சத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பாரம்பரிய இந்தியாவில் கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லுவார்கள் ஏனென்றால் அதற்கு தினப்படி பூஜைகள் செய்து பராமரிக்க வேண்டும். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகம் ஒன்று தினப்படி பூஜைகளாலும், சடங்குகளாலும் பராமரிக்கப் படவில்லை என்றால், அதன் சக்தி வக்கிரமாக மாறி அருகிலுள்ள மக்களுக்கு கேடு விளைவிக்கும். பல கோவில்கள் பராமரிக்கப் படாமல் இந்த நிலையில்தான் இன்று உள்ளன. மக்களுக்கு அதை எப்படி உயிரோட்டமாக, வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ப்ராணப் பிரதிஷ்டை என்பது அப்படி இல்லை. ஒரு வடிவத்திற்கு மந்திரங்களால் அல்லாமல், உயிர் சக்தியூட்டி பிரதிஷ்டை செய்ய முடியும். ஒரு முறை அப்படி பிரதிஷ்டை செய்து விட்டால், அது நிரந்தரமானது, பராமரிப்பு தேவையில்லை. அதனால்தான் தியானலிங்கத்தில் பூஜைகள் நடப்பதில்லை, ஏனென்றால் அதற்கு பூஜைகள் தேவையில்லை.

கோவில்களில் சடங்குகள் நடத்தப் படுவது உங்களுக்காக இல்லை, ஆனால் அந்த விக்கிரகத்தை உயிரோடு வைப்பதற்காகவே. இல்லையென்றால் அது மெதுவாக மடிந்து விடும். தியானலிங்கத்திற்கு இது எதுவும் தேவையில்லை, ஏனென்றால் ப்ராண பிரதிஷ்டையால் அதை உயிரூட்டி இருக்கிறோம். அது அப்படியே இருக்கும். அதன் கல் பாகத்தை எடுத்து விட்டால் கூட, அது அப்படியே இருக்கும். இந்த உலகமே அழிந்தால் கூட, இந்த வடிவம் அப்படியே இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.