Question: ஆன்மீக முறைகளில் வானியல், கணிதம், இலக்கணம் போன்றவற்றுக்கான முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிராராப்த கர்மா

பிராரப்தம் அல்லது பிராரப்த கர்மா என்பது இந்தப் பிறவிக்கென்று கொடுக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேரை போன்றது. உங்கள் உடல், மனம் அந்த அளவு தகவல்களை மட்டுமே கையாளும். ஆன்மீகத்தில் எப்போதுமே இலக்கணமும், கணிதமும் இணைந்திருக்கக் காரணம் என்னவென்றால், அவை மனதின் திறமைகளை அதிகப்படுத்துகின்றன. இந்தப் பிறவி முடிந்து நீங்கள் போகும்போது, அதிக அளவிலான உடல் மற்றும் மனத்திறமைகளோடு சென்றால்தான், அடுத்தமுறை வரும்போது இன்னும் பெரிய பிராரப்த சாஃப்ட்வேர் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

பிராரப்த கர்மா வெளிச் சூழ்நிலையை நேரடியாக தீர்மானிப்பதில்லை; என்றாலும் அது வெளிச் சூழ்நிலையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

யோகிகள் தங்கள் உடல் மற்றும் மனதின் திறமைகளை குறிப்பிட்ட அளவிற்கு வளர்த்துக் கொண்டார்கள். ஏனென்றால், அடுத்தமுறை வரும்போது குறைந்த அளவு பிராரப்தத்துடன் வந்து, இப்படியே அடுத்தடுத்து பல பிறவிகள் எடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை. அடுத்த முறை வரும்போது அவர்களுக்கு ஒரு பெரிய அளவிலான பிராரப்தம் வேண்டும். ஆகவே தான் ஆன்மீகத்தில் வானியல், கணிதம், இலக்கணம் போன்றவையெல்லாம் இருந்திருக்கின்றன. இவற்றின் மூலம் உங்கள் மனதை பல வழிகளிலும் பயன்படுத்த முடியும்.

கணிதத்தில் புலியாக இருப்பவர்களுக்கு இலக்கணம் சுட்டுப் போட்டாலும் வராது. அதே போல் இலக்கணத்தில் திறமையுடன் இருப்பவர்களுக்கு, வெளியுலகத்தில் நடப்பதை சரியாக உள்வாங்கிக் கொள்ளும்தன்மை இருக்காது. இதை நீங்கள் கவனித்திருக்க முடியும். ஏனென்றால், இவையெல்லாம் உங்கள் மனதை வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தும் வழிகளாகும். ஆகவேதான் இந்த மூன்று விஷயங்களிலும் திறமையை வளர்த்துக் கொண்டால், அடுத்த முறை இங்கு வரும்போது, அதிக திறமைக்கு ஏற்றார்போல் பெரிய அளவிலான சாஃப்ட்வேர் கொடுக்கப்படும்.

இதை ஒரு உதாரணம் மூலம் சொல்கிறேன். இன்று நாம் ‘ஒருநாள் சுற்றுலா’வுக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். செல்லும்போது பலவற்றையும் சுமந்து செல்ல வேண்டியிருக்கும். உணவு வகைகள், அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள், ஸ்பீக்கர்கள், கேமிராக்கள், இவற்றோடு உங்களையும் கவனித்து அழைத்துச் செல்லவேண்டும். இத்தனை பொருட்களையும் சுமந்து செல்ல வேண்டுமென்றால், சுற்றுலா வருபவர்களிடம் அவரவரது உடல் திறனுக்கேற்ப பொருட்களை பிரித்துக் கொடுப்போம். உடல் வலிமை குறைந்த ஒருவரிடம் சிலிண்டரை கொடுக்கமுடியுமா? முடியாது. அதே போல புத்தியைப் பயன்படுத்தி செய்யும் வேலையில், அவரவருடைய திறமைக்கேற்ப பகிர்ந்தளிப்போம், இல்லையா? இதே போலத்தான் நம் வாழ்க்கையிலும் நடக்கிறது. உங்கள் திறமைகளை குறிப்பிட்ட அளவிற்கு வளர்த்துக் கொண்டால், அந்த அளவு பிராரப்தம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆன்மீக செயல்முறை என்பதே உங்கள் பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்துவது தான். ஏனென்றால், இங்கு நீங்கள் எதையும் ஒத்திப்போட விரும்புவதில்லை. அனைத்தையும் மிகவிரைவாக முடித்துவிடுவதே நோக்கம். ஆகவேதான் இலக்கணம், இசை, வானியல், கணிதம் இவையெல்லாம் ஆன்மீக செயல்முறைகளுடன் இணைந்து வழங்கப்பட்டன. ஏனென்றால், உங்களுடைய புத்திசாலித்தனத்தை அனைத்து வழிகளிலும் பயன்படுத்தி, உங்கள் திறமையை குறிப்பிட்ட அளவிற்கு வளர்த்து, உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் தயாரானால், இன்னும் பெரிய அளவு பிராரப்தம் உங்களுக்குக் கொடுக்கப்படும். இதனால், நீங்கள் மூன்று பிறவிகளில் செய்வதை, ஒரே பிறவியில் செய்து முடித்துவிட முடியும். இது உங்கள் உள்சூழ்நிலை பற்றியது. ஆனால் அது நம் வெளிச்சூழலையும் நிர்ணயிக்குமா என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் எண்ணம், உணர்ச்சிகள் போன்றவற்றுக்கு ஏற்றார் போன்ற வெளிச்சூழல்களை இயல்பாகவே நீங்கள் உருவாக்குகிறீர்கள்; அதில்தான் வாழ்கிறீர்கள்.

எனவே பிராரப்த கர்மா வெளிச் சூழ்நிலையை நேரடியாக தீர்மானிப்பதில்லை; என்றாலும் அது வெளிச் சூழ்நிலையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

பிராரப்தம் என்ற வார்த்தை இந்தியாவில் கடந்த தலைமுறையைச் சேர்ந்த மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது. யாரோ ஒருவர், எதற்காகவோ கஷ்டப்பட்டால், ‘அய்யோ, உன் பிராரப்தம் அப்படி...’ என்பார்கள். இது மிகவும் சகஜமான ஒரு வார்த்தையாக இருந்தது. ஆகவே, கர்மா வெளிப்புறச் சூழ்நிலைகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் அவற்றின்மேல் அது கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்துகிறது. ஏனென்றால், உங்கள் உள்கட்டமைப்புகள் தான் எப்போதுமே வெளிச்சூழல்களில் வெளிப்படுகின்றன.