங்கும்போது வாழ்க்கையை இழக்கிறீர்கள். தயக்கம் என்றால் நீங்கள் இந்தப் பக்கமும் இல்லை, அந்தப் பக்கமும் இல்லை. "இப்படிப்பட்ட ஒரு பெரும் சூழ்நிலையை துவங்குவதற்கு முன்பு, ஒரு பெரும் போருக்கு முன், நீங்கள் தயங்கலாம். ஆனால் ஏதோ ஒன்றை நீங்கள் துவங்கிவிட்டால், அதன் பிறகு திரும்பி பார்ப்பதற்கே இடமில்லை. ஒன்று நீங்கள் அதைக் கடந்து வெளிவர வேண்டும் அல்லது இறக்க வேண்டும் - அவ்வளவுதான் அங்கே இருக்கிறது." இது போர்க்களத்திற்கு மட்டுமல்ல, வாழ்வின் பெரும்பாலான சூழ்நிலைகளிலும் இதுவே நிதர்சனம். நீங்கள் ஏதோ ஒன்றை துவங்குகிறீர்கள், பாதி தூரம் சென்றதும், அது உங்களுக்கு சௌகரியமாக இல்லை என்பதாலோ அல்லது இனிமையாக இல்லை என்பதாலோ, அதை அப்படியே விட்டுவிட்டு விலகிச் சென்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள்.

இந்த அடிப்படையில் கிருஷ்ணர் பேசுவது எந்த ஒரு ஆன்மீக போதனையோடும் தொடர்பு இல்லாதது போல தோன்றும், ஆனால் இதுதான் மிகப்பெரும் போதனை. "தயக்கமே குற்றங்களிலேயே மிக மோசமானது, நீங்கள் தயங்குகையில் வாழ்க்கையை இழக்கிறீர்கள்" என்கிறார் கிருஷ்ணர். நீங்கள் வாழ்க்கையோடு தொடர்பை இழப்பதற்கான காரணமே, நீங்கள் உங்கள் மனதில் தொலைந்து போனதால்தான். உங்கள் எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் உங்கள் உணர்ச்சிகள் உங்களை தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு உங்களை செயல்பட விடுவதில்லை.

கிருஷ்ணன், திட்டமிட்டு "தப்பி ஓடியவன்"

ஆன்மீக வழியில், இது ஒரு தினசரி கதை: "என் வாழ்க்கையையே உங்களுக்காக கொடுத்துவிடுவேன் சத்குரு" என்பார்கள். "அப்படியா, உங்கள் வாழ்க்கையை தர வேண்டாம்; நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அதை மிகச் சிறப்பாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அதை எப்படி மிகச் சிறப்பாக பயன்படுத்துவது என்பதை நான் சொல்கிறேன், ஒரு உயிராக நீங்கள் இதை எப்படி மதிப்பானதாக மாற்ற முடியும் என்பதையும் நான் சொல்கிறேன்" என்று பதிலளிப்பேன். ஒரு நாள் அவர்கள், "என் உயிரையே உங்களுக்காக கொடுப்பேன்" என்பார்கள், அடுத்த நாள், "சத்குரு, எனக்கு ஆசிரமத்தின் உணவு பிடிக்கவில்லை, என்னால் முடியவில்லை" என்பார்கள். அல்லது, "இல்லை சத்குரு, உண்மையிலேயே நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால் அந்த மனிதர் என்ன சொன்னார் தெரியுமா?" என்பார்கள். "அப்படியா, அவர்கள் உங்களைப் பற்றியும் ஏதோ சொல்லிவிட்டார்களா? அவர்கள் என்னைப் பற்றி பேசாதது ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்கிறேன். ஒரு மனிதன் என்ன செய்ய முடியுமோ, என்னவெல்லாம் செய்ய முடியாதோ, அவை அனைத்தையும் பேசிவிட்டார்கள்.

சத்திரியர்கள் கிருஷ்ணரை "ரான்சோர்" என்று அழைத்தார்கள். அப்படியென்றால், "போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியவன்" கோழை, படையை கைவிட்டு ஓடியவன் என்று பொருள். ஏனென்றால், ஜராசந்தன் ஒரு பக்கத்திலிருந்து மதுராவை தாக்கியபோது, மேற்கு திசையிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு அரசனும் தாக்குதல் தொடுத்தான். ஒரே நேரத்தில் இரண்டு படையினருடனும் போரிடுவதற்கு வழியே இல்லை என்பதை கிருஷ்ணர் பார்த்தார். எனவே அவர் தன் மக்களை காப்பாற்ற அனைவரையும் துவாரகைக்கு அழைத்துச் சென்றார். ஏனென்றால், அனைவரும் கொல்லப்படுவதில் எந்த பலனும் இல்லை என அவர் எண்ணினார். நகரம் எரிந்து போனால் போகட்டும்; மக்கள் வேறு இடத்தில் வாழட்டுமே என்று எண்ணினார். எனவே அவர்கள் வேறு எங்கோ சென்று ஒரு பெரும் நகரை உருவாக்கினார்கள். அன்றைய காலகட்டத்தில் செல்வச் செழிப்பும், வளமும் பொருந்திய பெரும் நகரமாக துவாரகை உருவெடுத்தது. இந்த முடிவை எடுத்ததற்காக, கிருஷ்ணருக்கு ரான்சோர், புறமுதுகிட்டு ஓடியவன் என்ற பட்டம் கிடைத்தது. இது அவரது வாழ்நாள் முழுவதும் அவருடன் ஒட்டிக்கொண்டிருந்தது.

தயக்கத்தினால் அவர் பின்வாங்கவில்லை; அவர் பின்வாங்கியதற்கு காரணம், தான் தொடர்ந்து அங்கேயே இருந்தால் தன் மக்கள் அனைவரும் வெறுமே இறந்து போவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். போரில் ஏதோ ஒன்றை செய்வதற்காக ராஜதந்திரமான முடிவை எடுப்பது ஒரு வகை. ஆனால் நீங்கள் ஒரு மனிதரை கொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் இன்னொரு மனிதரை கொல்வதற்கு தயங்குகிறீர்கள் என்றால், அதுவும் இருவரும் ஒரே விதமான சீருடையை அணிந்து இருக்கிறார்கள் எனும்போது - அது வேறுவிதமானது. ஒரு வகையில், நீங்கள் அந்த சீருடை அணிந்து இருப்பவரைத்தான் கொல்கிறீர்கள்; அந்த மனிதனை அல்ல. உங்கள் எதிரில் நிற்கும் மனிதரின் வாழ்க்கை எப்படிப்பட்டது என நீங்கள் பார்த்தால், அவரைப் பற்றிய பல அற்புதமான விஷயங்கள் இருக்கக்கூடும், எனவே நீங்கள் அவரை கொல்வதை விரும்பாமல் இருக்கலாம். நீங்கள் அந்த மனிதரை பார்த்தால் - ஒருவேளை அவரது குடும்பம், மனைவி, குழந்தைகள் உங்களுக்கு அறிமுகமாகி இருந்தால் - உங்களால் அவரைக் கொல்ல முடியாது. நீங்கள் உங்களுக்கு எதிரில் உள்ள சீருடையை பார்க்கிறீர்கள், அந்த சீருடைகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் - ஒரு போர் என்பது இவ்வளவுதான்.

தொடரும்...