உங்களின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உங்கள் மீது எழுதப்பட்டுள்ளது

சத்குரு: கர்மா என்பதை ஒருவிதமாகப் பார்த்தோமேயானால், அது ஒருவரின் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலையில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்களின் எஞ்சிய ஞாபகமாக இருக்கிறது. அது, இதுவரை நிகழ்ந்த பல்வேறு சூழ்நிலைகளின் எஞ்சிய ஞாபகம் ஆகும். ஒரு நபராக நீங்கள் வாழ்ந்ததைவிட, மிக அதிகமாக, நீண்ட நெடுங்காலம் வாழ்ந்த, உங்களின் பெரும்பகுதி அங்கே உள்ளது. நீங்கள் மறுஜென்மம் எடுப்பது போல அதற்குள்ளே செல்ல வேண்டியதில்லை. நவீன சொல்லாடலைக் கொண்டு பார்த்தாலே, “மரபியல்” என்று அவர்கள் சொல்லும்போதே, உங்கள் பெற்றோர்கள் இன்னமும் உங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது. நீங்கள் வித்தியாசமாக இருப்பதாக நீங்கள்தான் நம்புகிறீர்கள். பலருக்கும் இது நிகழ்கிறது – அவர்களுக்கு நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை எட்டும் காலத்தில், முழு விழிப்புணர்வுடன் அவர்களுக்காக முற்றிலும் வேறொரு பாதையை அவர்கள் நிர்ணயம் செய்யவில்லையென்றால், அவர்களின் பெற்றோரைப் போலவே அவர்கள் நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். உங்கள் அம்மாவோ அல்லது அப்பாவோ ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ்ந்திருந்தார்கள், ஆனால் நீங்களும் ஏன் அதே விதமாக இருக்க வேண்டும்?

கர்மா என்பது நீங்கள் என்ன செய்தீர்கள் மற்றும் என்ன செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், அது ஞாபகப்பதிவின் மீதமாக இருக்கிறது. கர்மா, படைப்பின் துவக்கப்புள்ளிக்கே செல்லக்கூடியது. விழிப்புணர்வைக்கொண்டு உங்கள் உடலை நீங்கள் பிளந்தால், நீங்கள் போதிய உணர்வுடன் இருந்தால், படைப்பின் ஆரம்பத்தைக் கூட உங்களால் தெளிவாகக் காண இயலும். இதுவரை நிகழ்ந்த அனைத்தும், குறிப்பாக மனித அமைப்பில் நிகழ்ந்த அனைத்தும் இம்மியளவும் பிசகாமல் அங்கே உண்டு. இதனை நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் ஒரு மரத்தை அறுத்துப் பார்க்கும்போது, கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் என்னவெல்லாம் நிகழ்ந்தன - எவ்வளவு மழை பெய்தது, என்ன தட்பவெப்பம், தீ, பேரழிவுகள் - என அனைத்தையும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு இன்று அறிவியல் வளர்ந்துள்ளது. இது யாரோ ஒருவர், உங்கள் உள்ளங்கையைப் பார்த்தே உங்கள் கடந்த காலம் மற்றும் எதிர் காலத்தைச் சொல்வதைப் போன்றது. இது பல வழிகளில் அறிகுறியாக உள்ளது.

உங்கள் கையைப் பார்த்தே உங்கள் வாழ்வில் நிகழ்ந்தவற்றையும், நிகழப்போவதையும் என்னால் கூறமுடியும். உங்கள் கையில் அது எப்படித் தோன்றியது? உண்மையில் உங்கள் உடல் முழுவதும் அது காணப்படுகிறது. உங்கள் உடலின் எந்த பாகத்தை பார்த்தாலும், குறிப்பாக மற்ற பாகங்களை விட அதிகமாகச் சுட்டிக்காட்டும், குறிப்பிட்ட பாகங்களைப் பார்த்தே, உங்களின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைச் சொல்லிவிடுவேன். உங்கள் காது மடலின் பின்னால் கவனித்தால் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். நான் நகைச்சுவைக்காக இதை சொல்லவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களுக்கு நான் செல்லும்போது, அங்கு என்ன நிகழ்ந்தது என்று ஒரு உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியிடமோ அல்லது யாரோ ஒருவரிடமோ நான் கேட்பதில்லை. பலகாலம் அசையாதிருக்கும் ஏதோ ஒரு பெரிய பாறையை மட்டுமே நான் தேடுவேன். அதனருகில் சென்று வெறுமனே அமர்ந்தாலே அந்த இடத்தைப் பற்றிய அனைத்தையும் தெரிந்துகொள்வேன். ஏனென்றால், அதனைச் சுற்றி என்னவெல்லாம் நிகழ்ந்ததோ, அவற்றின் ஞாபகப் பதிவு அந்த பாறைக்குள்ளும் உள்ளது.

பூமியில் உள்ள வெவ்வேறு பொருள்களும் வெவ்வேறு விதமான அதிர்வுகளை வெளியிடுகின்றன, மேலும் இந்த அதிர்வுகள் பூமி இடம்பெற்றுள்ள நிலையைப்பொறுத்து வேறுபடுகின்றன. இவையெல்லாமே அளவீடு செய்யப்பட்டுள்ளன, ஆனால் உண்மையில் அது என்ன கூறுகிறது என்பதை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு பாறையும், ஒவ்வொரு கல்லும், ஏதோ ஒன்றைச் சொல்கிறது – அந்த அளவுக்கு மட்டும்தான் நவீன அறிவியல்கூட தெளிவு கொண்டுள்ளது. நீங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு அது போதுமான தெளிவுடன் உள்ளதா அல்லது அவை சொல்வதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நீங்கள் போதிய உணர்தலில் இருக்கிறீர்களா? என்பதுதான் கேள்வி. ஏனென்றால், யாரோ ஒருவர் சொல்ல வருவதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், நீங்கள் அவர்களது மொழியை அறிந்திருக்க வேண்டும், அவர்கள் மொழியைக் குறித்த போதிய உணர்வுடன் நீங்கள் இருக்கவேண்டும், இல்லையென்றால் உங்களால் அறிந்துகொள்ள முடியாது. அவைகள் எல்லாமே பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. கேட்பதற்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

உங்களது உடல் ஒரு சிறிய பிரபஞ்சம்

உங்களைச் சுற்றியுள்ள உயிர்களைக் குறித்து நீங்கள் உணர்வுடன் இருந்தால், அவைகள் என்ன சொல்கின்றன என்பதை உங்களால் உணர இயலும். அதற்கும் மேல், ‘நான்’ என்று நீங்கள் அழைக்கும் இந்த “உயிர்” குறித்த உணர்வுடன் நீங்கள் இருந்தால், படைப்பின் தொடக்கம் முதல் இப்போது வரை, எல்லாமே இந்த பௌதிக உடலில் இருக்கிறது - ஏனென்றால், இதுவே ஒரு சிறிய அண்டம்தான் - அதனால்தான், இதை “மீச்சிறு அண்டம் (பிண்டம்)” என்று அழைக்கிறோம். பேரண்டம் என்பது இதன் விரிவாக்கப்பட்ட உருவாக்கம்தான். பேரண்டத்தில் நிகழ்ந்த எல்லாமே மிகநுட்பமான விதத்தில் இங்கேயும் நிகழ்ந்துள்ளது, இன்னமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

“அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது” என்று ஏன் நான் சொல்கிறேன் என்றால், படைப்பு ‘நிகழ்ந்தது’ என்பதுடன், அது ஆறு அல்லது ஏழு நாட்களில் மட்டுமே நிகழ்ந்தது என்ற கருத்து மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. ஏனென்றால், படைப்பு என்பது நிகழ்ந்து முடிந்த ஒன்றல்ல; அது ‘நிகழ்ந்துகொண்டிருக்கும்’ ஒன்று. ‘காலம்’ என்கிற கருத்து கூட ஒரு முதிர்ச்சியில்லாத கருத்துதான்; “பல லட்சம் வருடங்களுக்கு முன்னால்” என்பதைப் போன்ற ஒரு விஷயமே இல்லை. படைப்பைக் கூர்ந்து கவனிக்கும் ஒருவருக்கு, அனைத்தும் இப்போது இருக்கின்றது, அனைத்தும் இங்கேயே இருக்கின்றது. ஆகவே “இங்கு” என்பது எங்கே இருக்கிறது? நீங்கள் எங்கு அமர்ந்துள்ளீர்களோ அங்கே இருக்கிறதா? இல்லை. இது இங்கே, உங்களுக்குள்ளே உள்ளது. ஏனென்றால், உங்கள் அனுபவத்தில் உணரக்கூடிய இடம் இதுமட்டும்தான். இந்த பிரபஞ்சத்தில், உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒரே இடம் இது மட்டும்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைத் தவிர வேறெதுவுமே, என்றுமே உங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை; உங்கள் கண்களின் மூலமாக காட்சிப்படுத்தப்படும் விதமாக இல்லாமல், அவை எந்த விதத்தில் உள்ளனவோ அதே விதத்தில் பார்ப்பதற்கு அதிகமான பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும்.

ஆகவே, கர்மா என்பது எளிமையான ஒரு வார்த்தை அல்ல. “அது உன்னுடைய கர்மா” என்று நாம் சொல்லும்போது, பெருவெடிப்பும் கூட உங்களது கர்மாதான்; அதுவும் நீங்கள் செய்ததுதான். படைப்பின் ஆரம்பம் கூட உங்கள் செயல்தான், ஏனென்றால் அதுவும் உங்களுக்குள்ளேயே உள்ளது. விழிப்புணர்வு நிலை என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோமோ, அதில் எல்லாமே நிகழ்ந்தன. மேலும் அது உங்களுக்கு மாறுபாடான ஒன்று அல்ல, அது உங்களுக்கு அந்நியமானதல்ல – உங்களின் அடிப்படையே அதுதான். எனவே, நீங்களே படைப்பின் துவக்கமாகவும்கூட இருக்கிறீர்கள்.