பெண்மையை வழிபடுவதன் முக்கியத்துவத்தை விளக்க மிக சிறந்த உதாரணங்கள் உள்ளன என்று கூறி காளிதாசரின் கதையை பகிர்கிறார் சத்குரு.

சத்குரு:

அவருடைய பெயர் காளிதாசர். அதற்கு காளியின் அடிமை, காளியின் பக்தன் என்று பொருள். உங்களுக்கு தெரியும், காலப்போக்கில் கதைகளில் சில கூடுதல் மாற்றங்கள் சேரலாம், ஆனால் மிக முக்கியமான விஷயம் அந்த கதை எதை சொல்ல முயல்கிறது என்பதுதான். கதையின் உண்மை தன்மையை விட அதன் சாரமே முக்கியமானது.

காளிதாசரின் பக்தி

பல பிறவிகளாக, காளிதாசர் காளியின் மாபெரும் பக்தராக இருந்தார். தன் கடந்த பிறவிகளில், எவ்வளவு பக்தியை வெளிப்படுத்தியும் அவள் அவருக்கு தரிசனம் தரவில்லை என்றும், அவருக்கு அவள் எதையும் செய்யவில்லை என்றும் அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார். ஆகவே, அவள் மீது ஒரு சிறிய ஏமாற்றத்துடனேயே அவர் இறந்துபோனார். இத்தனை பிறவிகளாக அவளை வேண்டியும், அவள் பதிலளிக்கவில்லை.

திடீரென அவர் கவிதைகளையும் இலக்கியங்களையும் உருவாக்கத் தொடங்கினார். அவரால் ஓரிடத்தில் அமர்ந்து கவிதைகளை அப்படியே ஒப்புவிக்க முடிந்தது, அவை எழுதப்பட்டவை அல்ல, இயல்பாக வந்தவை.

அதனால் அவருடைய இந்த பிறவியில், அவருக்கு வேறு பெயர் இருந்தது. அது என்ன பெயர் என்று நமக்கு தெரியாது – அவர் சற்று அறிவில் குறைந்த ஒரு மனிதராக பிறந்தார். அவர் வளர்ந்து பெரியவரான போதும், அவருக்கு எட்டு வயது சிறுவனின் மனநிலை தான் இருந்தது. பொதுவாக, உங்களுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, நீங்கள் யாராக இருந்தாலும் மக்கள் உங்களை அழகானவராக கருதுவார்கள். உங்களுக்கு பதினெட்டு வயதாகிவிட்ட பிறகும் அதே நிலையில் இருந்தால், "நீ ஒரு முட்டாள்" என்று சொல்வார்கள். அப்படியே தான் அவருக்கும் நடந்தது. எல்லோரும் அவரை ஊர் முட்டாள் என்று நினைத்தார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புத்திசாலி இளவரசியின் ஆசை

அங்கே இருந்த உள்ளூர் மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தன்னை மிகவும் புத்திசாலியாக கருதினாள். ஒருவேளை அவள் புத்திசாலியாகவே இருந்திருக்கலாம். அவள் ஒரு புத்திசாலியான மனிதரை திருமணம் செய்ய விரும்பினாள். பெண்களே, உங்களுக்கு தெரியும், அப்படி ஒருவரை தேடி கண்டுபிடிப்பது கடினம் ,ஏனென்றால் அவர் அவ்வளவு புத்திசாலியாக இருந்தால், அவர் ஏன் உங்களை திருமணம் செய்வார்? பாருங்கள், நகைச்சுவை என்பது இருமுனை வாள் போன்றது.

எனவே அவளை திருமணம் செய்ய வந்தவர்கள், பல... பல ராஜ்யங்களில் இருந்து வந்த இளவரசர்களை மட்டுமே அவளால் மணக்க முடியும் என்பதால், அவர்களில் பலர் வந்தனர். ஆனால் அவள் அவர்கள் அனைவரையும் முட்டாள்கள் என்று கூறி நிராகரித்தாள். அவர்கள் எனக்கு ஏற்றவர்கள் அல்ல என்று அவள் கூறினாள். இந்த வரன்களை நிராகரித்தது மட்டுமல்லாமல், அவர்களை முட்டாள்கள் என்று அவமானப்படுத்தவும் செய்தாள். இதனால் காலப்போக்கில், இந்த சிறிய ராஜ்யத்தை சுற்றியுள்ள பல மன்னர்கள் இந்த நாட்டின் எதிரிகளாக மாறினர். ஏனெனில் அவர்கள் மறுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்தப் பெண்ணால் முட்டாள்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

எனவே, நான்கு திசையில் இருந்தும் அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்ட தந்தை, அந்த பெண் மீது மிகுந்த கோபம் கொண்டு, "முட்டாளே, உனக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றால், நம் ராஜ்யத்திலேயே மிக மோசமான முட்டாளையே உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் உனக்கு புத்தி வரும்" என்று கூறினார்.

அவர் அவளை நன்றாக திட்டிவிட்டு, தன் ஆட்களிடம், "நம் ராஜ்யத்திலேயே மிகப்பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடியுங்கள், அந்த ஆளை கண்டுபிடியுங்கள். அவன் என் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”, என்று கூறினார்.

காளிதாசரின் திருமணம்

எனவே அவர்கள் அங்கும் இங்கும் தேடி சென்றனர். அப்போது அந்த கிராமத்தில் ஒரு இளைஞன் ஒரு மரக்கிளையின் தவறான பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தான் அமர்ந்திருக்கும் அந்த பகுதியையே வெட்டிக் கொண்டிருப்பதை கண்டனர். சுற்றுச்சூழல் ரீதியாக நம் தலைமுறையை சேர்ந்த மக்களும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம், நாம் அனைவரும் அந்த வகையை சேர்ந்தவர்கள்தான். இதைவிட பெரிய முட்டாள்தனம் இருக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர்; தான் அமர்ந்திருக்கும் கிளையையே அவன் வெட்டுகிறான், அவன் அதில் வெற்றி பெற்றால், அவன் கீழே விழுந்துவிடுவான். தற்போது ஒரு தலைமுறையாக நாமும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். நாம் வெற்றி பெறும்போது, நாம் வீழ்வோம். வெற்றியை குறித்து தற்போது நமக்கு இருக்கும் எண்ணம் அந்த அளவிற்கு அழிவுகரமானதாக இருக்கிறது. எப்படியோ, அவர்கள் இந்த ஆளை பிடித்து அழைத்து சென்று, "இதைவிட ஒரு மோசமான முட்டாள் இருக்க முடியாது, எனவே இவன் இளவரசியை திருமணம் செய்ய தகுதியானவன்" என்று கூறினார்கள். அவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண் தன் கோபத்தை அவனிடம் காட்டினாள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் ஆயிரக்கணக்கான வழிகளில் அவனை அவமானப்படுத்தினாள். சாத்தியமான பல வழிகளில் அவனை நிந்தித்தாள்.

காளிதாசர் காளி தேவியை சந்தித்த தருணம்

காளி, Kali

சில மாதங்களுக்குப் பிறகு, மிகவும் எளிமையான மனம் கொண்ட அந்த மனிதன் கூட மிகுந்த அவமானத்தை உணர்ந்தான், ஏனென்றால் அவளுடைய நாக்கு அத்தனை கூர்மையானதாக இருந்தது. எனவே ஒரு நாள் அவளுடைய பேச்சின் கூர்மையிலிருந்து தப்பிப்பதற்காக அவன் அரண்மனையை விட்டு வெளியேறி காட்டிற்குள் சென்றான். அங்கே காட்டில் ஒரு பழைய காளி கோவில் இருந்தது. பொதுவாக காளி கோவில்கள் அடர்ந்த காடுகளுக்குள் தான் இருக்கும், ஏனென்றால் அங்கு நடக்கும் சடங்குகள் ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்தவை, அவற்றை சமூகம் எளிதில் ஏற்றுக்கொள்ள முன்வராது. காளி கோவில்களில் பல நேரங்களில் நடக்கும் சடங்கு முறைகளை சாதாரண சமூகத்தால் ஜீரணிக்க முடியாது, அதனால் அவை எப்போதும் காடுகளின் ஆழத்தில் அமைந்திருக்கும்.

எனவே அவர் காளி கோவிலுக்குள் சென்றார். ஒரு பெண்ணிடமிருந்து தப்பிக்க, அவர் மற்றொரு பெண்ணிடமே செல்ல வேண்டியிருந்தது. அவர் அவளுடைய பாதங்களில் தலையை வைத்து, எந்தவொரு பிரார்த்தனையோ, மந்திரமோ அல்லது ஸ்துதியோ தெரியாமல் தன் தலையை அங்கு மோதிக்கொள்ள ஆரம்பித்தார். அவளுடைய பாதங்களில் தலையை முட்டிக்கொண்டே இருந்ததால் அவர் தலையிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது.

ரத்த துளிகள் அவள் பாதங்களில் விழுந்தபோது... வீரர்கள் வந்து தன்னைத் தேடிப்பிடித்து மீண்டும் தன் மனைவியிடம் அழைத்து சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் கதவை உள்ளே பூட்டிக்கொண்டார். அப்போது வெளியே இருந்து ஒரு குரல் கேட்டது, அது "நான் காளி, நான் வந்துவிட்டேன், கதவைத் திற" என்று கூறியது.

இப்போது அவர் மிகவும் ஆத்திரமடைந்தார், திடீரென அவருக்கு பழைய பிறவிகளின் நினைவுகள் மொத்தமும் வந்தன. "இத்தனை பிறவிகளாக நீ வரவில்லை, இத்தனை பிறவிகளாக நான் பிரார்த்தனை செய்தேன், மந்திரங்களை உச்சரித்தேன், வழிபட்டேன், அப்போதெல்லாம் நீ வரவில்லை. இப்போது எதற்காக வந்திருக்கிறாய்? நான் கதவைத் திறக்கப் போவதில்லை" என்று கூறினார்.

பிறகு காளி மீண்டும் மீண்டும் அவரை அழைத்து, "தயவுசெய்து கதவைத் திற" என்று கூறினாள்.

பிறகு அவளை கேலி செய்வதற்காக, இன்னும் எட்டு வயது சிறுவனின் மனநிலையில் இருந்த அவர், கதவை ஒரு சிறிய இடைவெளி மட்டும் திறந்து, அவளைப் பார்த்து தன் நாக்கை நீட்டினார். அவள் அவர் நாக்கைத் தீண்டினாள். அந்த நாட்டின் மிகப்பெரிய முட்டாள் என்று கருதப்பட்ட ஒருவர், திடீரென்று ஒரு மாபெரும் அறிஞராக மாறினார்.இது காளிதாசரைப் பற்றி கூறப்படும் ஒரு நிகழ்வு.

காளிதாசரின் புலமை

இந்தியாவில் இலக்கியம் மற்றும் கவிதை ரீதியாக காளிதாசர் சேக்ஸ்பியரை விடவும் மேலானவராக கருதப்படுகிறார். காளிதாசரையும் சேக்ஸ்பியரையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வுகள் இந்தியாவில் உள்ளன. பல அறிஞர்கள் அவருடைய மொழி ஆளுமை, மொழியின் மீதான ஆளுமை திறன், புரிதல் மற்றும் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதம் ஆகியவற்றில் அவரை மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவருடைய படைப்புகள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன, இருப்பினும் அந்த சிறு படைப்புகள்கூட வியக்கத்தக்க தரம் கொண்டவை.

திடீரென அவர் கவிதைகளையும் இலக்கியங்களையும் உருவாக்கத் தொடங்கினார். அவரால் ஓரிடத்தில் அமர்ந்து கவிதைகளை அப்படியே ஒப்புவிக்க முடிந்தது, அவை எழுதப்பட்டவை அல்ல, இயல்பாக வந்தவை.அவருடைய நாக்கு அத்தகைய அபரிமிதமான ஆற்றலைப் பெற்றதால், புதிய பாடல்களை அவரால் மிக எளிதாக பாட முடிந்தது. இது பலருக்கு நடந்துள்ளது. இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். உலகில் குறிப்பிடத்தக்க மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இது அரசியல் ரீதியாக சிக்கலானது என்பதால் இப்போது நான் அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை. கடந்த இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்த்தால், தங்கள் தாயால் வளர்க்கப்பட்ட பல முக்கிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அந்த தாய் ஒரு தெய்வத்தைப்போலவே இருந்தார். அவர் வெறும் அன்பு காட்டும் தாயாக மட்டும் சுருங்கிவிடாமல், ஒரு தெய்வமாகவே நீடித்தார், குழந்தையிடம் கண்டிப்புடனும் இருந்தார்.கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகில் பல மனிதர்கள் தாங்கள் இருக்கும் துறைகளில் மாபெரும் உயரத்தை எட்டியிருக்கிறார்கள் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் அவர்கள் பெண்மையின் வழிபாட்டில் இருந்ததுதான் காரணம்.

பெண்மையின்  தன்மை

நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்மை என்பது ஒரு பாலினம் அல்ல. அது ஒரு பரிமாணம். இதன் முக்கியத்துவம் என்னவென்றால், நாம் ஆண்மை என கருதும் மற்ற பரிமாணத்தைவிட இந்த பரிமாணத்திலிருந்து பதிலை பெறுவது எளிது, ஏனெனில் இது வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதை விட எது சிறந்தது என்பது பற்றியது அல்ல இது. அப்படி எதுவும் கிடையாது. இது மாறுபட்ட ஒன்று, அவ்வளவுதான்.

கணித மேதை ராமானுஜர்

நீங்கள் அனைவரும் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு கணித மேதை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு திரைப்படம் கூட வெளிவந்தது. ராமானுஜன், அவர் உள்ளிருந்து எப்படி கணிதத்தைக் கொட்டினார் என்பதைப் பற்றியது அது. மிகவும் சிக்கலான கணித சூத்திரங்கள் அவை.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'பிளாக் ஹோல்’ என்ற கருத்தாக்கமே இல்லாத காலத்தில், அவர் பிளாக் ஹோல்களை விவரிக்கும் கணிதத்தை உருவாக்கினார்.பொதுவாக அறிவியல் ஆய்வுகளில், முதலில் ஒரு கோட்பாடு உருவாகும், பிறகு அதை அனுபவப்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டோ அல்லது கணித ரீதியாகவோ மெய்ப்பிக்க முயல்வார்கள். ஆனால் எந்த ஒரு கருத்தாக்கமும் உருவாவதற்கு முன்பே அவர் அதற்கான கணிதத்தை வழங்கினார். இன்றும் கூட, இவை எதைப் பற்றியது என்பதை புரிந்துகொள்ள ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால் அவர் கணிதத்தை அப்படியே கொட்டினார். "இது எங்கிருந்து வருகிறது?" என்று மக்கள் கேட்டபோது, புத்தகங்கள் மேல் புத்தகங்களாக அவர் கணிதத்தை எழுதிக்கொண்டே இருந்தார். துரதிருஷ்டவசமாக மிக சிறிய வயதிலேயே அவர் காலமானார். தன் மரணப் படுக்கையில் இருந்தபோது அவர் சொன்னார், "என் தேவி, என் தெய்வம் கணிதத்தை பொழிகிறாள்."

இவை சற்றே மிகைப்படுத்தப்பட்ட கதைகளாக இருக்கலாம், ஆனால் உண்மையில் நடக்கக்கூடிய ஒன்றுக்கு புறம்பானவை அல்ல.

கணித மேதை ராமானுஜர்

தேவியின் அருளை பெறுபவர், தன் வாழ்க்கையில் எதை செய்பவராக இருந்தாலும், நீங்கள் பிசினஸ் செய்பவராகவோ, ஒரு துறையில் நிபுணராகவோ, ஒரு கலைஞராகவோ, இசைக் கலைஞராகவோ அல்லது ஒரு யோகியாகவோ இருக்கலாம். உங்கள் செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்கு அல்லது மற்றொரு பரிமாணத்திற்கு எடுத்து செல்ல விரும்பினால், உங்களுக்கு தேவியின் அருள் தேவை. இந்த அருளால் தொடப்படுபவர் இயல்பாகவே மற்றவர்கள் அதிசயிக்கத்தக்க வகையில் உயர்வார்கள்.

இந்த உலகில் நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினால், உங்களுக்கு தேவியின் அருள் தேவை. நீங்கள் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமோ, ஒரு கோவிலுக்கு செல்வதன் மூலமோ அல்லது உங்களுக்குள் இருக்கும் அந்த பரிமாணத்தை அங்கீகரிப்பதன் மூலமோ அல்லது பெண் தன்மையை வியப்புடன் பார்ப்பதன் மூலமோ அல்லது இயற்கையோடு ஒன்றி இருப்பதன் மூலமோ அதை செய்யலாம்.நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் நாம் பெண்மை என்று குறிப்பிடும் அந்த பரிமாணம் உங்களுக்கு பலன்களை தரும்போது, உங்கள் வெளிப்பாடும் திறனும் உலகில் மிகப்பெரிய உயர்வை அடையும். இதனால்தான் பைரவி சாதனாவை ஆண்களுக்கும் நாங்கள் வழங்குகிறோம்.

Photo Credit:Kalidasa image from Wikimedia