இளைஞர்கள் போதை தேடுவது எதனால்?

திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் நாக் அஸ்வின்(Nag Ashwin), இளைஞர்கள் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவது ஏன் அதிகரித்து வருகிறது என்று சத்குருவிடம் கேட்கிறார். இதற்கான காரணங்களை சுட்டிக்காட்டும் சத்குரு, வாழ்க்கையில் இதனினும் உயர்ந்த இன்பங்களை இளைஞர்கள் ரசிக்க எளிய தீர்வுகளை வழங்குகிறார்.
A depressed young man sitting on a couch with alcohol before him | Why Are Youth Turning to Alcohol and Drugs?
 

நாக் அஸ்வின் (Nag Ashwin ) : என் தலைமுறையில், இளைய தலைமுறையில், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் அதிகரித்துள்ளது பற்றி உண்மையறிய விரும்புகிறேன். காலங்காலமாக மனிதர்கள் மது அருந்தியுள்ளனர், ஆனால் இந்த காலகட்டத்தில் மட்டும்தான் இளம் குழந்தைகளும் பள்ளிக் குழந்தைகளும் போதைப்பொருட்களை ஒரு வடிகாலாக பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இது நம்மை அச்சுறுத்துவதாகவும் ஆபத்தானானதாகவும் இருக்கிறது. ஏன் இதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதிலிருந்து மக்களை மீட்பதற்கான இயற்கையான வழிகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

சத்குரு:

நமஸ்காரம் நாக்! எனக்கு உங்கள் பெயர் பிடித்திருக்கிறது. நாகப்பாம்பு எனக்கு எப்போதும் பிரியமானதாக இருந்துள்ளது. உங்களுக்கு இது தெரியுமா? நாகத்தின் வடிநஞ்சை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால், அதுவும் போதை ஏற்படுத்தவல்லது.

சமுதாயத்தில் போதைக்கான தேவை அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு அடிப்படையான விஷயம், இன்று பிழைப்பிற்காக மனிதர்கள் போராடவில்லை. சமுதாயத்தின் பெரும்பகுதி பிழைப்பிற்காக போராடும் நிலையிலிருந்து முன்னேறிவிட்டது. மக்கள் பிழைப்பைக் கடந்து முன்னேறும்போது, தங்களை பேரார்வத்துடன் ஈடுபடவைக்கும் பிற விஷயங்களை அவர்கள் கண்டறியவேண்டும். அது நிகழவில்லை என்றால், அந்த சமுதாயத்தில் இன்பம் மற்றும் போதைக்கான தேவை இயல்பாகவே அதிகரிக்கும். இதனால்தான் பெற்றோர்கள் வசதியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதை அடையும்வரை அவர்களின் குழந்தைகள் செல்வச்செழிப்பை அனுபவிக்கக் கூடாது.

செல்வம் வரும்முன் தேவையான ஒழுக்கம், ஈடுபாடு மற்றும் உயிருடனான தொடர்பு ஒருவர் வாழ்க்கைக்குள் வரவேண்டும். இல்லாவிட்டால் செல்வம் என்பது உங்கள் தலையில் சுமக்கும் சுமையாக மாறிவிடும். இந்த தலைமுறைக்கு நடப்பது அதுதான்.

இந்தக் கலாச்சாரத்தில் அரசர்கள் கூட தங்கள் குழந்தைகளை குரு குலங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தக் குழந்தைகள் மற்ற எல்லாக் குழந்தைகளுடனும் சேர்ந்து அடிப்படையான வசதிகளுடன் கல்வி கற்றனர். செல்வம் வரும்முன் தேவையான ஒழுக்கம், ஈடுபாடு மற்றும் உயிருடனான தொடர்பு ஒருவர் வாழ்க்கைக்குள் வரவேண்டும். இல்லாவிட்டால் செல்வம் என்பது உங்கள் தலையில் சுமக்கும் சுமையாக மாறிவிடும். இந்த தலைமுறைக்கு நடப்பது அதுதான்.

செயல்செய்யாமல் கவனம்கிடைக்காமல் இருப்பது

இன்னொரு காரணம், இந்நாட்களில் பெற்றோர்கள் இருவருமே பெரும்பாலும் வேலை செய்கின்றனர். சிறுவயதில் குழந்தைக்குத் தேவையான கவனம் வழங்கப்படுவதில்லை. எனவே இயல்பாகவே அவர்கள் கவனம் இப்படிப்பட்ட வக்கிரங்களின் பக்கம் திரும்புகிறது. அதோடு போதுமான உடல்செயலும் அவர்களுக்கு இல்லை. உங்கள் உடலின் உறுதியையும் அதன் உயிரோட்டத்தையும் வீரியத்தையும் நீங்கள் ரசிக்காமல் இருக்கும்போது, நீங்கள் ரசிக்கக்கூடிய ஒரே விஷயம் போதையாக மாறிவிடுகிறது. எனவே வஸ்துக்கள் இப்போது போதை தருவதாக மட்டுமல்லாது, சில மணிநேரம் அவர்களை உயிரோட்டமாக உணரச்செய்கிறது. அதனால் இந்தத் தலைமுறை பெரிய அளவில் போதை நோக்கி நகர்கிறது.

இந்தத் தலைமுறை இன்று போதை வஸ்துக்கள் நோக்கி நகர்வதற்கு இன்னுமொரு முக்கியக் காரணம், சொர்க்கத்தை அடையும் வாக்குறுதிகள் அவர்களுக்குள் உடைந்துவருகின்றன. அதை அவர்களால் இன்னும் தெளிவாக உச்சரிக்கமுடியாமல் இருக்கலாம். அதைச் சொல்லும் தெளிவும் துணிவும் அவர்களிடத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நெடுங்காலமாக மக்கள் அவர்களிடம், “இவற்றை தவிர்த்தால் சொர்க்கத்தில் அதிக அளவில் இவற்றை அனுபவிப்பாய்” என்று சொல்லியே சமாளித்து வந்துள்ளார்கள். இப்போது அந்த சொர்க்கங்கள் உடைந்து வருகின்றன, அதனால் இங்கேயே மது அருந்துகிறார்கள். இப்படி பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அடிப்படையாக தனிமனிதர்கள் தங்கள் பிழைப்பிற்காக உடலை வருத்த அவசியமில்லாமல் இருக்கிறது. இதுவே போதைக்கான அவசியத்தை அதிகரிக்கிறது.

பிற இன்பங்களை ரசிக்க கற்றுக்கொள்வது

இதற்கான தீர்வுகள் என்ன? வளரும் குழந்தைகள் இருந்தால், அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதும், இயற்கையுடன் தொடர்புகொள்ளும் பிற தீவிர செயல்களில் ஈடுபடுத்துவதும் மிக மிக முக்கியம். மலையேற்றம், நீச்சல் என்று எந்தச் செயலிலும் அவர்களை ஈடுபடுத்தலாம். கலை, இசை போன்றவற்றில் அவர்கள் பேரார்வம் கொள்ளவேண்டும். புத்தி, உணர்ச்சி மற்றும் உள்ளத்தின் இன்பங்களை அனுபவித்துணர அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனம் தரவல்ல இன்பம், புத்திக்கூர்மை, அல்லது உணர்வுகள் மற்றும் விழிப்புணர்வின் ஆற்றலை ஒருவர் ரசிக்கத் துவங்கும்போது, உடலின் இன்பங்களில் ஈடுபடுவது இயற்கையாகவே பெருமளவில் குறைந்துவிடும். எனவே பலதரப்பட்ட செயல்களில் பேரார்வத்துடன் குழந்தைகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம். மது மற்றும் போதை பொருட்களுக்கான தேவையை இது குறைக்கும்.

பலதரப்பட்ட செயல்களில் பேரார்வத்துடன் குழந்தைகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம். மது மற்றும் போதை பொருட்களுக்கான தேவையை இது குறைக்கும்.

ஆனால் இன்று மதுவை நாம் பெருமளவில் ஊக்குவித்து சந்தைப்படுத்தவே பார்க்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படங்கள் அவற்றை ஊக்குவிக்கின்றன, சமுதாயத்தில் நீங்கள் குடிக்காவிட்டால் எதற்கும் உதவாதவர் எனும் மனப்பான்மையே எங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. என்னிடம் சிலர், “சத்குரு, நீங்கள் குடிப்பதுண்டா?” என்று கேட்பதுண்டு. நான் அவர்களிடம், “ஆம், நான் தண்ணீர் குடிப்பதுண்டு” என்பேன். என்னை ஒரு வினோதமான ஜந்துவைப் போல பார்ப்பார்கள், “வெறும் தண்ணீரா?” என்பார்கள். ஆம், நீங்கள் குடிக்கக்கூடிய மிக அற்புதமான பானம் தண்ணீர்தான், ஏனென்றால் உங்கள் உடல் எடையின் 70 % தண்ணீரால் ஆனது, மதுவால் ஆனதல்ல.

உள்ளிருந்து பரவசமாவது

மனித உடல் அமைப்பு ஒரு அற்புதமான ரசாயன தொழிற்சாலை. உங்களுக்கு போதை வேண்டுமென்றால் அதனை உங்களால் உள்ளிருந்து உருவாக்கமுடியும் - அது உங்களை ஒரே சமயத்தில் போதையாகவும் மிகுந்த விழிப்புணர்வாகவும் மாற்றவல்லது. நம் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இப்படிப்பட்ட போதையைத்தான் நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அதனால்தான் அனைவரின் வாழ்க்கைக்குள்ளும் யோகாவின் தொழில்நுட்பத்தை நாங்கள் எடுத்துவரப் பார்க்கிறோம். உங்களுக்குள் நீங்கள் சில நிலைகளை அடைந்தால், எந்தவொரு வஸ்துவும் எந்தவொரு பானமும் உருவாக்கமுடியாத ஒரு போதையை உணர்வீர்கள். அதேசமயம் மிகுந்த விழிப்புணர்வாக இருப்பீர்கள், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அதிசயங்களை நிகழ்த்தும்.

எனவே தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட விதத்தில் நாம் செயல்பட கற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. மனிதர்கள் வாழ்க்கையின் மிக உயர்ந்த இன்பங்களை உணர்வதற்கான வழிகள் இருக்கின்றன. நம் இளைஞர்கள் இதை அனுபவிக்க நாம் வழிவகை செய்யவேண்டும். அவர்களுக்கு ஒரு மாற்றுவழியை நீங்கள் வழங்காதவரை, அவர்கள் மீண்டும் மது அல்லது மாத்திரைக்குத் திரும்புவார்கள்.

தற்போது நீங்கள் ஆரோக்கியமாக, அமைதியாக, ஆனந்தமாக இருப்பதற்கு, அல்லது உங்களுக்குள் எதையும் உணர்வதற்கு, ரசாயனத்தின் உதவி உங்களுக்கு தேவைப்படுகிறது. ஒரு தலைமுறை இப்படி ரசாயனங்களை பயன்படுத்தினால் - தினசரி அளவில் 99 சதவிகித மக்கள் மருந்துகளையும் பிற ரசாயனங்களையும் பயன்படுத்தத் துவங்கினால் - நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறையினர் பலவிதங்களில் நம்மைவிட குறைவானவர்களாக இருப்பார்கள்.

இது மனிதகுலத்திற்கு எதிராக நாம் இழைக்கும் குற்றம். அனைவரும் விழித்துக்கொண்டு, இந்நிலையை மாற்றுவதற்கு செய்யத் தேவையானதை செய்யவேண்டும்.

ஆசிரியர் குறிப்பு: நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

sg-tam-app-banner

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1