ஓதி வருவதில்லை ஒழுக்கம் !
எந்த ஒரு செயலும் தன்மேல் திணிக்கப்படாமல் மிக இயல்பாக தனக்கு ஒழுக்கத்தை வரவைத்த அனுபவத்தையும், ஈஷாவில் அப்படிப்பட்ட ஒழுக்கம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு...
எந்த ஒரு செயலும் தன்மேல் திணிக்கப்படாமல் மிக இயல்பாக தனக்கு ஒழுக்கத்தை வரவைத்த அனுபவத்தையும், ஈஷாவில் அப்படிப்பட்ட ஒழுக்கம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு...
சத்குரு:
நான் பள்ளி சென்ற காலத்தில் கூட ஒழுக்கம், நன்னடத்தை என்று எதையும் என் மீது என் வீட்டார் திணிக்க முயன்றதில்லை. ஆனால், எங்கள் வீட்டில் சில பண்பாடுகள் இருந்தன.
எங்கே நாங்கள் போனாலும், இரவு உணவுக்கு எல்லோரும் கூடி ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்பது, ஒரு பழக்கமாக இருந்தது. ஒருவர் வராவிட்டாலும், அவருக்காக மொத்தக் குடும்பமுமே காத்திருக்கும். அதனால் மற்றவர்கள் பசியுடன் காத்திருப்பார்கள் என்ற எண்ணமே வீட்டில் நேரத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
இது எங்கள் மீது ஒரு நிபந்தனையாகத் திணிக்கப்பட்டதல்ல. அன்பினாலும், பொறுப்பினாலும் அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருந்தது.
காலையும், மாலையும் தினமும் இருவேளை வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேலைக்கு ஒரு பெண் அமர்த்தப்பட்டு இருந்தாள். தினமும் ஒருமுறை ஈரத் துணிகொண்டு தரையைத் துடைக்கும் பழக்கமும் இருந்தது. என்றைக்காவது, என் அம்மாவே துடைப்பத்தை எடுத்துப் பெருக்க ஆரம்பிப்பாள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்? சொல்லப்படாமலேயே நாங்களும் அந்த வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வோம்.
சில வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகள் அங்கங்கே குவியலாக இருப்பதைக் காணலாம். எங்கள் வீட்டில், உடுத்திக் களைந்த உடைகள் குவியல் குவியலாகக் கண்ட இடங்களில் வீசப்பட்டு இருக்காது.
ஆனால், அதை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும் என்று எதுவுமே ஒரு நிபந்தனையாக எங்கள் மீது திணிக்கப்படவில்லை. ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை என்று யாரும் கத்த மாட்டார்கள். யாரிடமும் சண்டை போட மாட்டார்கள். நாங்கள் செய்யத் தவறியதை எங்கள் அம்மா எடுத்து ஒழுங்குபடுத்துவாள். அதற்கு வாய்ப்பு கொடுக்க மனம் வராமல், நாங்களே ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம்.
Subscribe
வார்த்தைகளால் ஒழுக்கத்தைப் போதித்து, மற்றவரிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்ப்பதைவிட, இதைப் போன்ற சிறு சிறு விஷயங்கள் ஒரு வீட்டின் பண்பாடாகவே விளங்குகையில், அவை, வாழ்க்கையில் பெரும் மதிப்பு கொண்டவையாக மாறுகின்றன. அவற்றை மீற மனம் வருவதில்லை.
இந்த அளவுகூட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், வாழ்க்கை அதன் போக்கில் தறிகெட்டு நடக்கும். ஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.
ஓர் இளம் தம்பதி. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து அது சண்டையாக வெடிக்கும்போதெல்லாம், வேலை செய்யும் பெண்ணுக்குப் புரியக்கூடாது என்று ஆங்கிலத்தில் கத்திக் கொள்வார்கள்.
ஒருநாள் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. வேலைக்காரியை அழைத்தாள்.
"உனக்கு ஆங்கிலம் புரியாதுதானே?" என்று கேட்டாள்.
"புரியாது. ஆனால், நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது யார் பக்கம் தப்பு என்று புரிந்துவிடும்" என்றாள் வேலை செய்பவள்.
"எப்படி?"
"யாருக்கு முதலில் கோபம் வருகிறது என்று கவனித்தால் போதுமே.." என்றாள் அவள்.
திணிப்பவர்கள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ, உபதேசங்கள் செய்பவர்கள் மூலமாகவோ, தத்துவங்களைப் போதிக்கும் ஆசான்கள் மூலமோ அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாகரிகம் இறங்குவதில்லை. சமையலறையிலிருந்து கழிப்பறை வரை எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது ஓர் இயல்பாக இருக்க வேண்டுமென்றால், அது அந்தக் குடும்பத்திலேயே ஊறி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அதன் வாரிசுகளிடம் பிரதிபலிக்கும்.
என் அம்மாவிடம் நான் கண்ட பழக்கம் என்னிடமும் தொடர்கிறது. என் மகள் பயன்படுத்திய துணியை அங்கங்கே சிதறடித்திருந்தால், எதுவும் சொல்லாமல், அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்த ஆரம்பிப்பேன். உடனடியாக அவள் ஓடி வருவாள். அந்த வேலையை என்னை முந்திக் கொண்டு செய்து முடிப்பாள்.
இன்று ஈஷாவிலும், யார் மீதும் எந்த நன்னடத்தை விதிகளையும் திணிப்பதில்லை. வாழ்க்கையின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதை முதலில் நான் கடைப்பிடிக்கிறேன். அந்தத் தரம் கிடைப்பதற்குச் சுத்தமான ஒரு சூழ்நிலை வேண்டும். கீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன். அழுக்கான, அசுத்தமான இடத்தில் தங்க எனக்கு விருப்பம் இல்லை என்கிறேன். அவ்வளவுதான்.
'அதை அப்படிச் செய், இதை இப்படிச் செய்யாதே' என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, இதுவே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வந்தாலொழிய, வாழ்க்கையின் தரம் உயர வாய்ப்பில்லை. சும்மா சாப்பிடுவதும், தூங்குவதும், பணம் பண்ணுவதும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தாது. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
யார் மீதும் எதையும் திணிக்காமல் எது, எப்படி, எங்கே வேலை செய்யும் என்பதை அவர்களுக்கு புரியவைத்தால் போதும். விவேக புத்தியுள்ள எவரும் சந்தோஷமாக அதைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.
யாரோ ஒன்றிரண்டு பேர் முரண்டு பிடிக்கலாம். எதற்கும் சரிவராமல், கழுதையாகத்தான் நடந்து கொள்வேன் என்றால், முரட்டுக் கழுதைகளைக் கையாள்வதைப் போல பிரம்புடன்தான் அவர்களைக் கையாள வேண்டும்.
ஆனால், யாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள். கட்டுப்படுத்த முனைவதில் உங்கள் உயிர் போகும். தட்டிக் கழிக்கப் பார்ப்பதில் அவர் உயிர் போகும். இருவருக்கும் நிம்மதி இருக்காது.
எனக்கு 11 வயதானபோது, யோகா என் வாழ்க்கையில் ஓர் அங்கமானது. என் வாழ்க்கையில் சில ஒழுங்குமுறைகள் தாமாகவே வந்தன. சில விஷயங்களை மிகக் கச்சிதமாகச் செய்து முடித்தால்தான் அவற்றுக்கான பலன் கிடைக்கும். இல்லாதுபோனால், யோகா வேலை செய்யாது. அதற்கான ஆர்வமும், அவசியமும் தாமாக எழுந்தன. ஒரு செயலைக் கச்சிதமாகச் செய்து முடித்தால், அங்கே ஒழுங்கீனத்துக்கே இடமில்லை.
குழந்தையாக இருக்கும்போதே யோகா வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாறிவிட்டால், யாரும் எதையும் திணிக்காமல், எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தாமாகவே ஒழுக்கமாகத்தான் இருப்பார்கள்.