சத்குரு: திருதராஷ்டிரனுக்கு இயற்கையாகவே பார்வை இல்லை - அவனது மனைவி காந்தாரி பார்வையற்ற வாழ்க்கையை தானாக தேர்ந்து ஏற்றுக்கொண்டிருந்தாள். வரும் தலைமுறையினரில், முதலாவதாக பிறந்த குழந்தைக்கே அரசாளும் உரிமை கிடைக்கும் என்பதால் தன் சகோதரனின் மனைவியருக்கு முன்னதாக காந்தாரி குழந்தை பேறு அடைந்துவிட வேண்டும் என்ற பேராவலில் திருதராஷ்டிரன் இருந்தான். தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதை மனதில் கொண்டு காந்தாரியிடம் எப்போதும் இனிமையான சொற்களையே பேசி வந்தான். காந்தாரி கருவுற்றாள். மாதங்கள் உருண்டது. ஒன்பது, பத்து, பதினொன்று - ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இருவரின் ஏக்கமும் அதிகரித்தது. அப்போதுதான் பாண்டுவின் முதல் மகனாக யுதிஷ்டிரன் பிறந்த செய்தி வந்து சேர்கிறது. காந்தாரியும் திருதராஷ்டிரனும் மனச்சோர்வு அடைந்தனர்.

துர்சகுணங்கள் அணிவகுத்த பிறப்பு

முதலாவதாக பிறந்ததால், இயல்பாகவே அரசனாகும் தகுதியை யுதிஷ்டிரன் பெறுகிறான். பதினொரு மாதம் முடிந்து பன்னிரண்டு மாதம் ஆன பின்பும் காந்தாரியின் கருவில் இருந்த குழந்தை பிறக்கவில்லை. "என்ன இது, உயிரோடுதான் இருக்கிறதா? மனிதன் தானா அல்லது வேறு ஏதாவது பைசாசமா?" என கூவினாள் காந்தாரி. தாங்க முடியாத விரக்தியில் தன்‌ வயிற்றில் ஓங்கி அடித்தாள். அப்படியும் எதுவும் நடக்கவில்லை. தன் பணிப் பெண்ணிடம் கம்பு ஒன்றை எடுத்து வந்து தன் வயிற்றில் அடிக்கச் செய்தாள். கரு கலைந்து கருப்பு நிறத்தில் ஒரு சதைப்பிண்டம் வெளிவந்தது. அதை பார்த்தவர்கள் பார்த்த ஷணமே பீதியடைந்தார்கள். மனித தசை போலவே இல்லை அது - ஏதோ அசுபதன்மையும் தீங்கும் அதில் இருந்தது.

திடீரென மொத்த ஹஸ்தினாபுர நகரையும் திகைப்பும் மிரட்சியும் சூழ்ந்தது. தொடர்ந்து எங்கிருந்தோ நரிகள் ஊளையிடும் சப்தம்; தெருவில் காட்டுமிருகங்களின் நடமாட்டம்; பகல் வேளையிலேயே அங்குமிங்கும் அலைந்த வவ்வால்கள் என ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற உணர்வை ஏற்படுத்தியது. இதை கவனித்த சாதுக்கள் ஹஸ்தினாபுரம் விட்டு விலகினார்கள். மக்கள் மத்தியில் இந்த தகவலும் தீயாக பரவியது. விதுரர் திருதராஷ்டிரனிடம், "பெரும் அபாயத்தை நோக்கி நாம் செல்கிறோம்" என்றார். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த திருதராஷ்டிரன் "அதை விடு" என்றான். கண்ணால் பார்க்க முடியாத நிலையில் இருந்தாலும், திருதராஷ்டிரனையும் அசுப சகுணங்களின் ஒலி வந்து சேர்ந்தது. "என்ன நடக்கிறது? ஏன் எல்லோரும் அலறுகிறார்கள்? இது என்ன சப்தங்கள்?" என்றான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

100 மட்பாண்டங்களில் 100 புதல்வர்கள்

காந்தாரி வியாச முனிவரை அங்கே அழைத்தாள். முன்பு ஒருமுறை நீண்ட பயணம் செய்திருந்த வியாசருக்கு காலில் ரணம் ஏற்பட்டிருந்தது. அப்போது அவரை தங்கவைத்து, தேவையான மருத்துவ உதவி மற்றும் பணிவிடைகளை மிகச்சிறப்பாக காந்தாரி கவனித்து கொண்டாள். அதனால் வியாசர், "நீ என்ன விரும்புகிறாயோ அது உன்னையே சேருமாறு நான் செய்து விடுகிறேன்" என வாக்களித்திருந்தார். "எனக்கு 100 மகன்கள் வேண்டும்" என அப்போதே கேட்டிருந்தாள் காந்தாரி. "நீ விரும்பும்படியே 100 மகன்களை பெறுவாய்" என்று வியாசரும் வரமளித்திருந்தார். இப்போது கரு கலைந்த பிறகு, வியாசரை அழைத்த காந்தாரி, "என்ன இது? நீங்கள் தானே எனக்கு 100 மகன்கள் பிறப்பார்கள் என்று வரமளித்தீர்கள், ஆனால் நான் இப்போது ஒரு சதை பிண்டத்தை அல்லவா பெற்றிருக்கிறேன். இதை பார்த்தால் மனித அறிகுறியே தெரியவில்லை - வேறு ஏதோவாக இருக்கிறது. இதை காட்டில் வீசிவிடுங்கள். எங்கேயாவது புதைத்து விடுங்கள்" என்று அரற்றினாள்.

அமைதியான குரலில் வியாசர், "இதுவரை நான் சொன்ன எதுவும் பொய்த்ததில்லை. இனியும் பொய்க்கப் போவதில்லை. அந்த பிண்டத்தை எடுத்து வாருங்கள்," என்றார். பிண்டத்தை ஒரு நிலவறைக்குள் எடுத்துச் சென்ற வியாசர், 100 மட்பாண்டங்கள், நல்லெண்ணெய் மற்றும் பலவிதமான மூலிகைகளை எடுத்து வரச்சொன்னார். அந்த சதை பிண்டத்தை நூறு துண்டுகளாக நறுக்கி பானையிலிட்டு காற்றும் புகாதவாறு இறுக்கி கட்டினார். இன்னொரு சிறு சதை பகுதி மீதமிருந்ததை பார்த்தார் வியாசர். மேலும் ஒரு மண்பாண்டத்தை எடுத்து வரச்சொன்ன வியாசர், "இப்போது உனக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் பிறப்பாள்' என்றவாறே அந்த சதை துணுக்கை 101வது பானையில் இட்டு இறுக்கி கட்டி மற்ற பானைகளுடன் சேர்த்து நிலவறையில் வைத்தார். இன்னும் ஒரு வருடம் உருண்டோடியது. காந்தாரியின் கர்ப்பம் இரண்டு வருடங்கள் நீடித்ததாக கூறப்படுவது இதனால்தான் - ஒரு வருடம் கருவறையில், ஒரு வருடம் நிலவறையில்.

பாம்பு விழிகளுடன் பிறந்த குழந்தை

ஒரு வருடத்திற்கு பிறகு, முதல் பானை உடைந்தது. பெருத்த உருவத்துடன் ஒரு ஆண் குழந்தை பாம்பு கண்களுடன் பிறந்தது. அந்த குழந்தையின் கண்கள் இமைக்கவில்லை. நேராக நிலை குத்திய விழிகள் இலக்கின்றி வெறிப்பதாக இருந்தது. மீண்டும் துர்சகுணங்கள் ஏற்பட்டது; இரவில் நடக்க வேண்டியவை எல்லாம் பகலிலேயே நடந்தது. பார்வையற்ற திருதராஷ்டிரன் விதுரரிடம், "என்ன நடக்கிறது? ஏதும் சரியில்லையா? என் பிள்ளை பிறந்து விட்டானா? தயவுசெய்து சொல்" என்றான். "ஆம், உங்களுக்கு மகன் பிறந்துள்ளான்" என்றார் விதுரர். ஒவ்வொரு பானையும் மெதுவாக பொறிய துவங்கியது - எல்லா மகன்களும் வெளியே வந்தனர். ஒரு பானையில் இருந்து ஒரு பெண் குழந்தையும் அவர்களுடன் பிறந்தது.

விதுரர், "உனக்கு 100 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஆனால், உனது முதல் பிள்ளையை நீயே கொன்று‌விடு" என்றார். திருதராஷ்டிரன், "என்ன சொல்கிறாய்? என் முதல் மகனை நானே கொல்வதா? என்ன பேசுகிறாய் நீ?" என்றான். விதுரர், "உன் முதல் மகனை கொன்றால், உனக்கு, உன் குரு வம்சத்திற்கு, மனித குலத்திற்கு என எல்லா வகையிலும் நீ மிகப்பெரும் நன்மையை செய்கிறாய். அப்போதும் உனக்கு 99 மகன்களும் ஒரு மகளுமாக நூறு பிள்ளைகள் இருப்பார்கள். இந்த முதல் பிள்ளை மட்டும் இல்லையென்றால், அவர்களால் எந்த பிரச்சனையும் வராது. ஆனால், முதல் பிள்ளையுடன் சேர்ந்தால் அனைவரும் இந்த உலகையே அழிப்பவர்களாவார்கள்" என்றார்.

ஒதுக்கி தள்ளப்பட்ட சகுணங்கள்

அதே நேரத்தில் காந்தாரி முதலில் பிறந்த தங்களின் புதல்வன் துரியோதனனை அள்ளி எடுத்தாள். இந்த சகுணங்கள் எதையும் அவள் கேட்கவும் இல்லை, உணரவும் இல்லை. தனது முதல் பிள்ளை -அதுவும் ஆஜானுபாகுவான உருவுடன் பிறந்துவிட்டான் என்ற பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். குழந்தையை போஷாக்காக வளர்க்க வேண்டும் என்ற ஆவலும் காந்தாரியின் மனதில் அலைமோதிக்கொண்டு இருந்தது. விதுரர் துரியோதனின் பெற்றோரிடம் பேச துவங்கினார். "ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு தனிமனிதனை தியாகம் செய்யலாம் என்றும், ஒரு கிராமத்தின் நலனுக்காக ஒரு குடும்பத்தை தியாகம் செய்யலாம் என்றும், ஒரு தேசத்தின் நலனுக்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம் என்றும், அழிவற்ற ஆன்மாவுக்காக இந்த உலகையே கூட தியாகம் செய்யலாம் என்றும் விவேகம் உள்ளவர்கள் எப்போதும் அறிவுறுத்தியே வந்திருக்கிறார்கள்" என்றவர் தொடர்ந்து,"என் சகோதரனே, மனித குலத்தின் ஆன்மாவையே கறைபடுத்தி சீரழிக்க நரகத்தின் பிரதிநிதியாக இந்த பயங்கரம் உனக்கு குழந்தையாக வந்து பிறந்திருக்கிறது. இதை இப்போதே கொன்று விடு. இவன் ஒருவன் இல்லாமல் உனது மற்ற குழந்தைகள் எந்த அபாயமும் விளைவிக்க மாட்டார்கள். உன் வாரிசாக 99 இளவரசர்களும் ஒரு இளவரசியுமாக எப்படியும் நூறு ராஜ வம்சத்தினர் இருப்பார்கள். ஆனால், இந்த மூத்த பிள்ளையை மட்டும் நீ உயிருடன் விடக்கூடாது," என்றார். ஆனால் திருதராஷ்டிரனுக்கோ, தன் ரத்தத்தின் மீதும் சதையின் மீதும் ஏற்பட்டிருந்த பாசம் அவனது விவேகத்தைவிட பெரிதாக இருந்தது. எனவே, துரியோதனன் தன் நூறு உடன்பிறப்புகளுடன் ஹஸ்தினாபுர அரண்மனையில் வளர துவங்கினான். அதேநேரத்தில் அங்கே காட்டுக்குள் பாண்டவ சகோதரர்களும் வளர்ந்து வந்தார்கள்.

தொடரும்...