பொருளடக்கம்
1. நாக பஞ்சமியின் முக்கியத்துவம் எதனால் குறைந்துவிட்டது?
2. நாக பஞ்சமியின் யோக அறிவியல் முக்கியத்துவம் மற்றும் மனித பரிணாமத்தின் மூன்று நிலைகள்
2.1 ஸ்வானா அல்லது நாய் - பிழைப்பில் புத்திசாலி
2.2 காகா அல்லது பறவை - அறிவு மற்றும் உணர்வுத்திறன்
2.3 நாகா அல்லது சர்ப்பம் - ஐம்புலன்களை தாண்டிய புரிந்துணர்வு
3. ஆன்மீகத்தில் நாகாவின் முக்கியத்துவம்
4. உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் சர்ப்பக்குறியீடு
5. நாகாவின் பன்னிரெண்டு பரிமாணங்கள்
6. புராணங்களில் ஆதிஷேஷா சர்ப்பம்
7. நாக பஞ்சமி - சத்குருவின் கவிதை

நாக பஞ்சமியின் முக்கியத்துவம் எதனால் குறைந்துவிட்டது?

சத்குரு:

நாக பஞ்சமி அல்லது நாகர பஞ்சமி என்று தென்னிந்தியாவில் அறியப்படுவது, ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களுள் ஒன்றாக இருந்தது. அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டதற்கான ஒரு காரணம், நாம் அனைவரும் மிகவும் தர்க்கவாதிகளாகிவிட்டோம். வாழ்வின் ஒரு சில அம்சங்களை நமது தர்க்கஅறிவு புரிந்துகொள்ள இயலாததால், அவற்றை நாம் விட்டுவிட முனைகிறோம்.

உலகம் முழுவதும் ஐரோப்பிய கல்விதான் ஒரு தரமான கல்விமுறை என்றானது முதல் இது நிகழ்ந்துகொண்டுள்ளது. அது வசதி, வாய்ப்புகள் மற்றும் சௌகரியங்களை உருவாக்கி ஒருவிதமான வளர்ச்சியை வழங்கியுள்ளது. ஆனால் வாழ்வுக்கான இந்த அணுகுமுறையின் விளைவுகளைப் பார்க்கும்போது, நாம் வாழும் பூமியையே நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு கலாச்சாரம் இருந்தது, அது இன்னமும் ஈஷா யோக மையத்தில் உயிர்ப்புடன் இருக்கின்றது. அங்கு கல்லில் கூட வசதியாக அமரும் விதமாக நமது உடல், மனம் மற்றும் சக்தியினை உருவாக்குவதை நாம் தேர்வு செய்கிறோம். நமக்கு மெத்தைகள் தேவைப்படுவதில்லை. ஒரு மெத்தை கிடைத்தால், அதை நாம் அனுபவிக்கிறோம், ஆனால் அதைத் தேடி நாம் போவதில்லை. அது நிகழ்ந்தது ஏனென்றால், வசதி வாய்ப்பு என்ற கருத்தை நாம் தர்க்கரீதியாக வளர்த்தெடுக்கவில்லை. வசதி, வாய்ப்பு என்ற கருத்தை, வாழ்வின் அனுபவரீதியான பரிமாணத்திலிருந்து வளர்த்தெடுத்தோம்.

எங்கெல்லாம் மக்கள் கண்களை மூடியவாறு அதிக நேரம் செலவழித்து, ஐம்புலன்களைத் தாண்டிய ஒன்றை உணர்ந்தார்களோ, அங்கு நாகா முதன்மையிடம் வகித்தது.

நாம் முற்றிலும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் உணரும் போது, பாறையின் மீது உட்கார்ந்தாலும் மிகவும் வசதியாக உணர முடியும் என்பது நமக்குத் தெரியும். நாம் துயரமாகவும், மனச்சோர்வுடனும் இருக்கும்போது, உலகின் சிறந்த மெத்தைகூட மிகவும் அசௌகரியத்தைத் தருகின்றது. இது உங்களுக்கு சௌகரியத்தை கொண்டுவரமுடியாது ஏனென்றால், நீங்கள் பிரித்துப்பார்த்து கிரகிக்கக்கூடிய ஒரு செயல்முறையாக, வாழ்க்கையைத் தவறாகப் புரிந்துள்ளீர்கள்.

நமது தர்க்கம் என்ற கத்தியால் அனைத்தையும் வெட்டி, பிரித்துப்பார்த்து உணரமுடியும் என்று நாம் நினைக்கிறோம். இதற்கான விலையை நாம் செலுத்திவிட்டோம், மேலும் தொடர்ந்து செலுத்தியும் வருகின்றோம். ஒரு சில விஷயங்களை நாம் சரிசெய்யவில்லை என்றால், வருங்கால சந்ததியினர் செலுத்தும் விலை மிகவும் பெரிதாக இருக்கும்.

சச்சரவு, போர், பசி பட்டினி, அனைத்திற்கும் மேலாக சுற்றுச்சூழல் சீர்கேடு என உலகம் தற்போது சந்தித்துவரும் போராட்டங்கள் அனைத்திற்கும் காரணம், வாழ்வைப்பற்றிய நமது கருத்து மிகவும் நேர்கோடாகிவிட்டதுதான். வாழ்க்கை எப்படி உள்ளதோ, அப்படிப் பார்க்க நாம் விரும்பவில்லை. நமது மனம் என்ற ஊசித்துவாரத்தில் பிரபஞ்சமே நுழைய வேண்டும் என்று விரும்புகிறோம். வாழ்வைப்பற்றிய புரிதல் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தபோது, இந்தக் கலாச்சாரத்தில் நாகபஞ்சமி அதிக முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களுள் ஒன்றாக இருந்தது.

யோகஅறிவியலில் நாக பஞ்சமியின் முக்கியத்துவம் மற்றும் மனித பரிணாமத்தின் மூன்று நிலைகள்

பரிணாம அளவுகோலின்படி, மூன்று நிலையிலான வளர்ச்சியை யோக அறிவியல் மிகவும் முக்கியமானது என்று கருதுகின்றது. ஒரு செல் உயிரியான அமீபாவிலிருந்து, இப்போது நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதுவரை, மூன்று விலங்குகள் இன்னமும் உங்களுக்குள் வெவ்வேறு வழிகளில் உயிர்ப்புடன் இருந்துகொண்டு, வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கின்றது. இவைகள் ஸ்வான, காக மற்றும் நாக என்று அழைக்கப்படுகின்றன.

யோகாவில், இந்த மூன்று பரிணாம வளர்ச்சிக் கட்டங்கள், உங்களுக்குள் முக்கியத்துவமான அடையாளங்களாக அறியப்படுகின்றது. அதன் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை நாக பஞ்சமி குறிக்கின்றது. உலகில் அதிபுத்திசாலியாக இருக்க விரும்புபவர்களுக்கு - ஸ்வானா. புறவாழ்வில் ஒரு பொதுக் கண்ணோட்டத்துடன் இருந்துகொண்டு, ஆனால் தங்களுக்குள் ஞானத்தன்மையை உணர விரும்புபவர்களுக்கு – காகா. வாழ்க்கைக்குள் தங்களையே மூழ்கடித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு - நாகா.

#1 ஸ்வானா அல்லது நாய் - பிழைப்பில் புத்திசாலி

ஸ்வானா என்றால் ஒரு நாய். பிழைத்தல் செயல்முறையில் மிகச் சிறப்பான ஒரு பாலுட்டி உயிரினம் இது. நெடுங்காலமாக, நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று மக்கள் கூறினார்கள். மனிதன் திறந்தவெளிகளில் இருந்தபோது, அவனது பிழைத்திருத்தலுக்கு நாய் உதவிகரமாக இருந்ததால், அதை செல்லப்பிராணியாக வைத்திருந்தான்; மோப்பசக்தி மற்றும் நுட்பமான ஒலியைக் கேட்பதில் ஒரு நாய் அதிகமான உணர்திறன் உடையது. யோகாவைப் பொறுத்தவரை, நாயின் தன்மையானது, அதன் சுவாசம் மற்றும் மூளையினால் வருகின்றது.

ஸ்வானா அம்சம் உங்களுக்குள் இருக்கும் குறிப்பிட்ட பரிமாணங்களைத் தூண்டிவிடுவதால் உங்களது பிழைப்பு செயல்முறை மிகவும் மேம்பட்டு நீங்கள் புத்திசாலியாகின்றீர்கள். புத்திசாலித்தனத்தை, நீங்கள் நுண்ணறிவு என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். நுண்ணறிவு என்பது அனைத்தையும் அரவணைத்துக்கொள்ளும் செயல்முறை. புத்திசாலித்தனம் என்பது மற்றவற்றுடன் போட்டியில் அல்லது மற்றவரைவிட சிறந்து இருப்பதைப் பற்றியது.

இத்தகைய பரிமாணம் உங்களுக்குள் இருக்கின்றது. மேலும் உங்களது சுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் கையாளுவதன் மூலம் ஸ்வானாவை செயல்படுத்தி, உங்களது மூளையில் பிழைத்திருத்தலின் உள்ளுணர்வை கூர்தீட்ட முடியும். இது ஏனென்றால், உங்களது சுவாசமும் மூளையும் இந்த அம்சத்துடன் அதிகமாக தொடர்புடையது.

#2 காகா அல்லது பறவை - அறிவு மற்றும் உணர்வுத்திறன்

அடுத்தது காகா, காகா என்றால் காகத்தை மட்டும் குறிப்பதல்ல, பொதுவாக ஒரு பறவையைக் குறிக்கிறது. ஸ்வானா அல்லது ஒரு நாய் இயல்பாகவே முகரும் மற்றும் கேட்கும் திறனில் மேலோங்கி இருக்கிறது. ஆனால் ஒரு பறவையிடம், பார்வைத்திறனும், உணர்வுகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

பறவைக்கு ஒரு தொலைதூரப் பார்வை இருக்கின்றது. அது உயரே பறப்பதால், பார்வையில் ஒரு தொலைவு ஏற்படுவதுடன், அதனால் கீழுள்ள பொருட்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பார்க்கவேண்டிய தேவையும் உள்ளது. இது பறவைக்கு ஒரு விதமான சூட்சும புத்தியை வழங்குகின்றது. பல சமூகங்களில், குறிப்பிட்ட பறவைகள் அறிவானவை என அங்கீகரிக்கப்படுகின்றன. இந்தியாவில், காகங்கள் முன்னோர்களின் அறிவைக் கொண்டிருப்பதாக அங்கீகரிக்கப்படுகின்றன. வேறு சில கலாச்சாரங்களில், ஆந்தை அறிவானதாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில், ஆந்தை முட்டாள்தனமானது எனக் கருதப்படுகின்றது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இவை அனைத்தும் கலாச்சாரரீதியானது. ஆனால் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் குறித்த பறவைப் பார்வை இருந்தால், பூமியில் தவழ்ந்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இல்லாத ஒரு பரந்தபார்வை உங்களுக்கு இருப்பதால், இயல்பாகவே நீங்கள் அறிவாளியாகிவிடுகிறீர்கள். அதனால் உலக விஷயங்கள் பற்றிய ஒரு விசாலமான அறிவை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அப்போது உங்களுக்குள் இருக்கும் காகாவை நீங்கள் செயல்படுத்துவது அவசியம்.

அடுத்த அம்சம் உணர்வுத்திறன். பறவை இறகினால் மூடப்பட்டுள்ளது. ஆனால் இறகுகளுக்கு உண்மையில் உயிரில்லை. இறகுகள் உயிர்ப்புடன் இருந்தாலும், பறவையின் மற்ற உடல் பாகங்களைப்போல அது இல்லை. அது உங்களது கேசத்தைப் போன்றது. ஒரு ஆழமான உணர்வைக் கொடுக்கும் விதமாக இறகுகள் பறவையின் உடலுக்குள் வேரூன்றியுள்ளன.

ஒரு பறவை இரவில் உறங்கிக்கொண்டு இருக்கும்போது, ஒரு பாம்பு மரத்தின் மேலேறி நகரத் துவங்கினால், அந்தச் சிறு இயக்கமே பறவைக்கு ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றது.பல நாட்கள் நான் மரத்தின் மேல் உறங்கியதுண்டு. அப்போது, இதை நான் கவனித்துள்ளேன். கண்கள் மூடிய நிலையிலேயே, பறவை தத்திச் செல்லும். தூங்கிக்கொண்டே கிளையின் நுனிக்குச் செல்லும். தூக்கத்தில் நடப்பவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று புரியும். அவற்றின் உணர்வுத்திறன் ஆழமாக இருப்பதால், சுற்றிலும் நிகழ்கின்ற சின்னச் சின்ன விஷயங்களையும் அவை கவனிக்கின்றன.

#3 நாகா அல்லது சர்ப்பம் - ஐம்புலன்களை தாண்டிய புரிந்துணர்வு

மூன்றாவது, நாகா அல்லது சர்ப்பம். உங்களது உடலியக்க நிலையில், நீங்கள் யார் என்பதன் உள்ளுணர்வான, கண்ணுக்கு தெரியாத அம்சங்களுடன் இது தொடர்புடையது. உங்களது செல்களின் நிலையில் நடக்கும் செயல்பாடுகளும், இரத்த ஓட்டமும் நாகாவுடன் தொடர்புடையவை. ஸ்வானா மற்றும் காகா உங்களது கேட்டல், நுகர்தல், பார்த்தல் மற்றும் உணரும் தன்மைகளை கூர்மைப்படுத்துவதைக் குறிக்கின்றது. ஆனால் நாகா உங்களது புலன்களால் உணர இயலாத ஒரு பரிமாணத்தைக் குறிக்கின்றது. இதனால்தான் யோகக் கலாச்சாரத்தில், நாகாவிற்கு அதிகபட்ச கவனம் வழங்கப்பட்டது. ஐந்து புலன்களும் தோற்கும் அந்த இடத்தில்தான் நாகாவின் செயல் தொடங்குகிறது.

ஆன்மீகத்தில் நாகாவின் முக்கியத்துவம்

அறிவாற்றல் என்பது இருக்கின்றது, மேலும் புரிந்துணர்தல் என்பதும் இருக்கின்றது. அறிவாற்றலுக்கு வல்லமையளித்தால், நீங்கள் மிகுந்த புத்திசாலியாக இருப்பீர்கள், ஆனால் உங்களைச் சுற்றி முட்டாள்கள் இருக்கவேண்டும்; இல்லையென்றால் நீங்கள் எப்படி புத்திசாலியாக இருப்பீர்கள்? வாழ்க்கையைப்பற்றிய எனது புரிதலில், கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதுதான் இருப்பதிலேயே முட்டாள்தனமானது. ஏனென்றால் பூமியை தவிர வேறு எங்கும் வங்கி சேவை இல்லை என்பதும், பூமியில் எனக்கான நேரம் குறுகியது என்பதும் எனக்குத் தெரியும். நான் ஏன் கோடிக்கணக்கில் பணம் சேர்க்க வேண்டும்? எதற்காக?

ஆனால் மக்கள் அதை மிகவும் புத்திசாலித்தனமானது என நினைக்கின்றார்கள். அதனால்தான்,“புத்திசாலி என்று உணர்வதற்கு உங்களைச் சுற்றிலும் முட்டாள்கள் தேவைப்படுகின்றனர்", என்று நான் கூறினேன். ஆனால் வாழ்க்கையை அதன் முழுமையான மேன்மையில், உங்களுக்கு நிகழ்வதற்கு நீங்கள் அனுமதித்தால், சமூகத்தில் நீங்கள் புத்திசாலி என்று கருதப்படமாட்டீர்கள். உங்கள் கண்களை மூடி இங்கே அமர்ந்தால், நீங்கள் புத்திசாலியும் இல்லை முட்டாளும் இல்லை, நீங்கள் வெறும் உயிர் மட்டும்தான். அதுதான் முக்கியம். எவ்வளவு துடிப்பான, துள்ளலான, ஆனந்தமான, அற்புதமான ஒரு உயிராக நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியமானது. இந்த ஒரு நோக்கத்தில், நாகா மிகவும் முக்கியமானது.

உங்களது உடலியக்க நிலையில், நீங்கள் யார் என்பதன் உள்ளுணர்வான, கண்ணுக்கு தெரியாத அம்சங்களுடன் இது தொடர்புடையது. உங்களது செல்களின் நிலையில் நடக்கும் செயல்பாடுகளும், இரத்த ஓட்டமும் நாகாவுடன் தொடர்புடையவை.

சர்ப்பத்தின் முக்கியத்துவத்தை இந்தவிதமாக நாம் பார்க்க முடியும். நீங்கள் தர்க்கரீதியானவராக இருக்கும்போது, வாழ்க்கையை கிரகித்துக்கொள்வதற்கு நீங்கள் முயலுகின்றீர்கள். நீங்கள் அதிகமான உள்ளுணர்வும், புரிந்துணரும் தன்மையும் கொண்டவராகும்போது, உங்களது கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைகளை அறிந்திருக்கும் காரணத்தால், வாழ்க்கை உங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு நீங்கள் விருப்பத்துடன் அனுமதிக்கிறீர்கள்.

இப்போதுகூட, நீங்கள்தான் வாழ்க்கையை நிகழ்த்துகிறீர்கள் என்று நினைக்க வேண்டாம்; வாழ்க்கைதான் உங்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விஷயம் வாழ்க்கைதான், அதில் எந்தக் கேள்வியும் இல்லை. அது தன்னிச்சையாக நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் என்னவென்றால், உடல் தொடர்ந்து செயல்படுவதற்காக ஏதோவொன்றை எடுத்து, அதை வயிற்றுக்குள் அனுப்புவது மட்டும்தான். அதற்கு எவ்வளவு போராட்டம்!

சர்ப்பத்தின் வழிமுறையை நாம் கைவிட்டதால் இது நிகழ்ந்துள்ளது. வாழ்க்கை நம்மை சுற்றி பின்னிக்கொள்வதற்கு நாம் அனுமதிப்பதில்லை. நாம் “அதனைக் கைக்கொள்ள” முயற்சிக்கிறோம். நீங்கள் அதனைச் சற்று தளர்த்தினால், வாழ்க்கை எப்போதும் உங்களை அரவணைக்கின்றது.

உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் சர்ப்பக் குறியீடு

எங்கெல்லாம் மக்கள் கண்களை மூடியவாறு அதிக நேரம் செலவழித்து, ஐம்புலன்களைத் தாண்டிய ஒன்றை உணர்ந்தார்களோ அங்கு நாகா முதன்மையிடம் வகித்தது. நமக்குள் எஞ்சியிருக்கும், பரிணாம எச்சத்தின் இந்தப் பரிமாணத்தைச் செயல்படுத்தி, புலன்களின் எல்லைகளைத் தாண்டி எப்படி நாம் வளர்ச்சியடைவது, என்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

விதிவிலக்கின்றி உலகெங்குமுள்ள அனைத்து கலாச்சாரங்களிலும், சர்ப்பம் குறித்த எண்ணற்ற புராணங்களும், மரபுசார் புனைவுக் குறியீடுகளும் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் மறைஞானப் பயணத்தில் சர்ப்பங்கள் எப்படி முக்கியப் பங்காற்றின என்பதைக்காட்டும் பல்வேறு தொல்பொருட்களின் வடிவில், இந்தக் குறியீடுகளை நீங்கள் பார்க்கமுடியும். ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா, எகிப்து, கிரேக்கம், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் நிச்சயமாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் சர்ப்பக் குறியீடுகள் இருக்கின்றன.

நாகாவின் பன்னிரெண்டு பரிமாணங்கள்

நாக பஞ்சமி, Naga Panchami in Tamil

இந்தியாவில் நாகாவின் பன்னிரெண்டு பரிமாணங்கள் வணங்கப்படுகின்றது. அவைஅனந்தா, வாசுகி, ஷேஷா, பத்மா, கம்பாலா, கார்க்கோடகன், அஸ்வத்ரா, திரிதராஷ்ட்ரா, சங்கல்பா, காலியா, தக்ஷகா மற்றும் பிங்கலா என்று அழைக்கப்படுகின்றன. இந்த பன்னிரண்டு அம்சங்களும், நாட்காட்டியின் பன்னிரண்டு அம்சங்களுடனும்கூட தொடர்புடையது.

புராணங்களில் ஆதிஷேஷா சர்ப்பம்

ஆதிஷேஷன், நாக பஞ்சமி, Naga Panchami in Tamil

சிவனின் கழுத்தைச் சுற்றியுள்ள சர்ப்பம், வாசுகி என்று குறிப்பிடப்படுகின்றது. விஷ்ணுவின் சர்ப்பம், ஷேஷா என்று குறிப்பிடப்படுகின்றது. உள்ளூர் இந்திய மொழிகளில், ‘ஷேஷா' என்பது மீதத்தைக் குறிப்பதற்கான இந்திய கணிதவியலின் ஒரு பொதுவான சொல்.இந்த சொல் மீதத்திற்குப் பயன்படுத்தப்படுவது ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட படைத்தல் முடிவடையும்போது, அந்தப் படைப்பின் மூலமான அம்சம் சிறிதளவு எஞ்சியிருந்து, அடுத்த படைப்புக்குள் முளைத்தெழுகின்றது, எஞ்சிய இந்த ஷேஷத்தின் மீதுதான் விஷ்ணு ஓய்வெடுக்கிறார். அதாவது, பராமரிப்பதற்கு படைப்பு இல்லாதபோது, அவர் ஷேஷத்தின் மீது அல்லது மீதத்தில் ஓய்வெடுக்கிறார்.

இது மேலும் ஆழமாகச் செல்கிறது, ஆனால் தற்போது பிரச்சனை என்னவென்றால் நான் ஆங்கில மொழியில் பேசவேண்டியிருப்பதுடன், அது தர்க்கரீதியானதாகவும் இருக்க வேண்டும். நாம் நன்றாக வாழ்வதற்கு, தர்க்க அறிவு ஒரு ஆற்றல்மிக்க வழியாக உள்ளது. ஆனால் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஊடுறுவுவதற்கு, தர்க்க அறிவு போதுமான சக்தி இல்லாதது. அது உங்களது தற்போதைய இருப்பின் பரிமாணத்தைத் தாண்டி உங்களை எடுத்துச் செல்லும் ஆற்றல் இல்லாதது.

ஆதிஷேஷா சுருண்ட நிலையிலிருந்து நீளும்போது, காலம் முன்னோக்கி நகருகின்றது என புராணம் கூறுகிறது. அதாவது, முந்தைய படைப்பிலிருந்து விடுபட்ட மீதம் தங்கியிருக்கும் நிலையில், சுருள் நிலையிலிருந்து நீளத் தொடங்கும்போது, அது ஆதிஷேஷா என்ற அழைக்கப்படுகின்றது, ஏனென்றால் அதுதான் முதல் மீதம். அது நீண்டு விரியத்தொடங்கும்போது, அடுத்த படைப்பு நிகழத் தொடங்குகின்றது என்பது அதன் அர்த்தம். வாழ்வின் மிக ஆழமான ஒரு அம்சம் குறியீட்டு வழிகளில் இவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது.

நாகர பஞ்சமி அல்லது நாக பஞ்சமி இதைத்தான் குறிக்கின்றது. உடலைதன்மை தாண்டியும், ஐம்புலன்களைத் தாண்டியும் வாழ்க்கையை ஊடுறுவி அறியும் விருப்பம் உள்ளவர்களுக்கு, இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது உணர்தல், தன்னையுணர்தல் அல்லது முக்தி குறித்தது மட்டும் அல்ல - இது அறிந்துகொள்ளுதல் குறித்தது.

அறியவேண்டும் என்று எல்லோரும் விரும்பாமல் இருக்கலாம். சிலர் முக்தியடைவதை மட்டும் விரும்புகின்றனர், மற்றபடி அறிதலில் அவர்கள் கவனம் கொள்வதில்லை. அது பரவாயில்லை. ஆனால் அறிந்துகொள்ளவேண்டும் என விரும்புபவர்களுக்கு, உங்களுக்குள் இருக்கும் இந்த பரிணாம மீதத்தின் அம்சம் மிகவும் முக்கியமானது. நீங்கள் குறியீட்டுடன் தொடர்பிலிருந்தாலும், இல்லையென்றாலும், அந்தப் பரிமாணத்தை நீங்கள் உயிரூட்ட வேண்டும். ஐம்புலன்களை தாண்டிய அம்சங்களை நீங்கள் அறிய விரும்பினால், சுருண்டிருக்கும் உங்களது ஆதிஷேஷா, சுருண்ட தன்மையிலிருந்து நீண்டு, நகர வேண்டும்.

இந்திய கலாச்சாரம் இதற்கு எப்போதும் மதிப்பளித்ததால், மக்கள் ஒருபோதும் சர்ப்பத்தினை கொல்வதில்லை. தற்செயலாக அதைக் கொன்றுவிட்டாலும், ஒரு மனிதருக்கு செய்வதைப் போல் சர்ப்பத்திற்கும் முறையான இறுதிச்சடங்குகள் செய்தனர். இது ஏனென்றால், ஒரு சர்ப்பம் என்றால் என்னவென்பதன் குறிப்பிட்ட அம்சங்களை அவர்கள் அறிந்திருந்தனர்.

நாக பஞ்சமி

சர்ப்பம் மட்டும் இல்லையென்றால்

அசையும் ஓர் ஆபரணமின்றி

ஆதியோகி இருந்திருப்பார்.

முதலாம் முட்டாள் தம்பதியர்

அடிமட்ட உடல்நோக்கமே மறுக்கப்பட்டு

செய்வதறியாது கைகளை பிசைந்திருந்திருப்பர்.

நான் படைத்தல் மற்றும் படைத்தவனின் வழிகளையும்

அறிந்திருக்க மாட்டேன்.

சிவனின் விருப்பம் வேகமாகவும்

சுமுகமாகவும் நடந்தேற

எப்போது கியர் மாற்றுவது

என்றும் அறிந்திருக்க மாட்டேன்.

சர்ப்பம் மட்டும் இல்லையென்றால்...