மஹாபாரதம் பிற பகுதி

கேள்வியாளர்: மஹாபாரதம் நிகழ்ந்த காலத்தில் இரு சேனைகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தார்கள். இன்று மனிதகுலம் பெருகி, எழுநூறு
கோடி மக்கள் இந்த பூமியில் வசிக்கிறார்கள். இதில், பழைய - புதிய ஆத்மாக்கள் எவை என்பதையும், இந்த புதிய ஆத்மாக்கள் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றியும் சற்று விளக்க முடியுமா?

சத்குரு: இந்த புதிய ஆத்மாக்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், உங்கள் உடல் என்பது எப்படி பொருள் தன்மையானதோ, அதே விதமாக உங்கள் மனம் என்பதும் பொருள் தன்மையானது தான். உங்கள் உடலும் மனமும் பொருள் தன்மையானது என்பதாலும், உங்கள் அனுபவம் பொருள் தன்மையானவற்றுடன் மட்டுமே நிகழ்கிறது என்பதாலும், இது எப்போது துவங்கியது - எப்போது முடியும் என்ற ரீதியிலேயே நீங்கள் அனைத்தையும் சிந்திக்கிறீர்கள். பொருள் தன்மையில் உள்ள அனைத்திற்கும் ஒரு துவக்கமும் முடிவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் எப்போது "ஆத்மா" என்று பேசுகிறீர்களோ, இன்று அது சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது, அப்போது நாம் பொருள் தன்மையானதைப் பற்றி பேசவில்லை. வழக்கமாக நான் எப்போதுமே ஆத்மா என்ற வார்த்தையை பயன்படுத்துவதே இல்லை என்றாலும், இப்போது ஆத்மா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நீங்கள் யார் என்பதன் பொருளற்ற தன்மையின் பரிணாமம் பற்றி விளக்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். எது பொருள்தன்மையாக இல்லையோ, அதற்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. எது பொருள்தன்மையில் இல்லையோ, அது இல்லை என்று தானே அர்த்தம், ஏனென்றால் உங்களைப் பொறுத்தவரையில் ஏதோ ஒன்று படைத்தலில் இருக்கிறது என்றால் அது பொருள் வடிவில், தன்மையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். எது பொருள்தன்மையில் இல்லையோ, அதை வெற்றிடம் என்று தான் நீங்கள் அழைக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் எப்போது "ஆத்மா" என்று பேசுகிறீர்களோ, இன்று அது சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது, அப்போது நாம் பொருள் தன்மையானதைப் பற்றி பேசவில்லை.

எது இல்லையோ அல்லது எது பொருளற்ற தன்மையாக இருக்கிறதோ, அதற்கு துவக்கம் என்பதே இருக்க முடியாது. அதற்கு ஆரம்பமே இல்லை என்றால், அது புதியதாகவோ அல்லது பழையதாகவோ இருக்க முடியாது. அப்படிப்பட்ட வழக்கங்கள் எதுவும் இங்கே பொருந்தாது. இதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், உங்களிடம் எடை பார்க்கும் கருவி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் எடையை பார்க்க விரும்பி, அதன் மீது ஏறி நின்றீர்கள். மிகத் துல்லியமாக உங்கள் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் வரையறுத்து வைத்திருக்கிறார்களோ அதே அளவு இருக்கிறது. நீங்கள் திருப்தியாக கீழே இறங்கினீர்கள். அடுத்ததாக இந்த பூமித்தாய் எப்படி இருக்கிறாள் என்பதை பார்க்க நினைத்து, அந்த எடை பார்க்கும் கருவியை தலைகீழாக திருப்பி வைத்தீர்கள். தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், பூமி பந்தானது அந்த எடை பார்க்கும் கருவியின் மீது தான் இருக்கிறது. மக்கள் ஏன் சிரசாசனம் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? - ஏனென்றால் இந்த பூமியின் எடையை தங்கள் தலை மீது சுமந்தால் எப்படியிருக்கும் என்று பார்க்க விரும்புகிறார்கள். சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை சற்று தொலைவில் இருந்து ஒரு புகைப்படம் எடுத்து, அதை தலைகீழாக திருப்பிப் பார்த்தீர்கள் என்றால் இந்த பூமிப்பந்தை அவர் சுமப்பது போல தான் தெரியும். எனவே நீங்கள் எடை பார்க்கும் கருவியை தலைகீழாக திருப்பி வைத்துப் பார்த்தால், அந்த எடை பார்க்கும் கருவியின் எடை தான் உங்களுக்கு தெரியக்கூடும். பூமிப்பந்தின் எடை உங்களுக்கு கிடைக்காது.

இப்போது அது இப்படித்தான் இருக்கிறது: உங்கள் மனதின் வழியாக பொருள்தன்மையில் இல்லாத ஒன்றை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். இது எடை பார்க்கும் கருவியைக் கொண்டு இந்த பூமிப்பந்தின் எடையை அளவிடுவதைப் போன்றது. நீங்கள் அதன்மேல் நின்றால், அது உங்களின் சரியான எடையைக் காட்டும், ஆனால் பூமித்தாயை அந்த கருவியின் மீது அமர வைக்க முயற்சித்தால் அது வேலை செய்யாது. ஏனென்றால் அந்த கருவி அப்படி வேலை செய்வதில்லை. எனவே நீங்கள் "ஆத்மா" என்ற வார்த்தையை உச்சரிக்கையில் எண்ணிக்கையைப் பற்றி பேசக்கூடாது. எண்ணிக்கையும், பொருளற்ற தன்மையின் இயல்பும் எப்போதும் இணைந்து செல்ல முடியாது. எண்ணிக்கைகள் எப்போதுமே பொருள் தன்மையானவற்றை குறிப்பிட மட்டுமே பொருந்தும். எத்தனை காலமாக, எவ்வளவு தூரம், எவ்வளவு பெரியது, எவ்வளவு சிறியது - இவை எல்லாமே படைத்தலில் பொருள்தன்மையில் உள்ளவற்றை மட்டுமே குறிக்கும். பொருளற்ற தன்மைக்கு பொருந்தாது. எனவே உங்களிடம் யாராவது வந்து இப்படி கேட்டால், அசர வேண்டாம். அவர்களிடம் பதிலுக்கு சும்மா இப்படி கேளுங்கள், "பூச்சியினங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?" இதுதான் சகாதேவனின் ஞானம்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.