சிவயோகி
சத்குரு தனது முற்பிறவிகள் குறித்து பேசும்போது, கதியற்று நின்ற ஒரு சாதகராக இருந்த தனக்கு அவரது குருவின் அருள் கிடைக்கப்பெற்ற அதி உன்னத தருணத்தை சத்குரு பகிர்கிறார்.
சத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான வழிமுறைகளைத் தேர்வு செய்யும் மனிதர்கள், ஆதரவற்ற சாதகர்களாக இருக்கும் காரணத்தால் அப்படிப்பட்ட பாதையைத் தேர்வு செய்துள்ளனர் - அருளின் மடி இல்லாத நிலையில் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முயற்சி செய்கின்றனர்.
இதனால் எழக்கூடிய வலியை, வேறு எவரையும்விட நான் அதிகம் அறிந்திருக்கிறேன். இரண்டு பிறவிகளின் மிக மிகத் தீவிரமான, உண்மையிலேயே இதயத்தைப் பிளக்கும் சாதனாவுக்குப் பிறகு, உடல் எப்படியாவது உடைந்துதான் போகிறது. சிலருக்கு, அவர்களது உடல் சிதறுண்டு போவதற்கு முன்னால், அவர்களின் இதயம் உடைந்துவிடுகிறது. ஆனால் தங்களது இதயத்தை நொறுங்கவிடாத வேறு சில மனிதர்களும் இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களையே கல்லாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த இரண்டு பிறவிகளில், சிவயோகி என்றே நான் மக்களால் குறிப்பிடப்பட்டேன். நான் பலவிதமான சாத்தியங்களையும், பரிமாணங்களையும் கண்டதுடன், எண்ணற்ற இடங்களுக்கும் சென்று, முற்றிலும் தீவிரமான ஆன்மசாதனைகளை மேற்கொண்டு, சமாதியின் பல்வேறு நிலைகளை உணர்ந்தேன். பலவிதமான திறன்களையும் கைவரப்பெற்றேன். ஆனால் இன்னமும், நிகழவேண்டியது நிகழ்ந்திடவில்லை. ஆகையால், இறுதிப் படியை நான் கடப்பதற்கு உதவக்கூடிய எவரேனும் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காகவே, நான் பலவிதமான மாந்திரிக அறிவியல்களை பரிசோதித்துப் பார்த்தேன். மனித உடலமைப்பு பற்றிய புரிதலினாலும், அதன் மீதான ஆளுமையின் காரணமாகவும், பல நிலைகளிலும் எனக்குள்ளேயே படைப்பின் செயல்முறையை அறிந்திருந்ததால், நான் உடலைத் துறந்து, உடல் இல்லாமல் என் தேடுதலை நடத்துவதற்கு முடிவு செய்தேன்.
இப்படிப்பட்ட ஒரு கட்டத்தில்தான் என் குரு எனது வாழ்க்கைக்குள் வந்தார். அவரது கையிலிருந்த கோலினால் என்னைத் தொட்டார். உணரப்பட வேண்டிய அனைத்தும் உணர்ந்துகொள்ளப்பட்டன. எது ஒன்றும் தொடக்கூடிய சிகரத்தையே நான் அடைந்திருந்தேன்.
எனது குரு
குரு என்னதான் செய்யக்கூடும்? நான் செய்ததெல்லாம் செயல், செயல் மட்டுமே பார்க்கவேண்டிய அனைத்தையும் பார்த்த பிறகு எப்படி இருப்பது என்று கற்றுத்தர அவர் வருகிறார். – சத்குரு
எனது குருவுடனான அருகாமை ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்தது. இந்த ஒரு சில கணங்களில்தான், அந்த மகத்தான மனிதர், தந்திரமாக அவரது திட்டத்திற்கு என்னை அடிமைப்படுத்திவிட்டார் தியானலிங்கத்தை, உருவாக்குவதற்குப் பொருத்தமான ஒரு நபராக சிவயோகியை அவர் எப்படியோ அடையாளம் கண்டுகொண்டார். இந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார் - பேச்சினாலோ அல்லது வார்த்தைகளாலோ அல்ல, ஆனால் தியானலிங்கப் பிரதிஷ்டைக்குத். தேவையான அளப்பரிய தொழில்நுட்பத்தை அவர் பரிமாறினார். என் மூலம் அவர் நிறைவேற்றிக்கொள்ள விரும்பிய அந்தப் பணி இல்லையென்றால், நான் இங்கே உடல்தன்மையில் இருப்பது என்பதே கேள்விக்குறியாகியிருக்கும். தியானலிங்கத்தை உருவாக்குவதற்கு சிவயோகி முயற்சி செய்தார். ஆனால் போதுமான வாய்ப்புகள் இல்லாததாலும், ஆதரவு கிடைக்காத காரணத்தினாலும், அவரால் தனது குருவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் பணியைத் தொடருவதற்காக, அவர் சத்குரு ஸ்ரீபிரம்மாவாக மறுபிறப்பு எடுத்து வந்தார்.