கர்ம யாத்திரை
தியானலிங்க பிரதிஷ்டையின்போது, அதில் பங்கேற்றவர்களின் கர்ம பிணைப்புகளை தகர்க்கும் விதமாக சத்குருவின் வழிகாட்டுதலில் கர்ம யாத்திரை மேற்கொள்ளப்பட்டது!
சத்குரு: தியானலிங்கப் பிரதிஷ்டையில் முழுமையாக ஈடுபட்ட இருவருக்காகவே அது நிகழ்ந்தது. அந்தப் பிரதிஷ்டைக்கான பணிகளின்போது, அவர்களுக்கென்று சில கர்மவினைகளின் கட்டமைப்புகள் சில தடைகளாய் இருந்து, அவர்களை ஒரு எல்லைக்கு மேல் போகவிடாமல் இருந்ததை உணரமுடிந்தது. அதனால்தான் அந்தப் பயணத்தை மேற்கொண்டோம். கடந்த கால வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த இடங்களுக்குச் சென்றோம். ஒரிசா, கடப்பா போன்ற இடங்கள் இந்த வாழ்வில், இந்தப் பிறவியில் இதற்கு முன் இந்த இடங்களுக்கு நாம் போனதே இல்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் வெறுமனே சொல்வேன். இப்படி ஓர் இடம் இருக்கும். சில ஆலயங்கள் இருக்கும். சில பழைய வீடுகள் இருக்கும் என்று இருவருக்கும் சொல்வேன். அங்கே போகலாம் என்று சொல்வேன். இதுதான் மத்தியப்பிரதேசம் ராய்காட்டில் நடந்தது. கடைசி வினாடிவரை அந்த ஊரின் பெயர் தெரியவில்லை. பயணம் செய்து கொண்டிருக்கும்போது நான் சொன்னேன். நாம் தேடிக் கொண்டிருக்கும் இடம் ராய்காடாக இருக்க வேண்டுமென்று. பிறகு வரைபடத்தில் ராய்காடு எங்கே இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டுச் சென்றோம். அங்கே சென்ற சில நிமிடங்களுக்குள், நான் முன்பே விவரித்த அந்த இடத்தில் இருந்தோம். அது மிகவும் சக்தி மிக்க ஒரு அனுபவமாயிருந்தது. இந்த இரண்டு பேரும் வாழ்வை மிக வேகமாக முன்நோக்கிக் கடந்து சென்றார்கள். அந்த நேரத்தில், கடந்த வாழ்வின் பல சம்பவங்கள் வெகுவேகமாக நடந்து முடிந்தன. 370 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில சம்பவங்கள். அது குறித்து ஏற்கெனவே நம் தியான அன்பர்களிடம் பேசிய சில விஷயங்கள் உண்மை தான் என்று அங்கு இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். இந்தப் பிறவியில் நாங்கள் அதற்கு முன் அங்கு போனதே இல்லை. ஆனால் எங்களுக்குத் தெரிந்தது. கடப்பா, சம்பல்பூர் போன்ற இடங்களில் எல்லாம் அப்படித்தான். மிகத் தெளிவாக எங்கே போவது என்று எங்களுக்குத் தெரிந்தது. ஏனென்றால் அந்த இடத்தை நெருங்க நெருங்க அந்த அதிர்வுகள் முந்தைய தொடர்புகள் காரணமாக அங்கே ஈர்த்தன. ஆறு நாட்களில் 5200 கி.மீ. காரில் கடந்தோம். உள்ளே நுழைவதற்கு முன்பு நான் அந்த இடத்தைத் துல்லியாக விவரிப்பேன். அப்போதுதான் அந்த இருவர் மனதிலும் எந்தவிதக் கேள்வியும் எழாது என்பதற்காக. நான் ஏதோ சில விஷயங்களை கற்பனை செய்து சொல்வதாக அவர்கள் கருதிவிடக்கூடாது. அங்கே அதிர்வுகள் எப்படி இருக்கும், அந்த இடத்திற்குப் போகிறபோது எந்த சக்கரம் தூண்டப்படும் என்று எல்லாவற்றையும் அவர்களுக்கு சொல்வேன். அவர்களுடைய அனுபவம் துல்லியமாக அப்படித்தான் இருக்கும். வேறு மாதிரியாக இருக்க வாய்ப்பே இல்லை.
இன்னொரு நாள் சொன்னது போல், அனைவருமே இப்படி ஒரு பயிற்சியில் பங்கேற்க வேண்டும். என்று நான் விரும்பினேன். ஒவ்வொரு முறையும் அன்றாடப் பணிகள் முடிந்தபிறகு நான் இதை உணர்ந்திருக்கிறேன். அனைத்து பிரம்மச்சாரிகளையும் இதில் ஈடுபடுத்த முடிந்தால் இது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால் அத்தனை பேரை அந்தவிதமான ஈடுபாடு மற்றும் புரிதலுக்குக் கொண்டு வருவது சற்று சிரமம். அவ்வளவு எளிதான காரியம் இல்லை. கர்மயாத்திரை போன பிறகு இருவருக்குமே இது அவர்கள் வாழ்வின் அனுபவமாகவே மாறிவிட்டது. நாங்கள் எங்கு போனாலும் அந்த இடங்கள் யாராவது ஒருவருக்கு கடந்த பிறவிக்குத் தொடர்பு உடையதாக இருந்தது. இன்னொருவருக்கு இல்லை. ஆனால் அந்த இடங்களை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், ஆன்மீக அடிப்படையில் அவை முக்கியத்துவம் வாய்ந்தவை. பல இடங்களை நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். அவை இருவருக்குமே கடந்த பிறவியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. தனித்தனியாக அவரவர்களுக்குத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். ஆனால் ஆன்மீக அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் போக விரும்பினோம். அங்கே நாங்கள் போனபோது ஆன்மீகப் பரிமாணம் அவர்களுடைய வாழ்க்கை அனுபவமாகவே ஏற்பட்டது. எனவே இத்தகைய நிலைகளைக் கடந்து, அவர்களுக்குள் இருந்த உறுதியான கட்டமைப்புகள் எல்லாம் தகர்ந்தன. சற்றே தளர்ந்தன. எனவே பிராணப் பிரதிஷ்டை மிக எளிதானது. அதற்கு முன்பாகவே கர்மவினைகளை உடைக்கவேண்டும் என்கிற ஏக்கம் இருந்தது. ஆத்மசாதனை அதனை நோக்கி நிகழ்ந்தது. இது ஒரு கூடுதல் வாய்ப்பாக அமைந்துவிட்டது.