ஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார்

ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார்.

சத்குரு: இப்போது உங்கள் அனுபவத்தில் இருக்கும் விஷயங்கள் என்றால் உங்கள் உடல், மனம், மற்றும் உணர்ச்சிகள். இவற்றை உங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும், இம்மூன்றும் அவை இயங்கும் விதத்தில் இயங்கிட ஒரு சக்தி இருக்கவேண்டும் என்று நீங்கள் அனுமானிக்க முடியும். சக்தியில்லாமல் இவை இயங்கமுடியாது. உதாரணத்திற்கு ஒரு மைக் சப்தத்தை மிகைப்படுத்துகிறது. மைக் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டாலும், அதை இயக்கும் சக்தி ஒன்று இருக்கும் என்று நீங்கள் அனுமானிக்க முடியும்.

உங்கள் வாழ்க்கையில் நிஜங்கள் இந்நான்கு மட்டுமே: உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி. உங்களுக்கு நீங்கள் என்ன செய்துகொள்ள விரும்பினாலும் அது இந்நான்கு நிலைகளிலும் இருக்கவேண்டும்.

உங்கள் உச்சநிலையை அடைவதற்கு உங்கள் உணர்ச்சிகளை பயன்படுத்தி முயற்சித்தால் பக்தி யோகா என்கிறோம், இது பக்தியின் பாதை. உச்சநிலையை அடைய உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் ஞான யோகா என்கிறோம், இது புத்தியின் பாதை. உச்சநிலையை அடைய உங்கள் உடலையும், உடல்செயலையும் பயன்படுத்தினால் கர்ம யோகா என்கிறோம், இது செயலின் பாதை. உங்கள் உச்சநிலையை அடையும் முயற்சியில் உங்கள் சக்திகளை மெருகேற்ற முயன்றால் க்ரியா யோகா என்கிறோம், இது உள்நிலையில் செயலாற்றுவது.

இந்த நான்கு விதங்களில் மட்டுமே உங்களுக்குள் நீங்கள் வேலை செய்திட முடியும். இந்நான்கு பரிமாணங்களையும் நாம் ஒருவருடைய இதயம், மூளை, மற்றும் கைகளோடு ஒப்பிட முடியும். ஒரு மனிதருக்கு இதயம் ஆதிக்கமாக இருக்கும், இன்னொருவருக்கு மூளை ஆதிக்கம் செலுத்தும், இன்னொருவருக்கோ கைகள் அதிக்கமானதாக இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் இந்நான்கின் கலவையாக இருக்கிறார்கள், அதனால் உங்களுக்கு இந்நான்கின் கலவை தேவைப்படுகிறது. உங்களுக்கென சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கலவையாக இது இருந்தால்தான் இது சிறப்பாக வேலைசெய்யும். வேறொருவருக்குக் கொடுப்பது உங்களுக்கு சரியாக வேலை செய்யாமல் போகலாம். சரியான விகிதத்தில் இருந்தால்தான் அது உங்களுக்கு வேலை செய்யும். அதனால்தான் ஆன்மீகப் பாதையும் ஒரு வாழும் குருவின் முக்கியத்துவம் இவ்வளவு வலியுறுத்தப்படுகிறது. அவர் உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார். இல்லாவிட்டால் அதில் உயிரோட்டமிருக்காது.

உங்களைக் கட்டமைக்கும் அடிப்படையான அம்சங்களான உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தியில் உங்கள் அனுபவங்கள் வேரூன்றியிருக்கும்போது, அவற்றை கவனிக்காமல் நீங்கள் முன்நோக்கிச் செல்ல இயலாது.

யோகப் பாரம்பரியத்தில் ஒரு அழகான கதை உள்ளது. ஒருநாள் ஒரு ஞான யோகி, பக்தி யோகி, கர்ம யோகி மற்றும் க்ரியா யோகி ஒன்றாக காட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். சாதாரணமாக இந்நால்வரும் ஒன்றாக இருக்கவே முடியாது, ஏனென்றால் ஒரு ஞான யோகி பிற யோக முறைகள் அனைத்தையும் அபத்தமாகப் பார்ப்பார். ஒரு சிந்திக்கும் மனிதர், பகுத்தறியும் மனிதர் மற்ற எவரையும் துச்சமாகக் கருதுவார். உணர்ச்சிபொங்கி அன்புததும்பும் நிலையிலுள்ள ஒரு பக்தி யோகியோ, இந்த ஞானமும் கர்மமும் க்ரியாவும் நேரத்தை வீணடிப்பது என்றெண்ணுவார். இறைவனை நேசித்தால் நடக்கவேண்டியது நடந்துவிடும். கர்ம யோகியோ, மற்ற அனைவரும் தங்கள் கற்பனைத் தத்துவங்களை வைத்துக்கொள்ளும் சோம்பேறிகள் என்று கருதுவார். செய்யவேண்டியது வேலை மட்டும்தான். ஒருவர் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும். கிர்யா யோகி எல்லாவற்றைப் பார்த்தும் சிரிப்பார். பிரபஞ்சம் முழுவதுமே வெறும் சக்தி. உங்களை இயக்கும் சக்தியை உருமாற்ற நீங்கள் எதுவும் செய்யவிட்டால், நீங்கள் கடவுளுக்காக ஏங்கினாலும் எதற்காக ஏங்கினாலும் எதுவும் நடக்கப் போவதில்லை.

அதனால் இவர்கள் ஒன்று சேரவே முடியாது, ஆனால் இன்று இவர்கள் ஒன்றாக நடந்துகொண்டு இருந்தார்கள். அப்போது மழை வரத் துவங்கியது. அவர்கள் மழையைத் தப்பிக்க ஓர் இடம் தேடி ஓடினார்கள். அப்போது சுற்றும் சுவர்கள் இல்லாமல் மேற்கூரை மட்டும் இருந்த ஒரு பழமையாக கோயிலைக் கண்டார்கள். அதன் மையத்தில் ஒரு லிங்கம் இருந்தது. அவர்கள் அடைக்கலம் தேடி கோயிலுக்குள் சென்றார்கள். காற்றொடு புயல் தீவிரமாகி எல்லாப்பக்கமும் மழை கொட்டத்துவங்கியது. புயலின் உக்கிரம் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் லிங்கத்திற்கு இன்னுமின்னும் நெருக்கமாக வந்தார்கள். எல்லாப்பக்கமும் வானம் பொத்துக்கொண்டு கொட்டியதால் அவர்கள் போக வேறு வழியில்லாமல் போனது. புயல் இன்னும் தீவிரமாகியது, லிங்கத்தை நான்கு புறமும் கட்டிப்பிடித்தால் மட்டுமே அதைத் தப்பிக்கும் நிலை ஏற்பட்டது. திடீரென பிரம்மாண்டமாக ஏதோ நிகழ்வதை அவர்கள் உணர்ந்ததால். ஒரு அமானுஷ்ய சக்தியின் இருப்பு, ஒரு ஐந்தாவது இருப்பு அங்கு இருந்தது. எல்லோரும் ஒரே குரலில், "ஏன் இப்போது இது நிகழ்ந்துள்ளது? பல வருடங்களாக உங்களைத் தேடி அலைந்துள்ளோம், அப்போது எதுவும் நிகழவில்லை. ஏன் இப்போது?" என்று கேட்டார்கள்.

அப்போது சிவன் சொன்னார், "கடைசியில் நீங்கள் நால்வரும் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். இதற்காகத்தான் நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன்."

உங்களைக் கட்டமைக்கும் அடிப்படையான அம்சங்களான உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தியில் உங்கள் அனுபவங்கள் வேரூன்றியிருக்கும்போது, அவற்றை கவனிக்காமல் நீங்கள் முன்நோக்கிச் செல்ல இயலாது. ஒரு பயணத்தைத் துவங்க விரும்பினால், நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து மட்டும்தான் துவங்க முடியும்.