இதுவரை: பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை தொடர்கிறார்கள். அவர்களை காட்டுக்குள்ளேயே வேட்டையாட துரியோதனனும் கர்ணனும் திட்டமிட, அதை விதுரரின் ஆலோசனைப்படி தடுக்கிறான் திருதராஷ்டிரன். அடுத்து, துர்வாசர் மூலம் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சாபம் கிடைக்குமாறு வழி செய்கிறான் துரியோதனன், ஆனால் அதுவும் தோல்வியடைகிறது.

சத்குரு: பாண்டவர்களின் வாழ்க்கை காட்டுக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தன் தந்தை வேட்டையை தடுத்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான் துரியோதனன். அப்போது கர்ணன், "அவர்கள் ஏற்கனவே தோற்றுக் கிடக்கிறார்கள் - அவர்களை நாம் தேடிச்சென்று கொல்ல வேண்டியதில்லை. அவர்களை கொன்று விட்டால் அவர்கள் வேதனையடைவதை நீயே தடுத்து விடுவாய். ஒரு மனிதன் தோற்று விட்டால், அவனுக்கு ஏற்படக்கூடிய மோசமான நிலை, அவனை வென்றவன் அவன் கண் முன் செருக்கோடு உலா வருவதுதான். எனவே நாம் சென்று அவர்கள் முன் நடமாடுவோம். நமது வெற்றியை நாம் ரசிப்போம்; அவர்களது தோல்வியில் அவர்கள் வேதனை அடையட்டும். நாம் சும்மா போய்‌ அவர்களைப் பார்த்து நமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம், அதை அனுபவிப்போம். அவ்வளவு தூரம் சென்று அவர்களை எதற்கு கொல்ல வேண்டும்?" என்று பேசி முடித்தான். எனவே அவர்கள் புதிதாக வேறு ஒரு திட்டம் தீட்டினார்கள்.

அடுத்து துரியோதனன் நேராக திருதராஷ்டிரனிடம் சென்று, "தந்தையே, நம் தேசத்தில் உள்ள பசுக்களை நாம் கணக்கெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் - நமது ஆயர்குடி சமூகத்தில் இது வழக்கம்தான் - நம்மிடம் லட்சக்கணக்கில் கால்நடைகள் இருக்கிறது, அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ளவும் முடியாது. அதோடு, கால்நடைகளின் எண்ணிக்கையை கொண்டு நமது தற்போதைய சொத்து மதிப்பு என்ன என்பதையும் நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்" என்று பேசினான். பசுக்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் யாருக்கும்‌ எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே, துரியோதனன், கர்ணன், சகுனி, துச்சாதனன் என அனைவரும் தங்கள் குடும்பத்துடனும், அரச பரிவாரங்களுடனும் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று தங்கி பசுக்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க தயாரானார்கள். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் அது சுற்றுலாவாகவும் இருந்தது, அதே சமயம் தேவையான செயலும் நடக்கும்படி ஏற்பாடானது. அனைவரும்‌ பாண்டவர்கள் வசித்த வனப்பகுதிக்கு அருகிலுள்ள பசுக்களை முதலில் கணக்கெடுக்க வந்து சேர்ந்தார்கள்‌; இங்கே வருவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது என்பதுதான் உண்மை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர்கள் பாண்டவர்கள் இருக்குடமித்தில் இருந்து மிக தூரமில்லாதபடி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தங்கினார்கள். அவர்களிடம் எல்லாமும் இருந்தது - சமையற்காரர்கள் சமைத்தார்கள், பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள், ஆடல் பாடல் என்று அந்த இடமே அமர்க்களப்ப்டடுக் கொண்டிருந்தது. ஏதோ சத்தம் கேட்கிறதே என்று வனத்தின் எல்லைக்கு வந்து எட்டிப் பார்த்த நகுலனின் கண்களில் புதிதாக முளைத்திருந்த கௌரவர்களின் கூடாரம் தென்பட்டது. திரும்பிச் சென்று, தான் பார்த்ததை தன் சகோதரர்களிடம் தெரிவித்தான். உடனடியாக பீமனும் அர்ஜுனனும் தங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள். "அவர்கள் இங்கே சும்மா ஒன்றும் வேடிக்கைக்காக வரவில்லை. நமக்கு பாதிப்பை ஏற்படுத்தவே வந்திருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதைவிட, அவர்களை முந்திக் கொண்டு நாமே முதலில் தாக்குதலை துவங்கி அவர்கள் கதையை முடித்து விடுவது தான் சிறந்தது" என்றார்கள். அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுவிட்டு, "அது நமது தர்மம் இல்லை. 12 வருட வனவாச வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுதான் நாம் இங்கே வந்திருக்கிறோம் -அதை நாம் கடைபிடிப்போம். நமது சகோதரர்கள் நம்மைத் தாக்கும் எண்ணமே இல்லாமல்கூட வந்திருக்கலாம். அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. அவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று நாம் ஏன் கற்பனை செய்ய வேண்டும்?" என்றார் யுதிஷ்டிரன்.

"தன் எதிரியிடமும் கருணையோடு நடந்து கொள்வதை விட பேரின்பம் ஏதாவது இருக்கிறதா என்ன? அங்கு சென்று அதை நீங்களும் அனுபவியுங்கள்!

அன்று மாலைப்பொழுதில், சித்திரசேனன் என்ற பெயருடைய ஒரு கந்தர்வன் தனது பரிவாரங்களுடன் கௌரவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்களுக்கு இடையே ஒரு விதமான மோதல் உருவானது. கௌரவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கந்தர்வர்கள் பறித்துக் கொண்டார்கள். சில போர் வீரர்களைக் கொன்றது மட்டுமில்லாமல், பெண்களைத் தவிர மற்ற அனைவரையும் கட்டிப் போட்டார்கள். இந்த தகவல் பாண்டவர்களை சென்றடைந்தது. நான்கு சகோதரர்களும் உற்சாகம் அடைந்தார்கள். "நிச்சயமாக அவர்கள் ஏதோ கெட்ட நோக்கத்துடன் தான் வந்திருக்க வேண்டும்." "அவர்கள் மனதில் வேறு ஏதோ திட்டம் இருந்திருக்கிறது." "அவர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்களா... நல்லது." ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள். ஆனால் யுதிஷ்டிரன், "நாம் இதை அனுமதிக்க முடியாது. அவர்கள் நமது சகோதரர்கள். நாம் சென்று அந்த கந்தர்வர்களுடன் போரிட வேண்டும். ஏனென்றால் நமது சகோதரர்களை அவர்கள் அவமானப்படுத்தி விட்டார்கள்." என்றான்.

ஆவேசமடைந்தான் பீமன். "அவமானத்தை பற்றி நீ பேசுகிறாயா? அவமானம் என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா? உனக்குள் அப்படி ஏதாவது வைத்திருக்கிறாயா?" என முழங்கினான். பெருத்த குரலில் வாக்குவாதம் நடந்தது, ஆனால் மூத்த சகோதரனாக யுதிஷ்டிரன், "எது எப்படி வேண்டுமனாலும் இருக்கட்டும். இப்போது போய் அவர்களை விடுதலை செய்யுங்கள். அந்த கந்தர்வன் யாராக இருந்தாலும் சரி - போர் செய்யுங்கள்" என்றான். கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தான் பீமன்; அர்ஜுனனுக்கும் செல்ல விருப்பமில்லை. அப்போது யுதிஷ்டிரன், "தன் எதிரியிடமும் கருணையோடு நடந்து கொள்வதை விட பேரின்பம் ஏதாவது இருக்கிறதா என்ன? அங்கு சென்று அதை நீங்களும் அனுபவியுங்கள்! நான் என்ன சொல்ல வருகிறேன் என்றே தெரியாமல் ஏன் எதிர்க்கிறீர்கள்" என்றார். சட்டென்று அவர்களுக்கு ஏதோ பிடிபட்டது போல் உணர்ந்தார்கள், "ஆமாம் இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நாம் சென்று அவர்களை விடுதலை செய்வது நன்றாகத்தான் இருக்கும்!" என்று கிளம்பினார்கள்.

கௌரவர்களை காப்பாற்ற விரைந்து சென்றார்கள். அவர்கள் அங்கே சென்று பார்த்த போது, துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி மற்றும் பலரும் கைகளும் கால்களும் கட்டப்பட்டு தரையில் கிடந்தார்கள். கௌரவர்களை கேலி‌ செய்தபடி, அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவையும் உண்டுவிட்டு, அவர்களை அங்குமிங்கும் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள் கந்தர்வர்கள். ஷத்திரியர்கள் என்பதற்காக அவர்களுக்கு எந்த மரியாதையும் தரவில்லை கந்தர்வர்கள் (ஏனெனில் அவர்கள் இந்த நிலத்தை சார்ந்தவர்கள் இல்லை). கந்தர்வர்களுடன் போரிட தயாரான அர்ஜுனன், மின்னல் வேகத்தில் தாக்கத் துவங்கி சித்திரசேனனை தோற்கடித்தான். தன் தோல்வியை ஏற்றுக்கொண்ட சித்திரசேனன் அங்கிருந்து அகலும் முன் அர்ஜுனனுக்கு பல பரிசுகளை அளித்தான். பிற்பாடு இந்திரனின் அரண்மனையில் அர்ஜுனனுக்கு ஆடல், பாடல் ஆசிரியனாக அமர்ந்தான் சித்திரசேனன்.

கௌரவர்களை கருணையோடு பார்த்தபடி, அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டியிருந்த கயிறுகளை வெட்டி வீசி விடுதலை செய்தார்கள் பாண்டவர்கள். அந்த கணம் துரியோதனனுக்கு மிகக் கொடுமையாக இருந்தது. பாண்டவர்கள் அங்கிருந்து அகன்றதும் கதறியழுதான். கர்ணனைப் பார்த்து, "இனிமேலும் உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை! நான் இறக்க வேண்டும்" என்றான். துச்சாதனனை அழைத்து கெஞ்சலோடு வலியுறுத்தி பேச துவங்கினான், "என் சகோதரா, நீ ஹஸ்தினாபுரம் திரும்பு. என்னிடத்தில் நீ அரசனாக இரு. கர்ணனையும் சகுனியையும் பக்கபலமாக கொண்டு நல்லவிதமாக ஆட்சி செலுத்து. எப்போதும் உன் நண்பர்களுக்கு ஒரு சரணாலயமாக இரு, உனது அந்தணர்களிடம் தயாள குணத்தோடு நடந்துகொள். ஒரு குற்றத்திற்கு நீதி சொல்லும் போது, அதில் நீதியும், கருணையும் இருக்கும்படி பாரத்துக்கொள். நடுநிலையாக எப்படி நடந்து கொள்வது என்பதை நமது சித்தப்பா விதுரரை விட வேறு யாரும் உனக்கு கற்றுக்கொடுத்து விட முடியாது. நீ செல். நான் வருவதாக இல்லை‌. இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. என் கைகளும் கால்களும் கட்டுண்டிருந்த நிலையில், பாண்டவர்கள் வந்து என்னை விடுதலை செய்ய வேண்டியிருந்தது என்ற அவமானத்தோடு என்னால் வாழ முடியாது." அவர்கள் பலவாறாக எடுத்துக்கூறி சமாதானம் செய்ய முயற்சித்தார்கள், ஆனாலும் அவன் ஹஸ்தினாபுரம் வர மறுத்தான். எனவே அங்கேயே, ஒரு குளக்கரையில் தனி ஒருவனாக தங்கினான் துரியோதனன்.

மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனை போல் நடந்து கொண்டான் துரியோதனன். ஒரு மாத காலத்திற்கும் மேலாக காட்டிற்குள்ளேயே கத்திக்கொண்டும், ஓலமிட்டுக்கொண்டும், இறக்க வேண்டும் என்ற ஆவேசத்தோடு சுற்றியலைந்தான். ஆனால் எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை. பிறகு தன் உடலை விட்டுவிட முடிவு செய்தான். அவன்‌ ஏதோ கொஞ்சம் கற்றிருந்த சாதனா மூலம் கால்களை மடக்கி அமர்ந்து வேண்டிக் கொள்ளத் துவங்கினான். சில நாட்களில் அவனது உடல் உருக்குலையத் துவங்கியது. பிறகு ஒரு பூத உருவம் தோன்றியது. அவள் பனை மரத்தை விடவும் உயரமாக இருந்தாள், "நரகாசுரனின் ஆன்மா கர்ணனின் உடலுக்குள் புகுந்துள்ளது. எனவே கவலை வேண்டாம். எதாவது ஒரு வழியில், ஒரு நாள் கர்ணன் அர்ஜூனனைக் கொல்வான்" என்று அதிரும் குரலில் பேசியது. இதை கேட்டதுமே, வாழ வேண்டும் என்ற உற்சாகம் துரியோதனனுக்குள் புகுந்தது. மீண்டும் ஹஸ்தினாபுரம் சென்றான்.

கந்தர்வர்களுடனான மோதலின் போது, அர்ஜூனன் எப்போதும் போலவே சூறாவளியின் பலமும், மின்னல் வேகமும் சேர்ந்தாற்போல் சுழன்றான். அர்ஜூனனின் செயல் வேகம் பற்றி மஹாபாரதத்தில் குறிப்பிடும் போது, வில்லையும் அம்பையும் கையில் எடுத்துவிட்டால், அர்ஜூனன் அங்கிருப்பதே புலப்படாத வகையில் அவன் உருவம் உங்கள்‌ பார்வையில் தெளிவின்றி கலங்கலாக தெரியும் என்று விவரிக்கிறது. அவனது கரங்கள் என்ன செய்கிறது என்பதையே உங்களால் காண முடியாது -அவன் செயல்படும் விதம் அவ்வளவு வேகமாகவும், அவ்வளவு துல்லியமாகவும் இருந்தது. தனது போர்க்கருவிகளை கையாள்வது மட்டுமே அவனறிந்திருந்த வாழ்வின் ஒரே நிறைவு. மற்ற நேரங்களில் மிக அமைதியான மனிதனாக இருந்தான் அர்ஜூனன்.

தொடரும்...