IYO-Blog-Mid-Banner  

கேள்வி : நமஸ்காரம் சத்குரு, க்ரியா செய்வதன் மூலமாக ஒருவருடைய உயிர்சக்தியை உயர்த்துவது, பிராரப்த கர்மாவை கரைப்பதில் எப்படி உதவி செய்யும்?

சத்குரு: நாகரிகம், பண்பாடு அல்லது சமுதாயம் என்றாலே சமரசமாக நடந்து கொள்வது என்ற புரிதல் தான் மனிதர்களுக்கு எப்போதும் இருக்கிறது எல்லாவற்றைப் பற்றியும் நடுநிலையாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் ஒருமுறை இப்படி நடந்தது. நான் அரசியல் பிரச்சனைக்குள் நுழைகிறேன் என நினைக்கிறேன். பாப்ரி தேவி அரசு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பீகார் மாநிலத்தில் பாப்ரி தேவி சில ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருந்தார். அது மிகவும் நடுநிலையான அரசாக கருதப்பட்டது. ஏனென்றால், அதனுடைய வேலைகளிலேயே அது தலையிடாமல் இருந்தது. சிலர் இப்படி மாறி இருக்கிறார்கள்.

சக்தியின் விளையாட்டு

இப்போது நாம் நம் சக்திநிலையை உயர்த்தினால், வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வார்கள். சிலர் அசைவில்லாமல் இருப்பார்கள், சிலர் அசைவார்கள், சிலர் உருளுவார்கள், சிலர் தவழ்வார்கள், சிலர் கத்துவார்கள், சிலர் இப்படி கண்களை திறப்பார்கள், சிலரால் கண்களைத் திறக்க முடியாது. எல்லாவிதமான விஷயங்களும் நடக்கும். ஏனென்றால், ஏதோ ஒன்றுக்குள் கூடுதல் சக்தி புகுத்தப்படும்போது அந்த எந்திரம் இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, எந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது என்பதைப் பொறுத்து இது நடக்கும். இது மிகவும் நுட்பமான ஒரு எந்திரம். இது சாதாரண ஒரு கார் போலவோ, வேறு எப்படியுமோ இல்லை, இது ரொம்பவும் நுட்பமான எந்திரம். ஒவ்வொருவருக்கும் இது வேறு விதமாக நடந்து கொள்ளும். ஆனால், இது எல்லாவற்றுக்கும் அர்த்தங்கள் கொடுக்க முயற்ச்சிப்பதாக இருந்தால், சக்திகளை உயர்த்தாமல் எல்லாவற்றையும் தாழ்வாக வைத்திருப்பதே மேலானது.

பிராராப்தம்

உங்கள் பிராரப்தம் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள், என்ன செய்வது? ஏனென்றால் ஒரு இடத்தில் நடக்கும் எல்லாவற்றுக்கும் இன்னொரு இடத்தில் அர்த்தம் கொடுக்கப்படுகிறது என்றால், நீங்கள் மகத்துவமான எதையுமே செய்ய முடியாது. பிராரப்தம் என்றால், இது உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கர்மவினை. நீங்கள் இந்த ஒதுக்கீட்டில் எவ்வளவு தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது நீங்களாக விழிப்புணர்வோடு செய்யும் ஒரு தேர்வு இல்லை. ஆனால் இதிலும் தேர்வு இருக்கிறது. இந்த உயிர் எவ்வளவு கர்மவினையை தேர்ந்தெடுக்கிறது என்பது உங்கள் உயிர்சக்தி எவ்வளவு உயிரோட்டமாக இருக்கிறது என்பதை பொறுத்திருக்கிறது. உங்கள் உயிர்சக்தி மிகத் துடிப்பாக, உயிரோட்டமாக இருந்ததென்றால், இயற்கையாவே நீங்கள் அதிக பிராரப்தத்தை தேர்ந்தெடுப்பீர்கள். ஏனென்றால், அதை உங்களால் கையாள முடியும். இது விழிப்புணர்வோடு எனக்கு இதை கையாள முடியும் என தெரிந்திருப்பதை போன்றதில்லை. உயிருக்கு இது தெரியும்.

உயிர் அறியும்

உயிருக்கு என ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. உங்களுடைய உயிர்ப்பை பொறுத்து இது தேர்ந்தெடுக்கும். இதனால்தான் ஒரு குழந்தைக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்காமல் இருப்பது மிக முக்கியம் என்கிறோம். குழந்தைகள் சும்மா விளையாடி, ஓடியாடி, குதித்து, சிரித்து கத்தி திரிய வேண்டும். ஏனென்றால், முதலில் உயிர்சக்தி துடிப்பானதாக மாறவேண்டும். இது மிகவும் உயிர்ப்பக ஆனதென்றால், இயல்பாகவே அதிகப்படியான பிராரப்தத்தை இது பதிவிறக்கும். அது பிரச்சனை இல்லையா? ஆமாம், பிரச்சனைதான். ஆனால், உங்கள் பிரச்சனையை நீங்கள் சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைத்து, என்றோ ஒருநாள் உங்கள் முகத்துக்கு முன்னால் வெடிக்கும்படி செய்யலாம், அல்லது இப்போதே பதிவிறக்கி கையாளலாம். இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. எப்படியும் அது இருக்கிறது, அதை நீங்கள் ஒழிக்க முடியாது, அது அப்படியே இருக்கும். ஒன்று அதை நீங்கள் பதிவிறக்கி கையாளலாம், அல்லது அதுவாகவே உங்கள் மீது விழும்போது பிரபஞ்சம் முழுவதும் உங்களுக்கு எதிராக திரும்பியிருப்பதாக நினைக்கலாம். கடவுள் உங்களுக்கு எதிராக திரும்பிவிட்டார், படைப்பே உங்களுக்கு எதிராக திரும்பிவிட்டது என்றும் கூட நினைக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்கள் உயிர்சக்தி மிகத் துடிப்பாக, உயிரோட்டமாக இருந்ததென்றால், இயற்கையாவே நீங்கள் அதிக பிராரப்தத்தை தேர்ந்தெடுப்பீர்கள். ஏனென்றால், அதை உங்களால் கையாள முடியும்.

இன்னும் இன்னும்

மனிதர்கள் எப்போதுமே இதை எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால், பிராரப்தத்தை பதிவிறக்குவது அவர்களைக் கேட்காமலேயே நடந்து விடுகிறது. இப்போது, ஆன்மீக பாதையில் இருப்பது என்றால், நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் : அந்த கிடங்கிலிருக்கும் எல்லாமே உங்களுக்கு வேண்டும். அந்த சேமிப்பு கிடங்கில் மொத்தமாக என்ன இருக்கிறது என்பதை நான் பார்த்துவிட விரும்புகிறேன். எனக்கு சில்லறையாக வரும் சரக்கை கையாள்வதில் ஆர்வம் இல்லை. என்னுடைய சில்லறை வியாபார கடையில் இருக்கும் சரக்கை நான் தீர்த்தாலே போதும் என்பது என்னுடைய வழி இல்லை. நான் அந்த சேமிப்பு கிடங்கில் இருக்கும் எல்லாவற்றையுமே தீர்த்துவிட விரும்புகிறேன். அந்த சேமிப்புக் கிடங்குக்கே தீ மூட்ட விரும்புகிறேன். நீங்கள் அப்படி செய்ய விரும்பினால், உங்களுக்கு அதிகப்படியான சக்தி அவசியம். ஆனால், இப்போது நீங்கள் சில்லறை வியாபார கடைக்கு தீ மூட்டுவது பற்றிப் பேசுகிறீர்கள். தீ மூட்டுவது கூட இல்லை, சரக்குகளை விற்று தீர்ப்பது பற்றிப் பேசுகிறீர்கள். அது எப்படி உதவியாக இருக்கும்? சக்திகள் தீவிரமா இருந்ததென்றால் அது சீக்கிரமாகவே எரிந்துவிடும். ஆனால் நீங்கள் இதை தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் விழிப்புணர்வாக பிராரப்தத்துடைய புதிய பதிவிறக்கங்களை வரவேற்கவில்லை என்றால், இது இயல்பாகவே ஆன்மீக செயல்முறையில பொருத்தப்பட்டிருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்டு விட்டது

நீங்கள் ஒரு புத்தகம் வாசிக்கிறீர்கள், புத்தக யோகியாக இருக்கிறீர்கள், அப்படிப்பட்ட ஆன்மீகமாக இருந்தால் அது வேறு விஷயம். ஆனால் ஏதோ ஒன்று உங்களுக்கு முறையாக பரிமாறப்பட்டு இருக்கிறதென்றால், எப்போதுமே இப்படித்தான் இருக்கும். உங்களுடைய பிராரப்த கர்மா தீர்ந்து இருக்கிறதென்றால், புதிய பிராரப்தம் வரும். இங்கே நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் இப்படி யோசித்து வியப்படைவார்கள். " நான் உங்கள் அருகில் இருக்கும்போது எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சனைகள் சத்குரு?" ஏனென்றால் அது அப்படித்தான். நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். எதை நீங்கள் பிராரப்தம் என்கிறீர்களோ, அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சாஃப்ட்வேர் போன்றது. நீங்கள் இந்த சாஃட்வேரை பயன்படுத்தி தீர்த்துவிட்டால், நீங்கள் 100 வருடங்கள் பயன்படுத்தி தீர்க்க வேண்டியதை 30 ஆண்டு காலத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட்டால், நீங்கள் 30 வயதிலேயே இறந்து விடுவீர்கள் என்று அர்த்தம். இதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். தங்களின் கர்மப் பதிவுகளை மிக வேகமாக எரித்து விடுவதால்தான் 30, 35 வயதில் பல யோகிகள் இறந்துவிடுகிறார்கள்.

ஏன் இப்படி?

நீங்கள் சரித்திரத்தில் திரும்பிப் பாருங்கள், பல பிரபலமான யோகிகள் அவர்களது உடலை அந்த சமயத்தில் விட்டிருக்கிறார்கள். ஏனென்றால், எல்லாவற்றையும் அவர்கள் எரித்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் எந்த வேலையும் இல்லாமல் போய்விட்டது, அதனால் அவர்கள் விடை பெற்றார்கள். ஆன்மீக செயல்முறை எப்போதுமே எப்படி திட்டமிடப்பட்டு இருக்கிறதென்றால், இது உங்களின் சேமிப்பு கிடங்கில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தி விடுகிறது. நீங்கள் ஒரு பிரச்சனையை தீர்த்துவிட்டோம் என்று நினைத்ததுமே, அடுத்த பரிமாணத்தை சேர்ந்த பிரச்சனைகள் மெதுமெதுவாக உங்கள் வாழ்க்கைக்குள் வரும். அது அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால் உங்களுடைய சாஃப்ட்வேர் தீர்ந்து போய்விடும். உங்கள் சாஃப்ட்வேர் தீர்ந்துபோய்விட்டால், ஹார்ட்வேர் நன்றாகவே இருந்தாலும் சாஃப்ட்வேர் போய்விட்டதென்றால், இது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதனால் சஞ்சித கர்மா எனப்படும் சேமிப்புக் கிடங்கு மீது நமது கவனத்தை வைத்திருப்பது முக்கியம். இது வெறும் பிராரப்தம் மட்டும் அல்ல.

கர்ம சூத்திரம்

இந்த வார்த்தைகளை நீங்கள் புத்தகத்தில் பார்த்திருக்கலாம், இங்கே அங்கே இருந்து தெரிந்திருக்கலாம். அல்லது நாம் கூட இந்த சொற்களை சில சமயம் பயன்படுத்தியிருக்கிறோம். அதனால் இந்தப் பிரச்சனை. எப்படியும் நாம் கர்ம சூத்திரங்கள் என்று ஒரு புத்தகத்தை வெளியிட இருக்கிறோம். இதை அமெரிக்காவில் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் வெளியிடுகிறார்கள். இது பிப்ரவரி 2021 ல் வெளியாகும், வைரஸ்க்கு பிறகு. ஏனென்றால், வைரஸ் நம்முடைய பிராரப்தம். இது நம்முடைய சஞ்சிதம் இல்லை. இதை எரித்துவிட்டு நாம் மாற்றத்தை செய்ய விரும்புகிறோம்.

திடீரென சொல்லமுடியாத போராட்டங்கள், பிரச்சனைகள் எல்லாமே எங்கிருந்தோ வரும். "என்ன ஆச்சு? என்னோட ஆன்மீகம் தோல்வி அடைஞ்சிருச்சு, சத்குரு என்னை கைவிட்டுட்டாரு.." இப்படி எல்லாவிதமாகவும் சொல்வார்கள்

உண்மையான சுதந்திரம்

இந்த புத்தகத்தை நாம் கர்ம சூத்திரங்கள் என அழைப்பது ஏனென்றால், உங்களது கர்மப் பதிவுகளை எப்படி கையாள்வது என்பது பற்றி சில எளிய அடிப்படை விதிமுறைகள் இருக்கிறது. இதற்கு உங்களைக் குழப்பக்கூடிய வார்த்தைகளை ஒன்றும் கற்றுக் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு இந்தளவு தெளிவாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு ஓரளவு விழிப்புணர்வான ஞாபகப் பதிவுகளும் , விழிப்புணர்வு இல்லாத ஞாபகப் பதிவுகள் இருப்பதால்தான் உங்களால் இயங்க முடிகிறது, அப்படித்தானே? இப்போது நம் பிராரப்தம் என சொல்லும்போது, நம் ஞாபக பதிவுகளுடைய எந்தப் பரிமாணத்தைப் பற்றிப் பேசுகிறோமென்றால், இப்போது உங்களுக்குள் என்ன இருக்கிறது, நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ, அதுவாக உங்களை செய்வது எது, நீங்கள் செய்யும் பல விஷயங்களை உங்களை செய்ய வைக்கிறது எது, உங்களுடைய திறமைகள், ஆற்றல், திறமையின்மைகள், உங்களது பயங்கள், பதற்றங்கள் எல்லாமே உங்களோட பிராரப்தத்தினால்தான். இதை நீங்கள் எரித்து விட்டீர்களென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு வரும்போது, இது முழு சுதந்திரம் போல தெரியும். ஏனென்றால் உங்களது பயங்கள் இல்லாமல் போயிருக்கும், பதற்றங்கள் இல்லாமல் போயிருக்கும், இவை எல்லாமே போயிருக்கும்.

உங்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டங்களை கடந்து வந்திருப்பீர்கள். நான் உங்களிடம் இப்படிப் பேசக்கூடாது. சத்குரு இன்க்ளோஸ் நிகழ்ச்சியில் மட்டும்தான் இதையெல்லாம் பேச வேண்டும். ஆனால், என்ன செய்வது, நாம் எப்போதும் இப்படித்தான். நாம் எங்கே நெருக்கமாக இருக்கிறோம் எங்கே நெருக்கமின்றி இருக்கிறோம் என்பதே எனக்குத் தெரியாது. நான் எப்போதுமே நெருக்கமாகத்தான் இருக்கிறேன். நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் எப்போதுமே இதை உணர்கிறார்கள். அவர்களுடைய சாதனாவின் ஒரு கட்டத்தில் இப்படியொரு இடத்தை அடைவார்கள். திடீரென எல்லாம் அமைதியாகி, மிக அற்புதமாக ஆகிவிடும், ஆரோக்கியமாக, நலமாக இருக்கும்.

திறன் உயர்த்தப்பட்டிருக்கிறீர்கள்

திடீரென சொல்லமுடியாத போராட்டங்கள், பிரச்சனைகள் எல்லாமே எங்கிருந்தோ வரும். "என்ன ஆச்சு? என்னோட ஆன்மீகம் தோல்வி அடைஞ்சிருச்சு, சத்குரு என்னை கைவிட்டுட்டாரு.." இப்படி எல்லாவிதமாகவும் சொல்வார்கள் அப்டியெல்லாம் இல்லை, உங்களுடைய சாஃப்ட்வேரை சௌகரியமாக நீங்கள் கையாள்வதைப் நாம் பார்த்தோம், அதனால் அடுத்த பதிவிறக்கம் நடந்துவிட்டது. இதை நாம் பதிவிறக்கம் என்று சொல்வதைவிட 'அப்கிரேடு' என அழைத்துக் கொள்ளலாம். சாஃப்ட்வேர் அப்கிரேட் நடந்திருக்கிறது. ஏனென்றால், இது இன்னும் நுட்பமானதாக மாறியிருக்கிறது. என்ன அப்கிரேட் செய்தாலும், அது இப்போது இருக்கும் சாஃப்ட்வேரை விட நுட்பமாகிறது, அப்படித்தானே? நான் சொல்வது சரியா? இது அதி நுட்பமானது. அதனால் சாஃப்ட்வேர் அப்கிரேடு நடந்து திறனுயர்த்தப் பட்டிருக்கிறது, அதனால் நீங்கள் குழப்பம் அடைகிறீர்கள்.

ஐந்து அம்சங்கள்

சத்குரு உங்களை கைவிட்டுவிட்டார், திடீரென இந்த பயிற்சி உங்களுக்கு வேலை செய்யவில்லை, நீங்கள் வேறு எங்கோ சென்று வேறு ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும், இப்படியெல்லாம் நினைக்கிறீர்கள். அட முட்டாளே! இது வேலை செய்திருக்கிறது. நீங்கள் ஒன்றும் அதைப்பற்றியெல்லாம் நினைக்க வேண்டாம். வாழ்க்கையின் எளிய அம்சங்கள் இருக்கின்றன. உங்களுக்கு வேறு எந்த போதனையும் தேவையில்லை. உண்மைதான், ஒரு எளிய செயல்முறை இருக்கிறது. நீங்கள் எல்லாருமே ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டவர்கள். இந்த ஈஷா யோகா வகுப்பில் 5 மகத்துவமான அம்சங்கள் இருக்கின்றன, ஒரு பயிற்சி இருக்கிறது. இந்த 5 அம்சங்களை தினமும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் வாழுங்கள். இந்த 5 அம்சங்களை வாழ்ந்து பயிற்சி செய்தால்... நீங்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தாலும் அது நல்லதுதான். ஆனால் உங்களுடைய ஆரோக்கியம், நல்வாழ்வு இதைப் பொறுத்தவரையில் உங்களுக்கு இன்னும் அதிகமாக ஏதோ ஒன்று வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றைப் பரிமாற வேண்டுமென்றால், அப்போது உங்களுக்கு வேறுவிதமான பயிற்சிகளைக் கற்றுத்தருவோம்.

அடிப்படை

நாம் இந்தப் பயிற்சியை கொஞ்சம் 'அப்கிரேட்' செய்ய முடியும். ஆனால் அடிப்படையாக உங்களை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்று பார்த்தால், இந்த 5 அம்சங்களே போதுமானது. இன்னொரு போதனையும், இன்னொரு போதனையும், இன்னும் ஒன்றும் தேவையில்லை. இப்போது நீங்கள் இப்படி நினைப்பது ஏனென்றால், உங்களுக்கு அந்த 5 அம்சங்கள் புரியவில்லை. நாம் இதைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆமாம் 5 அம்சங்கள் தான் இருக்கிறது. இதை இன்க்ளோஸ் நிகழ்ச்சியில் நாம் இன்னும் எளிமையாக்குவோம். ஏனென்றால், இப்போதே நாம் அதை எளிமையாக்கினால், உங்களில் பலர் இப்போது நீங்கள் செய்வதை விட்டுட்டு முட்டாள்தனமான விஷயங்களை செய்ய முயற்சிப்பீர்கள். இது 5 விஷயங்களைவிட இன்னும் எளிமையானது. ஆனால் அந்த 5 விஷயங்கள்... ஈஷா யோகா என்பது மிக எளிய ஒரு வகுப்பு. வெறும் ஐந்தே அம்சங்கள்தான் இருக்கிறது. இந்த 5 அம்சங்கள் என்ன என்பதை புரிந்துகொண்டு, இதை உங்கள் வாழ்க்கையில் உண்மையாக்கினால் எல்லாமே மாறும். எல்லாமே மாறும் என்றால், எல்லாமே போய்விடும் என்று இல்லை. இது அப்படி இல்லை, இந்த அபத்தங்கள் எல்லாவற்றையும் கையாள்வதற்கு இன்னும் திறமை வாய்ந்தவராக நீங்கள் மாறுவீர்கள். உங்கள் அபத்தம், அப்படித்தானே?

அனுமதியுங்கள்

இவை எல்லாமே உங்களுடைய விஷயங்கள். இது உங்களுக்குள் நடக்கிறதென்றால், இது உங்களுடையதாகத்தான் இருக்கவேண்டுமா, இல்லையா? இது உங்களுக்குள் நடக்கிறதென்றால் இது உங்களுடையதாகதானே இருக்க வேண்டும். அல்லது, யாரோ ஒருவர் உங்களிடம் ஏதாவது சொல்வார்கள். உடனே சத்குரு உங்களை கைவிட்டுவிட்டார் என நினைத்துக் கொண்டு நீங்கள் ஜோசியர் ஒருவரை சென்று பார்ப்பீர்கள். அவர் அந்த கிரகம் கொஞ்சம் வேகமாக சுழல்கிறது என்று சொல்வார். இது நடக்கிறது, அது நடக்கிறது, இந்த சக்தி செயல்படுகிறது என பலவும் சொல்வார்கள். அடுத்து மாந்த்ரீகம் செய்யும் ஆளிடம் போவீர்கள். அவர், யாரோ உங்களுக்கு ஏதோ செய்து விட்டார்கள் என்பார். அதை சரிசெய்ய உங்களுக்கு பூஜைகள் செய்யவேண்டும், அது இது என இது முடிவே இல்லாமல் போகும். நான் உங்களுக்கு சொல்வது இதுதான், இந்த விஷயங்கள் எல்லாமே ஓரளவு தாக்கம் ஏற்படுத்தலாம். யாரோ உங்களுக்கு ஏதோ செய்வினை செய்யலாம், அது கொஞ்சம் தாக்கம் ஏற்படுத்தலாம். கிரகங்களுடைய அமைப்பு ஒரு குறிப்பிட்ட விதமாக இருந்தால், அது சிறிது தாக்கம் ஏற்படுத்தலாம். ஆனால், ஈஷா யோகா வகுப்பில் வழங்கப்படும் இந்த 5 அம்சங்கள் உங்கள் வாழ்க்கையில் வாழும் உண்மையாக இருந்தால், அந்தக் கோள்கள் எப்படி வேண்டுமானாலும் சுழலட்டும், யார் வேண்டுமானாலும் உங்களுக்கு எந்தவிதமான வினையும் செய்யட்டும். ஆனால், இது (தம்மை சுட்டிக்காட்டிய படி) நன்றாகவே இருக்கும். இது (தம்மை சுட்டிக்காட்டிய படி), அவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு இருக்கும், இதுதான் ஈஷா யோகா வகுப்பில் கருவிகளை உங்களுக்கு வழங்கியதன் அர்த்தம். தயவுசெய்து இதை உங்களுக்கு நீங்களே நிகழ அனுமதியுங்கள்.

IYO-Blog-Mid-Banner