எல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த திசையிலிருந்து வரப்போகிறது என்று நாங்கள் பார்த்திருந்தோம், அப்போது அது வந்தது - விஜி தன் உடலை உதறிச் சென்றுவிட்டாள், பிரதிஷ்டை நிறைவடையாமல் நின்றுவிட்டது. அவள் மஹாசமாதி அடைந்துவிட்டாள், நாங்கள் மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம்.

- சத்குரு

சத்குரு: "மக்களுக்கு விஜி என்பவள் யார் என்பதை விளக்குவது எனக்கு எப்போதுமே கடினமாக இருந்திருக்கிறது. விஜி என்று நான் சொல்லும்போது அவளை என் மனைவியாகவோ ஒரு பெண்ணாகவோ நான் குறிக்கவில்லை. ஒரு உயிராகக் கூட, என் அனுபவத்தில் அவள் எப்போதும் அற்புதமாவே இருந்திருக்கிறாள். ஆனால் உங்களில் பலபேர் அறிந்தது போல, மிகத் தீவிரமான உணர்ச்சிகள் கொண்டவளாக அவள் திகழ்ந்தாள். அவளுடைய குழந்தை போன்ற தன்மையால், அவளுக்குள் இருந்த உணர்வுகள் எதுவாயினும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாது எப்போதுமே வெளிப்பட்டது. ஆன்மீகத் தேடுதலுடையவர்கள் அனைவருக்கும் உச்சபட்ச இலக்காகக் கொண்டிருக்கும் மஹாசமாதியை அவள் இப்போது மிக சாதாரணமாக அடைந்துவிட்டாள்.

பொதுமக்களில் பெரும்பான்மையினர், உண்மையான ஆன்மீக சாதகர்கள் வாழ்ந்த காலம் முடிவடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இப்போது இங்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை மெய்யான சாதகர்களின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது - அவர்களின் காலம் ஒருபோதும் முடிவடையாது.

இந்த கட்டத்தில் இங்குள்ள எவரும் உடலை உதறிச் செல்வது என்னுடைய விருப்பமில்லை, ஆனால் எப்படியோ இது அவளுடைய விருப்பமாகிவிட்டது. "ஷம்போ" என்ற மஹாமந்திரத்திற்குள் அவள் கரைந்துவிட்டாள். இது சரியா தவறா என்று நானும் வேறு எவரும் கேள்வி கேட்பதற்கில்லை. அவரையே கேள்வி கேட்கும் அளவு நான் பெரியவனில்லை.

இது வியக்கத்தக்கது, உண்மையில் நம்பமுடியாதது. என்னுடைய உதவி கூட இல்லாமல் இந்த உடலோடு உள்ள பிணைப்பைக் கடந்து சென்றுவிட்டாள். அவளுடைய அன்பால் அவள் கடந்து சென்றிருக்கிறாள். நம்முடைய அன்பால் நாம் இங்கேயே இருந்து நம் கைகளில் இருக்கும் வேலையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது."

ஆஉம் ஷம்போ ஷிவ ஷம்போ ஜெய ஷம்போ மஹாதேவா

1997-ல், தைப்பூசத்தன்று (உத்தராயணத்தின் முதல் பௌர்ணமி தினத்தன்று) விஜி மஹாசமாதி அடைந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சத்குரு பேசியதிலிருந்து இது தொகுப்பட்டது.