தேவி - வாழும் நிதர்சனம்!

வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்:


சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை. பார்ப்பவர்களிடம் மிகத் தீவிரமான அன்பை உண்டுசெய்யும் தேவி, கணக்கில்லா மக்களின் வாழ்வில் அவர்களே நினைக்காத, எதிர்பார்க்காத விதங்களில் அருள்மழை பொழிந்திருக்கிறாள். ஏற்கெனவே நான்கு இடங்களில் பைரவி கோவில்களை உருவாக்க உறுதி செய்துள்ளோம். இதுதவிர பல சிறுகோவில்களும் வரவுள்ளன. அவளின் அருட்கரங்கள் நீளமாகிக்கொண்டே போகிறது.

தியானலிங்கத்தை விட பைரவியை பலரால் நன்றாக உணரமுடியும். இதற்குக்காரணம் அவள் ரூபமாகவும் வியாபித்திருக்கிறாள். தியானலிங்கம் சூக்ஷம நிலையில் இருக்கிறார். அவர் முற்றிலும் வேறுவொரு பரிமாணத்தில் இருக்கிறார். அவரை உணரவேண்டுமெனில், ஓரளவிற்குக் கூரிய கிரகிக்கும்திறன் வேண்டும். ஆனால் தேவி ரூபமாகவும் இருப்பதால், இனிமையான விஷயங்களையும் அவள் செய்யமுடியும், கோபம் வந்தால் உங்களை கன்னத்தில் அறைந்திடவும்கூட முடியும். என்னவொன்று, அன்பாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும் எல்லாவற்றையும் அவள் உச்சபட்சத்தில் வெளிப்படுத்துவாள் என்பதால், அவள் அறையும் நிலையை நீங்கள் உண்டுசெய்து கொண்டால், உங்கள் கன்னத்தில், ஐந்தல்ல, ஐம்பது விரல்கள் பதிந்துவிடும். அப்படியென்றால் தேவி நிஜமாக வியாபித்திருக்கிறாளா? ஆமாம். ரூபமாக வியாபித்திருக்கிறாளா? நிச்சயமாக. என்னைப் பொறுத்தவரை, எனக்கும், இன்னும் பலருக்கும் அவள் வாழும் நிதர்சனம்!

'நான்' என்ற உங்கள் எண்ணத்தில், கர்வத்தில் அத்தனை மீதம் இல்லாதபோது, 'நீங்கள் அல்லாத'தின் இருப்பை நீங்கள் தானாக உணரத் துவங்குவீர்கள்

சரி..."தேவியை உணரவேண்டுமெனில் நான் என்ன செய்யவேண்டும்?" நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டாம். 'நான்' என்ற உங்கள் எண்ணத்தில், கர்வத்தில் அத்தனை மீதம் இல்லாதபோது, 'நீங்கள் அல்லாத'தின் இருப்பை நீங்கள் தானாக உணரத் துவங்குவீர்கள். 'நான்' என்ற எண்ணமும், நினைப்பும் உங்களுக்கு மிக அதிகமாக இருந்தால், உங்களால் எதையுமே உணரமுடியாது. இங்கு மட்டுமல்ல, எங்குமே உங்களால் எதையும் உணரமுடியாது. தேவியை உணராமல் தவறவிடுவது எளிதல்ல. ஆனால் இங்கிருக்கும் பலர், தங்கள் இதயத்துடிப்பை உணர்ந்ததில்லை, அவர்கள் விடும் மூச்சுக்காற்றை உணர்ந்ததில்லை, ஏன்... முழுநிலவைக் கூட அவர்களால் பார்க்கமுடியாது. இப்படி இருந்தால் என்ன செய்வது? உங்களைக் கொசு கடிப்பது உங்கள் கவனத்தில் இல்லாவிட்டால், உங்கள் இதயம் துடிப்பதை, உங்கள் மூச்சுக்காற்றை, நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்குள் எப்படி நடந்துகொள்கிறது என்பதைக்கூட நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் எப்படி தேவியை கவனிக்கவோ, உணரவோ போகிறீர்கள்? பைரவியால் சில தொண்டர்களின் வாழ்வில் அதிசயமான சில விஷயங்கள் நடந்துள்ளன. அவைகளைப் பற்றி வெளியே பேச அவர்கள் தயங்குகிறார்கள் என்பதால், அதை விட்டுவிடுவோம். ஆனால் இதுபோல் பல அதிசயங்கள் நடந்திருக்கின்றன. என்றாலும் பலரின் பிரச்சினை... நிஜத்தை உணர்வதற்கு பதிலாக, அவர்கள் அதைப்பற்றிய கற்பனையில் ஆழ்கிறார்கள்.

எதையும் கற்பனை செய்யாதீர்கள். கற்பனை செய்வது அனுபவப்பூர்வமாய் உணர்வதற்குப் பெரும் தடையாக இருக்கும். 'அனுபவத்தில் உணரமுடியாவிட்டால் என்ன? கற்பனையை வளர்த்துக்கொண்டு அதில் லயிக்கலாமே' என்று நீங்கள் முயற்சித்தால், அது முட்டாள்தனம். ஆரம்பத்தில் வேண்டுமானால் கற்பனைசெய்வது இனிமையாக இருக்கலாம். ஆனால் அது கட்டுப்பாடின்றி நடக்க ஆரம்பித்தால், உங்களுக்குப் பைத்தியமே பிடித்துவிடும். கற்பனையில் ஆழ்ந்தால், இரண்டே நிமிடத்தில் நீங்கள் சொர்க்கலோகம் கூட சென்றுவிட்டுத் திரும்பலாம்... நீங்கள் இருக்கும் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமலே! என்னவொன்று நிதர்சனத்திற்குத் திரும்பி வந்துவிட்டோமே என்ற மனச்சோர்வு மிஞ்சும். ஆனால் அனுபவம் என்பது முற்றிலும் வேறு. அது உங்கள் வாழ்வையே மாற்றவல்லது. அனுபவம் என்றால் உண்மையாய், ஆழமாய் ஏற்படும் அனுபவம். நிஜத்தில், நிதர்சனத்தில் ஏற்படும் அனுபவம். அப்படிப்பட்ட அனுபவம் நிச்சயம் உங்கள் வாழ்வையே மாற்றிவிடும்.

‘நான்’ என்ற எதுவும் உங்களுக்குள் மீதம் இருக்காது. 'நான்' என்ற சுவடு சிறிதும் இல்லையென்றால், காலைக் கதிரொளி போன்ற தீர்க்க நிதர்சனமாய் அவளை நீங்கள் உணர்வீர்கள்.

பக்தி... நீங்கள் பைரவியைப் போற்றிப் பாடுவதாலோ, அவள்மீது ஆழமாக அன்பு கொண்டிருப்பதாலோ அவள் தோன்றுவாள் என்று எண்ணவேண்டாம். ஏனெனில் அவள் எப்போதும் இங்குதான் இருக்கிறாள். உங்களுக்கு பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும். அது அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. உங்கள் 'பக்தி' அவளைப்பற்றியது அல்ல... அது உங்களைப் பற்றியது. பக்தியில் நீங்கள் முழுமையாகக் கரைந்திருந்தால், ‘நான்’ என்ற எதுவும் உங்களுக்குள் மீதம் இருக்காது. 'நான்' என்ற சுவடு சிறிதும் இல்லையென்றால், காலைக் கதிரொளி போன்ற தீர்க்க நிதர்சனமாய் அவளை நீங்கள் உணர்வீர்கள். இப்படி அவளை நீங்கள் உணரவேண்டும் என்றால், மனதளவில் ஒன்றுமற்ற வெறுமையாய் நீங்கள் இருக்கவேண்டும். உங்களில் வெறுமை எந்தளவிற்கு குடிகொள்கிறதோ, அந்தளவிற்கு ஆழமாக அவளை நீங்கள் உணரமுடியும்.

உங்கள் பக்தி தேவியைப் பற்றியதல்ல. அதில் எந்தளவிற்கு மிச்சமில்லாமல் நீங்கள் கரையத் தயாராகயிருக்கிறீர்கள் என்பது பற்றி. என்னவொன்று, நீங்கள் இயல்பாகவே பக்தியில் இருக்கமுடியாது. அந்த பக்தியை உங்களில் உண்டுசெய்ய உங்களுக்கு ஒரு காரணி, ஒரு வஸ்து தேவைப்படும், அதற்கு நீங்கள் அவளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது 'உலகம்' என்று நீங்கள் பார்ப்பது அனைத்தும் உங்கள் கருத்து, உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த நிலையில் பக்தியோ, உள்ளுணர்வில் உணர்ந்து அறிவதோ இருக்காது. இப்போது நீங்கள் பார்ப்பது, உலகல்ல, படைப்பல்ல, படைத்தவனும் அல்ல. அதைப்பற்றி உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கியிருக்கும் பிம்பம் மட்டுமே. இப்படி மிகப்பெரிதாக வளர்ந்திருக்கும் 'நான்' என்பதை அழிக்க, எல்லா இடத்திலும் பைரவியைக் காணுங்கள். சில காலம் கழித்து, எல்லாம் அவ்வாறே ஆகிவிடும். ஒரு இலையைப் பார்த்தால், ‘இது பைரவி போல் இருக்கிறதே’; ஒரு பூவைப் பார்த்தால் ‘இது பைரவியைப் போல இருக்கிறதே’ என்று ஆகிவிடும். இதை நீங்கள் யாரிடமும் சொல்லவேண்டாம், உங்களுக்குள் மட்டும் செய்யுங்கள். 'நான்' என்ற உணர்வை குறைக்க இது அற்புதமான கருவி. நாளடைவில் 'நான்' என்பது காணாமலே போய்விடும்.

'இது முட்டாள்தனமாகத் தோன்றுகிறதே..?' வேலை செய்கிற ஒரு விஷயத்தை நீங்கள் முட்டாள்தனம் என்பீர்களா இல்லை புத்திசாலித்தனம் என்பீர்களா? இது வேலை செய்கிறது. அவ்வளவுதான். கருவிகள் உபயோகம் செய்வதற்காக உள்ளது... ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல. இதுவும் உபயோகத்திற்கு உருவாக்கப்பட்ட ஒன்று, ஆராய்வதற்கல்ல. இதை உபயோகியுங்கள், வேலைசெய்யும். ஆனால் ஆராய்ந்தால்... இதில் என்ன இருக்கும்? இப்போது நான் உங்களை ஆராய்ந்தால், உங்களில் ஏதாவது இருக்குமா? நிஜத்தில் ஒன்றுமேயில்லைதானே? அதுபோல்தான் இதுவும். இதை உபயோகியுங்கள், வேலைசெய்யும்