ஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம்? சத்குருவின் விளக்கம்...

கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார்? சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது?

சத்குரு: தியானலிங்கத்தை வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. தியானலிங்கம் போல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. என் வாழ்வில் இன்னும் ஆயிரம் ஆதியோகி சக்தி உருவங்களைக் கூட என்னால் உருவாக்கமுடியும். ஆனால் தியானலிங்கம் போன்று இன்னும் ஒன்றேவொன்றைக்கூட என்னால் உருவாக்கமுடியாது. அது முற்றிலும் மாறுபட்ட வேறொரு பரிமாணம். தர்க்கரீதியாகப் பார்த்தால், இரண்டிற்கும் இடையே அத்தனை வித்தியாசம் இருக்காது... ஏனெனில் இருவருக்குமே ஏழு சக்கரங்கள் உண்டு. நம் எல்லோருக்கும்கூட ஏழு சக்கரங்கள்தான்.

ஆதியோகிக்கும் ஏழு சக்கரங்கள்தான். ஆனால் அவையிரண்டும் ஒன்றல்ல. ஆதியோகி குறிப்பிட்ட சிலவற்றைச் செய்வார். ஏதோ ஒன்றைச் செய்வதற்கு அவரை நீங்கள் வேலையில் நியமிக்கலாம். ஆனால் அவரை (தியானலிங்கம்) எதை செய்வதற்கும் நீங்கள் வேலையில் நியமிக்கமுடியாது. அவர் எப்போதும் அங்கிருப்பார். அவ்வளவுதான்.

அப்படியென்றால், தியானலிங்கத்தைவிட ஆதியோகி அதிகம் பயன்படுவாரா? ஆம். ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்த்தால், தியானலிங்கத்தைவிட ஆதியோகி உபயோகமானவர்தான். ஆனால் பயன்பாட்டை மட்டும் கணக்கிட்டு வாழ்ந்தால், வாழ்வையே இழந்துவிடுவீர்கள்!

மஹாபாரதத்தில் மிக அழகான தருணம் ஒன்று உண்டு. மஹாபாரதப் போரில் ஒவ்வொருவரும், பாண்டவர்களா? கௌரவர்களா? என இரண்டில் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்து அப்போரில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது கிருஷ்ணர், தான் ஒரு பக்கம் இருப்பதாகவும், தன் பத்தாயிரம் பேர் கொண்ட படையை மற்றொரு பக்கத்திற்குக் கொடுப்பதாகவும் கூறி, யாருக்கு எது வேண்டும் என்று அவர்களையே தேர்வுசெய்யச் சொன்னார். துரியோதனன் கிருஷ்ணரின் படையை விட்டுத்தர முடியாமல், பராக்கிரமசாலியான கிருஷ்ணரை இழக்கவும் விரும்பாமல் விவாதம் செய்ய யத்தனித்தபோது, கிருஷ்ணர், "என்னைத் தேர்ந்தெடுப்பவரின் பக்கத்தில் நான் இருப்பேன், ஆனால் களமிறங்கி போரிடமாட்டேன்" என்றார். துரியோதனன் நிம்மதி அடைந்தான். எப்படியும் கிருஷ்ணரின் படை தனக்கே வேண்டும் என்று முடிவுசெய்தான். ஆனால் பாண்டவர்களோ, "எது எப்படி நடந்தாலும் சரி, நீங்கள் எங்களுடன் இருந்தால் போதும்" என்று கிருஷ்ணரைத் தேர்ந்தெடுத்தனர். துரியோதனனுக்கு அவன் விரும்பியபடி கிருஷ்ணரின் படை கிடைத்தது. தனக்குள் துரியோதனன், "முட்டாள்த்தனமாக நடந்துகொள்வதற்கு பாண்டவர்கள் பெயர்போனவர்கள் தாம். ஆனால் இப்போது அவர்கள் செய்திருக்கும் காரியம், மற்ற எல்லா முட்டாள்த்தனங்களையும் மிஞ்சிவிட்டது. போருக்குப் போகிறோம்... அச்சமயத்தில் 10,000 பேர் கொண்ட படையைத் தேர்ந்தெடுக்காமல், ஒரேவொரு நபரை, அதுவும் போரில் சண்டை போடமாட்டேன் என்று கூறிவிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுதான் முட்டாள்த்தனத்தின் உச்சம்” என்று நினைத்து நகைத்தான். ஆனால் பாண்டவர்களின் இந்தவொரு முடிவுதான் போரில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்வும்கூட அப்படித்தான்.

ஆதியோகியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கினோம். அதை அவர் அற்புதமாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் தியானலிங்கத்தை எந்தவொரு நோக்கத்திற்காகவும் உருவாக்கவில்லை. காரணங்களுக்கு அவசியமின்றி சும்மாவே இப்பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ, அதுபோல் இவரும் சும்மா இருப்பார்... எப்போதும்! இவ்வுலகில் ஒரு பூச்சியின் வாழ்விற்கு ஒரு அர்த்தம், ஒரு பயன் இருக்கலாம். அதேபோல் பறவை, விலங்குகள், மரம், செடி, அவற்றின் நடுவே முளைக்கும் களை என ஒவ்வொன்றிற்கும் இவ்வுலகில் ஒரு பயன் இருக்கலாம். ஆனால் இந்தப் பிரபஞ்சத்திற்கும், அதைப் படைத்தவனுக்கும் எவ்வித பயனும் இல்லை. 'பயன்' என்ற கண்ணோட்டத்தில் அணுகினால், படைத்தவனைவிட ஒரு பூச்சி இன்னும் உபயோகமானது என்று நீங்கள் பூச்சியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆக, பயன்பாட்டின் அடிப்படையில் வாழ்வை அணுகினால், வாழ்வின் அடிப்படைகளைத் தவறவிடுவீர்கள்... இந்த உயிரின் உச்சபட்ச சாத்தியத்தையே தவற விட்டுவிடுவீர்கள்.

தியானலிங்கத்திற்கு இணை யாருமில்லை. போட்டியென்று வந்தால் அவரை யாரும் நெருங்கமுடியாது... முதலில் அவருக்கேது போட்டி? அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். நான் முன்பே சொன்னது போல், போதுமான அளவு செல்வம், வளம் மற்றும் தேவையான ஆதரவு இருந்தால், ஆயிரம் ஆதியோகிகளை நாம் உருவாக்கலாம். அவ்வளவு ஏன்... வேண்டுமென்றால் பத்தோ, அதற்கும் மேலோ ஆதியோகிகளை இன்றே இங்கு நாம் சுலபமாக பிரதிஷ்டை செய்துவிட முடியும். அதற்குத் தேவையான சக்தி நம்மிடம் இருக்கிறது... எப்படியும் இங்கு நீங்கள் இத்தனை பேர் நம்முடன் இருக்கிறீர்கள். இங்கிருக்கும் பத்தாயிரம் பேருக்கும், ஆயிரம் நபர்களுக்கு குறைந்தது ஒரு ஆதியோகியை இன்றே என்னால் நிச்சயம் பிரதிஷ்டை செய்யமுடியும். ஆனால் தியானலிங்கம் அப்படியல்ல. அதைப் போல் இன்னுமொன்றை பிரதிஷ்டை செய்து உருவாக்க வாய்ப்பேயில்லை. அதிலும் என்னால் இன்னொரு தியானலிங்கத்தை நிச்சயம் உருவாக்கமுடியாது. வேறொருவர் செய்யமுடியுமோ... என்னவோ? ஆனால் தற்சமயத்தில் அதுபோன்ற திறன் கொண்டவர் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.