‘கர்மம்’ என்ற வார்த்தை கிராமப்புறங்களிலுள்ள பாமர மனிதர்கள் முதற்கொண்டு படித்தறிந்த மேதைகள் வரை பயன்படுத்தும் வார்த்தைதான். ஆனால், அந்த வார்த்தையின் அர்த்தம்தான் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை! கர்மவினை என்பதென்ன? அதிலிருந்து ஒருவர் மீள்வதற்கான வழி என்ன? இங்கே சத்குருவின் இந்த உரை, இதுகுறித்த தெளிவைத் தருகிறது!

சத்குரு:

கர்மம் என்கிற ஒற்றைச்சொல், மனிதர்கள் மனங்களில் விதம்விதமான அர்த்தங்களை அளிக்கக் கூடியது.

கர்மம் என்றால் செயல். செயல் என்பதே கூட பலப் பல நிலைகளில் நிகழக்கூடியதுதான். பொதுவாக அவற்றிற்கு நான்கு பரிமாணங்கள் உண்டு. உடல் சார்ந்த செயல்கள், மனம் சார்ந்த செயல்கள், உணர்ச்சி சார்ந்த செயல்கள், சக்திநிலை சார்ந்த செயல்கள். இந்த நான்கு பரிமாணங்களையும் தாண்டி செயல் இன்னும் ஆழமான நிலைக்கு சென்று சேர்கிறபோது, அதனை கிரியை என்றழைக்கிறோம்.

உங்கள் தந்தை செய்த செயல்களின் சுவடுகள் கூட உங்கள் உடலின் அணுக்கள் ஒவ்வொன்றிலும் படிந்திருக்கும். உங்கள் தாத்தாவும் கொள்ளுத் தாத்தாவும்கூட ஏதோவொரு வகையில் உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கர்மம் என்றாலும் செயல்தான். கிரியை என்றாலும் செயல்தான். ஆனால் கர்மம் என்று வரும்போது, நீங்கள் செய்கிற செயல் தன் எச்சத்தை விட்டுச் செல்கிறது. அதுவே கர்மவினை. ஆனால் கிரியை அப்படியல்ல. முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் தன் சுவடுகளை விடுவதுடன் நில்லாமல் கர்மவினையின் கட்டமைப்பை அழிக்கிற ஆற்றல் கிரியைகளுக்கு உண்டு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கர்மத்திலேயே பல வகைகள் உண்டு. கர்மம் என்றால் செயல்கள் என்றோ செயல்களின் பதிவுகள் என்றோ மட்டும் பொருளல்ல. உங்கள் தந்தை செய்த செயல்களின் சுவடுகள் கூட உங்கள் உடலின் அணுக்கள் ஒவ்வொன்றிலும் படிந்திருக்கும். உங்கள் தாத்தாவும் கொள்ளுத் தாத்தாவும்கூட ஏதோவொரு வகையில் உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். உங்களுக்கு 18 வயது, 20 வயது ஆனபோது உங்கள் பெற்றோர்களுடன் முழுக்க முழுக்க முரண்பட்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு 40, 45 வயதாகிறபோது உங்கள் பெற்றோர் போலவே நடந்து கொள்கிறீர்கள். அவர்கள் போலவே உங்கள் நடையுடை பாவனை இருக்கிறது. அவர்களைப் போலவே உங்கள் தோற்றமும் இருக்கிறது. முந்தைய தலைமுறை போலவே இந்தத் தலைமுறையும் செயல்பட்டு, வாழ்ந்து, வாழ்க்கையை உணரப் போகிறதெனில் அந்தத் தலைமுறை வீணடிக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.

முந்தைய தலைமுறை கற்பனை செய்து கூடப் பார்க்காத வகையில் முழுதும் மேம்பட்ட விதத்தில் உங்களால் வாழ முடிந்தால், அனுபவத்தின் அடுத்தபடிநிலை நோக்கி நீங்கள் நகர்வதாகப் பொருள். எனவே உங்கள் கர்மவினை என்பது, உங்களுடையதோ உங்கள் மூதாதையருடையதோ மட்டுமல்ல, இந்த உலகில் முதன்முதல் தோன்றிய ஒருசெல் உயிரியின் தன்மை கூட உங்களுக்குள் இயங்கிக் கொண்டே இருக்கிறது. உங்கள் உடலில் உள்ள நுண் கிருமிகள் கூட கர்மவினையின் கட்டமைப்புத்தான். கடந்த காலத்தின் பதிவுகளாலும் சுவடுகளாலும் மனிதனின் கர்மவினை கட்டமைக்கப்படுகிறது என்பதால்தான், எல்லாமே மாயை என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், எவ்வளவு கடுமையான தளைகளால் நீங்கள் பிணைக்கப்பட்டிருந்தாலும் விடுதலைக்கான சாத்தியக் கூறுகளும் அவ்வளவு பிரகாசமாக உள்ளன. விலங்கின் தன்மையான பசுவிலிருந்து அதனினும் முந்தைய ஒருசெல் உயிரி நிலையிலிருந்து முற்றிலும் விடுதலையடைந்த பசுபதி நிலையை சென்றடைவது வரை மகத்தான விடுதலை வாய்ப்புகள் உங்களுக்குண்டு.

மனித உடலமைப்பின் அடிப்படையை, சக்திநிலையின் அடிப்படையை நீங்கள் பார்த்தால், 112 சக்கரங்களின் சந்திப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களை வலிமை மிக்கதாய் மாற்ற நீங்கள் முயல்கிறீர்கள். அதன்மூலம், நாளை இன்னும் பெரிதாக எதையேனும் செய்ய முற்பட்டால் அதற்கான அடித்தளம் உங்களுக்கிருக்கும்.

ஈஷா யோகாவின் சக்திசலனக் கிரியைகள் 112 சக்கரங்களையும் வலிமைப்படுத்துகிற முயற்சிதான். இதனை உங்களுக்குள் உயிர்ப்பு மிக்கதாய் வைத்திருந்தால், பலநிலைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு உதவும்.

அடித்தளம் சரியாக இல்லாதவர்கள் தீவிரமான கிரியா யோகத்தை மேற்கொண்டால் அதன்மூலம் சிதிலமடைய வாய்ப்புண்டு. பலவிதங்களிலும் பார்த்தால் மனிதகுல வரலாற்றிலேயே உடல் நலன் அடிப்படையிலும் சக்திநிலை அடிப்படையிலும் மிக பலவீனமான தலைமுறை இந்தத் தலைமுறைதான். உண்மையான உடல் வலிமை என்னவென்று தெரிய வேண்டுமென்றால் வயலில் வேலை பார்க்கும் யாருடனாவது சேர்ந்து வேலை பார்க்க முயலுங்கள். அவர்கள் ஒல்லியாக எலும்பும் சதையுமாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் அசராமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள், நீங்கள் ஓரிரு மணிநேரங்களில் களைப்படைந்து விடுவீர்கள். மறுநாள் உங்களால் எழவே முடியாது. அவர்கள் விடியற்காலையிலேயே எழுந்து வேலைக்குச் சென்றிருப்பார்கள். இது உடல் வலிமையின் அடையாளம். அதே நேரம் சக்திநிலையும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

ஈஷா யோகாவின் சக்திசலனக் கிரியைகள் 112 சக்கரங்களையும் வலிமைப்படுத்துகிற முயற்சிதான். இதனை உங்களுக்குள் உயிர்ப்பு மிக்கதாய் வைத்திருந்தால், பலநிலைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு உதவும். ஆனால் முழு விடுதலை உடனே ஏற்பட்டு விடாது. ஏனெனில், கடந்த பிறவிகளில் சேகரித்த கர்மவினைகளின் எச்சங்கள், இந்த 112 சக்கரங்களை கட்டுப்படுத்துகின்றன. உங்கள் உடலைத் தாண்டி இரண்டு சக்கரங்கள் உள்ளன. 113, 114ஆவது சக்கரங்கள் பொதுவாக மிகக்குறைவான அதிர்வுகளைக் கொண்டிருந்தாலும் யோக சாதனையில் உள்ளவர்களுக்கு அதிர்வு மிக்கவையாய் அவை அமைகின்றன. 114ஆவது சக்கரம், இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமின்றி, கிரேக்க, எகிப்திய, மெஸபோடமிய கலாச்சாரங்களிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய வாலை தானே தின்னும் சர்ப்பமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.

இது எண்ணிலி என்னும் வகைமையின் குறியீடு. இதன் தன்மை உங்கள் சக்திநிலைகளைத் தொடுமென்றால் நீங்கள் எதைச் செய்தாலும் அது விடுதலைக்கான வழியாகத்தான் இருக்கும். 112 சக்கரங்களை உங்கள் சக்திநிலை கடக்கும்போது உங்கள் செயல்கள் உங்களை பாதிக்காது. உங்கள் செயல்கள் அல்லது கர்மங்கள் உங்களை பிணைக்கின்றனவா விடுவிக்கின்றனவா என்பதே நீங்கள் செய்யும் பயிற்சிகள் மற்றும் யோக சாதனைகளின் தன்மையைப் பொறுத்தது. வாழ்வுக்குத் தேவையான செயல்களைச் செய்யாமல் ஆத்ம சாதனையில் மட்டுமே ஈடுபடுவதும் எளிதல்ல. 12 மணிநேரம் இங்கே அமர்ந்து தியானம் செய்யுங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என யாராவது சொன்னால், முதலில் அது பெரிய வரமாகத் தோன்றும். பின்னர் சிலமணி நேரங்களிலேயே உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும். எல்லாவற்றையும் தாண்டிவந்தால் கூட இந்தப் பதட்டம் உள்ளே புறப்படும்போது பலர் தங்கள் சாதனைகளைக் கைவிட்டு விடுகிறார்கள்.

நீங்கள் செய்த நல்லதோ தீயதோ எதுவானாலும் கர்மவினை என்பது வாழ்வின் நினைவாற்றல். ஒருசெல் உயிரியாய் இருந்த காலம்தொட்டு நிகழ்ந்த நினைவுகளாலேயே உங்கள் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களிடமிருந்து நீங்கள் விலகிநிற்பதால் இதைத் தாண்டிச் செல்லலாம். பக்தியின் துணையுடனும் தாண்டிச் செல்லலாம். நீங்களாக கர்மவினையைக் கடப்பதென்றால் அது மிக சிரமம், கருணையின் துணையுடன் கடப்பதென்றால் அங்கே நீங்கள் பயணிதான். வேறொருவர் வாகனத்தை இயக்குவார். ஒன்று வாகனத்தை இயக்கப் பழகுங்கள். அல்லது கருணையின் வாகனத்தில் பயணியாய் இருங்கள்.