மஹாபாரதம் பிற பகுதி

இதுவரை: யுத்தம் முடிந்த பிறகு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் திரும்புகிறார்கள். திருதராஷ்டிரனும் காந்தாரியும், யுதிஷ்டிரனையும் பீமனையும் கொல்ல முயற்சித்து தோல்வியடைந்த பிறகு கானக வாழ்வில் ஈடுபட்டு காட்டுத்தீயில் தங்கள் முடிவை சந்திக்கிறார்கள்.

காந்தாரியின் சாபம்

சத்குரு: சத்யாகி, உத்தவன், கீர்த்திவர்மன் உள்ளிட்ட யாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு துவாரகை திரும்புகிறார் கிருஷ்ணர். அங்கே அவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை பிரம்மாண்டமாக எழுப்புகிறார்கள். யுத்தம் முடிந்து, யுதிஷ்டிரன் என நினைத்து துர்தாசனை‌ காந்தாரி எரித்த பிறகு, அரண்மனையில் இருந்து வெளியேறி கானகம் செல்வதற்கு முன்பாக கிருஷ்ணரிடம் வந்து, "இந்த மொத்த சூழ்நிலையிலும் நீதான் குற்றவாளி. நீ நினைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் அமைதியை நிலைநாட்டியிருக்க முடியும். பங்காளிகளுக்குள் இருந்த விரோதத்தையும் நீ நீர்த்துப்போகச் செய்திருக்கலாம். ஆனால் நீ பாண்டவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டு எனது மகன்கள் அனைவரின் இறப்பையும் உறுதி செய்தாய். இதேவிதமாக உனது யாதவ குலத்தினரின் முடிவும் அமையட்டும். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்கள் வம்சத்தை தாங்களாகவே அழித்துக் கொள்ளட்டும். கடவுளாக கருதப்பட்டு வணங்கப்படும் நீ, மற்றுமொரு சாதாரண மனிதனைப் போல் இறப்பாய். என் மகன்களுக்கு போர்க்களத்தில் கிடைத்ததைப் போன்ற ஒரு பராக்கிரம மரணம் உனக்கு கிடைக்காமல் போகட்டும். ஒரு சாதாரண மனிதனைப் போல நீ இறக்கவேண்டும். நீ கௌரவர்களுக்கு நடத்தியதைப் போலவே யாதவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மரணத்தை சந்திக்கட்டும்" என்றாள்.

தன் முகத்தில் அரும்பிய புன்முறுவலுடன் கிருஷ்ணர், "தாயே நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது எப்படியும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது, ஏனென்றால் யாதவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு, ஒருவரையொருவர் கொன்றுகொண்டாலன்றி வேறு யாரால் அவர்களுக்கு மரணத்தை வழங்க இயலும்? யாதவர்களை வேறு யாராலும் கொல்ல முடியாது. அவர்களாகவே சண்டையிட்டுக் கொண்டு மடிந்தால்தான் உண்டு, எனவே அது அப்படியே இருக்கட்டும். இந்த உலகத்திலிருந்து நான் எப்படி விடைபெறப் போகிறேன் என்பது எனக்கு ஒரு பொருட்டே இல்லை, ஏனென்றால் எப்படி வெளியேற வேண்டும் என்பது‌ நான் ஏற்கனவே அறிந்திருப்பது தான். என்னுடைய இறுதி காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுடையதைப் பற்றி கவனம் செலுத்துங்கள்" என்றார் கிருஷ்ணர்.

வெற்றியின் உச்சம் சாபமாகிறது

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யாதவ குலம் செழிப்பாக வளர்ந்தது. செழிப்பான நிலையை எட்டியதும் யாதவர்கள் மது போதையை நாடத் துவங்கினார்கள். துவாரகையில் ஒவ்வொரு இரவிலும் ஏதோ ஒரு விருந்து நடந்தது என்று கூறுவார்கள். தங்களிடமிருந்த ஒழுக்கத்தை அவர்கள் தொலைத்தார்கள். செல்வமும் செழிப்பும் இதுவரை அவர்கள் அனுபவித்த போராட்டங்களை எல்லாம் மறந்துபோகச் செய்தது. மதுராவிலிருந்து அவர்களை அழைத்து வந்து இங்கே புதிதாக ஒரு நகரை நிர்மாணிக்க கிருஷ்ணர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் மொத்தமாக மறந்தார்கள். குறிப்பாக அடுத்த தலைமுறையை சேர்ந்த யாதவர்கள் எந்த அக்கறையும் இல்லாதவர்களாக இருந்தார்கள்.

ஒருநாள், முனிவர்கள் சிலர் துவாரகைக்கு வந்தார்கள். கிருஷ்ணரின் மகன் சம்பா, ஒரு கர்ப்பிணி பெண்ணைப் போல தன்னை மாற்றிக்கொண்டு தன் நண்பர்களுடன் அவர்கள் முன் சென்றான். "எனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா?" என்று கேட்டான். அவனை உற்றுப் பார்த்த முனிவர்கள், "எங்கள் முன் இப்படி வருமளவு மதியற்றும், எங்கள் வழியில் குறுக்கிடும் ஆணவமும் கொண்டிருப்பதோடு எங்களை முட்டாளாக்கவும் நீ முயற்சிக்கிறாயா? நீ ஒரு இரும்பு உலக்கையை பிரசவிப்பாய், அந்த உலக்கை உனக்கும் இந்த கழி குலத்தினருக்கும் முடிவு கட்டும்" என்று சாபமிட்டார்கள். எனவே சாம்பவனுக்கு ஒரு இரும்பு உலக்கை பிறந்தது. எங்கே இந்த உலக்கை தங்கள் குலத்தை அழித்துவிடுமோ என்ற பயத்தில் அதை கடற்கரைக்கு எடுத்துச் சென்று உலக்கை மொத்தத்தையும் உடைத்து நொறுக்கி பொடியாக்கி கடலில் கரைத்தான் - ஒரே ஒரு சிறு இரும்பு துண்டைத் தவிர. அதற்கு மேல் அதை எதுவும் செய்ய முடியாததால் அதை அப்படியே விட்டுச் சென்றான். அந்த வழியாக வந்த வேடுவர் ஒருவர், கூர்மையான உலோகத் துண்டை பார்த்ததும் அம்பின் நுனியில் பொருத்துவதற்கு நல்ல ஒரு உலோகம் கிடைத்ததாக எண்ணி எடுத்து வைத்துக்கொண்டார். சாம்பன் கடலுக்குள் வீசியெறிந்த துகள்களை கடல் மீண்டும் கடற்கரைக்கு கொண்டு வந்து களைகள் முளைத்திருந்த ஒரு இடத்தில் தள்ளியது.

தற்பெருமையும் சுய அழிவும்

யாதவர்களின் சீர்கெட்ட வாழ்க்கை தொடர்ந்தது. அவர்கள் தினமும் மது போதையில் இருந்தார்கள். மக்கள் குடித்ததும், அதே பழைய பேச்சுக்களையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு இருந்தார்கள். எப்போது குடித்தாலும், குருசேத்திர போர் பற்றிப் பேசுவதே அவர்களது வழக்கமாக இருந்தது, "நான் எப்படி அவனை கொன்றேன் தெரியுமா!" அல்லது "அவனை நான் என்ன செய்தேன் தெரியுமா?" - இப்படி தன் புஜபல பராக்கிரமத்தைப் பறைசாற்றிக்கொள்ளும் ஆணவப் பேச்சும் தற்பெருமையும் தொடர்ந்தது - ஒரு கதையை விட அடுத்த கதை இன்னும் பெரிதாக இருந்தது. உடலில் சாராயத்தின் அளவு அதிகரிப்பதற்கு ஏற்ப கதையின் நீளமும் வளர்ந்துகொண்டே போனது. ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப அதே குப்பையை கிளறிக் கொண்டிருந்தார்கள். அது அவர்களுக்கு மட்டுமே அர்த்தமுள்ளதாக தோன்றியது, ஏனென்றால் அவர்களிடமிருந்த அர்த்தமுள்ள அனைத்தையும் அவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவர்கள் மீண்டும் குருசேத்திரப் போர் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். தற்பெருமையடித்துக் கொள்ளும் வேகத்தில் சத்யாகி கீர்த்திவர்மன் மீது பழி சுமத்தினான், "நீ கௌரவர்கள் பக்கம் இருந்தபடி எங்களுக்கு எதிராகத்தானே போர் செய்தாய். நீ ஒரு பயந்தாங்கொள்ளியாக இருந்ததால் மட்டுமே உன்னால் போர்க்களத்தில் பிழைத்திருக்க முடிந்தது. இல்லையென்றால் நான் உன் தலையை கொய்திருப்பேன்" என்று பழித்து பேசினான். எனவே இதற்கு பதில் அளிக்கும் விதமாக கீர்த்திவர்மன், "உன்னால் யாருடைய தலையை எடுக்க முடியும் என்பது எனக்கு தெரியும் - போரில் கையை இழந்த ஒரு முதியவனின் தலையை வேண்டுமானால் நீ சீவலாம். அதற்கே உன்னை வீரன் என்று நீ கூறிக்கொள்கிறாய்" என்றான். இருவருக்கும் இடையே விவாதமாக துவங்கியது, வாக்குவாதம் ஆகி, விதண்டாவாதமாக வளர்ந்து, பூசலாகி, சண்டையாகி யுத்தமாக வந்து நின்றது. இது இப்படியாகும் என்பதை முன்னதாகவே அறிந்திருந்த பலராமரும் கிருஷ்ணரும் யாதவர்களிடம் இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் பறித்திருந்தார்கள். நகரில் யாரிடமும் ஆயுதமே இல்லை. இல்லையென்றால் அவர்கள் அருந்திய மதுவின் அளவிற்கு எப்போதோ வாளை உருவிக்கொண்டோ அல்லது வில்லம்பை எடுத்தோ மற்றவர்கள் மீது பிரயோகித்திருப்பார்கள்.

இப்போது கைக்கு கிடைத்த‌ கம்புகளைக் கொண்டும், கிடைக்காதபோது வெறுங்கைகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள். அதுவும் போதவில்லை என்ற நிலையில், கடற்கரை ஓரமாக முளைத்திறந்த புதர்களில் இருந்த புற்களை‌ பிடுங்கி தாக்கத் தொடங்கினார்கள். அந்த புதர்களில் சாம்பன் முன்னர் கடலில் கரைத்திருந்த உலக்கையின் இரும்புத் துகள்கள் படிந்திருந்தது. அந்த புற்கள் எஃகு போன்ற உறுதியோடு இருந்ததாக கூறுவார்கள். அந்த புற்களால் அடித்துக்கொண்ட யாதவர்கள் ஒருவரையொருவர் கொன்றார்கள். ஒருவிதமான உள்நாட்டு போர் போன்ற சூழலில் யாதவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள். யாதவ குலத்தினரில் விரல்விட்டு எண்ணும் அளவு ஒரு சிலர் மட்டுமே எஞ்சினார்கள். 

பலராமர் மற்றும் கிருஷ்ணரின் இறப்பு

பெரும் நகரமாக திகழ்ந்த துவாரகை முழுவதும் விதவைகள், தாய்மார்கள், குழந்தைகளின் கூக்குரலால் நிறைந்தது. ஏனென்றால் பெரும்பாலான யாதவ ஆண்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கொன்றிருந்தார்கள். இதைப் பார்த்த பலராமர் மிகவும் வருத்தமடைந்து தனது உடலை விட முடிவு செய்தார். உடலை நீங்கியதும் பலராமர் பெரும் நாகமாக உருவெடுத்தார். விஷ்ணு வாசம் செய்யும் ஆதிசேஷனாக பலராமர் வடிவமெடுத்ததாகக் கூறுவார்கள். தனது குழந்தைகளான பிரத்யும்னன், சாம்பன் உட்பட அனைவரும் தங்களுக்குள் மோதிக் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். சிறிது சோகம் இருந்தாலும், எப்போதும் போல் இப்போதும் கிருஷ்ணர் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. அனைத்தும் ஏற்கனவே நிர்ணயித்தபடியே நடந்து கொண்டிருந்தது, அப்படித்தான் அது நடக்கவும் வேண்டும்.

கிருஷ்ணர் நடந்து சென்று ஒரு ஆலமரத்தின் அடியில் கால்களை நீட்டி அமர்ந்தபடி மெதுவாக காலாட்டத் துவங்கினார். கானகத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்த வேடுவனுக்கு புதர்களின் ஊடாக இந்த அசைவு தென்பட்டது. அந்த அசைவு ஒரு மானின் இருப்பாக இருக்கக்கூடும் என்று கருதி அம்பை எய்தான். கிருஷ்ணரின் குதிகாலை அம்பு துளைத்தது. அந்த அம்பின் முனையில் இருந்தது முன்னொரு சமயம் கடற்கரை மணலில் கூர்மையான உலோகத்துண்டு என்று அந்த வேடுவன் பத்திரப்படுத்திய அதே இரும்பு துண்டு தான். திடீரென்று குதிகாலில் அம்பு துளைத்த அதிர்ச்சியிலும் வலியிலும் கிருஷ்ணரின் உடல் சற்று முறுக்கிக் கொண்டது, பிறகு ஒரு புன்னகையுடன் தன் கண்களை மூடினார். அப்படியே உடலை விட்டு நீங்கினார் கிருஷ்ணர்.

அர்ஜுனன் அடைந்த உச்சபட்ச தோல்வி 

இந்த பேரழிவை கேள்விப்பட்ட அர்ஜுனன் அஸ்தினாபுரத்தில் இருந்து துவாரகைக்கு விரைந்தான். நகரில் பெண்களும், குழந்தைகளும், ஒரு சில முதியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதை கண்ட அர்ஜுனன் அவர்களை அஸ்தினாபுரம் அழைத்துச் செல்வதே சிறந்தது என்று முடிவு செய்தான். அனைவரையும் அழைத்துக்கொண்டு அர்ஜுனன் அஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான். வழியில், சில வழிப்பறி கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்துகொண்டு தாக்கி, அவர்களிடமிருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டு, இளம்பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்து சென்றார்கள். பெரும் வீரனான அர்ஜுனன் தன் காண்டீபத்தை எடுத்து அவர்களுடன் சண்டையிட முயற்சித்தான். ஆனால் திடீரென்று தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதைக் கண்டான்.

அதுவரையில் பெரும் வில்லாளியாகவும் மாபெரும் வீரனுமாக அறியப்பட்டிருந்த அர்ஜுனனாக இப்போது அவன் இல்லை. சாதாரண வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து யாதவ குல பெண்களையும் குழந்தைகளையும் கூட அவனால் இப்போது காப்பாற்ற முடியவில்லை. இது அர்ஜுனனுக்கு பெருத்த அவமானத்தைக்‌ கொடுத்தது. மனவேதனையை தாங்க முடியாமல் தரையில் விழுந்து அழுதான். "இது ஏன் இப்படி நடக்க வேண்டும்? என்னை நம்பி வந்த பெண்களையும் குழந்தைகளும் காப்பாற்றும் அளவுக்கு கூட என் வில்வித்தையை பயன்படுத்த முடியாமல் போனதே. இதற்கு நான் போர்க்களத்திலேயே இறந்திருக்கலாமே. நான் ஏன் இதையெல்லாம் சந்திக்க நேர்கிறது?" கதறியபடி அர்ஜுனன் தரையில் விழுந்து புரண்டான்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.