லிங்க பைரவி

பெண்மையின் ஜுவாலை


 

சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான உணவு இருக்கும், ஆனால் நாம் வாழ வாழ்க்கை இருக்காது. நீங்கள் இப்படி ஒப்பிட்டுப் பாருங்கள்.. மரத்தின் வேர் ஆண் தன்மை என்றும், மரத்தின் மலர்களும் கனிகளும் பெண் தன்மை என்றும் வைத்துக் கொள்வோம்.. வேரின் நோக்கமே மரத்தில் மலர்களையும் கனிகளையும் அள்ளி வழங்குவதாகத்தானே இருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால் வேர் இருப்பதே வீண்தானே.

இந்த உலகில் இருந்த எல்லா சிறந்த கலாச்சாரங்களிலும் பெண் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். தீவிரமாக ஆணாதிக்க கலாச்சாரங்களையும், மதங்களையும் நாடோடி பழங்குடியினர் உருவாக்கத் துவங்கிய பின்னர், பெண் தெய்வ வழிபாடு மெதுவாக அகற்றப்பட்டு இந்த உலகில் இருந்தே பொசுக்கப்பட்டது. பெண் தெய்வ வழிபாடு இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே நாடு நம் பாரதம்தான். இன்றும் தென்னிந்தியாவில், தங்களுக்கே உரிய தனித்த பெண் தெய்வ வழிபாடு இல்லாத கிராமங்கள் ஒன்றைக் கூட காண முடியாது. பெண்மையை கொண்டாடுவதில்தான் இந்த கலாச்சாரத்தின் அடிப்படையே அமைந்துள்ளது. ஆனால் மெதுவாக, பெண்மையை சுரண்டும் கலாச்சாரமாக இது பரிணமித்துள்ளது. எனவே சக்திமிக்க வடிவில் பெண்மையை நாம் மீட்டெடுக்க விரும்பினோம்.

லிங்க பைரவி தீவிரமான சக்தி மிக்க பெண்மையின் வடிவம். ஆனால் லிங்க வடிவில் பெண் சக்தியை வழிபடுவது அபூர்வம். ஒரு சில இடங்களிலும் கூட இம்முறை தனிப்பட்டவர்கள் பின்பற்றுவதாகவே இருந்திருக்கிறது. அநேகமாக இது போன்ற இடம், பொதுமக்கள் பங்கேற்புடன், முற்றிலும் மாறுபட்ட வகையில் கையாளப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இந்த உலகில் பெண்கள், ஒன்று பார்பி பொம்மையை போலவோ அல்லது ஆணை போலவோ மாற முயலும் சோகம் நிகழ்ந்து வருகிறது. அவர்களுக்கும் பொறாமை, ஆண்மைமிக்க லட்சியங்கள் என்று பல முட்டாள்தனங்கள் இருந்தாலும், பெண்மையின் அந்த ஜுவாலை அவர்களிடம் இல்லை. தான் நெருப்பைப் போல இருப்பதே ஒரு பெண் இந்த உலகிற்கு சேர்க்க வேண்டிய பங்கு. லிங்க பைரவி சிறு பொறி கொண்ட பெண்ணல்ல, ஒரு பெரும் தீயை தன்னில் கொண்டவள். பைரவி ஒரு பொம்மையை போலவோ, ஆணைப் போலவோ இல்லாமல் தீவிரமான உச்சபட்ச பெண்மையின் வடிவம்.

உங்கள் உச்சபட்ச நல்வாழ்வை நோக்கியே தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகியல் நலன்களையும் வழங்கும் தன்மை தியானலிங்கத்தின் உள்ளூர இருந்தாலும், உடல் நலம் மற்றும் பொருளியல் சார்ந்த நல்வாழ்வுக்கு பைரவி விரைந்து வருவாள். ஆனால் பைரவியிடமும் ஆன்மீக குணம் இணைந்தே இருக்கிறது. உங்களை நீங்கள் ஆழமாக பைரவியுடனான செயல் முறைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது, நீங்கள் பொருள் தன்மையை நாடியே பைரவியை தேடி வந்திருந்தாலும், மெதுவாக ஆன்மீகம் நோக்கி உங்களை அழைத்துச் செல்வாள்.