மஹாபாரதம் பகுதி 45: துரியோதனன் Vs பீமன் - துவங்கியது இறுதிப் போட்டி
பல உயிர்கள் பலியான நிலையில், குருஷேத்திர போர் முடிவுக்கு வருகிறது. கௌரவர்களில் துரியோதனனைத் தவிர மற்ற சகோதரர்கள் அனைவரும் இறக்கிறார்கள். போர் துவங்கிய காரணம் இன்னும் முடிவுக்கு வராமலேயே இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
பாண்டவர்கள் குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு, துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையேயான இறுதி நேரடி மோதல் துவங்குகிறது.
இதுவரை: அர்ஜுனன் கர்ணனைக் கொன்ற பிறகு, போர் விரைவாக முடிவுக்கு வருகிறது. கௌரவர்களில், துரியோதனன், அஸ்வத்தாமன் மற்றும் கிருபாச்சாரியாரைத் தவிர மற்ற அனைவரும் இறக்கிறார்கள்.
போர் முடிந்தும் தொடரும் பகை
Subscribe
அப்போது இந்த குளத்தை நோக்கி காலடித்தடங்கள் செல்வதையும், ஆனால் அவை திரும்பி வராததையும் கண்டுபிடிக்கிறார்கள். பாண்டவர்கள் அங்கே வருகிறார்கள். பீமன் துரியோதனனை நோக்கி பலமாக கூச்சலிடுகிறான். "கோழையே, அங்கே தண்ணீருக்கடியில் சென்று இப்போது என்ன செய்கிறாய்? வெளியே வா." துரியோதனனுக்கு இது கேட்கிறது; ஆனால் அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஆவேசத்தோடு வெடித்து வெளியே வருவதற்கான நேரம் இதுவல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். என்ன செய்யலாம் என்று அனைவரும் பார்க்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் துரியோதனனைப் போல தண்ணீருக்குள் சென்று, அவன் செய்து கொண்டிருப்பதை செய்ய முடியாது. கிருஷ்ணர் பீமனிடம், "சும்மா அவனை வெறுப்பேற்று. இதற்கு சரியான ஆள் நீதான். உன் அகராதியில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்து" என குறிப்பு கொடுக்கிறார். எனவே பீமன் தனக்குத் தெரிந்த அச்சில் ஏற்ற முடியாத அத்தனை வார்த்தைகளையும் பயன்படுத்தி துரியோதனனை தூற்றி பலவாறாக அவமானப்படுத்துகிறான்.
தண்ணீருக்கு அடியில் எரியும் துரியோதனன்
துரியோதனனின் இந்நிலைப் பற்றி ஒரு அழகான இலக்கிய பாடல் கன்னடத்தில் இருக்கிறது. இது எப்படியோ எனக்குள் அமர்ந்துவிட்டது. அந்த பாடலில், பீமனின் வசைபாடல் எப்படி இருந்தது என்றால், துரியோதனன் அந்த குளிர்ந்த தண்ணீருக்குள்ளேயே வியர்த்துப் போனான் என்பதாக கவிஞர் எழுதியிருப்பார். தாங்க முடியாமல் வெளியே வருகிறான் துரியோதனன். போரில் வெற்றி பெற்ற அரசனான யுதிஷ்டிரன் முன்னேறி சென்று, "துரியோதனா, நீதான் இந்த போரை எங்கள் மீது திணித்தாய். எங்களுக்கு போர் செய்ய விருப்பமில்லை, ஆனால் எதிர்பாராதவிதமாக, எங்களுக்கு உரிமையானதை கொடுக்க உனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வெறும் ஐந்து கிராமங்களை மட்டும் கொடுத்தால்கூட போதும் என்று நான் கேட்டேன், ஆனால் ஒரு குண்டூசி முனையளவு நிலம் கூட தர முடியாது என நீ மறுத்தாய். நாங்கள் உனது சகோதரர்களை கொல்ல வேண்டியிருந்தது. எங்களுக்கு நெருக்கமான பலரையும் இழக்க வேண்டியிருந்தது. நமது குழந்தைகளில் சிலர் இறந்திருக்கிறார்கள்; பல நெருங்கிய நண்பர்கள் இறந்திருக்கிறார்கள். இப்போது நான் உன்னை இப்படியே விட்டுவிட்டால், அது உனக்கு அவமானமாகிவிடும்; அதை உன்னால் தாங்க முடியாது. எனவே எங்களில் யாராவது ஒருவருடன் உனக்கு விருப்பமான எந்த ஆயுதத்தைக் கொண்டும் நேரடியாக நீ மோதலாம். நீ வெற்றி பெற்றால், உனது ராஜ்ஜியத்தை நீ திரும்ப எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.
கிருஷ்ணர் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். இந்த மனிதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது! அந்தளவு நல்ல ஒரு மனிதனாக இருந்தார் யுதிஷ்டிரர். நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரைக் கொடுத்த பிறகு, போரில் விளைந்த கனியை அப்படியே தூக்கிக்கொடுக்க விரும்புகிறான் யுதிஷ்டிரன். "நீ விரும்பும் ஆயுதம்" என்று யுதிஷ்டிரன் கூறிய கணமே, தனக்கான வாய்ப்பு வந்துவிட்டதைப் பார்த்தான் துரியோதனன். தண்டாயுதத்தை அவன் தேர்வு செய்தால், அவனோடு மோதுவதற்கு ஆளே இல்லை. பீமன் தன்னால் துரியோதனனை வெல்ல முடியும் என்று நம்புகிறான், ஆனால் உண்மை அவ்வாறில்லை. பீமன் துரியோதனனை விட பலசாலிதான், ஆனால் சற்று மந்தமானவன். துரியோதனன் பல ஆண்டுகளாக தினமும் தண்டாயுதத்தைக் கொண்டு சண்டை பயிற்சி செய்து வந்திருக்கிறான். பாண்டவர்கள் காட்டில் சுற்றித்திரிந்தபோது, இவன் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். துரியோதனன் ஒரு மிக திறமையான தண்டாயுத வீரன்.
இறுதி மோதல்
யுதிஷ்டிரன், "நீ விரும்பும் ஆயுதத்தைக் கொண்டு போர் செய்யலாம்" என்கிறான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலும் அவன் நிலையான மொழியை பிரயோகிக்கிறான், அதை தெரிந்தே செய்கிறான். அதோடு, "நீ எங்கள் ஐவரில் இருந்து யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து மோதலாம்" என்ற வாய்ப்பையும் வழங்குகிறான். நகுலனையோ அல்லது சகாதேவனையோ தேர்வு செய்தால், ஒரு பூச்சியைப் போல அவர்களை துரியோதனனால் நசுக்கிவிடமுடியும். ஆனால் அவனது கர்வம் அவர்களை தேர்வு செய்ய அவனை அனுமதிக்காது. எனவே துரியோதனன், "நான் தண்டாயுதத்தை எனது ஆயுதமாக தேர்வு செய்கிறேன். என்னோடு மோத நான் தேர்வு செய்வது நிச்சயமாக பீமனைதான். ஏனென்றால் உனது சகோதரன் என்று நீ அழைக்கும் இந்த சதைப்பிண்டத்தை கொல்ல வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே ஆசை உண்டு" என்கிறான்.
கிருஷ்ணர் கண்ணசைத்தார். இருவருக்கும் இடையே நேரடி மோதல் துவங்கியது. மோதல் துவங்கிய முதல் கணத்தில் இருந்தே துரியோதனனின் கை ஓங்கி இருந்தது, ஏனென்றால் போரின் போது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்திருந்தது. காந்தாரி நீண்ட நாட்களாக விழிப்புணர்வோடு தன் கண்களை மூடியே வைத்திருந்ததால், தனக்குள் ஒரு குறிப்பிட்ட விதமான சக்தியை சேகரித்திருந்தாள். சஞ்ஞயனின் கண்கள் வழியாக இந்த போர் எந்த விதமாக வேண்டுமானாலும் முடிவடையலாம் என்பதைக் கண்டதும், காந்தாரி தன் சக்தியைப் பயன்படுத்த முடிவு செய்தாள். எனவே துரியோதனனை அழைத்து, "இன்று இரவு நீ ஆடைகள் ஏதுமின்றி எனது குடியிருப்புக்கு வா. நான் உன்னை ஒரேயொரு முறை பார்ப்பேன், அப்போது முதல் உன்னை யாராலும் வெல்ல முடியாத அளவுக்கு நீ பலசாலி ஆகிவிடுவாய்; உன்னை யாராலும் கொல்ல முடியாது. ஆனால் நீ முற்றிலும் நிர்வாணமாக வரவேண்டும்" என்று கூறினாள்.
மீண்டும் திசைமாற்றப்பட்ட துரியோதனன்
துரியோதனன் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு, தனது தாயின் குடியிருப்பு நோக்கி நிர்வாணமாக நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் குறுக்கிட்ட கிருஷ்ணர் உரையாடலைத் துவங்கினார், "ஓ துரியோதனா, இது என்ன? ஒரு குழந்தையைப் போல நீ நடந்து செல்கிறாய், ஆனால் நீ குழந்தை இல்லை. நீ வளர்ந்த ஒரு மனிதன் என்பதை என்னால் பார்க்க முடிகிறது" என்றார். துரியோதனன் தன்னை மறைத்துக்கொண்டான். கிருஷ்ணர் தொடர்ந்து, "இப்படியே எங்கே செல்கிறாய்? உனது தாயின் குடியிருப்பை நோக்கி நீ செல்வது போல தெரிகிறது; நீ இந்த அளவுக்கா இறங்கிவிட்டாய்? உன் தாயின் குடியிருப்புக்கு நிர்வாணமாக செல்கிறாயே, முழுவதுமாக வளர்ந்த ஒரு ஆணல்லவா நீ?" என்று கேலியாக கேட்டார். "இல்லை இல்லை! எனது அன்னைதான் என்னை இப்படி வருமாறு பணித்தார்; எனவேதான் நான் செல்கிறேன்" என்றான் துரியோதனன். "அவர் என்ன சொன்னார் என்பது பற்றியல்ல கேள்வி. அவர் தனது கண்களை எப்போதுமே கட்டிக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைப் பார்த்ததே இல்லை. அவர் உன்னை குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் நீ முழுவதுமாக வளர்ந்த ஒரு ஆண், ஒரு அரசன், ஒரு ஷத்திரியன். ஆரிய தர்மத்தின்படி, நாம் நமது தாயின் முன் நிர்வாணமாக நிற்கமாட்டோம் என்ற நியதி இருப்பது கூட உனக்கு தெரியாதா? குறைந்தபட்சம் தேவையான அளவுக்காவது உன்னை நீ மறைத்துக்கொள்" என்றார் கிருஷ்ணர்.
கொல்லும் வல்லமை
இருவருக்கும் இடையேயான மோதல் நடந்த அன்று, பீமன் எப்படி சுற்றிவளைத்து தாக்கினாலும் துரியோதனன் மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டே இருந்தான். துரியோதனன் பாதுகாக்கப்பட்டவனாக மட்டுமில்லை, திறமைசாலியாகவும் இருந்தான். பீமன் மிகுந்த பலசாலிதான், ஆனால் துரியோதனன் திறமைசாலி. சற்று நேரத்திலேயே பீமன் இன்று இறப்பது உறுதி என்பது போன்ற நிலை ஏற்படவே, துரியோதனன் சிரிக்கத் துவங்குகிறான். பீமனை கொல்லும் மகிழ்ச்சி மட்டுமின்றி, தனது ராஜ்ஜியத்தையும் அவன் திரும்பப் பெறப்போகிறான். எனவே சிரித்து சிரித்து பீமனை வெறுப்பேற்றுகிறான் துரியோதனன். எந்த கணத்தில் வேண்டுமானாலும் தன்னால் பீமனைக் கொல்ல முடியும் என்பது துரியோதனுக்கு தெரிகிறது. இப்போது அது ஒரு சண்டையைப் போலவே இல்லை - பீமனோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் துரியோதனன்.
தொடரும்...