இதுவரை: பாண்டவர்கள் பன்னிரண்டு வருட வனவாசமும் ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள கானகம் செல்கிறார்கள். திரௌபதிக்கு அட்சய பாத்திரத்தை வழங்கும் சூரிய தேவன், அவள் உணவு உண்டதும் அட்சய பாத்திரத்திலிருந்து அன்றைய நாளுக்கான உணவு வருவது நின்றுவிடும் என்ற நிபந்தனையையும் விதிக்கிறார். கர்ணனின் துணையோடு, நிராயுதபாணிகளான பாண்டவர்களை காட்டுக்குள்ளேயே வேட்டையாடிவிட முயற்சிக்கும் துரியோதனனின் திட்டத்தை திருதராஷ்டிரன் மூலம் தடுக்கிறார் விதுரர்.

சத்குரு: துர்வாச முனிவர் ஹஸ்தினாபுரத்திற்கு வந்தார். ஏற்கனவே மிகக் கோபக்காரர் என்று பெயர் பெற்றவர் அவர். மிகச் சிறிய விஷயத்திற்கு கூட அவர் ஆவேசமடைந்து மக்களை சபித்துவிடுவார். மஹாபாரதத்தில் மட்டுமின்றி, ராமாயணத்திலும் அவரது சாபங்கள் நிறைந்திருக்கிறது. அவர் எங்கே சென்றாலும், அவர் மனம் குளிர்ந்துவிட்டால், குளர்வித்தவர்களுக்கு வரம் வழங்குபவராகவும் இருந்தார். துஷ்யந்தனை எதிர்பார்த்து காத்திருந்தது, தன் வருகையை கவனிக்காமல் விட்ட சகுந்தலையை சபித்தவரும் இவர்தான். குந்திக்கு, அவள் விருப்பப்படி யார் மூலமாக வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் எனும் வரமளித்து மந்திரத்தை உபதேசித்தவர் இவர்தான். எனவே துர்வாசர் எங்கே சென்றாலும் அவருக்கு கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, கத்தி மேல் நடக்கும் கவனத்துடன் அனைவரும் அவரை அணுகினார்கள்.

துர்வாசர் ஹஸ்தினாபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டதுமே, நகரின் வெளி வாயிலுக்கே சென்று அவரை வரவேற்றான் துரியோதனன், இது அவனிடம் இல்லாத ஒரு வழக்கம். துர்வாசரை பார்த்ததுமே அவரது காலில் விழுந்து வணங்கி வரவேற்று, அரண்மனைக்கு அழைத்து வந்து, எல்லாவிதமான சௌகரியங்களையும் ஏற்படுத்தித் தந்து, அவர் மகிழ்ச்சியடையும்படி நடந்துகொண்டான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதற்குள்ளாக, திரௌபதி சூரிய தேவனை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றிருக்கிறாள் என்ற செய்தி துரியோதனனையும் வந்து சேர்ந்திருந்தது. காட்டுக்குள் வாழ்ந்து வந்த பாண்டவர்களை சந்திக்க மக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தார்கள். அட்சய பாத்திரம் இருந்ததால், தங்களைப் பார்க்க வரும் அனைவருக்கும் காட்டுக்குள் இருந்தாலும் நன்றாக உணவளித்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. பாண்டவர்கள் நன்றாக உணவு உண்ணுகிறார்கள் என்பதுடன், வரும் விருந்தினர்களையும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்ற செய்தி துரியோதனின் கோபத்தைக் கிளறி விட்டிருந்தது. வனவாச வாழ்க்கையில் இப்படி நடப்பதை‌ அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. காட்டுக்குள் இருந்தாலும் பாண்டவர்களுக்கு சிரமமின்றி எல்லாம் நடந்துகொண்டிருந்தது. இதை மாற்றிவிட நினைத்தான் துரியோதனன்.

தன்னோடு சில நாட்கள் தங்கியிருந்த பிறகு துர்வாசரிடம் இப்படி பேசுகிறான் துரியோதனன், "என் சகோதரர்கள், பாண்டுவின் புதல்வர்கள், சில எதிர்பாராத சூழ்நிலைகளால் காட்டுக்குள் வாழ நேர்ந்துவிட்டது. நீங்கள் எனக்கு ஆசி வழங்கியுள்ளதைப் போலவே அவர்களுக்கும் உங்களது ஆசி கிடைக்க வேண்டும். தயவுசெய்து நீங்கள் அங்கே சென்று எனது சகோதரர்களையும் வாழ்த்துங்கள்" என்று கேட்டுக்கொண்டான். துர்வாசருக்கும் அவரோடு செல்பவர்களுக்கும் அங்கே தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறிய துரியோதனன், அவர் பாண்டவர்களின் இருப்பிடத்தை சேரும் வரை வழித்துணையாக தனது ஆட்களையும் காட்டுக்குள் அனுப்பி வைத்தான்.

ஆனால் உண்மையில், பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும், துர்வாசரும் அவரோடு சேர்ந்து சில நூறு சிஷ்யர்களும் வருவார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. துரியோதனின் நோக்கமே, திரௌபதி உணவு அருந்திய பிறகு துர்வாசர் தன் குழுவினருடன் அவர்களின் இருப்பிடத்தை சேரவேண்டும், அந்நேரத்தில் விருந்தினர்களின் பசியாற்ற பாண்டவர்களிடம் எதுவும் இருக்கக்கூடாது என்பதுதான். துர்வாசர் கோபப்பட்டுவிட்டால், அது திரௌபதிக்கும் அவளது கணவர்கள் ஐவருக்கும் நிச்சயமாக பேரிடரை கொண்டுவந்து சேர்க்கும் என்று எதிர்பார்த்திருந்தான் துரியோதனன்.

துர்வாசரும் அவரது குழுவினரும் பாண்டவர்களின் இருப்பிடத்தை அடைந்தபோது மதியத்தை கடந்திருந்தது. ஹஸ்தினாபுரத்தில் இருந்து நடை பயணமாக வந்ததில் நல்ல பசியோடும் இருந்தார்கள். நன்றாக அறியப்பட்ட முனிவர் என்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு விருந்தோம்பலை துர்வாசர் இயல்பாக எதிர்பார்த்தார். அவரை வரவேற்ற பாண்டவர்கள், "தயவுசெய்து உங்களது வழக்கமான சம்பிரதாய குளியலை ஆற்றிற்கு சென்று முடித்துக்கொண்டு உணவருந்த வாருங்கள்" என்று வேண்டினார்கள். பாண்டவர்களுக்கு திரௌபதி ஏற்கனவே உணவருந்திவிட்டாள் என்பது தெரியாது. அப்படியானால் அட்சய பாத்திரத்திலிருந்து மீண்டும் நாளைதான் உணவு வரும். துர்வாசரும் அவரது குழுவினரும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்கள். அதன் பிறகே அவர்களது வருகையைப் பற்றி அறிந்த திரௌபதி மிகவும் வருத்தமடைந்தாள். யாரிடமாவது ஏதாவது கேட்கலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லாத வனம் அது. சரி தன் கணவர்களிடமே முறையிடலாம் என்றால், அதிலும் எந்த பயனும் இல்லை. ஏனென்றால், அதிகபட்சமாக அவர்களால் வேட்டையாடத்தான் செல்ல முடியும். ஆனால் துர்வாசர் அதை ஏற்கமாட்டார்.

அவர்கள் இப்போது இருக்கும் சூழ்நிலையில் துர்வாசரிடமிருந்து சாபம் வேறு வந்தால் அது தங்களுக்கு பேரழிவாகிவிடும் என்பதை அறிந்திருந்தாள் திரௌபதி. ஏற்கனவே மேற்கொண்டுவரும் பதின்மூன்று ஆண்டு வன, அஞ்ஞான வாசமே போதும்போதும் எனுமளவுக்கு இருந்தது அவர்களுக்கு. கோபத்தில் துர்வாசர் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு கூட சாபம் கொடுத்துவிடக் கூடும். எனவே திரௌபதி, "கிருஷ்ணா நீ மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்! ஏதாவது செய். நாங்கள் இப்போதிருக்கும் சூழ்நிலையில் இந்த முனிவரின் சாபத்திற்கும் ஆளாக நான் விரும்பவில்லை" என கிருஷ்ணரை வேண்டி அழைத்தாள். ஏற்கனவே திரௌபதியிடம், "நீ வேண்டும் போதெல்லாம் வருவேன்" என்று வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். கிருஷ்ணர் தோன்றியதும், "துர்வாசர் தனது சீடர்களுடன் இங்கு வந்திருக்கிறார். அவர் பசியோடு இருக்கிறார். தமது குளியலை முடித்துக்கொண்டு எந்த நிமிடமும் அவர் வரக்கூடும். என்னிடம் அவருக்கு வழங்க எதுவுமில்லை" என்று தனது இக்கட்டைப் பற்றி சொன்னாள் திரௌபதி. "துர்வாசர் மட்டுமா... நானும் நல்ல பசியில்தான் இருக்கிறேன். உண்பதற்கு எதுவுமே இல்லையா?" என்று கேட்டார் கிருஷ்ணர். திரௌபதி இல்லை எனக் கூறவே கிருஷ்ணர், "எங்கே... அந்த பாத்திரத்தை என்னிடம் காட்டு" என்றார்.

துர்வாசர் வந்திருக்கிறார் என்ற செய்தி வந்துசேரும் போது, அப்போதுதான் உணவை உண்டு முடித்திருந்த திரௌபதி, இன்னும் பாத்திரத்தை கூட கழுவி வைத்திருக்கவில்லை. அந்தப் பாத்திரத்தில் ஒரேயொரு சிறு காய்கறி துண்டு மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார் கிருஷ்ணர். "என்ன செய்கிறாய் கிருஷ்ணா? நாங்கள் உண்டபின் எஞ்சிய உணவையா நீ உண்பது!?" கிட்டத்தட்ட கூவினாள் திரௌபதி. கண்களை மூடிய கிருஷ்ணர், "ஆஹா, இப்போது எனக்கு வயிறு முழுமையாக நிறைந்தது" என்றார். தன்னைக் கிருஷ்ணர் கிண்டல் செய்வதாக எண்ணினாள் திரௌபதி - எஞ்சியிருந்த சிறுத் துண்டை உண்டது மட்டுமில்லாமல் வயிறும் நிறைந்துவிட்டதாமே, "என்னை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறாய்? விருந்தினர்கள் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு உணவளிக்க ஏதுமில்லையே என்று நான் ஏற்கனவே பெரும் சங்கடத்தில் இருக்கிறேன். நீ வேறு இப்போது இப்படி விளையாடுகிறாய்!" என்றாள். "அப்படியல்ல பாஞ்சாலி - உண்மையாகவே என் வயிறு நிறைந்துவிட்டது" என்று கிருஷ்ணர் தன் திருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ஒரு ஏப்பமும் விட்டார்.

அங்கே நதிக்கரையில், துர்வாசரும் அவரோடு வந்திருந்தவர்களும் தங்கள் குளியலை முடித்திருந்தார்கள். அடுத்து உணவருந்த வேண்டியதுதான். திடீரென்று அனைவருக்கும் வயிறு அளவுக்கதிகமாகவே நிறைந்துவிட்டது என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள், "எங்களால் உணவருந்த முடியாது. எங்களுக்கு உணவு வேண்டாம்" என்றார்கள். "எங்கள் விருந்தோம்பலை நீங்கள் மறுக்கலாகாது; தயவுசெய்து வாருங்கள்" என்று, என்ன நடக்கிறது என்றே தெரியாத பாண்டவர்கள் வேண்டி கேட்டுக்கொண்டார்கள். இப்போது இது ஒரு பிரச்சனையாகி விட்டது - உங்களை யாராவது உணவருந்த அழைத்தால், நீங்கள் "முடியாது" என்று மறுக்க முடியாது. எனவே அவர்கள், "சரி வருகிறோம், நீங்கள் முன்னே செல்லுங்கள் - நாங்கள் பின்தொடர்கிறோம்" என்றார்கள். தங்கள் இருப்பிடம் திரும்பிய பாண்டவர்கள் அங்கே கிருஷ்ணரைக் கண்டதும், "நீங்கள் எப்போது வந்தீர்கள்?" என்றார்கள். "திரௌபதி மதிய உணவுக்காக அழைத்தாள், எனவேதான் வந்தேன்" என்றார் கிருஷ்ணர். "நல்லது, துர்வாசரும் அவரது சிஷ்யர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களும் உணவருந்த வருகிறார்கள்" என்றார்கள் பாண்டவர்கள். "அவர்களையும் அழைத்து வாருங்கள், நான் காத்திருக்கிறேன்" என்றார் கிருஷ்ணர் தன் வழக்கமான மந்தகாசப் புன்னகையுடன். துர்வாசரையும் உடன் வந்தவர்களையும் அழைத்துவரச் சென்றான் நகுலன். ஆனால் அங்கே ஒருவரையும் காணவில்லை. அவர்கள் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு ஓட்டமெடுத்திருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் வயிறு ஏற்கனவே முழுமையாக நிறைந்திருந்த நிலையில், அங்கே வந்த பிறகு சாப்பிட முடியாது என்று சொல்லக்கூடாது என்பதற்காக.

பல்வேறு இடங்களில், சூழ்நிலை நிஜமாகவே தடம் மாறுகிறது என்ற நிலை ஏற்படும் போதெல்லாம், அதிசயத்திற்கு சற்றும் குறையாமல் ஏதோ ஒரு வகையில் பாண்டவர்களுக்கு உதவி கிடைத்தது. நடப்பது நடக்கட்டும் என கிருஷ்ணர் விட்டுவிட்டார் என்பது போலிருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டை மீறி போகப்போகிறது‌ எனும் நிலை ஏற்படும்போதெல்லாம் தேவையானது எப்போதும் செய்யப்பட்டிருந்தது. மக்கள், "ஏன் இவ்வளவு தூரம் விடுகிறாய்? நீ முன்னதாகவே எதுவும் செய்திருக்க முடியாதா? இந்த சூழ்நிலையே ஏற்படாமல் நீ தவிர்த்திருக்கலாமே. துர்வாசர் வழி தவறுவது போலவோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ கூட நடந்திருக்கலாமே" என்று பல தீர்ப்புகளை வாசித்தார்கள். ஆனால் அது அப்படி வேலை செய்வதில்லை. எது நடந்தாலும் நீங்கள் அதில் எப்போதும் தொடர்ந்து குறுக்கிட்டுக் கொண்டே இருப்பதில்லை. நடக்கவேண்டியதை அதன் போக்கில் நடக்க அனுமதிக்கிறீர்கள். உண்மையாகவே ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறுகிறது எனும்போதுதான் நீங்கள் களத்திற்குள்ளேயே வருகிறீர்கள். தொடர்ந்து இப்படி கேள்விகள் வரவே, கிருஷ்ணர், "ஒவ்வொருவர் ஆட்டத்தையும் ஆடுவதற்காக நான் இங்கில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு விளையாட வேண்டும். ஒன்றேயொன்று, ஆட்டம் எங்கே செல்ல வேண்டுமோ, அந்த திசையில் செல்லவேண்டும். தவறினால், ஆங்காங்கே தேவையான திசை திருப்பல்கள் சில நடக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு புள்ளியிலும் என்னால் தலையிட்டுக்கொண்டே இருக்க முடியாது" என்று பிரகடனம் செய்தார்.

அருளின் துணையிருந்தால் உங்களுக்கு வாழ வாழ்க்கையே இல்லையென்று அர்த்தமில்லை. உங்களது மூளையையோ அல்லது உடலையோ பயன்படுத்தக்கூடாது என்றும் அர்த்தமில்லை. சரியாக பார்க்கப்போனால், நீங்கள் முன்பைவிட இன்னும் அதிகமாக அவற்றை பயன்படுத்த தேவையிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் வேறொரு இயல்புடைய கூட்டாளியுடன் இணைந்து செயல்படுகிறீர்கள். அப்படி ஒரு கூட்டாளி உங்களுக்கு அமைந்துவிட்டால், உங்களது முழு திறனுக்கும் நீங்கள் இயங்குவது நல்லது. உங்களுக்குத்தான் நல்ல கூட்டாளி இருக்கிறாரே, அப்படியே சும்மா உட்கார்ந்து விடலாம் என்று நினைக்காதீர்கள் - பிறகு அவர் உங்கள் கூட்டாளியாக இருக்கமாட்டார். நீங்கள்‌ ஒரு மனிதருடன் கூட்டு வைத்தாலும் இது பொருந்தும். ஒருவேளை உங்களுக்கு அபாரமான கூட்டாளி அமைந்தால், அபாரமான செயல்களை செய்ய நீங்கள் முயற்சிக்க வேண்டும் - இல்லையென்றால் அந்த அபாரமான கூட்டாளி உங்களோடு இருக்கமாட்டார்.

இந்த செய்தியைத்தான் கிருஷ்ணர் தொடர்ந்து அவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்: "ஆம், நான் இருக்கிறேன், ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்." பக்தியின் பெயரால், தெய்வீகத்தின் பெயரால், மக்கள் சோம்பேறியாகி, மந்தமாகி, தாங்கள் யார் என்ற முழு சாத்தியத்தையும் திறந்து பார்ப்பதில்லை. எனவே கிருஷ்ணர்‌ தொடர்ந்து, "வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்கள் முழுமையான ஈடுபாடுதான் முக்கியம். நான் இருக்கிறேன், ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதை நீங்கள்தான் செய்ய வேண்டும்" என்கிறார். இதுதான் பகவத்கீதையும். "நான் ஏன் இதை செய்ய வேண்டும்? நீதான் இருக்கிறாயே - சும்மா சரிசெய்து விடு" என தன்‌ பொறுப்பை உதறியெறிய முயற்சிக்கிறான் அர்ஜூனன். ஆனால் கிருஷ்ணர், "நீ என்ன செய்ய வேண்டுமோ அதை நீதான் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக நான் இங்கே இருக்கிறேன் எனும்போது, சாதாரணமாக நீ என்ன செய்வாயோ, அதைவிட இன்னும் அதிகமாகவே நீ செய்ய வேண்டும்" என்கிறார்.

தொடரும்...