கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
கர்மாவின் பொருளைத் தெளிவுபடுத்தும் சத்குரு, அதை ஒரு குறிப்பிட்ட அளவு தகவல் என்பதோடு, கர்மாவின் பல்வேறு வகைகளையும் விளக்கி, நம் வாழ்வில் அதன் பங்கு என்ன என்பதையும் விளக்குகிறார்
கர்மா என்றால் என்ன?
சத்குரு: ”என் வாழ்க்கை” என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவலால் கட்டுப்படுத்தப்படும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கான சக்தி. இந்தத் தகவல்களை இன்றைய வார்த்தைகளில் சாஃப்ட்வேர் (மென்பொருள்) என்று அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு உயிர்சக்தியானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தகவலுடன் சக்தியூட்டப்படுகிறது. இரண்டும் இணையும் இந்த தகவல் தொழில்நுட்பம்தான் ‘நீங்கள்‘ எனப்படுவது. உங்களுக்குள் எந்தவிதமான தகவல் செலுத்தப்பட்டிருக்கிறதோ அந்தக் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் கொண்டவராக நீங்கள் உருவாகிறீர்கள்.இந்த உலகத்தில் நீங்கள் பிறந்த கணத்தில் இருந்து இந்தக் கணம் வரை, எந்தவகையான குடும்பம், வீடு, நண்பர்கள், நீங்கள் செய்த விஷயங்கள், செய்யாத விஷயங்கள் – இவை எல்லாமே உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்களின் ஒவ்வொரு எண்ணம், உணர்ச்சி, செயல் எல்லாமே உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கடந்த காலப் பதிவுகளிலிருந்தே வருகின்றன. தற்போது நீங்கள் யார்? என்பதை அவைகள் தீர்மானிக்கின்றன. நீங்கள் சிந்திக்கும் விதம், வாழ்வை எந்த விதத்தில் உணர்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என்பதெல்லாம் நீங்கள் எந்தவிதமான பதிவுகளை சேமித்து வைத்துள்ளீர்களோ அந்த விதமாகவே உள்ளன.
வாழ்வின் கடந்த காலப் பதிவுகள் நீங்கள் பிறந்த கணத்திற்கும் முன்னால் கடந்து செல்கிறது. ஆனால் உங்களின் தற்போதைய அனுபவத்தில், குறைந்தபட்சம் நீங்கள் பிறந்த கணத்தில் இருந்து இன்று வரை, எந்தவகையான பெற்றோர்கள், குடும்பம், நீங்கள் பெற்ற கல்வி, எந்தவிதமான மத மற்றும் சமூகப் பின்புலங்கள், எந்தவிதமான கலாச்சார யதார்த்தங்கள், இந்த அனைத்து பதிவுகளும் உள்ளே இருக்கின்றன. யாரோ ஒருவர் வித்தியாசமான குணாதிசயத்தோடு இருக்கிறார் என்றால், அவருக்குள் பதிந்திருக்கும் தகவலின் விதம் அதற்குக் காரணமாக உள்ளது. இதுதான் கர்மா எனப்படுவது. பாரம்பரியமாக இந்தத் தகவல்தான், கர்மா அல்லது கர்ம உடல் அல்லது வாழ்வை உருவாக்கும் காரண உடல் என்று அழைக்கப்படுகிறது.
கர்மாவின் வகைகள்
இந்தத் தகவல் பல வெவ்வேறு தளங்களில் இருக்கிறது. கர்மாவின் பரிமாணங்கள் நான்கு. அவற்றுள் இரண்டு, தற்போது தேவையில்லாதது. ஒரு புரிதலுக்காக, மற்ற இரண்டைக் குறித்து நாம் பேசலாம்.
Subscribe
சஞ்சித கர்மா
சஞ்சித கர்மா என்பது ஒன்று. இது ஓரணு விலங்கினம் மற்றும் உயிர் பரிணாமம் அடைந்த ஜடப் பொருள்களிலிருந்தும்கூட பின்னோக்கி செல்லும் கர்மக் கிடங்காக இருக்கிறது. எல்லாத் தகவலும் அங்கே இருக்கிறது. நீங்கள் உங்கள் கண்களை மூடி, போதிய விழிப்புணர்வோடு உங்களுக்குள் பார்த்தால், இந்த பிரபஞ்சத்தின் இயல்பை நீங்கள் உணரமுடியும். இதை நீங்கள், உங்கள் அறிவின் மூலம் பார்க்கிறீர்கள் என்பது அல்ல, உடலின் உருவாக்கத்திலேயே இந்தத் தகவல் பதிந்திருப்பதுதான் காரணம். படைப்பினுள் திரும்பிச் செல்லும் தகவல் கிடங்கு ஒன்று உள்ளது. அதுதான் உங்கள் சஞ்சித கர்மா. ஆனால், உங்கள் கிடங்கை வைத்துக்கொண்டு நீங்கள் சில்லறை வணிகம் செய்யமுடியாது. சில்லறை வணிகத்திற்கென ஒரு கடையை நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கைக்கான அந்த சில்லறை வணிகக் கடைதான் “பிராரப்தம்” என்று அழைக்கப்படுகிறது.
பிராரப்த கர்மா
பிராரப்த கர்மா என்பது இந்த வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல். உங்கள் உயிரின் தீவிரத் தன்மையைப் பொறுத்து, எவ்வளவு தகவலைக் கையாளமுடியுமோ அதனை உயிரானது தனக்கென்று பங்கீடு செய்துகொள்கிறது. படைப்பானது மிகுந்த கருணையுடன் இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற ஒட்டுமொத்த கர்மாவையும் அது உங்களுக்கு வழங்கினால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். தற்போது, பலரும் இந்தப் பிறவிக் காலத்தின் 30-40 வருடங்களின் ஞாபகங்களினாலேயே சித்திரவதைக்கு ஆளாகிக்கொண்டுள்ளனர். அதைப்போல நூறு மடங்கு ஞாபகங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இயற்கையானது, உங்களால் கையாளக்கூடிய ஒரு சிறு பகுதி ஞாபகத்தை, பிராரப்தாவாக ஒதுக்குகிறது.
கர்மாவின் தளைகளிலிருந்து விடுபடுங்கள்.
உங்களுக்கு எந்தவிதமான கர்மா இருந்தாலும், அது ஒரு வரம்புக்கு உட்பட்ட சாத்தியமாக இருக்கிறது என்பதுடன், அதுதான் உங்களை ஒரு வரம்புக்கு உட்பட்ட நபராகவும் உருவாக்குகிறது. நீங்கள் எந்தவிதமான பதிவுகளை உள்வாங்கினீர்கள் என்பதைப் பொறுத்து – அது வெறுப்பு மற்றும் கோபமாக இருக்கலாம், அல்லது அன்பு மற்றும் ஆனந்தமாக இருக்கலாம் - அதற்கேற்றதைப் போன்ற ஒரு குறிப்பிட்ட விதமான குணாதிசயத்தைப் பெறுகிறீர்கள். பொதுவாக ஒவ்வொரு மனிதரும் இவை எல்லாவற்றின் சிக்கலான கலவையாகத்தான் இருக்கிறார். இந்த கர்மக் கட்டமைப்பை ஒரு குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்து வளர்வதற்கு நீங்கள் அனுமதித்துவிட்டால், உங்களை ஓரளவிற்குமேல் ஆட்கொள்ள அனுமதித்தால், விடுதலை என்ற ஒரு விஷயம் உண்மையிலேயே இல்லாமல் போகிறது. நீங்கள் செய்யும் எல்லா செயல்களுமே கடந்த காலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. விடுதலையின் திசைநோக்கி நகர்வதற்கு நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்யவேண்டிய முதன்மையான விஷயங்களுள் ஒன்று என்னவென்றால், கர்மாவின் பிடியை தளர்த்தி அதன் தளையிலிருந்து விடுபடுவது அவசியமாகிறது. இல்லையென்றால் எந்த நகர்தலும் நிகழாது.
நீங்கள் அதை எப்படி செய்வது? உடல்ரீதியாக கர்மாவை உடைப்பது ஒரு எளிமையான வழி. காலை 8 மணிக்கு எழுந்திருப்பதுதான் உங்கள் கர்மா என்றால், நீங்கள் 5 மணிக்கு உங்கள் அலாரத்தை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய உடலின் கர்மா எப்படி உள்ளது என்றால், அது எழுந்துகொள்ள விரும்பாது. ஆனால் “இல்லை, நான் எழுந்துகொள்ளப் போகிறேன்” என்று நீங்கள் சொல்லுங்கள். அது எழுந்து கொண்டாலும் உங்கள் உடல் காஃபியை ருசிக்க விரும்பும். ஆனால் நீங்கள் அதைக் குளிர்ந்த நீராட்டுங்கள். இப்போது நீங்கள் தன்னுணர்வோடு ஏதோ ஒன்றைச் செய்வதால், பழைய கர்ம செயல்முறையை உடைக்கிறீர்கள். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை தன்னுணர்வற்ற நிலையில் செய்யமுடியும், இல்லையா? நீங்கள் எதை விரும்பவில்லையோ அதை நீங்கள் தன்னுணர்வோடு செய்யவேண்டும். இது ஒரு வழிதான் என்பது இல்லை. வேறுசில சூட்சுமமான, நன்றாக செயல்படக்கூடிய வழிகள் உள்ளன. மிகவும் அடிப்படையான சாத்தியமாகக்கூடிய வழியைத்தான் நான் கூறுகிறேன்.
ஆன்மீகமும் கர்ம வினையும்
ஆன்மீகப் பாதையில் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள் என்றால், “என்னுடைய இறுதி இலக்கை அடைவதற்கான அவசரத்தில் நான் இருக்கிறேன்“ என்று நீங்கள் வாக்குமூலம் தருகிறீர்கள். மேலும் ஒரு நூறு பிறவிகள் எடுப்பதற்கு நீங்கள் விரும்பவில்லை. இந்த நூறு பிறவிக் காலங்களின் செயல்முறைகளில், மற்றொரு ஆயிரம் பிறவிக் காலங்களுக்கான கர்மாவை நீங்கள் சேகரித்துவிடக்கூடும். அதை விரைவுபடுத்த நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு ஆன்மீகப் பாதை துவங்கிவிட்டதென்றால், ஒரு குறிப்பிட்ட வழியில் தீட்சைகள் வழங்கப்பட்டால், வேறு வழிகளில் திறந்திருக்கவே முடியாத பரிமாணங்களை அது திறந்துவிடுகிறது. நீங்கள் ஆன்மீகத்தன்மை இல்லாமல் இருந்திருந்தால், மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள். ஆனால் அது அதிக உயிரோட்டமில்லாத வாழ்க்கையாகவும், வாழ்வை விட இறப்புக்கு மிகவும் நெருக்கமானதாகவும் இருந்திருக்கும். உங்களுக்குள் அடிப்படையான எதுவும் அசைக்கப்படாமல், வசதியாகவே நீங்கள் கடந்திருக்கக்கூடும்.
நீங்கள் ஆன்மீகப் பாதைக்கு வந்துவிட்டால் உங்களுக்கு எல்லா எதிர்மறையான விஷயங்களும் நடக்கிறது என்று இதற்கு அர்த்தமா?.அது அப்படி அல்ல. அது என்னவென்றால், வாழ்க்கை அதிவேகமாக - உங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காட்டிலும் வேகமாக நகரும்போது - உங்களுக்கு சில துயரங்கள் நிகழ்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுக்கு எந்தத் துயரமும் நிகழ்வதில்லை. அது என்னவென்றால், அவர்கள் இயல்பான வேகத்தில் செல்கின்றனர் . ஆனால் உங்கள் வாழ்க்கை மிக வேகமாக முன்னோக்கி சுழல்கிறது.
ஆன்மீகப் பாதையில் ஈடுபட்டவுடனேயே நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள், அனைத்தும் தெளிவாகிவிடும் என்ற இந்தத் தவறான கருத்து பலருக்கும் உண்டு. நீங்கள் உங்களுக்கு வசதியான நம்பிக்கை அமைப்பில் இருந்துகொண்டு, ஒருவழிப் பாதையின் மனம் கொண்டவராக இருந்தால், அப்போது எல்லாம் தெளிவாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருந்தால் எதுவும் தெளிவாக இருக்காது. அனைத்தும் மங்கலாகத்தான் இருக்கும். எந்த அளவுக்கு வேகமாக நீங்கள் பயணிக்கத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு அது இன்னும் அதிகமாக மங்கலாகிவிடுகிறது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் ஜெர்மனியில் இருக்க நேர்ந்தது. அங்கு நிகழ்ச்சியை முடித்தபிறகு, நான் ஃப்ரான்ஸ் செல்லவேண்டி இருந்தது. அது நான் இருந்த இடத்திலிருந்து 440 கி.மீ. தொலைவில் இருந்தது. சாதாரணமாக அந்தப் பயணத்திற்கு 5 மணிநேரம் ஆகும். 5 மணிநேரமும் சாலையில் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நான் அந்த நேரத்தைக் குறைப்பதற்காக, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன். அந்தப் பகுதியில் கிராமப்புறம் அழகாக இருக்கும் என்பதால், அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். நான் என் கண்களை சுழற்றிப் பார்க்க முயற்சித்தேன். ஆனால் என்னால் ஒரு க்ஷணம்கூட சாலையிலிருந்து பார்வையை விலக்கமுடியாத நிலையில், அனைத்தும் மங்கலாகவே தெரிந்தது. பனி பொழிந்து கொண்டு இருந்ததுடன், நாங்கள் வாயு வேகத்தில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தோம்.
நீங்கள் அதிக வேகத்தில் செல்லும்போது அனைத்துமே மங்கலாகிவிடுவதுடன், நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதிலிருந்து ஒரு கணமும் உங்கள் கண்களை விலக்க முடியாது. கிராமப்புறத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் மெதுவாக, சுலபமாக செல்லவேண்டும்.. உங்கள் இலக்கை எட்டுவதில் நீங்கள் அவசரமாக இருந்தால், நீங்கள் பயணத்தை வேகப்படுத்துகிறீர்கள். எதையும் பார்ப்பதில்லை. நீங்கள் பயணத்தில் மட்டும் இருக்கிறீர்கள். ஆன்மீகப் பாதையும் இதைப் போன்றதுதான். நீங்கள் உண்மையிலேயே ஆன்மீகப் பாதையில் இருந்தால் உங்களைச் சுற்றி அனைத்துமே குழப்பத்தில் இருக்கிறது. ஆனால் நீங்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருப்பதால், இது பரவாயில்லை. இது சரியானதுதானா?... சரியானது இல்லை என்றால், நீங்கள் பரிணாம வளர்ச்சியின் வேகத்திலேயே செல்லலாம். ஒரு பத்து இலட்சம் ஆண்டுகள் கழிந்தபிறகு, நீங்கள் இலக்கை அடைவீர்கள்.
அவசரத்தில் இருப்பவர்களுக்கென்று ஒருவிதமான பாதை இருக்கிறது. அவசரத்தில் இல்லாதவர்களுக்கென்று மற்றொரு விதமான பாதை இருக்கிறது. உங்களுக்கு எது தேவை என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். நீங்கள் வேகமான வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டு மெதுவாகச் செல்ல முயற்சித்தால் நீங்கள் நசுக்கப்பட்டுவிடுவீர்கள். நீங்கள் மெதுவான பாதையில் இருந்துகொண்டு, வேகமாக செல்ல முயற்சித்தால், நீங்கள் அனுமதிச் சீட்டு வாங்கிவிடுவீர்கள். எப்போதும் ஒவ்வொரு சாதகரும் முடிவுசெய்ய வேண்டும் – சாலையோரக் காட்சிகளை மட்டும் அவர் ரசிக்க விரும்புகிறாரா அல்லது விரைவாக இலக்கை அடைய வேண்டுமா?